தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசின் கங்காணி ஆளுநருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவும், மக்கள் நலத் திட்டங்களை முடக்கவும் ஆளுநர்களை ஏவல் நாய்களாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ரவி சட்டப்படி தனக்கு விதிக்கப்பட்ட போஸ்ட் மாஸ்டர் வேலையை மட்டும் பார்க்காமல், மற்ற அனைத்து வேலைகளையும் சிறப்பாக பார்த்துக் கொண்டு இருக்கின்றார். திமுக ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க பாஜக இருக்கும் போது, ஆளுநர் ரவி தான் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் ஊழியன் என்பதை மறந்து ஒரு அரசியல்வாதியைப் போல் எதற்காக செயல்பட வேண்டும்?ஆளுநரின் செயல்பாடுகளால் திமுக கடுமையாக பாதிக்கப்பட்டாலும், அவர்களால் அதிகப்படியாக வைக்க முடிந்த முழக்கம் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான். ஆனால் மாநில சுயாட்சி பற்றி இந்தியாவில் அதிகம் பேசும் கட்சியான திமுக உண்மையில் வைத்திருக்க வேண்டிய முழக்கம் ஆளுநர் பதவியையே ஒழிக்க வேண்டும் என்பதுதான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியை அந்த மக்களுக்குப் பதில் சொல்லும் கடமையும் பொறுப்பும் இல்லாத ஒரு மூன்றாம்தர நபர் ஆட்டிப் படைக்க முடியும் என்றால், அது ஒரு கேவலமான மக்களாட்சி முறையாகவே இருக்கும்.
கி.பி 1892 ஆம் ஆண்டு கொண்டு வரப்பெற்ற இந்திய மேலவை சட்டம் மூலம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டாலும், அதில் முழுமையான மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாததால் 1919 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாண்டேகு –செம்ஸ்போர்ட் சீர்திருத்தம் முறையான இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்தது. அதன் படி அளுநரின் கருத்துரை குழுவில் அவரால் அமர்த்தப்பட்ட உறுப்பினர்கள் ஒரு புறமும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒரு புறமும் நிர்வாகப் பொறுப்பை நடத்துவார்கள். ஆனால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே இருந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னர்கூட ஆங்கில ஆட்சியின் எச்சமாக விளங்கும் இந்த கேடுகெட்ட இழிவான ஆளுநர் பதவியை ஒழிக்கவில்லை என்பது, ஆட்கள் மட்டுமே மாறியிருக்கின்றார்கள், அதிகார பாசிஸ்ட்கள் மாறவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது.
வெள்ளைக்காரன்தான் சனாதன தர்மத்தைக் கெடுத்தான், வெள்ளைக்காரன்தான் இந்திய பண்பாட்டைக் கெடுத்தான் என கல்லடிபட்ட நாயைபோல எப்போதும் கத்திக் கொண்டே இருக்கும் காவி சங்கிகளுக்கு அந்த வெள்ளைக்காரன் கொண்டு வந்த ஆட்சிமுறை மட்டும் இனிக்கின்றது என்பது இவர்கள் கடைந்தெடுத்த அந்நிய அடிமைகள் என்பதைத்தான் காட்டுகின்றது.
ஆளுநர் ரவிக்கும் அவரைத் தூக்கிப் பிடிக்கும் சங்கி கும்பலுக்கும் திமுக முதல் இலக்கு கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் முதல் இலக்கு தமிழ்மண்ணின் பார்ப்பன பாசிச எதிர்ப்பு மரபை உடைப்பதுதான்.
அதனால்தான் தொடர்ச்சியாக இதை பெரியார் மண் அல்ல, ஆழ்வார்களின் மண், ஆன்மீகவாதிகளின் மண் என்பதும், சனாதனம் தோன்றியது இங்கிருந்துதான் என பைத்தியக்காரனைப் போல பிதற்றுவதும், “பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்று சனாதனத்தின் செவிட்டில் அறைந்த வள்ளுவருக்கு காவி நிறம் பூசுவதும், சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்து தமிழை தாழ்த்திய பாரதிக்கு விழா எடுப்பதும் ஆகும்.
ஏற்கெனவே பிஜேபி சார்பாக இதற்குமுன் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் சனாதனத்தைப் பேசினாலும் ரவி இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு ரவுடியைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றம் சாட்டுகின்றன.
ரவி இப்படி நடந்து கொள்வதற்கு முக்கிய காரணம் அவர் அதிகார வர்க்கத்தின் கூலிப்படையில் பணியாற்றிய அனுபவம்தான்.
