மண்ணின் மக்களின் நடைபயணம் ஏன்?

காவிரிப் படுகை பெருமக்களே, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 29 வரை பூம்புகார் கடற்கரையிலிருந்து தஞ்சை வரை மண்ணின் மக்களின் நடை பயணத்தை முன்னெடுத்துள்ளது. காவிரிப் படுகையைப் பாதுகாப்பதன் தேவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், தமிழ்நாடு அரசிடம் சில கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கும் இந்நடை பயணம் முன்னெடுக்கப்படுகிறது.

காவிரிப்படுகை : அழியும் நிலையில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்

தமிழ்நாட்டின் உணவுத் தேவையில் முன்பு 60%, இன்று 34% நிறைவு செய்யும் உணவுக் கலம்; தமிழர் நாகரிகம் தோன்றி செழித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தாய்மண். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பல மாவட்டங்களுக்குக் குடிநீரை காவிரிப் படுகைதான் வழங்கி வருகிறது. காவிரிப்படுகை இருக்கும் வரை தமிழ்நாடு தலைநிமிர்ந்து வாழும். காவிரிப்படுகை அழிந்தால் தமிழ்நாடு உணவுக்குக் கையேந்தும்.

தொடரும் இரண்டு குறைபாடுகள்!

காவிரிப்படுகையைப் பாதுகாக்கும் நோக்குடன் 2020-இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தில் இரண்டு முதன்மைப் போதாமைகள் இருக்கின்றன. அவை,

(1) காவிரிப்படுகை முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் கொண்டுவரப்படவில்லை.

(2)  இதுவரை காவிரிப்படுகையைப் பாழாக்கிய பழைய திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை.

இந்த இரண்டு குறைபாடுகளும் உடனடியாக நீக்கப்படுவது தேவையானது ஆகும்.

தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களும், கடலூர் மாவட்டத்தில் 5 வட்டங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வட்டங்களும் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக, கடலூர் மாவட்டம் முழுவதும், அரியலூர் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஆகியவையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

காவிரிப் படுகையில் சோழர்கள் காலத்திலும், விசயநகரப் பேரரசு மற்றும் ஆங்கிலேயர்கள் காலத்திலும் மிகச் சிறப்பான நீர்ப்பாசனக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இக்கட்டமைப்பு இப்போது ஓரளவு சிதைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தைச் சேமித்துப் பயன்படுத்தத் திட்டங்கள் தேவை. மேட்டூரில் திறக்கப்படும் நீர் நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாகப் பாய்ந்து 17 இலக்கம் குறுக்கம்(ஏக்கர்) நிலத்தை வளப்படுத்துகிறது. 15 மாவட்டங்களுக்கு குடிநீராகப் பயன்படுகிறது. குறுவை, சம்பா, தாளடி என முப்போகத்திற்கு எட்டு மாதத்திற்கு 350 டி.எம்.சி நீர் தேவை. முறையான நீர் மேலாண்மை மூலம் இந்நீரை நம்மால் சேமிக்க முடியும். நீர் நிலைகள், வாய்க்கால்கள், கால்வாய்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு நீக்கம், மராமத்துப் பணிகள், முறையான நீர் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் காவிரிப்படுகை முழுவதையுமே வேளாண்மை செழிக்கும் மண்டலமாக மாற்ற முடியும்.

காவிரிப் படுகையில் விளைநிலப் பரப்பு குறைந்து வருகிறது. வளமான விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன. ஆயிரக் கணக்கான குறுக்கங்கள்(ஏக்கர்கள்) பெரும் தொழில் நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. வேளாண் மண்டலம் தொழில் மண்டலமாக மாறும் அச்சம் காத்திருக்கிறது. காவிரிப் படுகை மாவட்டங்களில் வேலை வாய்ப்பு - உருவாக்கம் என்ற பெயரில் வேளாண்மையை ஒழித்து தொழிற்பேட்டைகளை நிறுவமுற்படுவது காவிரிப் படுகையை அழித்து விடும் என எச்சரிக்கிறோம்!

தொடரும் எண்ணெய் - எரிவாயுத் திட்ட அச்சுறுத்தல்!

