ஆடத்தெரியாத பெண், தெரு கோணலாக இருக்கிறது என்று சொல்வாளாம்.
ஆளத்தெரியாத அமைச்சருக்கு எல்லாமே கோணலாகத்தான் தெரியும்.
கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறது தமிழக அரசு.
ஆமாம்! ஆமாம்! அதைத் தள்ளி வைத்து விடுகிறேன் என்கிறது தேர்தல் ஆணையம்.
சில மாநிலங்களில் தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம், தமிழகத்தின் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்குத் தேதிகளை அறிவிக்கவில்லை.
ஏனென்றால் 30 செ.மீ.க்கு மழை பெய்யப் போகிறது, இனி மழைக் காலம். மழைப் பெய்தால் திருவாரூரில் தேர்தல் நடத்த முடியாது என்று எடப்பாடி கடிதம் எழுதினாராம்.
திருப்பரங்குன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று அதே கடிதம் சொல்வதால் தேர்தலை அறிவிக்கவில்லையாம் ஆணையம்.
அப்படியானால் உள்ளாட்சித் தேர்தல் ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கொண்டு இருக்கிறதே.
அதற்கு அரசு பொறுப்பில்லையாம். வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு ஆண்டுக் கணக்கில் ஜவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறதாம். இப்படி ஒத்தூதுகிறது தேர்தல் ஆணையம்.
இதற்குப் பெயர் அரசு! இவர்களுக்குப் பெயர் அமைச்சர்கள்! நடப்பது ஜனநாயக ஆட்சியாம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் ஆலை, எட்டுவழிச் சாலை உள்பட மக்களின் அன்றாட வாழ்வியல் கூடப் பாதிக்கும் அளவுக்கு மக்கள் விரோத ஆட்சி இங்கே நடக்கிறது.
இப்படிப் பல்வேறு பிரச்சனைகளில் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சியின் கைப்பாவையாகவும், எடுபிடி அரசாகவும் தமிழக அரசு இருப்பதனால் மக்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்க மாட்டார்கள் என்பது உலகறிந்த செய்தி.
மக்கள் ஆட்சியில் மக்கள்தான் ஆள வேண்டும். அதிகாரிகள் இல்லை.
அதனால், உள்ளாட்சி உள்பட இடைத்தேர்தல்களை நடத்தி இருக்க வேண்டும்.
உண்மையில் தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க. அரசு பயந்து போய் இருக்கிறது. காரணம் தோற்று விடுவோம் என்ற பயம்தான்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற, மாநிலப் பொதுத்தேர்தல்கள் வர இருக்கும் நிலையில் திருப்பரங்குன்றம், திருவாரூரில் தோல்வியைத் தழுவினால் வெட்கக்கேடு என்பதனால் தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசுத் தயாராக இல்லை, பதுங்குகிறது.
நோட்டாவுடன் போட்டி போடும் ‘பெருமைக்குரிய’ பா.ஜ.க.வுக்கு, அ.தி.மு.க.வை விட்டாலும் வேறு வழியில்லை. அதன் தோள் மேல் ஏறி கரைசேரத் துடிக்கிறது.
திருமந்திரம், ஆறாம் தந்திரத்தில் இப்படிச் சொல்கிறார் திருமூலர்:
‘‘குருடும் குருடும் குருட்டாட் டமாடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே’’
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.