வெற்றியைக் கொண்டாடுவோம்!

விழிப்பின்மைக்காக வருந்துவோம்!

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு இட ஒதுக்கீடு என்பது தொடர்பான வினாக்கள் அண்மையில் மருத்துவக் கல்வி தொடர்பில் மீண்டும் ஓங்கி ஒலித்தன. இச்சிக்கல் தொடர்பாக அரசமைப்புச் சட்டம் தொடங்கி அரசாணைகள் வரை பல சட்டதிட்டங்கள் இருந்து வருகின்றன. அதே போல் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் வழங்கிய பல தீர்ப்புகளும் உள்ளன.

இந்தத் தீர்ப்புகளில் கடைசியாக வந்திருப்பது சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு தொடர்பாகக் கடந்த ஜூலை 27ஆம் நாள் வழங்கியுள்ள தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை முழுமையாக விளங்கிக் கொள்ளவே கூட முழுமையான சமூக – வரலாற்று – சட்ட - அரசியல் பின்னணியையும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருப்பினும் இப்போதைக்கு இந்தத் தீர்ப்பின் உள்ளடக்கம் என்ற அளவில் நம் பார்வையை மட்டுப்படுத்திக் கொள்வோம்.

பிற்படுத்தப்பட்டோர் யார்?

இட ஒதுக்கீடு நோக்கில் சமூக வகுப்புகள் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன: 1) தாழ்த்தப்பட்ட வகுப்புகள், 2) பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், 3) ஏனைய வகுப்புகள் (இவற்றையே முன்னேறிய வகுப்புகள் என்றும் சொல்வதுண்டு).

சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்பட்ட வகுப்புகள் என்று அரசமைப்புச் சட்டம் சொல்வது முதல் இரு பிரிவினரையும் சேர்த்துக் குறிக்கும். எனவேதான் இரண்டாம் பிரிவினருக்கு ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC = ஏ.பி.வ.) என்ற பெயர் வந்தது. பட்டியல் வகுப்புகள் அல்லது அட்டவணை வகுப்புகள் எனப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளில் அட்டவணைச் சாதிகள் (SC அ.சா.), அட்டவணைப் பழங்குடிகள் (ST = அ.ப.) என்ற இரு பிரிவினர் உள்ளனர்.

தமிழகத்திலும் இந்தியாவிலும் இடஒதுக்கீடு

தமிழகத்தைப் பொறுத்த வரை அட்டவணைச் சாதிகள் / அட்டவணைப் பழங்குடிகளுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் இட ஒதுக்கீடு உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (MBC = மி.பி.வ.) என்று தனியாக ஒரு வகைப்பாடு உள்ளது.

இந்திய அரசைப் பொறுத்த வரை அ.சா./அ.ப. (SC/ST) பிரிவினருக்கு மட்டும் தொடக்கத்திலிருந்தே இடஒதுக்கீடு செயல்படுகிறது. ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு (ஏ.பி.வ.) இடஒதுக்கீடு வழங்க முதன்முதலாக மண்டல் குழு பரிந்துரைகளே வழிசெய்தன. மண்டல் குழு அறிக்கை 1980ஆம் ஆண்டு கடைசி நாளில் இந்திய அரசிடம் வழங்கப்பட்ட போதிலும் பத்தாண்டுக் காலம் பரணில் உறங்கியது.

1990ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் நாள் தலைமையமைச்சர் விசுவநாத் பிரதாப் சிங் அதற்கு உயிரூட்டினார். காங்கிரஸ், பாசக இரு கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இதைச் செய்தார். பார்ப்பன மற்றும் ‘மேல்சாதி’ மாணவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் விபி சிங் ஒரு வகையில் பின்வாங்கினார், உயர் கல்வி நிறுவனங்களில் ஏ.பி.வ. பிரிவினர்க்கு இடஒதுக்கீடு வழங்குவதில்லை என்று ஏற்றுக் கொண்டார்.

2006 வரைக்கும் கூட இதே நிலைதான் நீடித்தது. 2006 சனவரி 20ஆம் நாள் அரசமைப்புச் சட்டத்தில் 93ஆம் திருத்தம் செய்யப்பட்டு உறுப்பு 15(5) சேர்க்கப்பட்டது. ஏப்ரல் 5ஆம் நாள் அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ச்சுன் சிங் உயர் கல்வி நிறுவனங்களில் ஏ.பி.வ. (OBC) பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு வழங்கும் கொள்கை முடிவை அறிவித்தார், ஆனால் அந்த ஆண்டிலேயே 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகத் தராமல் ஆண்டுக்கு 9 வீதம் மூன்றாண்டுகளில் பிரித்துக் கொடுத்து மூன்றாம் ஆண்டிலிருந்து 27 விழுக்காடு தருவது என்ற இணக்க ஏற்பாட்டுக்கு இணங்கினார்.

