நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு கூட்டத்தில் பேசும்போது, "தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால் 400 கோடி தருவதாகச் சொன்னார்கள். தெருக்கோடியில் நின்றாலும் நிற்பேனே இல்லாமல், கோடிகளுக்கெல்லாம் இந்தச் சீமான் மயங்க மாட்டான்" என்று பேசினார். அது மட்டுமல்லாமல், 'நாங்கள் சத்தியத்தின் பிள்ளைகள்' என்று அடிக்கடி கூறிக் கொண்டார்.

அந்த சத்தியத்தின் பிள்ளைகளிடம் சில கேள்விகள் -

அப்படி 400 கோடி ரூபாய் பேரம் பேசியவர்கள் யார்?அவர்களை பற்றித் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்தீர்களா? லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தீர்களா?

நீங்கள் அறிவும், மான உணர்ச்சியும் உடைய சத்தியத்தின் பிள்ளைகள் என்பதால், கண்டிப்பாக இந்நேரம் புகார் கொடுத்திருப்பீர்கள் என்றும், அந்த உண்மைகளை வெளியிடவும் முன்வருவீர்கள் என்றும் நம்புகிறோம்.

ஒருவேளை வெளியிடாமல், இதற்கும் விடை சொல்லாமல் மெளனமாக இருந்தால், நீங்கள் மிகப் பெரிய ஊழலுக்குத் துணை போனவர் ஆவீர்கள் என்பதுடன், பேரம் படியாததால்தான் உண்மையை வெளியிட மறுக்கின்றீர்கள் என்றும் ஆகும்.

சத்தியத்தின் பிள்ளைகளே, உண்மை அறியக் காத்திருக்கின்றோம் !

         - சுப.வீரபாண்டியன்

Pin It