hathras gangrapeஉத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், புல்கடி என்ற கிராமத்தில் 19 வயது வால்மீகி தலித் பெண்ணிற்கு செப்டம்பர் 14-ந் தேதி நடந்த கொடுமை இது. அவ்வூரில் நான்கு வால்மீகி குடும்பங்கள் மட்டுமே உள்ளன.

ஊரில் பெரும்பான்மையாக இருக்கும் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர்கள்தான் நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். அங்கு நடந்தது என்ன? அரசு இயந்திரம் இயங்கிய விதம் எப்படி? இக்கொடுமையின் ஆணிவேர் எது? என அலசி ஆராய்ந்து, அதற்கான தீர்வை நோக்கி நகர்வோம்.

உண்மையில் நடந்தது என்ன?

அம்மாவுடன் மாட்டுக்கு புல்லறுக்க வயலுக்குப்போன மகளைக் காணவில்லை. காது சரியாகக் கேட்காத அம்மா மகள் கடும் வெயில் காரணமாக அருகில் உள்ள வீட்டுக்குத் தண்ணீர் குடிக்க போயிருப்பாள் என நினைத்தார். நீண்ட நேரமானதால் தேடியபோது அவள் குற்றுயிரும் குலை உயிருமாக பக்கத்து வயலில் நிர்வாணமாகக் கிடக்கிறாள்.

தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த சந்தீப், அவரின் மாமா ரவி, நண்பர்கள் ராமு, லவகுஷ் என்ற நால்வரும் தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அம்மாவிடம் சொல்கிறாள் மகள். (இது இரண்டாம் முயற்சி! முதல்முறை முயன்று தோற்றதால் சந்தீப் இம்முறை கூட்டாளிகளோடு சேர்ந்து ‘வென்றிருக்கிறான்’?) கால் எலும்புகள் நொறுக்கப்பட்டு, கைகள் முடங்கிப்போய், முதுகுத்தண்டு உடைக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, நாக்கு கடிக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் அவள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள்!

காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். 11 நாட்கள் கழித்து மருத்துவப் பரிசோதனை நடந்ததால், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. 4 நாட்களுக்குள் தடயவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்பது அரசு விதி! முதலில் சிகிச்சை அளித்த அலிகார் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியும், பின்னர் சிகிச்சை அளித்த டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையும் முரண்பட்ட மருத்துவ அறிக்கைகளையே கொடுத்தன. எல்லாம் ‘மேலிடம்’ கொடுத்த அழுத்தங்கள்! 14 நாட்கள் உயிருக்குப் போராடிய அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. செப்டம்பர் 29-ந் தேதி அந்தப் பெண் பரிதாபமாக இறந்து போனார்.

மறுக்கப்பட்ட நல்லடக்கம் எனும் மனித உரிமை

அன்றே டெல்லியில் இருந்து இரவோடு இரவாக இறந்த உடலை சொந்த ஊரான புல்கடிக்கு எடுத்து வந்த காவலர்கள் உடனே தகனம் செய்ய வற்புறுத்தினர். “இரவில் எரிக்கும் வழக்கம் எங்களுக்கு இல்லை” என்று சொன்ன குடும்பத்தினரை “யாரும் வீட்டை விட்டு வெளிய வரக் கூடாது” என சொல்லிவிட்டு சடலத்தைச் சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு வந்த அனைவரையும் லத்தியால் அடித்து விரட்டினர். “கடைசியாக ஒரு முறை மகளின் முகத்தைப் பார்த்துக் கொள்கிறேன்” என்ற அம்மாவும் அடித்துத் துரத்தப்பட்டார்.

காவலர்களே சுடுகாட்டில் சடலத்தை எரிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். ஜெனரேட்டர், பெரிய மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. எரியூட்ட விறகுக் கட்டைகளும், எரிபொருளும் காவலர்களே கொண்டு வருகிறார்கள். நடு இரவு 2.30 மணி அளவில் அவசர அவசரமாக பெட்ரோல் ஊற்றி சடலம் தகனம் செய்யப்படுகிறது. நான்கு நாட்களுக்குப் பின் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து அஸ்தியை எடுத்து வந்த இரண்டு அண்ணன்கள் சொல்கிறார்கள், “இது எங்கள் தங்கையின் அஸ்திதான் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.”

