15.05.2018 மதியம் 2 மணி நிலவரப்படி -
கர்நாடகத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலவரப்படி, யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை.
எனினும் இந்நிலை மாறலாம். எப்படி இருந்தாலும், பெரிய வெற்றி யார் ஒருவருக்கும் கிடைக்கப் போவதில்லை. பெரும்பாலும் கூட்டணி ஆட்சி வருவதற்கே வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகின்றன.
தொடக்கத்தில் 118 இடங்கள் வரையில் முன்னணியில் இருந்த பாஜக மெதுவாகக் கீழே இறங்கியது. இப்போது ஆட்சிக்கு யார் வரப்போகின்றனர் என்பதனை மஜக முடிவு செய்யும் என்பதாகத் தெரிகிறது.
இதில் கவலை தரத்தக்க செய்திகள் பல உள்ளன.
தாங்கள் இந்துக்கள் இல்லை, தனி மதம் என்று சொல்லிப் போராடிய லிங்காயத்துகளின் கோரிக்கையை ஏற்று அதனைத் தனி மதம் என்று அறிவித்தது காங்கிரஸ் ஆட்சி. ஆனால் இப்போது அந்தப் பகுதிகளில், பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. லிங்காயத் அல்லாத பிற இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
ரெட்டி சகோதரர்களின் ஊழல் உலகறிந்த ஒன்று. அதேபோல எடியூரப்பா, ஊழல் குற்றச்சாற்றில் சிறைக்குச் சென்றவர். பாஜக கட்சியிலிருந்தும் விலக்கப்பட்டவர். ஊழல் கறை படியாத உத்தமர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் பாஜக, ரெட்டி சகோதரர்களையும், எடியூரப்பாவையும் தங்கள் வேட்பாளர்களாக அறிவித்ததுடன் எடியூரப்பாதான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அறிவித்தது. அவர்கள் அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர். மக்களின் ஊழல் எதிர்ப்பு உணர்வு என்பது தேர்தலுக்கு அப்பாற்பட்டதா?
கூட்டாட்சிக்குத் தேர்தல் முடிவுகள் வழிவிடுமானால், அது குதிரை பேரங்களுக்கும், பல்வேறு குழப்பங்களுக்குமே வாசல் திறக்கும். அதிலும் மஜக தலைவர் குமாரசாமி பற்றிக் கேட்கவே வேண்டாம். அவரோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயன்றால், அது எதிர்காலத்தில் மேலும் ஒரு சரிவிற்கே காங்கிரஸைக் கொண்டு செல்லும்.
இன்னொரு விந்தையையும் இத்தேர்தல் முடிவில் பார்க்க முடிகிறது. மதியம் இரண்டு மணி நிலவரப்படி, காங்கிரஸ் 37.9 % வாக்குகளையும், பாஜக 36.5% வாக்குகளையும் பெற்றுள்ளன. ஆனால் பாஜக 104 இடங்களில் முன்னிலை பெற, காங்கிரஸ் கட்சியோ 78 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றது. கூடுதல் வாக்குகளும், குறைந்த வெற்றியும் என்பது, நம் தேர்தல் முறை எவ்வளவு தவறானது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
மொத்தத்தில், கர்நாடகத் தேர்தலில் எல்லோரும் தோற்றுப் போயுள்ளனர் மக்கள் உள்பட!