திரு. ராகுல் காந்தி அவர்களின் பதவி இழப்பிற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி இதில் மேற்கொள்ளவிருக்கும் சட்டப்பூர்வமான நடவடிக்கை என்ன?

பதில் : காங்கிரஸ் கட்சி இதை இரண்டு கோணத்தில் பார்க்கிறது. ஒன்று, அரசியல் கோணம். மற்றொன்று, சட்ட ரீதியாக. சட்டரீதியாக இதைப் பார்க்கும்போது, பதவி நீக்கம் செய்திருக்கிற மக்களவைச் செயலாளருக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அந்த அதிகாரத்தை வழங்கவில்லை. பதவி நீக்கத்தைக் குடியரசுத் தலைவர்தான் செய்ய முடியும். குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும். அதன் பிறகு அவர் இதன்மேல் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு அளித்து விடக்கூடாது என்ற நோக்கம் மட்டுமே பா.ஜ.க.வினருக்கு. அதனால் அவசரப்பட்டு, சட்டவிரோதமாக இதனை அவர்கள் செய்திருக்கிறார்கள். நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் காங்கிரசின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் என்றுதான் நான் நம்புகிறேன். ஆனால் இதைவிட அரசியல் ரீதியான கோணம் மிக முக்கியமான கோணம். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிற வாய்ப்பாக இதைக் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

peter alphonse 4502024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி அவர்களின் பெருமையைக் குலைக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுப்பது அவர்களின் திட்டமா?

ராகுல் காந்தியே “நான் கேட்கும் கேள்வியை அவர்கள் நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்கிறார். அந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. 20,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தில் சீனாக்காரர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த நிறுவனம். யுத்தத் தளவாடங்களைத் தயாரிக்கிற, ராணுவ ரகசியங்களைத் தெரிந்து கொள்ளும் நிலையிலிருக்கிற நிறுவனம். அதனுடன் ஒப்புதலும், புரிந்துணர்வும் எப்படிப் போடப்பட்டது? என்ற கேள்விக்குப் பதிலைத் தேடினால் பா.ஜ.க.வின் தேசாபிமானம், ஊழலற்ற ஆட்சி என்ற அத்தனை பிம்பங்களும் அடிபட்டுப் போகும். அந்தக் கேள்வியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்தப் பதவி நீக்கம்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் போக்கினை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அண்மைய எடுத்துக்காட்டு தெலுங்கானா. இந்தச் சூழ்நிலையில் வருகிற 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது எந்த அளவுக்கு சாத்தியம்? மம்தா பானர்ஜி போன்றவர்களுக்குக் காங்கிரசுடன் இணைவதில் உள்ள தயக்கங்களைப் போக்கி அவர்களைப் போன்றவர்களையும் ஒன்றிணைப்பது சாத்தியமா?

நிச்சயமாக. அதற்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அளித்துள்ள ஆலோசனையைக் காங்கிரஸ் கட்சியும் பின்பற்ற வேண்டும். மற்ற மாநிலக் கட்சிகளும் பின்பற்ற வேண்டும். “மாநிலக் கட்சிகள் இதை ஒரு அகில இந்தியத் தேர்தலாகப் பார்க்க வேண்டுமே தவிர மாநில அதிகாரத்திற்கான தேர்தலாகப் பார்க்கக் கூடாது” என்று நமது முதலமைச்சர் அற்புதமாக இதைக் குறிப்பிட்டார். மாநிலக் கட்சிகளின் ஆதரவும், அனுசரணையும் இல்லை என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் என்பது நடைபெறாத கனவு என்றும் கூறியுள்ளார். அதனால் காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் விட்டுக் கொடுக்க முடியுமோ விட்டுக் கொடுத்து, ஒன்றுபட வேண்டிய இடத்தில் தத்துவார்த்த அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், சந்திரசேகர ராவ் ஆகியோர் இந்த ஒற்றுமைப் படுத்தலில் சற்று நெருடலாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேர்வார்கள் என்று நம்புகிறேன்.

பிரதமர் மோடி பேசும் மேடையெங்கும் கூட்டுறவுக் கூட்டாட்சி (Co-operative Federalism) குறித்துப் பேசுகிறார். ஆனால் பா. ஜ. க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் பா.ஜ.க. வால் கூட்டாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்தாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?

ஆங்கிலேயரின் காலத்தில் காலனி நாடுகள் இருந்தது போல, இந்தி பேசாத மாநிலங்களைக் காலனிகளாகப் பார்ப்பதுதான் சனாதன சக்திகளின் நோக்கம். இச்சதியை இந்தி பேசாத மாநிலங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். கர்நாடகாவில் “நான் ஏன் இந்தி கற்க வேண்டும்?” என்று அவர்கள் கேள்வி எழுப்புவதாக நான் கேள்விப்பட்டேன். வடகிழக்கு மாநிலம் ஒன்றில் ஆளுநர் இந்தி பேசும்போது அங்கு அதனை எதிர்த்துக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த உணர்வு இன்று இந்தியா முழுவதும் வந்திருக்கிறது. ஆகவே வருகிற தேர்தல் காங்கிரசிற்கும், பா.ஜ.க.விற்கும் நடக்கிற தேர்தல் என்பதைவிட, சனாதனத்திற்கும், அதற்கு எதிரான திராவிடம் என்ற அரசியல் தத்துவத்திற்குமான தேர்தல் என்றுதான் நான் பார்க்கிறேன். அத்தத்துவம் என்பது தேசியம், பொதுவுடைமை, மாநில உரிமை, சுயமரியாதை, சமூகநீதி என்று எல்லாவற்றிற்குமான தத்துவம் என்பதை நாம் நிலைநாட்ட வேண்டும்.

-  பீட்டர் அல்போன்ஸ் 

நேர்கண்டவர் : வெற்றிச்செல்வன்

Pin It