நல்லடக்கம் என்பது மனித உரிமை. இறந்தவர்க்கு இறுதியாக நாம் செய்கின்ற மரியாதை, அஞ்சலி. துக்கம் அனுசரித்தல் என்பது மனித சமூக வாழ்வின் முக்கிய அம்சம். உறவினரின் உடனிருப்பும், சடங்குகளும் இழப்பினால் ஏற்படும் துயரை, வெறுமையைப் போக்கி ஆறுதல் அளிக்கின்றன. சமூக ஆற்றுப்படுத்துதல் அப்போது நிகழ்கிறது. அந்த மனித உரிமை ஹத்ராஸ் புல்கடியில் மறுக்கப்பட்டிருக்கிறது.

படுகொலைக்குப் பின்வரும் மிரட்டல்கள்

பெண்ணின் அம்மா புலம்புகிறார், “வழக்கை முடித்துக் கொள்ளுமாறு அழுத்தம் தருகிறார்கள். ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி தண்டிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள். போலீஸார் ஏதேதோ காகிதங்களில் கையெழுத்து கேட்கிறார்கள்.” அவரை ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் லக்ஸ்கர் மிரட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர், “மீடியாக்காரர்கள் இப்போது இருப்பார்கள். சில நாட்களில் போய் விடுவார்கள். நாங்கள்தான் இங்கு இருப்போம்… மாநில அரசு 25 லட்ச ரூபாய் தருகிறது. அரசு வேலை கொடுக்கிறது. வாங்கிக் கொண்டு அமைதியாக இரு” என அச்சுறுத்துகிறார்.

அதைவிட அதிர்ச்சி அளிக்கும் செய்தி. மாவட்ட நீதிபதியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் அதே பாணியில் சொல்கிறார், “ஊடகங்களை நம்பாதீர்கள். இரண்டு நாட்களில் அவர்கள் போய்விடுவார்கள். அதன்பின் நீங்கள் எங்களிடம்தான் வர வேண்டும்.” ஒரு நீதிபதி இப்படி கருத்து சொல்வது முறையா?

காவலர்களின் காட்டு தர்பார்

அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொல்ல வந்த அனைத்து அரசியலர்களையும் காவலர்கள் நடத்திய விதம் கொடுமையானது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைக் காவலர்கள் தடுத்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு கலாட்டாவில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு சிராய்ப்பு ஏற்பட்டது. அவரின் சகோதரி பிரியங்கா காந்தியின் மேலாடையைப் பிடித்து இழுத்தார் ஓர் ஆண் காவலர்.

144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக, அத்தனை தலைவர்களையும் விரட்டி அடித்த அதே காவலர்கள்தான், புல்கடியிலிருந்து வெறும் 6 கி.மீ. தூரத்தில் 200 தாக்கூர்கள் கூடிய கூட்டத்திற்கு காவல் புரிந்தார்கள். இக்கூட்டத்தை நடத்தியவர் பா.ஜ.க.-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்விர் சிங் பெஹல்வான். அவர்கள் எழுப்பிய முழக்கம், “ஹத்ராஸ் பெண் புகாரில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும்… பொய்ப் புகார் அளித்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.”

ஒரு காவல்துறை அதிகாரி சொல்கிறார், “இது பாலியல் வன்முறை அல்ல. ஏனென்றால் மருத்துவ சான்றிதழ்படி இறந்த பெண்ணின் உடலில் ஆண் விந்தணுக்கள் காணப்படவில்லை.” இதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டுமா? இல்லை காவல்துறை அதிகாரிகளா?

அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்கள்

புல்கடி பெண் படுகொலை கொதிநிலை அடங்கும் முன், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல, அதே உத்தரப்பிரதேசத்தில் பல்ராம்பூர் கிராமத்தில் இன்னொரு 22 வயது தலித் பெண் வேலை முடிந்து வீடு திரும்பும் போது இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்நிகழ்வுகள் இந்தியப் பெருங்கடலில் மூழ்கியுள்ள பெரும் பனிப்பாறையின் மேலே தெரிகிற சிறிய முனையே!

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். இந்த பாலியல் வன்கொடுமையின் ஆணிவேர் எது? வெறும் ஆணாதிக்கம் மட்டும் தானா? உத்தரபிரதேச அரசியல் மட்டும்  தானா? சற்று ஆழமாக அலசுவோம்.

