நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல், ஒரு முதன்மையான வினாவை நம் முன் வைத்தது. "இத்தேர்தல் இந்தியாவின் இறுதித் தேர்தலாக இருக்க வேண்டுமா அல்லது ஜனநாயகம் தொடர வேண்டுமா?" என்பதே அவ்வினா.

மறுபடியும், பாஜக வெற்றிபெற்று, மோடி இந்தியாவின் பிரதமரானால், மிகப் பெரும்பாலும் அவர் தன்னை ஒரு சர்வாதிகாரியாக அறிவித்துக் கொள்ளவே வாய்ப்புகள் மிகுதி. ஆதலால், இத்தேர்தலைப் பொறுத்தவரை, யார் அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே கூடுதல் கவனத்திற்கு உரியதாக இருந்தது.

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரின் இக்கருத்தை நன்கு புரிந்துகொண்ட, காங்கிரஸ் கட்சி, தெளிவாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பியே, தேர்தலில் போட்டியிட்டோம் என்றாலும், அதனை விட, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எங்களின் தலையாய நோக்கம். அதனால், பிரதமர் பதவியை வேறு கட்சிக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக உள்ளோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதே கருத்தை இந்தியாவில் உள்ள வேறு சில பெரிய கட்சிகளும் வெளியிட்டுள்ளன. இந்த நோக்கத்திற்காக மம்தா, மாயாவதி, அகிலேஷ் ஆகியோரைச் சந்திரபாபு நாயுடு பார்க்க இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

எனவே ஆட்சி அதிகாரம், பிரதமர் பதவி ஆகியனவற்றில் மட்டுமே குறியாக இல்லாமல், நாட்டு நலனில் அக்கறை கொண்டு, காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள முடிவை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

அடுத்த ஆட்சி பாஜகவின் ஆட்சியாக இருக்கக்கூடாது என்பதே நாடு பற்றிய கவலை கொண்ட அனைவரின் கருத்தாகவும் உள்ளது!

Pin It