காவிரிப் படுகையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் -2020 இயற்றப்பட்டது. இச்சட்டம் புதிய ஐட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதை தடை செய்துவிட்டது. ஆனால் பழைய எண்ணெய் வாயுத் திட்டங்கள் தொடர்வதைத் தடை செய்யவில்லை. இதனால் பழைய கிணறுகளில் மராமத்து செய்வதாகக் கூறிக்கொண்டு, மிகப்பெரும் விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை வெறும் பராமரிப்பு வேலைகள் அல்ல. இப்போது முன்னெடுக்கப்படும் மராமத்து புதிய வேலைகள், விரிவாக்கம், நவீன மயமாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது! ஆகவே இவ் வேலைகள் சட்டவிரோதமானவை.

கச்சா எண்ணெய்க் கிணறுகளும் குழாய்களும் 15 ஆண்டுகளில் அரிமானத்திற்கு உள்ளாகும். இவை நிலத்தடியில் சிதைவுற்று, அரித்துப் போய், இரவு பகலாகக் கசிவுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. பல பகுதிகளில் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்து விவசாயத்திற்கான ஆழ்துளைக் கிணறுகள் வழியே கச்சா எண்ணெய் கலந்த நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. சில ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள, கடல் நீரை விடவும் உப்புத்தன்மையுள்ள நீர், எண்ணெய் ­எரிவாயுக் கிணறுகள் அமைப்புச் செயல்பாடுகளால், உப்பு நீருக்கும் நன்னீருக்கும் இடையில் இருக்கும் பாறைத் தடுப்புகள் உடைக்கப்பட்டு விட்டதால், நிலத்தடி நன்னீர் தொகுப்பில் கலந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் நிலத்தடி நீரை முற்றிலுமாக நாம் பயன்படுத்த முடியாமல் போகும்.

நிலம் கெட்டது, நீர் கெட்டது, எண்ணெய்க் கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்களின் உடல்நலம் கெட்டது. தோல் நோய், புற்றுநோய், மலட்டுத்தன்மை, மருந்தே இல்லாத நோய்கள் எனப் பாதிப்புகளை இப்போது உணர்கிறோம். கடந்த காலத்தில் எந்த எண்ணெய்க் கிணறுகள் நம் நிலத்தையும் நீரையும் பாழாக்கியதோ, அவை இன்றுவரை தொடர்ந்து பாழாக்கிக் கொண்டிருக்கின்றன. வேளாண் மண்டலத்தில் எண்ணெய் ­எரிவாயுத் திட்டங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்!

கூடுதல் அழிவுகள்!

பழைய எண்ணெய்க் கிணறுகளின் உள்ளே, 1500 மீட்டர் ஆழத்தில் தொடங்கி, பக்கவாட்டில் சாய்வாக "சைடு ட்ராக்கிங்" (Side Tracking) என்ற பெயரில் புதிதாகக் குழாய்களை அமைத்து, 3000 மீட்டர் ஆழத்திற்குக் கிணறுகளை அமைத்து சேல் என்ற களிப்பாறை வரை குழாய்களைச் செலுத்தி எண்ணெய் -எரிவாயு எடுக்கும் திட்டம் இருக்கிறது. அஞ்சத்தகுந்த வேதியல்களைப் பயன்படுத்தும் "புதிய தொழில்நுட்பம்" இல்லாமல் இதைச் செய்ய முடியாது!

இந்தத் தொழில்நுட்ப முறை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்று.

*  எண்ணெய் -எரிவாயுத் திட்டங்களால் காவிரிப்படுகை அடைந்த பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்ய 2021 -இல் தமிழ்நாடு அரசு நியமித்த பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் நிபுணர் குழு 2022 -இல் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து விட்டது. சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்!

 *  காவிரிப்படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் 2020 -இன் பாதுகாப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோருகிறோம். தமிழ்நாடு அரசு காவிரிப்படுகை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற பகுதிகளையும் அழிவிலிருந்து காக்க வேண்டும்!

