கடந்த சில நாட்களாக அரசமைப்பு பதவியை அலங்கரித்திருபவர்களே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து ஆரோக்கியமற்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவை நீதித்துறையின் மீதான பா.ஜ.க. வின் துல்லியத் தாக்குதல் என எதிர்வினைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மற்றும் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கின் இடைக்கால தடையுத்தரவு. இவை இரண்டின் பின்னனியில் பா.ஜ.க.வின் ஆட்சியதிகார மையங்களும் சங் பரிவார் அணிகளும் உச்ச நீதிமன்றத்தின் மீது புதிய உளவியல் அச்சுறுத்தலைத் தொடுக்கவும் மதவாத வன்மங்களை வெளிப்படுத்தவும் தொடங்கியுள்ளன.
வரலாறு போற்றும் தீர்ப்பு
தமிழக சட்டமன்றம் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அமர்வு கடந்த 08.04.2025 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொண்டால் தான் பா.ஜ.க.வின் பதற்றத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
1) இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வாய்ப்பு இல்லை.
2) அதனை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிய ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது.
3) குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் வீட்டோ அதிகாரம் என்று எதுவும் இல்லை.
4) 2 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காததால், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
5) மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கான கால வரம்பை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசின் ஆலோசனையின்படி மசோதாக்களை நிறுத்தி வைக்கவோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவோ முடிவு செய்தால் அதை ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும். மாநில அரசின் ஆலோசனைக்கு மாறாக, மசோதாவை நிறுத்தி வைக்கவோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவோ முடிவு எடுத்தால், அதனை மூன்று மாதங்களுக்குள் செய்ய வேண்டும். சட்ட மன்றத்தால் இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பபட்ட மசோதாகளுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
6) ஆளுநர்கள் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்காக அனுப்பிவைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். அந்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கருதினால் அவற்றின் மீது உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று அந்த ஆலோசனையின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டுமெனவும் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகால பயணத்தில் முக்கியத் திருப்பத்தை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
நீதிபரிபாலனத்தின் மீதான உளவியல் தாக்குதல்
இந்தத் தீர்ப்பை அரசமைப்பின் உயர் நிலையிலுள்ள நாட்டின் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களே மிரட்டிகிற தொனியில் விமர்சித்துப் பேசியுள்ளார். “நாட்டில் இருப்பது உச்சநீதிமன்றம் தானா அல்லது சூப்பர் பவர் கொண்ட நாடாளுமன்றமா? அரசியல் சாசனத்தை பாதுகாக்கக் கூடிய அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவர்தான், தற்போது குடியரசுத் தலைவருக்கே நீதிபதிகள் உத்தரவிடுகிறார்கள். குடியரசுத் தலைவரை நீதிமன்றங்கள் வழி நடத்துவதையோ, உத்தரவு பிறப்பிப்பதையோ ஏற்றுக் கொள்ள முடியாது. உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாகவே பயன் படுத்துகின்றனர்” என சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். "மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு அரசியல் சாசனம் எந்தக் காலக் கெடுவும் விதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் அதற்கான காலத்தை நிர்ணயிப்பது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கருதப்படும், இதை நீதிமன்றம் செய்யும் பட்சத்தில், பிறகு சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு?”. என கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் அவர்களும் சிறுபிள்ளைத் தனமான கருத்தை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. வின் ஜார்கண்ட் மாநில கோடா தொகுதி மக்களவை உறுப்பினர் நிஷி காந்த் துபே என்பவர் "உச்சநீதிமன்றம் அதன் வரம்புகளை மீறிச் செயல்படுகிறது. உச்சநீதிமன்றமே அனைத்து முடிவுகளையும் எடுத்தால் நாடாளுமன்றமும் மாநில சட்டமன்றமும் எதற்கு? அவற்றை இழுத்து மூடிவிடலாம்” என்று மிரட்டுகிற தொனியில் பேசியுள்ளார். உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத்தின் முதல் அரசில் துணை முதலமைச்சராகவும் லக்னோ மாநகராசியின் மேயராகவும் பதவி வகித்த பாஜக தலைவர் தினேஷ் சர்மா என்பவர் “குடியரசுத் தலைவரே "உயர்ந்தவர்" என்பதால், அவரை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்று ANI தொலைக்காட்சி நேர்காணலில் பேசியுள்ளார். இந்த இருவரின் கருத்துகளை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மறுத்தாலும் அது பா.