ஹதராஸ் புல்கடியில் பாதிக்கப்பட்ட  பெண் நான்கு முறை ஒடுக்கப்பட்டவர். அவர் ஒரு தலித், ஏழை, இளம் பெண். எனவே முறையே சாதி, வர்க்க, ஆணாதிக்க சுமைகளைத் தாங்கிக் கொண்டிருந்தவர். அதோடுகூட குழந்தைப் பருவத்தை கடந்து சில ஆண்டுகளே ஆனதால் எப்போதும் பாலியல் தாக்குதலுக்கு இரையாகக்கூடிய இளம் பெண்ணாகவும் இருந்தார்.

சில புள்ளிவிவரங்களில் இருந்து ஆய்வைத் தொடங்குவோம். இந்திய அரசின் மத்திய குற்ற ஆவணக்காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் உலகையே உலுக்குகிறது. பெண்களுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற மொத்த குற்றங்கள் 2017-ல் 3,59,849 மற்றும் 2018-ல் 3,78,286 மேலும் 2019-ல் 4,05,861. 2019-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெற்ற முதல் மூன்று மாநிலங்கள் முறையே உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா.

2019-ல் நாளொன்றுக்கு சராசரியாக 87 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குப் பலி ஆகிறார்கள். நம் நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 26 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்யப்படுகின்றன. இந்த பாலியல் வன்முறை வழக்குகளில் தண்டனை பெறுவோர் வெறும் 27.8 சதவீதம் பேர் மட்டுமே! இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள். பதிவு செய்யப்படாதவை எத்தனையோ?

ஆணாதிக்க இரத்தம்

மேற்கண்ட புள்ளி விபரங்கள் நமக்குச் சுட்டுவது பெரும்பாலான இந்தியர் உடல்களில் ஓடுவது ஆணாதிக்க இரத்தமே! தற்போது கொடூரமான கொரோனா தொற்று பொதுமுடக்கத்தால் குற்றங்கள் குறைந்திருக்கின்றன என நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், பாலியல் குற்றங்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது.

அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான இன்னொரு புள்ளி விபரம். இந்தியாவில் இந்த பொதுமுடக்கத்தில் வீட்டு வன்முறை பத்து ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 2020 மார்ச் 25 முதல் மே 31 வரையில் 68 நாட்களில் மட்டும் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை நிகழ்வுகளின் முறையீடுகள் 1,477.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், பாலியல் தொந்தரவுக்கு ஆளான 86 சதவீத பெண்கள் எந்த உதவியையும் நாடுவதில்லை; 77 சதவீத பெண்கள் அதை யாரிடமும் சொல்வதில்லை! ஹத்ராஸ் புல்கடி கண்டிப்பாக ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். ஆனாலும் அதையும் தாண்டிய காரணிகளும் இருக்கின்றன!

சாதிய இரத்தம்

ஹத்ராஸ் குற்றவாளிகள் உடல்களில் மட்டுமல்ல, மாறாக, ஒவ்வொரு சராசரி இந்தியன் உடம்பிலும் ஓடுவது ஆணாதிக்க இரத்தம் மட்டுமல்ல; சாதிவெறி இரத்தமுமே! எனவேதான் இங்கு தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு குறைவே இல்லை. நம் நாட்டில் ஏறத்தாழ 20 கோடி பேர் தலித்கள்; இது நம் மக்கள் தொகையில் 17 சதவீதம்.

தேசிய குற்ற ஆவணப் பதிவேட்டின் படி,  தலித்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2017-ல் 43,203 மற்றும் 2018-ல் 42,793 மேலும் 2019-ல் 45,935. அனைத்து பெண்களும் பாலியல் வன்முறைக்கு இலக்கானாலும் (2019-ல் 32,033), தலித் பெண்களே மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட தலித் பெண்களின் எண்ணிக்கை 2019-ல் மட்டும் 3,500; இது 11 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் ஒரு நாளில் 10 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகின்றனர். இதில் மூன்றில் ஒரு நிகழ்வு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடக்கிறது. தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 2009-லிருந்து 2019 வரை 159 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த தலித் பாலியல் வன்முறை வழக்குகளில் தண்டனை பெறுவோர் வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே!  ஒரு சர்வதேச அறிக்கையின் படி, இந்தியாவில் ஏறக்குறைய 80 மில்லியன் தலித் பெண்கள் பல்வேறு வடிவங்களிலான ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள்.