அதாவது 2008-09ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT) இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) உள்ளிட்ட நடுவணரசு சார்ந்த உயர் கல்வி நிறுவனங்களில் ஏ.பி.வ. (OBC) பிரிவினர்க்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்திய அரசின் பொறுப்பில் உள்ள மருத்துவக் கல்வியிலும் இளநிலை பட்டப் படிப்பு (MBBS [பல் மருத்துவம் என்றால் BDS]), முதுநிலை பட்டப் படிப்பு (MD/MS) ஆகிய இரண்டிலும் இதே இட ஒதுக்கீடு செயல்படுகிறது. அப்படியானால் என்ன சிக்கல் என்ற கேள்வி எழுகிறது.

நடுவணரசின் பொறுப்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மிகச் சிலவே. மாநில அரசின் பொறுப்பில்தான் பெரும்பாலான மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 33 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழ் நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்குரிய பங்கிலும் தமிழ்நாட்டுக்குரிய இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

அதாவது 1994ஆம் ஆண்டு முதல் அ.சா. (SC) பிரிவினர்க்கு 18% அ.ப. (ST) பிரிவினர்க்கு 1% பி.வ. (BC) பிரிவினர்க்கு 50% வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் 69 விழுக்காடு. இந்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் நடுவணரசின் இடஒதுக்கீட்டு முறை. தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறை என்று தனித்தனி ஓடைகளாக இருந்த வரை சிக்கல் எழவில்லை. இந்த இரு ஓடைகளும் ஓரிடத்தில் கலந்த போதுதான் சிக்கல் தொடங்கியது. எப்போது எப்படிக் கலந்தன?

அனைத்து இந்தியத் தொகுப்பு

1984ஆம் ஆண்டு டாக்டர் பிரதீப் ஜெயின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைத்து இந்தியத் தொகுப்பு (All India Quota) என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலும் அந்தந்த மாநில மாணவர்களுக்கே இடம் கிடைக்கிறது. சில மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளே இல்லை. வேறு சில மாநிலங்களில் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே மாநில அரசுகள் தங்கள் மருத்துவக் கல்லூரிகளில் குறிப்பிட்ட இடங்களை பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும்.

அந்த இடங்களை அனைத்திந்திய அளவில் இந்திய அரசு நிரப்பிக் கொள்ளலாம். இந்த இடங்களுக்குத்தான் அனைத்து இந்தியத் தொகுப்பு (AIQ = அ.இ.தொ.) என்று பெயர். இளநிலையில் 15 விழுக்காடும் முதுநிலையில் 50 விழுக்காடும் இவ்வாறு அ.இ.தொ.-வுக்குத் தரப்பட வேண்டும். இவை தவிர இந்திய அரசுக் கல்வி நிறுவனங்களும் அ.இ.தொ.வுக்குச் சில இடங்களை வழங்கும்.

தமிழக அரசு தன் பொறுப்பில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களில் (அரசுக் கல்லூரி ஆனாலும் தனியார் கல்லூரி ஆனாலும்) இளநிலையில் 15 விழுக்காடும் முதுநிலையில் 50 விழுக்காடும் அனைத்து இந்தியத் தொகுப்புக்குத் தந்து விடுகிறது. இந்த அ.இ.தொ. இடங்களிலும் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா? அப்படிக் கடைப்பிடிக்கும் போது எந்த இடஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிப்பது? நடுவணரசின் முறையையா? மாநில அரசின் முறையையா? மாநில அரசுப் பொறுப்பிலுள்ள கல்லூரிகளில்தான் அ.இ.தொ. மாணவர்களும் பயிலப் போகின்றார்கள்.

நடுவணரசுப் பொறுப்பில் உள்ள கல்வி நிறுவனங்களில் நடுவணரசின் இட ஒதுக்கீட்டு முறைதான் கடைப் பிடிக்கப்படுகிறதே தவிர அவை இடம் பெற்றுள்ள மாநிலங்களின் இட ஒதுக்கீட்டு முறை அல்ல. அப்படியானால் மாநில அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாநிலத்துக்குரிய இட ஒதுக்கீட்டு முறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இந்த அனைத்து இந்தியத் தொகுப்புக்கு மாநில அரசு ஒப்படைக்கும் இடங்களில் ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பாரைப் பொறுத்த வரை இந்த இரு முறைகளுமே கடைப்பிடிக்கப்பட வில்லை என்று தெரியவரும் போது அதிர்ச்சியாக உள்ளது.

