இம்மாதம் (13.8.17,14.8.17) ஆகிய இவ்விரு நாட்களும் தகடூர் மாவட்ட புகைக்கல் (ஒகனேக்கல்)சென்று வரும் வாய்ப்பு கிட்டியது.

அருமையான வானிலை, குளிர்ந்த காற்று, தண்ணீரைக் காணவும், தண்ணீரில் குளித்து மகிழவும் சாரைசாரையாய் செல்லும் மக்கள் கூட்டம் என காண்பதற்கே இனிமையாக இருந்தது புகைக்கல். நாங்களும் இந்த மக்கள் திரளினூடே இரண்டறக் கலந்து கன்னட தேசத்தால் வஞ்சகமாய் தேக்கி வைக்கப்பட்டு அறமன்றத்தால் விடுவிக்க்கப்பட்டு பாய்ந்தோடி வந்த காவிரியின் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தோம்.

நீர் மிகையாக உள்ளதென்று கூறி பரிசலை குறைந்த தொலைவே இயக்கிய போதும் அந்த அளவில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.

Hogenakkal Tamil Nadu

நம் காவிரி பாய்ந்து வரும் அழகு,தெங்கிக் கொண்டிருக்கும் பாலத்தின் மேல் நின்று பார்த்தால் தெரியும் பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளம், அவ்வெள்ள நீர் வழிந்தோடி ஆறாக உருமாறும் பள்ளத்தாக்குப் பகுதி, 'சமைக்கனுமாண்ணே' என்று அன்பொழுக கேட்டு கேட்டு வளைய வரும் பகுதி பெண்மணிகளும், "அண்ணே! எண்ணெய்க் குளியல் (மசாசு) பண்ணிக்கிறீகளா?" என்று கருநீல வண்ண உடையணிந்த பகுதி ஆண்கள் கேட்டு உலா வரும் காட்சி என அனைத்தும் புதியதொரு உற்சாகத்தை எங்களுக்கு அள்ளிக் கொடுத்தது.தொங்கு பாலத்தைக் காணக் கட்டணமாக பத்து உரூபாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், பரிசலில் செல்ல முந்நூறு உரூபாயை பென்னாகரம் ஊராட்சி ஒன்றியமும்,உயர் கோபுரத்திலேறி ஆர்ப்பரித்து கொட்டும் நீரின் அழகைக் காண உரூபாய் ஐந்தை தமிழ்நாட்டு காட்டு(வன)த்துறையும் பெற்றுக் கொள்கிறது.

திளைப்பும் திகைப்பும்:

சுற்றுலாவிற்கு வந்த மற்றவர்கள் மகிழ்ந்ததைப் போல தனிப்பட்ட முறையில் நாங்களும் மகிழ்ச்சியில் திளைத்த போதும் குமூக அக்கறையற்ற மாந்தர்கள் சுற்றுலா என்று வந்து செல்வதால் எமது தமிழ்த்தேசத்தின் சொத்தாகிய புகைக்கல் எந்தளவிற்கு சீரழிந்துள்ளது என்று கண்ணுறும் போது இனபமெல்லாம் பறந்தோடி துன்பமே மேலிடுகிறது.

மலை சூழ்ந்த பகுதியானது குப்பைக் காடாக மாற்றப்பட்டு வருவதைக் கண்டுற்று உள்ளம். வெதும்பி நின்றோம். மலைக்கு கீழேயுள்ள ஏழ்மை நிரம்பிய பென்னாகரத்தின் அமைதியான சிற்றூர்ப்புற வாழ்க்கையையும், அங்கிருந்து பதினைந்து அயிர மாத்திரி (கி.மி) தொலைவில் உள்ள புகைக்கல்லில் வகைவகையான மனிதர்கள், உடைகள்,உணவுகள், வாகனங்கள் என அப்படியே நேர்மாறான காட்சியைக் கண்டபோது அதிர்ச்சியில் உறைந்தோம்.