ஜ.க. வின் வழக்கமான தந்திரம் என்பது அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த கலவரத்திற்காக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஏப்ரல் 21 அன்று நடந்த விசாரணையின் போது அடுத்த மாதம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் “இதைத் திணிக்க குடியரசுத் தலைவருக்கு நாங்கள் உத்தரவிட வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா? இதுபோல் நாங்கள் நிர்வாக அதிகாரத்திற்குள் அத்துமீறி நுழைவதாகக் குற்றச்சாட்டுக்ளை எதிர்கொள்கிறோம்” எனக் கருத்து தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தின் மூலம் மேலே குறிப்பிட்ட விமர்சனங்களை எல்லாம் உச்ச நீதிமன்றம் உண்ணிப்பாகக் கவனித்து வருகிறது என்பதும் அதன் நீதிபரிபாலன உளவியலிலும் சுதந்திர உணர்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் புலனாகும்
மசோதா இழுத்தடிப்பு நாடக்கத்தின் முடிவுரை
இந்தத் தீர்ப்பில் பல அம்சங்கள் ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டவைதான். 1973 இல் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கை வகுத்த கேசவானந்த பாரதி வழக்கு, 1994 இல் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்த கட்டுப்பாடுகள் வகுத்த எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, சமீபத்தில் 2023 இல் பஞ்சாய் ஆளுநருக்கு எதிரான வழக்குகளின் முன் தீர்ப்புகள் இந்த வழக்கில் பின்பற்றப்பட்டுள்ளன. இரண்டு அம்சங்கள் மட்டுமே புதிதானவை. ஒன்று நீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. இரண்டு கால நிர்ணயம் செய்தது. இவைதான் பா.ஜ.க. முகாமை பதற வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தீடிரென இந்தக் கால வரம்பை நிர்ணியக்கவில்லை. பஞ்சாய், கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் ஆளுநர்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகள் விசாரணை 2023 நவம்பர் மாதம் நடைபெற்ற போதே தலைமை நீதிபதி டிஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வு “ஆளுநர்கள் இது போல் செயல்படுவது நெருப்போடு விளையாடுவதைப் போன்றது” என்று எச்சரித்தது. “ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு கால வரம்பு நிர்ணியக்கும் நிலைக்கு நீதிமன்றத்தை உட்படுத்தி விடாதீர்கள்” என்றும் கடிந்து கொண்டது. இனி மேலும் ஆளுநர்கள் இது போல் செயல்பட்டால் நீதிமன்றம் கால வரம்பு நிர்ணியக்கும் என்பதுதானே அதன் அர்த்தம்.
ஆனால் அதன் பிறகும் தமிழக ஆளுநர் தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை.அந்த வழக்கு விசாரணையின் போதே தன்னிடம் ஏற்கனவே 3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் 13.11.2023 அன்று திருப்பி அனுப்பினார். அவற்றை 18.11.2023 அன்று இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டார். உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் கூட ஆளுநர்கள் தொடார்ந்து இவ்வாறு செயல்படுவதால் வேறு வழியில்லாமல் இறுதியாக கால வரம்பை நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் கால வரம்பு குறிப்பிடப்படாத அரசமைப்புச் சட்டத்தின் வெற்றிடங்களை உச்ச நீதிமன்றம் பூர்த்தி செய்துள்ளது. இனி அந்த வெற்றிடத்திற்குள் மாநில அரசுகளின் மசோதாக்களை போட்டு மூடிவிட முடியாது. 10 ஆண்டுகளாக ஆளுநர்களை பகடைக் காயாக உருட்டி மாநில அரசுகளில் செயல்பாடுகளுக்கு முட்டுக் கட்டை போட்டு வந்த ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத செயல்பாட்டிற்கு இத்தீர்ப்பின் மூலம் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. நினைத்த போதெல்லாம் மாநில அரசுகளை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்தி வந்த ஒன்றிய அரசின் எதெச்சதிகாரத்திற்கு 1994 இல் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவு கட்டியது. அதே போல் இந்த வழக்கில் ஆளுநர்களின் மசோதா இழுத்தடிப்பு அதிகார மீறல்களுக்கு முடிவு கட்டியுள்ளது. அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கே சவால் விடுக்கிறது பா.ஜா.க. வட்டாரங்கள்.
