ஒரு வேளை இலங்கை பாகிஸ்தானாக இருந்திருந்தால்?...

மார்ச் 6ம் தேதி தனுஷ்கோடி-கச்சத்தீவு பகுதியில் இந்திய எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பிரிட்ஜோ என்ற இளைஞன் கரை சேர்வதற்குள்ளே மரணமடைந்தார்.

fisherman britjoமீனவர் தரப்பில் இலங்கை கப்பற்படையால் தான் சுடப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் இலங்கை அரசு அதனை மறுத்துள்ளது. இதுவரை இலங்கை கடல் எல்லையில் மட்டும் 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் அதற்காக இந்திய அரசு இன்று வரையிலும் எவ்விதமான எதிர்ப்பு நடவடிக்கையையும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எடுத்திடவில்லை. இதற்கு முன்னால் ஆட்சி செய்த மத்திய அரசுகள் எதை செய்ததோ அதே மெத்தனத்தை பாஜக அரசும் மேற்கொள்கிறது.

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசுவாமி “தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை சிறைபிடித்து வைத்துகொள்ளுமாறு இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார்.”( திஇந்து,செப்டம்பர் 2,2014,மதுரை) முந்தைய, மத்தியில் அமர்ந்த அரசுகளிடமிருந்து பாஜக விலகி இலங்கை அரசுக்கு தமிழக மீனவர்களின் படகுகளை பிடுங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லும் அளவுக்கு இலங்கையுடன் நட்பை பேணுகிறது.

சீனா, நேபாளம், பாகிஸ்தான் என எந்த அண்டை நாடுகளுடனும் சுமூக உறவு இல்லாத நிலையில் டெல்லி அரசாங்கம் தமிழர்களை தொடர்ச்சியாக வஞ்சிக்கும் இலங்கையுடன் மட்டும் அளவில்லாத நட்புறவை பேணுகிறது.

தமிழ்நாட்டுக்கு அருகில் பாகிஸ்தான்?

ஒருவேளை, இலங்கைக்கு பதிலாக பாகிஸ்தான் தமிழகத்திற்கு அருகில் இருந்திருந்தால் நிம்மதி கிட்டியிருக்கலாம். ஆம், அப்படித்தான் இதுவரை நடந்துள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் எப்படி கைது செய்யப்பட்டார்கள்! எப்படி நடத்தப்பட்டார்கள்! எப்படி விடுதலை செய்யப்பட்டார்கள்! என்று பார்க்கும் போது நம் நட்பு நாடாக பாகிஸ்தான இருந்திருக்கக் கூடாதா என்று தான் நினைக்க தோன்றுகிறது.

ஜனவரி 8, 2012ல் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்படிருந்த 183 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. இதில் 179பேர் குஜராத்திகள். விடுதலையான மீனவர்களை பேட்டியெடுக்க Sunday Times Of India ஆங்கில நாளிதழ் செல்கிறது, பேட்டியின் தொடக்கத்தை பதிவு செய்யும் முன் இப்படி எழுதினார்கள், “ நாங்கள் பயங்கரமான சம்பவங்களை எல்லாம் சொல்லுவார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால் அவர்கள் கூறிய ஒவ்வொன்றும் புதிதாக இருந்தது”. விடுதலையான மீனவர்களில் ஒருவரான பாரத் சூதா சோமா, “ நாங்கள்(பாகிஸ்தானிய கைதிகளும் இந்திய கைதிகளும்) சிறையிலிருந்து வெளிவரும் நாளில் ஒரு பெரிய குடும்பமாகவே மாறிப்போனோம் என்றார்.

