கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடடில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் :
1) மும்மொழிக் கொள்கை எனும் பெயரில் இந்தித் திணிப்பு , ஒரே நாடு ஒரே தேர்தல், நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை , நிதிப் பகிர்வில் பாரபட்சம் , மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் ஆகியவற்றில் இருந்த பல்வேறு துறைகளை ஒன்றிய பட்டியலுக்கு மாற்றியது, ஆகியவற்றின் மூலம் மாநிலங்களை வஞ்சித்து, உரிமைகளைப் பறித்து, மாநிலங்களின் நலனுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராகச் செயல்படும் ஒன்றிய அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
2) மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்திந்திய அளவில் ஒத்த கருத்துடைய கட்சிகளை அணி திரட்டி, ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராகப் போராடிவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கைகளை இம்மாநாடு பாராட்டுவதோடு முதலமைச்சருக்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்களை அணி திரட்டும் பணியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை முழு வீச்சில் செயல்படுவது எனத் தீர்மானிக்கப் படுகிறது.
3) மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவில் 9.69% வளர்ச்சியை எட்டி இந்திய அளவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழக் காரணமான திராவிட மாடல் அரசை இம்மாநாடு வெகுவாகப் பாராட்டுகிறது.
4) ஒன்றிய அளவில் கல்வி, மருத்துவம் தொழில், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்ந்து, மத்திய தொகுப்புக்கு கூடுதலான நிதி வழங்கிடும் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.
5) 1929 இல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்கு வித்திடப்பட்டது. அவை அனைத்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சிக் காலங்களில் படிப்படியாக நடைமுறைக்கு வந்தன. அவரது வழியில் பீடுநடை போடும் திராவிட மாடல் நாயகர் மு .க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் மகளிர் முன்னேற்ற திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்றத் திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவதற்கு இம்மாநாடு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி மகிழ்கிறது.
6) அழித்தொழிக்க வேண்டிய சாதி அமைப்பைக் காப்பாற்றும் நோக்கிலும், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் எண்ணத்திலும் ஒன்றிய பா.ஜ.க அரசால் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டமான விஸ்வகர்மா திட்டத்தை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அதே வேலையில் யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற அறிவுப்போடு வசதியற்ற ஏழை எளிய மக்களின் திறனை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதி உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்தை இம்மாநாடு பாராட்டி மகிழ்கிறது.
7) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்து, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது
8) இந்திய அளவில் முதன்முதலில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியில் செயல்படும் திராவிட மாடல அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 2,50,000 இலவச மின் இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மின்சாரத்துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களையும் இம்மாநாடு பாராட்டி மகிழ்வதோடு, திரு. செந்தில் பாலாஜி அவர்களின் சிறப்பான செயல்பாடுகளையும், மக்கள் பணியையும் கண்டு பயந்து அவருக்கு எதிராக பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வரும் காவிக் கும்பலை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது
9) தொழில் நகரமான கோவையின் பெரு வளர்ச்சிக்கு உதவும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், மேற்குப் புறவழிச் சாலை, செம்மொழிப் பூங்கா, பெரியார் நூலகம், உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ள தமிழ்நாடு அரசை மாநாடு நன்றியுடன் பாராட்டுகிறது.
10) சுயமரியாதை இயக்கம், 1928 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதைத் திருமணங்களையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் நடத்தி வந்திருக்கிறது. அவற்றைத் திராவிட இயக்கங்கள் இன்றும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. எனவே சுயமரியாதை, சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து கொள்வோருக்குத் தமிழ்நாடு அரசு, முதல் கட்டமாக ஒரு விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஒதுக்கி தர வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது!
11) சுயமரியாதை இயக்கம் உருவாகி வளர்ந்த இம்மண்ணில், இன்றும் சாதி ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய கொடுஞ்செயல்களுக்கு மிகக் கடுமையானத் தண்டனை தரக்கூடிய தனிச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது!
- திராவிட இயக்கத் தமிழர் பேரவை