the dravidan yearsஅண்மையில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் ‘THE DRAVIDIAN YEARS’ என்ற நூல், தமிழகத்தின் வளர்ச்சிக்குத் திராவிடக் கட்சிகள் ஆற்றிய பங்களிப்பைக் குறித்துப் பேசுகிறது. இந்நூலை எழுதிய திரு.எஸ்.நாராயண் என்பவர் பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். அரசின் திட்டங்கள் பலநிறைவேறுவதைக் கண்கூடாகக் கண்டவர். எனவே அவருடைய பார்வையில் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி பேசியிருப்பது மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்த தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைக் கோடிட்டுக் காட்டுவதோடு தொடங்கும் இந்நூல், இந்தியாவில் ஒரு வகுப்பினரின் ஆதிக்கத்தை எதிர்த்து வேறெங்கும் இதுபோன்ற இயக்கம் தோன்றவில்லை என்கிறது. விடுதலைக்குப் பின் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் பின்பற்றப்பட்ட ஆங்கிலேயரின் கொள்கைகள் அதிகாரத்தின் மேலிருந்து கீழாகச் சென்றன (Top to bottom approach). அண்ணாவின் காலத்தில்தான் இதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. மக்களின் தேவைகளைப் பொறுத்தே கொள்கை முடிவுகள் அமைந்தன. இதுகீழிருந்து மேலாகக் கொள்கை அணுகுமுறைகளை முடிவு செய்தன.

 கலைஞரின் ஆட்சியில் அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாத வகுப்பினர் பிரதிநிதித்துவம் மிகுந்ததையும், இதனால் அதிகாரக் கட்டமைப்பில் பெரும் மாற்றம் நிகழ்ந்ததாகவும் நூலாசிரியர் கூறுகிறார். அரசின் நிர்வாகத்தில் ஒரு சமூகச் சமன்பாடு ஏற்படுத்துவதை நோக்கிய முக்கியமான ஒரு நகர்வாக இதனைக் குறிப்பிடுகிறார்.

தொழிற்பேட்டைகள், தொழில் வளர்ச்சிக் கழகங்களை உருவாக்கியது, 5 முதல் 12 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வருமான வரி விலக்களித்தது, தமிழ்நாடு நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், நபர் ஒருவர்க்கு உச்சவரம்பினை 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கராகக் குறைத்தது என்று கலைஞர் அரசின் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், திராவிடஇயக்கத்தின் சமூக நீதி சார்ந்த குறிக்கோள்களை நடைமுறைப்படுத்தக் காரணமாக அமைந்தது திமுக அரசே என்கிறது.

1977 முதல் 1987 வரையிலான அதிமுக அரசு முந்தைய திமுக அரசிலிருந்து பல்வேறு விதத்திலும் வேறுபட்டிருந்ததை எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். பார்ப்பனியத்திற்கு எதிரான போக்கை எம்.ஜி.ஆர் ஆதரிக்கவில்லை, மாநில சுயாட்சி குறித்த முன்னெடுப்புகள் ஏதும் நடக்கவில்லை ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இதழ்கள், நூல்கள் வாயிலாகப் படித்தவர்களை திமுக அணுகிய நிலையில், பெரும்பாலும் அரசியல் அறிவு பெறாத மக்களை அதிமுக திரைப்படம் வாயிலாகச் சென்றடைந்தது; கலைஞரைப் போல எம்.ஜி.ஆர். ஒரு மேடைப்பேச்சாளராக இல்லாத நிலையில், திரைப்படம் மூலமாகவே மக்களிடம் பிரபலமானார்; கட்சியின் கட்டமைப்பும் திமுகவைப் போல அல்லாது பலவீனமாக இருந்ததோடு, தலைமையிடமே அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டிருந்தன என்பன போன்ற செய்திகள் பலரும் அறிய வேண்டியது. சத்துணவுத் திட்டத்தை அதிமுக அரசின் முக்கியச் சாதனையாகக் குறிப்பிடும் நூலாசிரியர், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான் தனியார் சுயநிதிக்கல்லூரிகள் உருவானது என்கிறார். பெரும்பாலும் அரசியல்வாதிகளே இக்கல்லூரிகளைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது, சமூகநீதி, இட ஒதுக்கீடு சார்ந்த திட்டங்கள் மக்களின் வாக்குகளைப்

பெறுவதற்காகவே முன்னெடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டும் நூலாசிரியர், 1991-&96 காலகட்டத்தில் மருத்துவத்துறையிலும், நடந்த முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

1996 முதல் 2016 வரையிலான காலகட்டம் 130 பக்கங்களுக்குள்ளாக சுருக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை, சமத்துவபுரம், அம்மா உணவகம் போன்ற திட்டங்களைச் சிறந்தவையாகப் பட்டியலிடும் நூலாசிரியர், சமூக நலத் திட்டங்களில் இருந்து இலவசங்களை நோக்கி அரசு நகர்ந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்.

சில இடங்களில் நடுநிலையான அணுகுமுறை தவறியிருப்பதாகத் தோன்றுகிறது. என்றாலும் திராவிடக் கட்சிகளால் தமிழகம் சீரழிந்தது என்று கூசாமல் பொய் பேசி வருவோர்க்குத் தகுந்த பதிலைத் தேவையான நேரத்தில் தந்துள்ளது இந்நூல்.

Pin It