தேசியக் கட்சிகள் எப்போதுமே மாநிலக் கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்பதுவும், மாநிலக் கட்சிகள் சில நேரங்களில் அதீத நம்பிக்கையோடு தேசியக் கட்சிகளை அனுசரித்து செல்லாத போக்கையும் கடந்த பல மாநிலத் தேர்தல்களில் பார்த்து வந்தோம். இம்முறை கர்நாடக மாநிலக் கட்சிகள் தான் தேசியக் கட்சிகளோடு முரண்பட்டு அதீத நம்பிக்கையோடு இந்தத் தேர்தலை சந்தித்ததாக பார்க்க வேண்டி இருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வரும் வரை கூட, ஒன்றிய அரசின் ஆளும் பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்க்கும் கட்சிகள் ஒரு பக்கம், பாஜகவின் சித்தாந்த ஆதரவுக் கட்சிகள் ஒரு பக்கம் என்று நின்று பாஜகவைத் தோற்கடிக்க எல்லாவித ஒற்றுமையை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தான் பெரும்பாலானோர் விரும்பினர். ஆனாலும் கூட பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் இதர கட்சிகள் என்று தனித்தனியாகவே இந்தத் தேர்தலை சந்தித்து முடிவுகளும் வெளிவந்து இருக்கிறது.

இந்த முறை காங்கிரஸ் கட்சி 42.90% விழுக்காடு வாக்குக்களைப் பெற்று 135 தொகுதியில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை கட்சியாக வளர்ந்து வந்து இருக்கிறது. குறிப்பாக தேர்தல் வியூகம் வகுப்பவரான ஒய்வு பெற்ற IAS அதிகாரி திரு சசிகாந்த் செந்தில் அவர்களின் 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பணியாற்றி 135 இடங்களைத் தொட்டு இருப்பதற்கு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக இதற்கு முன்னர் சிறிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் கூட பல கட்டங்களாக தேர்தலை நடத்தி, தனக்கு சாதகமாக பாஜக செய்து வந்த நிலையில் ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிவுகளை மூன்றாவது நாளில் அறிவித்திருந்த போதும், பல்வேறு மத ரீதியாக இன ரீதியாக பாஜக சூழ்ச்சிகளோடு இந்த தேர்தலைச் சந்தித்து இருந்தாலும், பெரிதாக பாஜக வெற்றி பெறாததும், அவர்களது போலி இந்துத்துவா வீழ்த்தப்பட்டதும் கூட நம்மைப் போன்ற மதச் சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த உந்துதல் தான்.siddaramaiah and dk shivakumarஇதற்கு முன்னர் காங்கிரஸ் 43.76% வாக்குகளும் 178 சட்டமன்ற உறுப்பினர்களை 1989 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்றிருந்தது. அதற்குப் பிறகு இப்படியான மிகப் பெரிய வெற்றியை காங்கிரஸ் முதல் முறையாக பெற்று இருக்கிறது.

பாஜக 31 தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்து இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தல்களில் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை விட இந்த முறை 55 சட்டமன்ற உறுப்பினர்களை அதிகமாகப் பெற்ற வகையில் பாஜக 38 இடங்களையும், மதஜ கட்சியிடம் இருந்து 17 இடங்களையும் பறித்துக் கொண்டது என்ற நிலையில் பார்க்கிறோம்.

கட்சி

2023

2018

2013

2008

காங்கிரஸ்

135

80

122

80

பாஜக

66

104

40

110

மஜக

19

37

40

28

சுயேச்சை

2

1

9

6

இதர

2

2

13

-

மொத்தம்

224

224

224

224

சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று வாக்கு விகிதாச்சாரத்தில் அதிகமாக வாக்குகளை காங்கிரஸ் பெற்று இருந்தாலும் கூட இன்னும் எச்சரிக்கையோடும் இன்னும் அதிகமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சென்ற தேர்தலில் பாஜக பெற்றிருந்த வாக்கு விழுக்காடு 36.20%. இந்தத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு விழுக்காடு 36.00%. வெறும் 0.20% வாக்குகளை அவர்கள் இழந்து இருக்கிறார்கள்.

கட்சி

2023

2018

2013

2008

காங்கிரஸ்

42.90%

38.10%

36.60%

34.80%

பாஜக

36.00%

36.20%

19.90%

33.90%

மஜக

13.30%

18.30%

20.20%

19.00%

சுயேச்சை

5.20%

3.90%

7.40%

6.90%

இதர

2.60%

3.50%

15.90%

5.40%

மொத்தம்

100.00%

100.00%

100.00%

100.00%

சென்ற முறை காங்கிரஸ் பெற்ற 38.10% வாக்கு இந்த முறை 42.90% ஆக மாறி இருக்கிறது. ஏறக்குறைய நான்கு விழுக்காடு வாக்குகள் கூடுதலாகப் பெற்று இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய சாதனையாக இதைப் பார்க்காமல், அந்த வாக்குகள் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்குக்களைப் பிரித்து இருக்கிறது என்பதைத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

ஒரு தொகுதியில் வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றதையும், அதே போல ஒரு தொகுதியில் 105 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையும் பார்க்க முடிகிறது.

இப்படி மதில் மேல் பூனை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி / பாஜக வெற்றிகளைப் பெற்று இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டிய சூழலும் இந்த தேர்தலில் ஏற்பட்டு இருக்கிறது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவை வீழ்த்தி விட்டதாக காங்கிரஸ் கட்சி கொண்டாடி மகிழ்ந்தாலும் கூட, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான எண்ணிக்கையில்  உறுப்பினர்களை வென்றெடுக்க இப்போதிலிருந்து பெரும்பான்மை இருந்தாலும் கூட பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கும் மற்ற அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து கூட்டணியை அமைத்து தேர்தலில் வென்றெடுக்க வேண்டிய மிகப்பெரிய நிர்பந்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து நடக்க வேண்டி இருக்கிறது. இவை எல்லாமும் நமக்கான பாடங்கள் என்பதை இந்த வெற்றிக்களிப்பில் மறந்துவிட வேண்டாம் என்பது நம் வேண்டுகோள்.

மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாசிச பாஜகவை வீழ்த்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நல்லாட்சியைத் தர வேண்டும்.

- ஆர்.எம்.பாபு, மாவட்டக் குழு உறுப்பினர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், மதுரை

Pin It