தலித் பெண்களைத் தீண்டுவது, தீண்டாமையை கடைபிடிக்கும் சாதிவெறி பிடித்த ஆண்களின் பிறப்புரிமை என்ற பொதுப்புத்தியே இதற்கு காரணம். அரசும், ஊடகங்களும் தண்டிக்க மாட்டார்கள், எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இதற்கு அடிப்படை.

வர்க்க இரத்தம்

என்.எஸ்.எஸ்.ஓ அறிக்கையின் படி 50 சதவீதம் தலித்கள் ஏழைகள். ஆனால்; ஆதிக்க சாதியில் 20 சதவீதம் பேரே ஏழைகள். பூனா சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி தலித் ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு தருகின்ற செய்தி இது. 

இந்திய சொத்துக்களில் 41 சதவீதம் ஆதிக்க சாதிகளிடம் உள்ளன. ஆனால் தலித்களிடம் வெறும் 7.6 சதவீத சொத்துக்களே உள்ளன.  பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாத தலித் இளைஞர்கள் 19 சதவீதம்; ஆனால் ஆதிக்க சாதியில் 11 சதவீதம் மட்டுமே!

“பெரிய சொத்துக்கள் (பங்களா, நிலம், நகை போன்று) இல்லாததும், எளிதில் எடுத்து விடக்கூடிய அல்லது அழிக்கக்கூடிய சொத்துக்களே வைத்திருப்பதும் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காக முக்கிய காரணம்” என்கிறார் பேராசிரியர் அமிதாப் குன்டு. ஹத்ராஸ் புல்கடி நிகழ்வில் கவனம் ஈர்க்கும் கூறும் இதுவே. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் குடும்பத்திற்கும் பல ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்திருக்கிறது!

உளவியல் நோக்கில்

அவமானப்படுத்துதல், ஒடுக்குதல் மற்றும் அதிகாரம் போன்றவற்றின் அடையாளமாக இருப்பது பெண்களின்  மீதான பாலியல் வன்கொடுமையே. பாலினம், சாதி எனும் இரு கோடரிகளால் வெட்டப்படுபவர்கள் தலித் பெண்களே! ஆதிக்க சாதி வன்மத்தின் பலி ஆடுகள் தலித் பெண்கள். ஜே.என்.யு. பேராசிரியர் சங்கமித்ரா ஆச்சார்யா சொல்கிறார், “இது ஆணாதிக்க நஞ்சையும் கடந்தது.

எனவேதான் தலித் ஆண்கள் ஆதிக்க சாதி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கொன்றுமில்லை.” பெண்களைத் தண்டிப்பதின் வழியாக, அவள் சார்ந்த சமூகம் தண்டிக்கப்படுகிறது. தலித்களின் இன்றைய மிகச் சிறிய சமூக, பொருளாதார வளர்ச்சி கண்டு பொறாமை, எரிச்சல்படுகிறவர்களின் கோபம் அச்சமூக பெண்களின் மேல் திரும்புகிறது.

பாலியல் இன்பம் துய்த்தல் என்பதையும் தாண்டிய உளவியல் இது. “எனவேதான் பெண் அவள் கணவர், அப்பா, அண்ணன், தம்பி, மகன் கண்ணெதிரிலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறாள்” என்கிறார் பல்கலைக்கழக மான்ய குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தோரட். ஆகவே இன்று பாலியல் வல்லுறவிலிருந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு நகர்வு ஏற்பட்டிருக்கிறது. நிகழ்வை ஒளிப்பதிவு செய்தல், அதை சமூக ஊடகங்களில் பரப்புதல், உறுப்புகளைச் சிதைத்தல் போன்ற வக்கிர செயல்பாடுகளிலும் இதே உளவியல்தான் இவர்களை இயக்குகிறது.

தமிழக நிலைமை

தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின்படி ஏதோ வடமாநிலங்கள்தான் முதல் மூன்று இடங்களில் உள்ளன என நாம் திருப்தி அடையவேண்டாம். அதே அறிக்கை குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழகம் 4-வது இடத்தில் (2019-ல் போக்சோ வழக்குகள் 2,396) உள்ளதாக குறிப்பிடுகிறது.

