ஜமாலியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் நூலகத்தில் நடைபெற்ற காவல் துறையின் தடியடிக் காணொளி இப்போது வெளிவந்துள்ளது.

படிக்கும் மாணவர்களை அடிக்கும் காட்டுமிராண்டித்தனம் இதுவரையில் நாம் அறிந்திராத ஒன்று. "அப்படி எதுவும் நடக்கவில்லை. நூலகத்திற்குள் காவல்துறை நுழையவில்லை" என்று அமித் ஷா சொன்னது ஒரு பச்சைப் பொய் என்பது இப்போது தெளிவாகி விட்டது.

jamala 600ஜமியா பல்கலைக்கழகம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு (1920), அலிகாரில் நிறுவப்பட்டது. பிறகு 1925 இல் தில்லிக்கு மாற்றப்பட்டது. 1988 ஆம் ஆண்டு அது மத்தியப் பல்கலைக் கழகமாக அறிவிக்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர்கள் எண்ணிக்கையில் அங்கு கூடுதலாக இருந்தபோதும், பல்வேறு மதத்தினருக்கும் அங்கு கல்வி தரப்படுகிறது. இந்தியாவின் மிகச் சிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு அங்கு வந்த சவூதி மன்னர், ஒரு பெரிய நூலகம் கட்டுவதற்காக, 30 லட்சம் டாலர்களை நன்கொடையாகக் கொடுத்தார். அந்தப் பணத்தில் கட்டப்பட்ட ‘ஜாகீர் உசேன்’ நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீதுதான் காவல் துறை உள்நுழைந்து தடியடி நடத்தியுள்ளது.

இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இன்று இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த டிசம்பர் 15 அன்று, ஜமாலியா பல்கலை மாணவர்களும் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அப்போதுதான் காவல் துறை கல்வி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை அடித்து நொறுக்கியது.

நூலகத்திற்குள்ளும் உட்புகுந்து, படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையும் தடிகளால் அடித்த காட்சிதான் இப்போது வெளியாகியுள்ளது. எங்களின் மறைவிடங்களிலெல்லாம் அடித்தார்கள் என்று மாணவர்கள் சிலர் கூறுகின்றனர். அதற்கு எத்தனை உள்நோக்கம் இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது.

படிக்கிறவனை அடிக்கிற அரசுதான் இன்று மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்று ஏகபோகமாக இருந்த கல்வி இன்று அனைவருக்கும் என்றாகி விட்டதைப் பொறுக்க முடியாதவர்கள் இப்படிக் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர் என்றே தோன்றுகிறது.

"இது பொறுப்பதில்லை" என்னும் நிலைக்கு நாட்டில் ஒரு பதற்றமான சூழலை அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பார்ப்பன - பாசிச அரசின் முகம் இப்படித்தான் இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்!

Pin It