பென்னாகரம் புறவழிச் சாலை தொடங்கி ஒகனேக்கல் வரையிலும் இருமருங்கிலும் "ஞெகிழிப் பொருட்கள் தடைசெய்யப்பட்ட பகுதி" என்று பல அறிவிப்புப் பலகைகளைக் கண்டு 'பலே' என்று புகழ்பாடி வந்த எங்களுக்கு; புகைக்கல் (ஒகனேக்கல் )பகுதிக்குள் நுழைந்த தரை முதல் தண்ணீர் கரைபுரண்டோடும் பள்ளத்தாக்குப் பகுதி வரையிலும் எங்கெங்கு காணினும் ஞெகிழிக் குப்பைகள், மதுப்புட்டில்கள், மீன்கழிவுகள், காலணிகள், குடிநீர் புட்டில்கள், வாலும் தோலுமாக உரசியபடி உறவாடிக் கொண்டிருக்கும் மாந்த துணிமணிகள் என இவற்றையெல்லாம் கண்டபோது மகிழ்ச்சி எல்லாம் மொத்தமாய் காணாமற் போயிருந்த்து.

'நீர் கொட்டும் அறிவிக்கப்பட்ட பகுதியில் மட்டும்தான் குளிக்க வேண்டும்' என்று ஆங்காங்கே தென்படும் அறிவிப்புப் பலகைகளை கிஞ்சிற்றும் மதியாது மாந்தர்கள் தத்தமது மனம் போன போக்கில் பாறைகள் நிறைந்த, சமதளமற்ற, கணிக்க இயலாதவாறு ஆர்ப்பரித்து ஓடும் நீரில் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் ஊறு ஏற்பட வாய்ப்பிருப்பதை உணராமல் இயல்பாக
நீராடியதைக் காண்கையில் எங்கள் மனம் பதைபதைத்தது.

காட்சியும் கண்டனமும்:

திறந்து விடப்பட்ட ஆயிரக்கணக்கான அடி கனநீர் பொங்கி வந்த போதும்; ஊராட்சி மன்றத்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வழங்கும் குடிநீர்க் குழாய்களில் பகுதி மக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஞெகிழிக் குடங்களில் குடிநீர் பிடிப்பதைக் காண நேர்ந்தது.

மேலும் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடிய போதும் தாகத்திற்கு நீரருந்த புட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீரையே வாங்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் அங்கு நிறுவப்பட்டுள்ள ஓரே ஒரு தண்ணீரைத் தூய்மை செய்து,தாது உப்புக்கள் சேர்க்கப்பட்டு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் செயல்படாமல் காட்சிப்பொருளாய் காட்சியளித்தது. போதுமான அளவிற்கு தூய்மையான நன்கு பராமரிக்கும்படியான கழிப்பிடங்களைக் காண முடியவில்லை. அதுபோக சாலையில் குவிந்துள்ள குப்பைகளைக் கூட சரிவர அகற்றாமல் இருந்ததையும் காண நேர்ந்தது.

ஆரவாரமும் அழுக்கடைவும்:

குளிக்குமிடத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இடப்பக்க நடைபாதையானது சிற்றுண்டி விற்பனை செய்யும் இடமாகவும், வலப்பக்க நடைபாதையானது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளாகவும் மாறி நம்மை வரவேற்றது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதனால் மக்கள் கூட்டம் அதிகமிருந்தும் பாதுகாப்புக்காகவோ போக்குவரத்தை ஒழுங்கு செய்யவோ காவலர்களை யாம் கண்டிலம். குளிக்குமிடத்தைச் சுற்றிலும் தூய்மையற்ற முறையில் விற்கப்படும் தின்பண்டங்கள், வழலைக் கட்டிகள், சீயநெய் (சாம்பு), வெண்சுருட்டுகள், தலைக்கு தேய்க்கும் எண்ணெய் பொட்டலங்கள் என விற்பனை செய்யும் சிறு சந்தை போல மாற்றப்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கிறது.

