பெரியார் தி. க. மறுப்பு

தமிழ்நாட்டில் தேநீர்க் கடைகளில் தீண்டாமையை வலியுறுத்தும் இரட்டைக் குவளை முறை முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று காவல்துறை அறிவித்துள்ளதை பெரியார் திராவிடர் கழகம் மறுத்துள்ளது. கிராமம் கிராமமாக இரட்டைக் குவளை பின்பற்றப்படும் கடைகளின் பட்டியலைத் தரத் தயார் என்றும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிவித்துள்ளார்.

பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் விடுதலை இராசேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் மட்டுமே- தேனீர்க் கடைகளில் இரட்டை டம்ளர் முறை இருப்பதாகவும் ஏனைய பல பகுதிகளில் இத்தகைய முறை இருப்பதாகக் கூறுவது உண்மையல்ல என்றும் தமிழ்நாடு காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூக நீதிப் பிரிவு தலைமை அதிகாரி அறிவித்துள்ளதை பெரியார் திராவிடர் கழகம் மறுக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தேனி, பல்லடம், ஈரோடு, கோபி, சேலம், கோவை பகுதிகளில் இரட்டை டம்ளர் முறை பின்பற்றப்படும் தேனீர் கடைகளின் முழுமையான பட்டியலை பெரியார் திராவிடர் கழகம் தயாரித்து முகவரிகளுடன் வெளியிட்டது.

அரசுக்கு உரிய கால அவகாசம் தந்து- அதற்குப் பின்னரும் இரட்டைக் குவளை அகற்றப்படாத கடைகளில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி உடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. போராட்டத்துக்குச் சென்ற கழகத்தினரை காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்ததே தவிர, தீண்டாமையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. உறுதியான- தொடர்ச்சியாக கண்காணிப்பும் நடவடிக்கைகளும் எடுப்பதன் மூலமாகத்தான், காலம் காலமாக ஊறிப் போயுள்ள இந்தத் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதைச் செய்யவேண்டிய காவல்துறையின் மனித உரிமைப் பிரிவு, ஏதோ தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அரசியல் பிரச்சனையாகப் பார்த்துக் கொண்டு மறுப்பு அறிக்கைகளை விடுவது புண்ணுக்குப் புணுகு பூசும் முயற்சியேயாகும்.

தீண்டாமை ஒழிப்பு என்ற சமூகக் கடமையில் அரசுக்கு மட்டுமல்ல - பெரியார் இயக்கங்களுக்கும் பொறுப்பு உண்டு என்று கடமை உணர்வோடுதான் பெரியார் திராவிடர் கழகம் போராட வந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய காவல்துறை, மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டிருப்பது மக்களை ஏமாற்றுவதாகும். இந்த அறிக்கையைப் படிக்கும், கிராமத்தில் வாழும் மக்கள் நகைக்கவே செய்வார்கள்.

ஆதாரங்களுடன் இரட்டைக் குவளை பின்பற்றப்படும் தேனீர் கடைகளின் பட்ட்டியலை நாம் தரத் தயார். தமிழ்நாட்டில் பொதுக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாததை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோயில் நுழைவுப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இப்போது தேவை, காவல்துறையின் உறுதியான நடவடிக்கையே தவிர மறுப்பு அறிக்கைகள் அல்ல என்று அந்த அறிக்கையில் விடுதலை இராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

Pin It