ரவி இந்திய காவல் பணியிலும், மத்திய அரசுப் பணியிலும், உளவுத்துறையிலும் வேலை செய்திருக்கின்றார். அந்தப் பணியில் இருந்தபோது, ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த போராட்ட குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டார்.
குறிப்பாக நாகாலாந்தில் உள்ள நாகா போராட்டக் குழுக்களுடன் ரவி பேச்சுவார்த்தை நடத்தி போடப்பட்ட ஒப்பந்தம் பெரும் முறைகேடுகள் நிறைந்தது எனக் கூறப்படுகின்றது. அதாவது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் நிலத்துக்கு இரட்டை ஒப்பந்தங்களை (Double Documents) போடுவது போன்று நாகா போராட்டக் குழுவினருடன் இரட்டை ஒப்பந்தங்களை ஆளுநர் ரவி போட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் கூறுகின்றனர்.
பேச்சுவார்த்தையின்போது போராட்டக் குழுவினருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தனிக்கொடி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டதாக ஓர் ஆவணத்தையும், அதே போல பிரதமர் மோடியிடம், நாம் சொன்னதை போராட்டக் குழு ஏற்றுக் கொண்டு விட்டதாக வேறு ஓர் ஆவணத்தையும் கொடுத்துள்ளார். மோசடியான இந்த ஆவணம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என போராட்டக் குழுவினர் கூறுகின்றார்கள்.
தேசிய இனப் போராட்டங்களும் அவர்கள் முன்வைக்கும் தனிநாடு கோரிக்கையும் பா.ஜ.கவின் ‘அகண்ட பாரதம்’ என்ற ராமராஜ்ஜிய முழக்கத்துக்கு எதிராக உள்ளது. அதனால்தான் பிஜேபி அப்படியான தேசிய இன உரிமையைப் பேசும் மாநிலங்களை ஒடுக்குவதற்காக ரவி போன்றவர்களை பயன்படுத்திக் கொள்கின்றது. அதை அவர் ஏற்கெனவே வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பாக செய்து முடித்திருக்கின்றார்.
இந்த அடிப்படையில்தான் தமிழ்நாட்டிற்கு ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டதும். தமிழர்கள் தங்களை தனி அடையாளமாக உணர்வதும், நீண்ட நெடுங்காலமாக தனித்தமிழ்நாடு கோரிக்கை இருப்பதும், அதற்கான அனைத்து கருத்தியலும் மிக வளர்ச்சி பெற்ற நிலையில் இருப்பதும் பாசிச பிஜேபியை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது.
இந்த அச்சம்தான் ஆளுநர் ரவியை தமிழ்நாடு என்பதைவிட, தமிழகம் என்பதே சரியாக இருக்கும் எனப் பேச வைத்திருக்கின்றது.
உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சங்கி கும்பலால் நடத்தப்பட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தமிழினத் துரோகிகளை அழைத்து ரவி பாராட்டினார். அப்போது பேசிய முரட்டு சங்கி ரவி, "பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. விடுதலைப் போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். பாரதம் என்பது ரிஷிகள், ஆன்மீக இலக்கியங்களால் உருவாக்கப்பட்டது. நமது பாரத தேசத்தை பிளவுபடுத்த, அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்'' எனப் பேசியுள்ளார்.
ரவி தான் என்ன பேசினாலும் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் எந்த எதிர்வினையையும் ஆற்ற மாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் இப்படி பேசினார். ஆனால் இந்த முறை தமிழ்மக்களின் உணர்வுகளில் கலந்த தமிழ்நாடு என்ற பெருமிதத்தின் மீது கை வைத்ததால் தேள்கொட்டிய திருடன் நிலைக்கு ரவி தள்ளப்பட்டார்.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் அனைத்து முற்போக்கு இயக்கங்களும், சமூக அக்கறை உள்ள இன உணர்வாளர்கள் என மொத்த தமிழகமுமே ரவியின் அடாவடிப் பேச்சுக்கு எதிராக கொதித்தெழுந்தது.
சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய நாலு சீட்டும் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் நொட்டிக்கொண்டு போய்விடும் என்ற சூழ்நிலை ஏற்படவே தற்போது மரியாதைக்குரிய ரம்மி ரவி அவர்கள் தன்னுடைய பிதற்றல் கருத்தை தானே மறுத்து அறிக்கைவிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சாரத் தொடர்பைக் கொண்டாடும்' ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ , அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்குப் புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்."
"எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் திராவிட ஆட்சியில் தமிழ் மக்கள் 50ஆண்டுகளாக ஏமாற்றப் பட்டிருக்கின்றார்கள் என்றால், அதற்கான சரியான தரவுகளை வெளியிட்டு பேசியிருந்தால் அவரை அறிவு நாணயம் உடைய நபர் என்று சொல்லலாம். ஆனால் உலகில் எந்த சங்கியிடம் எந்த காலத்தில் அறிவு நாணயம் இருந்திருக்கின்றது? ஏன் பாரதத்தைக் கட்டியமைத்ததாக சொல்லும் ரிசிகள், முனிவர்களிடமாவது அது இருந்திருக்கின்றதா? அத்தனை பேரும் சனாதன சாதிவெறி பிடித்த பார்ப்பன பாசிஸ்ட்கள்தானே!.
தொடர்ச்சியாக ரவி இப்படி தமிழர்களுக்கு எதிராக பிதற்றிக் கொண்டே இருக்கின்றார் என்றால், அவருக்கு தமிழ்நாட்டின் வரலாறும் இந்தியாவின் வரலாறும் மயிரளவுக்குக் கூட தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் இப்படி பேசுபவர் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவராகத்தான் இருக்க முடியும்.
ஆளுநர் ரவி மாநில உரிமைகளில் மூக்கு நுழைப்பதை மட்டும் செய்யாமல் மாநில சட்டம் ஒழுங்குப் பிரச்சினை போன்றவற்றிலும், ஆட்சி முறையிலும் கூட தலையிடத் துணிந்திருக்கின்றார்.
ஆளுநர் மாளிகையில் ஐ.ஏ.எஸ். பயிலும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ரவி “ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒன்றிய அரசின் பக்கம் தான் நிற்க வேண்டும். அவர்கள் தான் உங்களை பணிக்குத் தேர்ந்தெடுத்தார்கள்” என்று திமிர்த்தனமாகப் பேசி இருக்கின்றார். இதன் மூலம் மாவட்ட ஆட்சியர்களை எல்லாம் சங்கிகளின் கைக்கூலிகளாக வேலை பார்க்க அழைப்பு விடுக்கின்றார்.
‘ரம்மி ரவி’ இதுவரை தமிழ்நாடு அரசாங்கம் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றார். இதுவரை ஆன்லைன் ரம்மியால் தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது ரவி எந்தவகையான மனித விழுமியங்களும் அற்ற கொடூர எண்ணம் படைத்த கார்ப்ரேட் கைக்கூலி என்பது தெளிவாகின்றது.
இந்த மசோதாவிற்கு மட்டுமல்ல, ஏறக்குறைய 22க்கும் மேற்பட்ட மசோதாக்களை ரவி கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றார். அதில் தமிழக மாணவர்களின் கல்வி சம்மந்தப்பட்ட மசோதாக்களும் அடக்கம்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையைக்கூட படிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பெரியதா, இல்லை வெட்டி சம்பளம் வாங்கும் தான் பெரிய ஆளா என சவால் விட்டிருக்கின்றார்.
குறிப்பாக ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்தப் பத்தியில், "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது" என்ற பகுதியை மொத்தமாகத் தவிர்த்து உள்ளார்.
மேலும் தமிழ்நாடு என்ற சொல் வரும் இடங்களில் எல்லாம் இந்த அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
இதற்கு சட்டசபையிலேயே பதிலடி கொடுக்கும் விதமாக ரவி உரைக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அத்தோடு ஆளுநர் உரை நீக்கப்பட்டு அரசு தயாரிக்கப்பட்ட உரை அவையில் சேர்க்கப்பட்டு ரவியின் திமிரில் கொள்ளி வைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக பல்கலைக்கழங்களில் மூக்கை நுழைப்பது, வெட்கம் கெட்ட சனாதனத்தைப் பரப்புரை செய்வது, புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பது என தினம் தினம் ஒரு சாக்கடையை ரவி அவர்கள் தன்னுடைய வாயில் இருந்து இறக்கிக் கொண்டே இருக்கின்றார்.
அளவு ரீதியான மாற்றங்கள் பண்புரீதியான மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதுதான் விதி. ஆளுநர் ரவி இதை உணர்ந்து செயல்பட வேண்டும். பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உலா வருவதால் நாய்கள் ஒருபோதும் புலிகள் ஆகிவிடாது என்பதும், எட்டு கோடி தமிழ் மக்களை இழிவுபடுத்தும், அவர்களின் நலனின் மேல் எச்சில் துப்பும் ஆளுநருக்கு கூடிய விரைவில் தமிழக மக்கள் புத்தி புகட்டுவார்கள் என்பதையும் ஆளுநருக்கும் அவருக்கு எழுதிக் கொடுக்கும் சங்கி கும்பலுக்கும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
- செ.கார்கி