இடஒதுக்கீட்டை இல்லாமலாக்கிய உச்ச நீதிமன்றம்

அனைத்து இந்தியத் தொகுப்பு 1984-85இல் வந்த போது அதில் எவ்வித வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்கும் உச்ச நீதிமன்றம் இடமளிக்கவில்லை. அ.இ.தொ. இடங்களைப் பொதுப்போட்டியின் மூலம் நிரப்பச் சொல்லி விட்டது. அதனால் அ.சா., அ.ப. உட்பட யாருக்கும் அ.இ.தொ.-இல் இடஒதுக்கீடு இல்லை, இருபதாண்டு காலம் அ.இ.தொ.வில் யாருக்குமே இடஒதுக்கீடு இல்லாத நிலை! அரசமைப்புச் சட்டமே செயலிழந்து நின்ற அவலம்! உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி எதிர்ப்புக் கண்ணோட்டத்துக்கு இது அப்பட்டமான சான்று! இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்ட உறுப்புகள் அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பின் கீழ் இருப்பினும் இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என உச்ச நீதிமான்கள் போகிற போக்கில் சொல்லி விட்டு எழுந்து போவதன் உட்கிடக்கை புரிகிறதா?

2007 சனவரி 31ஆம் நாள் அபயநாத் வழக்கில்தான் அ.சா./அ.ப. உள்ளிட்ட இடஒதுக்கீட்டுக்கு இந்திய அரசு வகை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருபதாண்டு காலம் இடஒதுக்கீடு என்ற ஒன்றே இல்லாத அநீதித் தீவாகக் கிடந்த அனைத்திந்தியத் தொகுப்பில் 2007-08இல் தான் அ.ச./அ.ப. இட ஒதுக்கீடே அறிமுகமாயிற்று. அப்போதே ஏ.பி.வ. இட ஒதுக்கீடும் வந்திருக்க வேண்டும்.

நடுவணரசின் முறைப்படி என்றால் கூட முதலாண்டில் 9, அடுத்த ஆண்டில் 18, மூன்றாம் ஆண்டில் 27 விழுக்காடு ஏ.பி.வ. பிரிவினர்க்குக் கிடைத்திருக்க வேண்டும். அ.இ.தொ.க்குத் தமிழகம் தரும் இடங்கள் என்பதால் தொடக்கத்திலிருந்தே தமிழக முறைப்படி 50 விழுக்காடு கிடைத்திருக்க வேண்டும். எவ்வகை இட ஒதுக்கீடும் செயல்படவிலை என்பதுதான் பெரிய கொடுமை!

கொள்ளையோ கொள்ளை!

இது பகற்கொள்ளை! இருபதாண்டுக் காலம் பட்டியலின மக்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் கொள்ளை போயின. பதின் மூன்றாண்டுக் காலம் ஏனைய பிற்பட்ட வகுப்பினர்க்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் கொள்ளை போயின! கொள்ளையடித்தவர்கள் யார்? இந்திய உச்ச நீதிமன்றமும் இந்திய அரசினரும்! காங்கிரஸ் ஆட்சியும் பாசக ஆட்சியும்!

இப்போது சமூக நீதியின் வெற்றிக்கு விழா எடுக்கும் கட்சிகள் எல்லாம் இந்தக் கொள்ளை நடப்பதே தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தவைதாம்! அதற்காக இவர்கள் வருந்த வேண்டும்! நாமும் வருந்த வேண்டும்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசும் இந்திய மருத்துவப் பேரவையும் (MCI = இ.ம.பே.) அளித்துள்ள தரவுகளின் படி கடந்த நான்காண்டுக் காலத்தில் அனைத்து இந்தியத் தொகுப்புக்குத் தமிழகம் ஒப்படைத்த இடங்கள் இளநிலை, முதுநிலை இரண்டும் சேர்ந்து 5,457. இடஒதுக்கீடு செய்திருந்தால் இதில் 2,729 இடங்கள் ஏனைய பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

நடுவணரசின் கல்வி நிறுவனங்கள் அ.இ.தொ.க்கு ஒப்படைக்கும் இடங்களில் நடுவணரசின் இட ஒதுக்கீட்டு முறை கடைப் பிடிக்கப்படுகிறது. அதாவது அ.சா. 15%. அ.ப. 7%, ஏ.பி.வ. 27% என்ற தகவில் இட ஒதுக்கீடு தரப்படுகிறது. இது தவிர பொருளியலில் நலிந்த பிரிவு (EWS = பொ.ந.பி.) என்ற புதிய வகைப்பாடு தோற்றுவிக்கப்பட்டு 10% ஒதுக்கப்படுகிறது.

மொத்தம் 50 விழுக்காட்டுக்கு மேல் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் மாநில அரசின் இடஒதுக்கீடு 50 விழுக்காட்டு வரம்பைத் தாண்டக் கூடாது என்று நடுவணரசு அடம் பிடித்தது. உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று வாதாடியது. வேறு வழக்குகளைக் காட்டி இழுத்தடிக்க முயன்றது. எப்படியாவது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு உரிமையை மறுக்கத் தலைகீழாய் நின்றது.