அர்த்தமற்ற விமர்சனங்கள்
குடியரசுத் தலைவர்தான் உயர்ந்தவர். அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் என தீடிரென குடியரசுத் தலைவர் பதவியின் மாண்பமை குறித்து அக்கறை கொண்டவராகப் ஜகதிப் தன்வர் பேசுகிறார். ஆனால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அதன் முதல் அங்கமான குடியரசுத் தலைவரையே அழைக்காமல் மோடி அரசு அவமானப்படுத்திய போது அவர் எந்த தேசத்தில் இருந்தார் என்று தெரியவில்லை. அடுத்து குடியரசுத் தலைவர் தான் உயர்நதவர் என்ற வாதம் தவறானது. யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. அரசமைப்புச் சட்டம்தான் உயர்ந்தது. உச்ச நீதிமன்றம்தான் அதன் பாதுகாவலர். குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா? ஆளுநர் வழங்க வேண்டிய ஒப்புதலை நீதிமன்றமே வழங்கலாமா? அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை நீதிபதிகள் செய்ய முடியுமா? இவைதான் விமர்சனங்களின் சாரம். இதற்கு ஒரு சில வழக்குகளை உதாரணமாகச் சொல்லி விளக்கம் சொன்னால் சரியாக இருக்கும்
உச்சநீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நியமிக்க வேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம். இதன்படி நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசு வசமே இருந்தது. ஆனால் 1993 இல் இரண்டாவது நீதிபதிகள் வழக்கில், “தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நியமிக்கவேண்டும்” என்ற வாசகத்திற்கு “தலைமை நீதிபதியின் ஒப்புதலோடு நியமிக்க வேண்டும்” என புதிய வியாக்கியானம் அளித்து தீர்ப்பு வழங்கியது. அதன் மூலம் ஒன்றிய அரசு வசமிருந்த நீதிபதிகள் நியமன அதிகாரம், தலைமை நீதிபதியிடம் மாறியது.1998 இல் ‘மூன்றாவது நீதிபதிகள் வழக்கு” என்ற வழக்கில் தற்போதுள்ள கொலிஜியம் முறையை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவரிடம் இருந்த அதிகாரத்தை உச்ச நீதிமன்றமே எடுத்துக்கொண்டது இது அரசமைப்புச் சட்டத் திருத்தம் போன்றது தான்.