விடுதலையான இன்னொரு மீனவர் கூறும் போது, எங்களை எந்தவித கொடுமைகளுக்கோ சித்ரவதைகளுக்கோ யாரும் ஆட்படுத்தவில்லை. எங்களுக்கு தேவைப்படும் துண்டு, சோப் போன்ற அடிப்படைத் தேவையான பொருட்களையும் எங்களுக்கு சிறையிலிருந்த பாகிஸ்தானியர்கள் தான் கொடுத்து உதவினார்கள். சிறையிலிருந்த ஜெயிலர்கள் உட்பட மிக நெருக்கமாக பழகினார்கள். நீங்கள் வேகமாக வீடு திரும்புவீர்கள் என அடிக்கடி சொல்வார்கள். பாகிஸ்தான் நீதிபதி நசீர் அஸ்லம் ஜாஹீத் அவர்களும் அவரது அலுவலகத்திலுள்ளவர்களும் தினமும் இந்திய சிறைவாசிகள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து செல்ல வருவார்கள். எங்களுடன் சிறையில் 18வயதுக்கு குறைந்த மூன்று இந்திய சிறுவர்கள் இருந்தார்கள். நீதிபதி நசீர் அவர்களின் போனிலேயே மூன்று பேர் பெற்றோருக்கும் போன் செய்து வாரத்திற்கு மூன்று நாட்கள் பேசவிடுவார்கள். ( Sunday Times Of India, Madurai 14/01/12)

பாகிஸ்தானில் இந்தியர்கள் இருந்த சிறைகளை பார்வையிட்டு இந்தியா வந்த பாகிஸ்தான்-இந்தியா அமைதி மற்றும் ஜனநாயக மன்றத்தின் பொதுச்செயளாலர் தபான் போஸ் அவர்களிடம் சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் நிலை பற்றி கேட்ட போது, “இந்திய சிறைக்கைதிகள் யாரும் மோசமாக நடத்தப்படுவதில்லை. மற்ற கைதிகளை போல் தான் இந்தியர்களும் சகஜமாக நடத்தப்படுகிறார்கள். ஜெயிலர்கள் முதற்கொண்டு சிறையில் இருக்கும் இந்தியர்களிடம் மிக இயல்பாக பழகுகிறார்கள். அடையாளமில்லாமல் இருக்கும் கைதிகளின் அடையாளத்தை கண்டுபிடிக்க கூட ஜெயிலர்களே உதவுகின்றனர். ( Times Of India, Madurai 01/07/12)

டிசம்பர் 25ம் தேதி பாகிஸ்தான் அரசு சிறையிலிருந்து 220 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது. அதை தொடர்ந்து ஜனவரி 5,2017ல் 218 இந்திய மீனவர்களை விடுதலை செய்து பாகிஸ்தான்-இந்திய எல்லைப்பகுதியான வாகா பகுதியில் இறக்கிவிட்டு அவர்களுக்கு 500ரூபாய் பணமும் பரிசுகளும் வழங்கி அனுப்பியது. இதை விட மிகச்சிறப்பானது விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களுடன் பாகிஸ்தான் இராணுவத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையில் இருந்த நெருக்கத்தினை உணர முடிகிறது. (The Hindu 06/01.17)

இவைகளெல்லாம் கூட சீமான் போன்ற அரசியல்வாதிகளையும் பாகிஸ்தான் நம் அண்டை நாடாக இருந்திருக்கக் கூடாதா என்ற கருத்தை முன்வைக்க காரணமாக இருந்திருக்கலாம். நியாயம் தானே!

இந்திய கப்பற்படை தன் பணிகளை மறந்துவிட்டதா?

இந்திய கப்பற்படையின் மிக முக்கிய பணிகளில் ஒன்று எல்லைகளை சரியாக பாதுகாப்பது தான். ஆனால் இதுவரை தமிழக மீனவர்கள் இந்திய எல்லைகளை கடக்கும் போது ஒருமுறை கூட தடுத்திடவில்லை. தடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை அண்டை நாடுகள் வைக்காத குற்றாச்சாட்டையே தமிழக மீனவர்கள் மீது மத்திய கப்பற்படை மதுரை நீதிமன்றத்தில் வைத்தது, “ தமிழக மீனவர்கள் போதைப்பொருள் கடத்துவதாலும் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மத்திய கடலோர காவற்படை பொறுப்பேற்க முடியாது."( தி இந்து ஜூன்02, 2014)

பாதுகாப்பு கேட்கும் போது, பழியை மக்கள் மீது போட்டு விடுகிற கப்பற்படை எப்போதும் எல்லா சூழ்நிலைகளும் தனது கையாலாகாத செயலை மறைக்க மற்றவர்கள் மீது பழி போடுகிறது. சமீபத்தில் சென்னையில் இரு டேங்கர் கப்பல்கள் மோதிய போதும் கப்பற்படையின் தயாரற்ற தன்மையும் அதன் நிர்வாக கோளாறுகளையும் தெளிவாக பார்க்க முடிந்தது.