பச்சிளம் குழந்தை முதல் முனைவர் பட்டம் படிக்கும் பெண்கள் வரை பாலியல் சீண்டல்களுக்குப் பலியாவதும், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வதும், மாணவியின் கருவை வெயியே எடுத்து எரிப்பதும், பெற்றோர் கண் எதிரிலேயே பெண்ணின் தலையை வெட்டுவதும், பெண்கருவைக் கலைப்பதும், பெண்சிசுவைக் கொல்வதும் இங்கு அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் தானே!

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரைக்கு அருகில் ஜி. குரும்பபட்டியில் முடிதிருத்துபவரின் 12-வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து அவள் மூக்கிலும் வாயிலும் கம்பியைச் செருகி மின்சாரம் பாய்ச்சி கொன்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளியை, ஆதாரம் இல்லை என நீதிமன்றம் விடுவித்திருப்பதும், கடந்த அக்டோபர் 9-ந் தேதி நடந்த மாநிலம் தழுவிய அனைத்து முடிதிருத்தும் கடைகள் அடைப்புப் போராட்டமும் இங்கு நினைவு கூறப்படவேண்டியது.

இந்த நிகழ்வு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன், நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகில் உள்ள அணைப்பாளையம் கிராமத்தில் நடந்திருக்கும் 12 மற்றும் 13 வயதே ஆன இரண்டு பிஞ்சுகளின் மீதான பாலியல் வன்கொடுமை நம் நெஞ்சை பதற வைக்கிறது! 75 வயது கிழவன் முதல் 16 வயது சின்னப்பயல்கள் வரை 12 பேர் இந்த கொடுங்குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒருமுறை இருமுறை அல்ல… தொடர்ச்சியாக கடந்த 7 மாதங்களாக இந்த படுபாதகச் செயல் நிகழ்ந்திருக்கிறது. கதவே இல்லாத ஊருக்கு வெளியே புதர்மண்டிய பள்ளத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் ஓர் ஓலைக் குடிசையில் வைத்து அக்குழந்தைகளின் விதவை அம்மா வேலைக்குச் செல்கின்ற நேரத்தில்தான் இக்கொடூரம் நடைபெற்றிருக்கிறது. நடைந்து கொண்டிருக்கும் விசாரணையில் மேலும் திடுக்கிடும் உணமைகள் வெளிவரலாம்!

புல்கடி ஒரு புதிய அத்தியாயம்

ஹத்ராஸ் புல்கடி பாலியல் வன்கொடுமை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இந்திய வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறது. முதலில் எதிர்மறையாக! இதுவரை தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நிகழ்வுகளை இந்திய சமூகம் பல தந்திரங்களால் எதிர் கொண்டது.

பன்வரிதேவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 1995-ல் விசித்திரமான தீர்ப்பு வழங்கியது. ‘உயர்’ சாதி ஆண்கள் ‘தாழ்ந்த’ சாதிப் பெண்களைத் தொடவே மாட்டார்கள்; எனவே வல்லுறவுக்கு வாய்ப்பே இல்லை என்றது! கைர்லாஞ்சி வழக்கில் 2006-ல் நாக்பூர் உயர் நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு காரணம் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர சாதி அல்ல! இதுவரை, நடந்த நிகழ்வை ஒப்புக்கொண்டு குற்றவாளிகளை எப்படியாவது காப்பாற்றியது மேல்தட்டு வர்க்கத்தோடு கைகோர்த்த அரசு.

ஆனால் ஹத்ராஸ் புல்கடியில் முதன்முதலாக அரசு இயந்திரமே களத்தில் இறங்கி, ஆதாரங்களை அழித்து, இப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்பதாக மக்களை நம்மவைக்க முயல்கிறது! முதலில் கனத்த மௌனம் காத்துவந்த உ.பி. முதல்வர் இப்போது சொல்கிறார், “மாநிலத்தின் அபார வளர்ச்சி கண்டு பொறாமையில் அயல்நாட்டு நிதியை வாங்கிக் கொண்டு நம் மாநிலத்தில் சாதிக் கலவரங்களை எதிர்க்கட்சிகள் தூண்டுகின்றன.” முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சி!