வாழ்த்தும் வருத்தமும்

உயர் நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கும் சமூக நீதிக்கும் கிடைத்துள்ள வெற்றி என்பதில் ஐயமில்லை. வழக்குத் தொடர்ந்த தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் திறம்பட வாதிட்ட வழக்கறிஞர்களையும் பாராட்டுகிறோம். அதே போது கடந்த காலத்தில் விழிப்போடில்லாமல் தூங்கி விட்டோம் என்பதற்காக நாம் உட்பட அனைவரும் வருந்த வேண்டும்.

இந்த நேரத்தில் சிலவற்றைக் கவனப்படுத்த வேண்டும். இடஒதுக்கீட்டில் அனைத்து இந்தியக் குறுக்கீட்டால் என்றுமே தொல்லைதான்! எப்படி ’நீட்’ தேர்வினால் நம் ஒருங்கிணைந்த நல்வாழ்வு அமைப்புக்குக் கேடோ, அதேபோல் இந்திய அரசின் இடஒதுக்கீட்டு மறுப்பு என்பது நம் சமூகநீதிக்குக் கேடு! பிற்படுத்தப்பட்டோருக்குரிய இடங்களின் திருட்டு தற்செயலானதன்று. பிற மாநில மாணவர்களுக்குச் சில இடங்கள் ஒதுக்குவதில் தவறில்லை. ஆனால் அதற்கு அனைத்து இந்தியத் தொகுப்பு என்பது தேவையில்லை.

இட ஒதுக்கீட்டில் இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் ஒரே அணுகுமுறையோ ஒரே தகவுமுறையோ இருக்க முடியாது, ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான இட ஒதுக்கீட்டையே எடுத்துக் கொண்டாலும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடக் காணலாம், ஆந்திரம் 29%, இமாசலப் பிரதேசம் 12-18%, சத்திஸ்கார், உத்தர்காண்டு, ஜார்க்கண்டு 14%, கர்நாடகம் 32%, கேரளம் 40%, மராட்டியம், இராசத்தானம், சிக்கிம் 21%, பீகார் 33%, மணிப்பூர், மேற்கு வங்கம் 17%, பஞ்சாப் 12%, புதுவை 34%, அந்தமான் நிக்கோபர் 38%, தாத்ரா நகர் ஹவேலி 5%, சம்மு காசுமீரம் 13%, அசாம், தில்லி, கோவா, குசராத், அரியானா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், சண்டிகார் 27%, தமிழ்நாடு 50%.

தன்னாட்சியும் இடஒதுக்கீடும்

இடஒதுக்கீட்டுக் கொள்கையும் தகவளவும் முழுக்க முழுக்க மாநில அதிகாரத்துக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும். அதாவது தன்னாட்சி இல்லையேல் இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது, தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இடையுறவு என்று இதையே தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சுட்டுகிறது,

இரண்டாவதாக, கல்வி எதுவானாலும் தாய் மொழியே, அதாவது அந்தந்தத் தேசிய இனத்தின் தேசிய மொழியே கல்வி மொழியாக, பயிற்று மொழியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழில்தான் என்ற நிலை இருந்திருக்குமானால் அனைத்து இந்தியத் தொகுப்பு என்ற எண்ணமே பிறந்திருக்காது அல்லவா? ஆங்கில வழிக் கல்வி என்பது சமூக நீதியை மறுக்கும் கருவி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அனைத்து இந்தியத் தொகுப்பு என்ன, அனைத்து உலகத் தொகுப்புக்குக் கூட இடம் கொடுப்போம்! ஆனால் தமிழ்வழிக் கல்வி என்பதில் ஊன்றி நிற்போம்! இந்தியக் கட்டமைப்பில் நாம் என்னதான் முயன்றாலும் தமிழ்வழிக் கல்வி அருகி அருகிப் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழ்வழிக் கல்வியும் இடஒதுக்கீடும்

தமிழ்வழிக் கல்வியும் இடஒதுக்கீடும் சமூகநீதியின் இரு கால்கள். ஒன்றில்லாத மற்றொன்று ஊனத்துக்கே வழி செய்யும். இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் வரலாறு கற்றுத்தரும் பாடங்களை இனியாவது கற்போம்!          

நாம் கொண்டாடுகிற இந்த வெற்றி நிலையானதன்று! அடுத்த திருட்டுக்கும் அடுத்த வெறிப் பாய்ச்சலுக்கும் நம் பகைவர்கள் அணியமாகிக் கொண்டிருக்கிறார்கள். அநீதியை அறத்தால் தடுக்க நாமும் நம் அறிவாய்தங்களைக் கூராக்கிக் கொள்வோம்!

- தியாகு

Pin It