 *  கடற்பகுதியில் எண்ணெய் வளத்தை மதிப்பீடு செய்ய "சீஸ்மிக் ஆய்வு". என்பதை நடத்துவார்கள். இதில் இடைவிடாமல் வெடிபொருட்கள் வெடிக்கப்படும். இதனால் கடல்வாழ் உயிரினங்களின் நுண்ணுணர்வு உறுப்புகள் சிதைவுற்று, மீன் இனம் அழிந்து போகும். மீன்கள், கடற்பசு, ஆமைகள் அழிந்து போகும் அல்லது இடம்பெயர்ந்து வேறு இடம் சென்று விடும். தமிழ்நாட்டின் மீன்வளத்தையும், கடற் தொழிலையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் காக்க, நிலப்பகுதியில் மட்டுமின்றி, கடற்பகுதியிலும் ஐட்ரோகார்பன் திட்டங்களைத் தடை செய்வதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளைக் கைக்கொள்ளவேண்டும்.

* ஐட்ரோகார்பன் கிணறுகள் செயல்பட்டால் நிலத்தடி நீர் கீழே இறங்கி விடும்.

* நிலத்தட்டுகள் நகரும். இதனால் நில அதிர்வு, பூகம்பங்கள் ஏற்படும்.

* நிலத்தடியில் உள்ள உப்பு நீரும் மேற்பகுதியில் இருக்கக்கூடிய நல்ல நீரும் ஒன்றாகக் கலந்து, பயன்படுத்த முடியாத நீராக மாறும்.

காவிரிப்படுகை கடலில் மூழ்கும் அச்சம்!

புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றன. 2100 -இல் உலக அளவிலும் இந்தியாவிலும் பல கடற்கரையோர நகரங்கள் கடலில் மூழ்கப் போகின்றன. 2060 இல் சென்னை நிலப்பரப்பில் 114 சதுர கிலோமீட்டர் கடலில் மூழ்கும் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளனர். காவிரிப் படுகை என்ன ஆகும்? காவிரிப் படுகையிலும் எண்ணெய் -எரிவாயு பெருமளவு நீருடன் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், நிலத்தின் கீழே ஏற்படும் வெற்றிடத்தைச்சரி செய்ய நிலம் கீழ்நோக்கித் தாழ்கிறது. காவிரிப் படுகையில் 75% நிலப்பரப்பு நிலம் தாழ்ந்து கடலுள் மூழ்கும் நிலையை அடைந்திருக்கிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India,19 July 2023) ஆங்கில இதழ் தெரிவிக்கிறது.

* காவிரிப் படுகையின் அழிவு இரண்டு பங்கு வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

*. ஒருபுறம், காவிரிப் படுகையின் நிலப்பரப்பு மேலும் மேலும் கீழ்நோக்கித் தாழ்ந்து கொண்டிருக்கிறது; அதே நேரம், கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. காவிரிப்படுகையின் பெரும் பகுதி கடல் மட்டத்தை விட ஒரு மீட்டர் அல்லது மூன்று அடி உயரத்திலேயே இருக்கிறது. இது தொடர்ந்தால், காவிரிப்படுகையை, நம் வாழ்விடத்தை நாம் காப்பாற்ற முடியாது.

 *  காவிரிப் படுகையைக் காக்க இருக்கும் ஒரே வழி, காவிரிப்படுகை மேலும் தாழ்ந்து போகாமல் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு காவிரிப் படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றி, விவசாயத்தையும், விளை நிலங்களையும், நீர்நிலைகளையும் பேணுவதுதான். விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர வேண்டும். காவிரி படுகையில் வேளாண்மையையும் வேளாண்மை சார்ந்த தொழில்களையும் தவிர வேறு எவ்வகைத் தொழிலகங்களையும் அனுமதிக்கக் கூடாது.

* பெட்ரோலை இறக்குமதி செய்து வாழ்ந்து விட முடியும்! குடிநீரை இறக்குமதி செய்து வாழ முடியுமா? பெட்ரோலும் எரிவாயுவும் நமக்குத் தேவைதான். ஆனால் குடிநீர் அதைவிட முக்கியம் அல்லவா?

* நீரை இழந்து, விவசாயத்தை அழித்து, அகதிகளாக வெளியேறித், தமிழகம் அல்லாத பிரதேசங்களில் அகதிகளாக நாம் வாழ முடியுமா?

* நம்மைக் காப்பாற்ற விண்ணில் இருந்து எவரும் குதித்து வரமாட்டார்கள்! நம் ஊரை நாம்தாம் காப்பாற்ற வேண்டும்!

* மக்கள் விழித்தெழ வேண்டும்! தமிழ்நாடு அரசு நம் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

- பேராசிரியர் த.செயராமன்