தி.மு.க வின் ஊழல் பட்டியலை வெளியிடப் போகிறேன் பார் என்று துள்ளிக் குதித்தார் அண்ணாமலை.

அதற்காக மாதம், நாள், நட்சத்திரம், நேரம் எல்லாம் குறித்தார் .கடைசியில் அவர் வெளியிட்டது ஊழல் பட்டியல் அல்ல, வெறும் சொத்துப் பட்டியல் தான். இதை இணைய தளத்தில் கூடப் பார்க்கலாம். இதற்கு ஏன் அவர் இவ்வளவு மெனக்கெடுகிறார்? இப்பொழுது ஜூலை மாதத்தில் இரண்டாம் பட்டியலை வெளியிடப் போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார் அவர்.

பா.ஜ.க வின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை அரசியல் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு இப்படியெல்லாம் லேகியம் விற்பவரைப் போல் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது.

மாண்புக்கு உரியவர்களான முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உள்பட. டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என்றால், அது அவரின் தில்லு முல்லுகளை அம்பலப்படுத்தத் தானே ஒழிய அவரிடம் பணம் வாங்குவதற்கு அல்ல.

நம்ம அண்ணாமலை சொல்லி இருக்கிறார் அவரின் நண்பர்கள் தான் அவருக்கு உதவி வருகிறார்கள் என்று. ஆர்.எஸ்.பாரதி சொல்கிறார் அண்ணாமலை ஒரு வருடம் ‘உள்ளே’ போகப் போகிறார் என்று. அதற்கு யார் என்ன செய்ய முடியும்?

தி.மு.கவினர் 1461 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டிருக்கிறார்களாம். அதனால் பா.ஜ.க தமிழ்நாட்டில் தலைகால் தெரியாமல் வளர்ந்து விட்டதாகப் புளகாங்கிதம் அடைகிறார் அவர். அதைத் தவிர வேறு என்ன செய்வார், பாவம்.

எதற்கு என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுபவர்களை நம்ம நகைச்சுவை நடிகர் வடிவேலு சொல்வார் ‘மங்குனி, மங்குனி’ என்று.

பா.ஜ.க வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் ஒரு வேண்டுகோள். தயவு செய்து குடுகுடுப்பை ஆட்டி ‘தமாஷ்’ பண்ணாதீர்கள். அரசியல் செய்ய முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் ஓய்வாவது எடுத்துக் கொள்ளுங்கள்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It