நேர்மறையாகவும் புல்கடி புதிய அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கிறது. முதன்முதலாக ஒரு தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தேசமே திரண்டிருக்கிறது. குடியுரிமை போராட்டங்களுக்கு அடுத்து நாட்டில் நடந்த பெரிய ஆர்ப்பாட்டம் இதுதான். இத்தனை தேசிய, மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.

வாக்கு வங்கி அரசியலைத் தாண்டிய நிகழ்வு இது. (நிர்பயா நிகழ்வில் ராகுல் காந்தியின் மௌனமும், தற்போது மாயாவதியின் மௌனமும் விமர்சிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது) உள்ளபடியே இது ஆரோக்கியமான தொடக்கமாக இருந்தால், இனி நாட்டின் சட்டம் செய்யாததை மக்களின் பெருந்திரள் போராட்டங்கள் செய்யும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. பாலியல் வன்கொடுமைகளைப் பொது சமூகம் பார்த்துக்கொண்டு இனியும் அமைதியாக இருக்காது என்ற நிலையே குற்றவாளிகளை அச்சுறுத்தும்.

தீர்வை நோக்கி…

உடனடியாக செய்ய வேண்டியது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும். அதற்கு ஹத்ராஸ் புல்கடி கொடூரக் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக என்கவுன்டர் எல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக, சட்டத்திற்கு உட்பட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும். காவல்துறையும் நீதிமன்றங்களும் தான் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் இறுதி நம்பிக்கை. அது பொய்த்துவிடக் கூடாது.

ஆளும்கட்சி, ஆதிக்கசாதி, மேல்தட்டு தருகின்ற நெருக்கடிக்கு பலியாகாமலும் விலைபோகாமலும் நேர்மையாக நடத்தப்படும் விசாரணையே இன்றைய தேவை. பெண்கள், தலித் பெண்கள், குழந்தைகள் போன்றோர்க்கு எதிரான பாலியல் வழக்குகளை விரைவுபடுத்த தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். ஏனென்றால், 2019-ல் 1,45,632 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவற்றில் 46 சதவீதம் வழக்குகள் மூன்றாண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காவலர்கள் பாதிக்கப்பட்டோரைப் பரிவோடு அணுக அறிவுறுத்தப்பட வேண்டும். “இன்னார்மீது இன்னார் புகாரளித்தால் அந்தப் புகாரை எடுத்துக் கொள்ள கூடாது என்று இவர்கள் ரத்தத்தில் அல்லவா எழுதப்பட்டிருக்கிறது” என்று பொங்குகிறார் பெண்ணியலாளர் ஓவியா. இடஒதுக்கீட்டிற்கு முழுமையாக செயல் வடிவம் கொடுக்கவேண்டும், குறிப்பாக காவல் துறையில். 2019 ஆய்வின்படி உ.பி.யில் மட்டும் 68 சதவீத காவல் அதிகாரிகள் இடஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன!

தொலைநோக்குத் திட்டங்களும் நமக்குத் தேவை. ஆணாதிக்க, சாதி, வர்க்க மனநிலைகளைக் கடந்துபோக விழிப்புணர்வு செயல்பாடுகள் அவசியம். மனிதரை மனிதராக நடத்தும் மனநிலை வேண்டும். மனிதர்கள் பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்ல; மாறாக அன்பு செய்யப்பட வேண்டியவர்கள். ஆனால் நுகர்வு வெறியேற்றும் சந்தை பொருளாதாரக் கொள்கைகளால், இன்று பொருட்களை அன்பு செய்வதும் மனிதரைப் பயன்படுத்துவதும் சரி என்ற ஆபத்தான அறவியல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

அதீத கைபேசி பயன்பாடும், அதில் பார்க்கப்படும் பாலியல் காட்சிகளும் இதற்கு துணைபோகின்றன என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியாவில் 50 கோடி திறன்பேசி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். உலகின் முன்னணியில் உள்ள பாலியல் இணையதளத்தின் மூன்றாவது பெரிய நுகர்வு குழுமம் இந்தியாவில் உள்ளதாக 2018-ல் வெளியான ஆய்வு சொல்கிறது. 

பெண் குழந்தைகளுக்கு எப்படி நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி சொல்லிக் கொடுக்கிறோமோ அதேபோல், ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி அவசியம். பெண்ணைப் பொருளாக பார்க்காமல், சக உயிராக மதிக்கக் கற்றுத்தர வேண்டும்.

- சி. பேசில் சேவியர்

Pin It