ஹைட்ரோ கார்பன் பிரச்சனை தொடர்ந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பூவுலகின் நண்பர்கள் தோழர் சுந்தரராஜன் அவர்களிடம் தோழர் உதயகுமார் கண்ட நேர்காணல்...

அண்மையில் மத்திய அரசு 51 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதைப் பற்றிய உங்களுடைய பார்வை...

sundarrajan poovulagin nanbarkalதமிழ்நாட்டில் மூன்று இடங்கள் உட்பட மொத்தம் 51 இடங்கள் கொடுத்ததே தவறு. ஒரு இடத்தில் ஆய்வு செய்து அங்கே என்ன எடுக்கப் போகிறார்கள் எனக் கண்டறிந்து அதற்கான அனுமதி வழங்குவார்கள். இப்போது ‘Open Access Policy’ என்னும் HELP (Hydrocarbon Exploration License Policy) கொள்கை முடிவின் அடிப்படையில் அனுமதி மட்டும் பெற்றுக்கொண்டு பூமிக்கு அடியில் என்னக் கிடைத்தாலும் அதை எடுத்துக்கொள்ளலாம் என்கிற கொள்கையே தவறானது. ஒவ்வொரு விதமான பொருளுக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகள் இருக்கும். எனவே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது தவறான ஒன்றாகும்.

மோடி அவர்களுக்குச் சுற்றுச்சூழலுக்கான விருது வழங்கப்பட்டது குறித்து...

ஒப்பந்தம் கையொப்பமிட்ட அன்று மாலை மோடி சர்வதேசச் சூரியசக்திக் கூட்டமைப்பு நடத்திய விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் அவர் “இனிமேல் நாம் நிலப்பரப்பிற்கு மேல் உள்ள ஆற்றலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், நிலப்பரப்பிற்கு கீழ் உள்ள ஆற்றலை பயன்படுத்தியதால்தான் பருவநிலை மாற்றம் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது” என்று பேசினார். அன்று காலையில் 51 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கி விட்டு மாலை புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களான காற்றாலை, சூரிய சக்தி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பேசுவது எவ்வளவு முரணானது. இதற்கு முன் ஒரு கல்வி மாநாட்டில் “பருவநிலை மாறவில்லை நாம்தான் மாறி வருகிறோம்” என்று பேசியவர். இந்தியாவின் வளங்களைச் சுரண்ட அம்பானிக்கும் அதானிக்கும் அனுமதி வழங்கியிருக்கிறார். இவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது முரணான விசயம் ஆகும்.

தமிழ்நாட்டில் வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் வேதாந்தா நிறுவனத்தின் மீது கடுமையான கோபம் நிலவி வருகிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வேதாந்தா நிறுவனத்திற்குத் தமிழக அளவில் இரண்டு இடங்களும் இந்திய அளவில் 40க்கும் மேற்பட்ட இடங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு செயலாகவே இருக்கிறது.

நெடுவாசல் விவகாரத்தின் போது “நாங்கள் புதிதாக ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று சொன்ன தமிழக அரசுக்கு எதிராகவே இந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. உலக அளவில் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பருவநிலை மாற்றம். ‘Business As Usual’ என்று சொல்லப்படும் இன்றைக்கு இருப்பது போலவே இயங்குகிற அளவில் இன்னும் ஐம்பது அறுபது ஆண்டுகளில் 7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இப்படி இருக்கும்போது புதைபடிவ எரிபொருளை விட்டு நகர்ந்து செல்ல வேண்டிய நிலையில் பருவநிலை மாற்றத்தை அதிகப்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது எப்படிச் சரியாகும்.

மற்ற மாநிலங்களில் இந்தத் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் எந்த அளவிற்கு இருக்கிறது?

கிருஷ்ணா கோதாவரி பேசின் பகுதியில் மக்கள் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழக அளவிற்கு விரிவாகவும் வீரியமாகவும் இல்லாவிட்டாலும் மற்ற இடங்களில் தற்போது எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழக அரசிடமிருந்து இத்திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்க, என்ன நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்?

டெல்டா மாவட்டங்களைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவிக்க வேண்டும். இங்கு உணவு உற்பத்தி மட்டும் தான் நடக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள் 67% உணவு உற்பத்தி செய்தது இன்று அது 35 சதவீதமாக குறைந்துவிட்டது. எனவே இதைக் கொள்கை முடிவாக அரசு எடுக்க வேண்டும். தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கக்கூடாது.

எரிபொருள் தேவை அதிகரிப்பு, விலை உயர்வு ஏற்படுவதால் இது போன்ற திட்டங்கள் தேவை என்று சொல்லப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

பொதுவாக இப்படிச் சொல்வதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்று சொல்வார்கள். இன்றைய நிலையில் நாம் ஏன் இறக்குமதி செய்ய வேண்டும் என்கிற கேள்வியை விட, நாம் ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விதான் முன்னெடுக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்து அதிகப்படுத்தப்பட வேண்டும். மின்சார வாகனங்கள் போன்றவற்றை அதிக அளவிலான பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். இதற்குப் புதுப்பிக்கக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். இதை நோக்கியே முன்னேற்றம் செய்ய வேண்டும். பாரிஸ் ஒப்பந்தத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட கார்பன் அளவை விட 30 சதவீதம் குறைப்போம் என்று கையெழுத்திட்டுவிட்டு அதற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்த விஷயத்தில் மாநில உரிமைகள் எந்த அளவிற்குப் பறிக்கப்பட்டிருக்கிறது?

தமிழகத்தின் வளங்கள் உரிமை தமிழக மக்களுக்கானது. இந்த வளங்களின் இறையாண்மை மக்களுக்கு உரியது. இதை எப்படி மத்திய அரசு இது போன்ற நிறுவனங்களுக்கு வழங்க முடியும். இது மாநில உரிமைகளைப் பெரிய அளவில் பறிக்கக்கூடிய செயலாக அமைந்திருக்கிறது.

இதில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

பெட்ரோலிய மண்டலத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் தெரியவரும் முடிவுகளைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்.

Pin It