தமிழக எல்லையோரங்களில் உள்ள அனைத்து மீன்பிடி படகுகளிலும் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளது. எந்த படகும் எல்லை தாண்டும் போது கப்பற்படையினருக்கு சிக்னல் கிடைத்து விடும். ஆனாலும் ஒருமுறை கூட இந்த டெக்னாலஜிகள் தமிழக மீனவர்களை காப்பாற்றியதில்லை.

நிர்வாக குறைகளும் மத்திய அரசின் தமிழக துரோக மனநிலையும் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை வஞ்சித்து வருகிறது.

பாகிஸ்தான் அரசியலும் மோடி அரசும்!

மோடி மார்பு விரித்து பாகிஸ்தானை வசைபாடுவதில் எப்போதுமே வல்லவர். இந்த வசைப்பாடுதல்களின் மூலமும் போலி வாக்குறுதிகள் மூலமும் ஆட்சியை பிடித்தது மட்டுமல்லாமல் மக்கள் மனதில் பாகிஸ்தான் வெறுப்பை வேரூன்ற செய்தவர். மோடியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் இதைத்தான் வரலாறு நெடுகிலும் செய்து வந்தது.வருகிறது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுடைய பாகிஸ்தான் பூச்சாண்டி அரசியல் சுத்தமாக பழிக்காமல் சென்றது தமிழ்நாட்டில் மட்டும் தான்.

பாஜகவின் சூழ்ச்சி அரசியலுக்கு தமிழ்நாடு பலியாகாது என்பதனை சமீபத்தில் ஜல்லிக்கட்டிற்காக நடந்த மாணவ புரட்சி உறுதிப்படுத்தியது.

பெண்களின் அடிப்படை கல்வியில் பாகிஸ்தான் 74% ஆனால் இந்தியா 48%. அடிப்படை கல்வி கடந்து மேற்படி படிக்க செல்லும் பெண்களின் விகிதம் இந்தியாவை பொறுத்த வரை 20%க்கும் குறைவு ஆனால் பாகிஸ்தானில் சரிபாதி மடங்கு உயர்கிறது ( தி இந்து 24/10/16).

பார்லிமெண்டில் பெண்களுக்கான ஒதுக்கீடு தருவதில் இந்தியா 11.8%, பாகிஸ்தான் 20.6%.

மதச்சார்பற்ற நாடு என்று அடையாளம் கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வர கடும் முயற்சி! ஆனால் மதச்சாயம் பூசப்படும் பாகிஸ்தானில் இந்து திருமண சட்ட மசோதா வெற்றிகரமாக நிறைவு.

பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் பேசித்தீர்த்து கொள்ளுங்கள் என்று கட்டப்பஞ்சாயத்து முறைகளை நீதிமன்றம் கருத்தாக சொல்கிறது! மத்திய அரசாங்கம் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என தேர்தல் அறிக்கை தயார் செய்கிறது! பாகிஸ்தானில் கோவில்கள், தேவாலயங்கள், குருத்வாரங்களை பாதுகாப்பதற்காக மட்டும் 40 கோடிகளை பாகிஸ்தான் அரசு ஒதுக்கியுள்ளது.

எதிரி நாடு என சொல்லப்படும் பாகிஸ்தான் முன்னேறிக் கொண்டும் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வரும் வேளையில் நமது மத்திய பாஜக அரசு மக்களுக்குள்ளே பிளவுகளை உண்டாக்கும் பணிகளையும் மதவாத அரசியலையும் திணித்து வருகிறது.

இன்றைய தமிழக மீனவர்களிடம், இலங்கை மீனவர் பிரச்சனையில் பாகிஸ்தானாவது நமது அண்டை நாடாக இருந்திருக்கலாம் என நினைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

- அபூ சித்திக்