ஆங்காங்கே வெட்டிய மீன்களை தூய்மை செய்வதும்,சமைத்த பாத்திரங்களை கழுவுவதும், துணிகளை துவைப்பதும் என நீரோட்டம் முழுவதும் அழுக்கடைவதால் இவ்விடத்தைச் சுற்றிலும் ஒருவித நீச்ச வாடை வீசுவதை உணரலாம்.

இடரினை உணராமல் இளைஞர்கள் மதுவருந்துவதும், மது அருந்திவிட்டு நீராடுவதும், மது அருந்தியவர்கள் எண்ணெய் குளியல் மேற்கொள்வதுமாய் இருந்தபடி காணப்பட்டனர். குளித்து முடித்து வெளியே வந்தால் ஓய்வெடுக்கலாம் என்று அருகில் உள்ள சிறுவர் பூங்காவினுள் செல்ல எத்தனிக்கையில் அங்கு சுற்றுலா வந்த ஒரு பெரிய குடும்பத்தினர் பூங்காவின் வாயிலை மறித்து தரையில் பதாகை ஒன்றினை விரித்து சமையலுக்கான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தைக் கண்டவுடன் முன்னே சென்ற எமது கால்கள் அதே வேகத்தில் பின்னே நகர்ந்தன.தூய்மை செய்யப்படாமலும் சிறார்கள் மகிழ்ந்து விளையாடும் சறுக்கு மரம், ஊஞ்சல், ஏற்ற இறக்கம் உள்ளிட்ட பொருட்கள் யாவும் சிதிலமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் காட்சிப் பொருளாய் மாறிப் போனது. பணம் செலுத்தி உணவருந்தும் கூடம் என்று பெயரிடப்பட்டிருந்த கூடம் ஏனோ தாழிடப்பட்டு பூட்டுப் போடப்பட்டிருந்தது. இரவு ஏழு மணிக்கே தனியார் மருந்தகங்கள் மூடப்பட்டு இருந்ததையும் கண்டோம்.

எதிர்பார்ப்பும் தீர்வும்:

இங்கு சுட்டியுள்ளவற்றை உற்று நோக்கினாலே இவ்விடத்தில் களைய வேண்டுவனவ யாதென்று தெள்ளனெ விளங்கும்.

மாவட்ட மேலாண்மையும்(நிர்வாகம்) உள்ளூர் சிற்றூர்ப்பற மேலாண்மையும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரல் வேண்டும். பகுதி மக்களுக்கு இது தமது தாய்நிலப் பகுதி என்கிற போதிலும் தமிழ்த்தேச சொத்தின் சுற்றுலாவிடம் என்கிற அடிப்படையிலான விழிப்புணர்வை உருவாக்க் முன்வரல் வேண்டும்.

பகுதி மக்களின் வாழ்நிலை, கல்வி மேம்பாடு, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவையும் மேம்பட உறுதி செய்யப்படல் வேண்டும். மேலும் பரிசல் இயக்கும் தொழிலாளர்கள் மீன்வளத்துறையின் கூட்டுறவுக்கழகங்களின் கீழ் உறுப்பினர்களாக கொண்டுவரப்பட்டு முழுமையாக பயன்பெற முயல வேண்டும். நம் தமிழ்த்தேச நிலத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழ்த்தேச குடிமகனும் தனிமாந்த ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட முன்வரல் வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நிலத்தில் பாயும் இவ்விடத்தை நாம் அதே இயற்கைச் சூழல் மாறாது நமது அடுத்த தமிழ்தேச தலைமுறையினர்க்கு கையளிக்க வேண்டியது நமது காலத்தின் கடமை என்று வேண்டுகோளே இக்கட்டுரை தீட்டியதன் பயனாய் விளைய வேண்டும் என்கிற அளவில் இதனை இந்தளவில் நிறைவு செய்கிறோம்.

- அசுரன் கா.ஆ.வேணுகோபால், எண்ணூர், சென்னை-57

Pin It