அடுத்து அரசமைப்புச் சட்டப்படி மரண தண்டனையை ரத்து செய்யக்கூடிய கருணை அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது. குடியரசுத் தலைவர் பல ஆண்டுகளாக கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் வைத்து இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சத்ருகன் சின்கா வழக்கில் 2014 ஜனவரியில் உச்ச நீதிமன்றமே 15 மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. கருணை மனுக்கள் மீதான முடிவின் அதீத காலதாமதம் சிறைவாசிகளின் அடிப்படை உரிமையைப் பறிக்கிறது என நீதிமன்றமே அந்தக் கருணை அதிகாரத்தை பயன்படுத்தியது. இது போல் ராஜீவ்காந்தி கொலை வழக்கு மற்றும் தேவேந்திர பால்சிங் புலாலர் வழக்குகளிலும் மரண தண்டனையை ரத்து செய்தது. மேலும் மரண தண்டனைச் சிறைவாசிகளை நடத்தும் முறை குறித்து முக்கிய நெறிமுறைகளை வகுத்தது. இப்படிப் பல வழக்குகளில் அரசமைப்புச் சட்ட மாண்புகளையும் நீதியையும் நிலை நிறுத்துவதற்காக குடியரசுத் தலைவர், ஆளுநர்களின் அதிகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. அரசமைப்புச் சட்ட விதிகளில் ஏற்படும் பொருள் குழப்பங்களுக்கு வியாக்கியானம் அளித்தும் வெற்றிடங்களுக்கு புதிய விதிகளை உருவாக்கியும் அரசமைப்புச் சட்டத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
வரலாறு காணாத மதவாத தாக்குதல்
அடுத்து வக்பு வாரிய திருத்தச் சட்ட வழக்கில் பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவு சங் பரிவாரங்களை பெரும் எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வு “இந்து அறநிலையத் துறையில் சட்டப்படி இந்துக்கள் மட்டுமே நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். முஸ்லீம் வக்பு வாரியத்தில் மட்டும் இந்துக்களை நியமிப்பது எதற்காக?” என்று கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு “முஸ்லீம் வழக்கு விசாரணையில் மட்டும் இந்து நீதிபதிகள் இருக்கலாமா” என உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே மதத்தை முன் நிறுத்தி கேள்வி கேட்கும் குதர்க்கமான பதிவுகளை பா.ஜ.க. வின் ஐ.டி விங் சமூக வலை தளங்களில் பரப்பி வருகிறது. அதன் உச்சகட்டமாக இந்துத்துவா அமைப்புகளின் வெளியுறவுக் கொள்கையின் அமைப்பாளரான சின்ஹா (டிவிட்டர் எக்ஸ் கணக்கின் பெயர் மிஸ்டர் சின்ஹா) என்பவர் தனது எக்ஸ் தளத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு “ஷரியா கோர்ட் ஆப் இந்தியா” என்ற மதவாத அடைமொழி அளித்து பதிவிட்டுள்ளார். நீதித்துறையின் மீது எத்தனையோ கருத்துகள், புகார்கள், விமர்சனங்கள் எழுந்திருந்தாலும் கூட மத அடையாளங்களை முன்னிறுத்தி, மத ரீதியான தாக்குதல்களை இதுவரை யாரும் செய்ததில்லை. அத்தகைய பாசிச செயலை சங் பரிவார் அமைப்பினர் செய்யத் தொடங்கி விட்டனர். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, தற்போது நீதிமன்றத்தையும் கடிக்கத் தொடங்கி விட்டனர்.
எதிராக தீர்ப்பு வழங்குபவர்களை பழி வாங்குவது, சாதகமாக திர்ப்பு வழங்குபவர்களுக்கு தக்க பிரதிபலன் அளிப்பது என்ற பா.ஜ.க.வின் செயல்திட்டத்தால் கடந்த 10 ஆண்டு காலத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஆதார் அட்டை, பணமதிப்பு நீக்கம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் பெரும்பாலும் பா.ஜ.க. விற்கு சாதகமாகவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அமைந்துள்ளன. தேர்தல் பத்திர வழக்கு, தற்போது ஆளுநர்கள் வழக்கு என எப்போதாவதுதான் பா.ஜ.க. விற்கு பாதகமான தீர்ப்புகள் வருகின்றன. அதையும் அனுமதிக்கக் கூடாது என்ற வஞ்சம் தான் நீதித்துறையின் மீதான் பா.ஜ.க. வின் இந்தத் தாக்குதல். நீதித்துறையின் மீதான இத்தகைய தாக்குதலை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து தடுக்காமல் இருந்தால் எப்போதாவது அரிதாகக் கிடைக்கிற நியாயமான தீர்ப்புகளும் இனி கிடைக்காமல் போய்விடும்
- மு.ஆனந்தன்