slipper 450அவன் என் கால்ல கெடக்குற செருப்புக்கு ஈடாவானா?,

அவன் என் செருப்புல இருக்குற தூசுக்குச் சமம், யார்ட்டல பேசுற செருப்ப கழட்டி அடிச்சிருவேன், என்ன எதித்தா பேசுற செருப்பு பிஞ்சுரும் நாயே இப்படியான சொல்லாடல்கள் சமூகத்தில் இன்றும் இருப்பதைப் பார்க்கிறோம்.

காலில் போட்டு நடக்க மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட செருப்பு இந்தச் சமூகத்தில் எப்படியெல்லாம் கருதப்படுகிறது? ஒருவரை இழிவுபடுத்த,

கோபத்தை வெளிக்காட்ட,

எதிர்ப்பைப் பதிவு செய்ய,

அதிகார வர்க்கத்தின் அடையாளச் சின்னமாக,

உயர் சாதியின் உரிமையாக,

ஒடுக்கப்பட்டோரின் ஏக்கமாக, என செருப்புக்குப் பின்னால் இருக்கிற அரசியல் நீண்ட வரலாறு கொண்டது.

மனுஸ்மிருதியில் சொல்லியிருக்கிறபடி பிரம்மனின் கால் பகுதி சூத்திரத் தன்மையுடையது என்பதால், காலில் போடும் செருப்பு, தாழ்வாகக் கருதப்படுகிறது.

ராமன் செருப்பை வைத்துப் பதினான்காண்டு காலம் பரதன் ஆண்டான் என்கிறது இராமாயணம். இழிவாகக் கருதப்படுகிற செருப்பு எப்படி நாடாண்டது? ஆதிக்க வர்க்கத்தைப் புனிதமாகவும், உழைக்கும் மக்களைத் தீட்டாகவும் பார்க்கிற பொதுப்புத்தியை உருவாக்கிடவே இந்த வேதங்களும் புராணங்களும் என்பது இப்போது விளங்குகிறதா? "உண்மையிலேயே இந்த நாட்டை யார் ஆண்டாலும் எனக்குக் கவலையில்லை. ஒரு காலத்தில் ஒரு ஆரியனின் செருப்பு 14 வருஷ காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையைப் பக்தி விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் ஓர் மிருகம் நாய், கழுதை ஆண்டால் கூட அது அதிகமான அவமானம் என்றோ குறை என்றோ நான் சொல்ல வரவில்லை" என்றார் தந்தை பெரியார்.

பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் போடும் செருப்பை, தீண்டப்படாதவர்களும், பெண்களும் போடக் கூடாது என்று எழுதப்படாத சட்டங்கள், இந்த நாட்டில் பின்பற்றப்பட்டு வந்தன. செருப்புகள் உயர்சாதிச் சின்னமாகத்தான் இருந்திருக்கின்றன என்பதற்கான சான்றுகளும் போராட்ட வரலாறுகளும் ஏராளம்.

எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இப்படி அமைந்திருக்கிறது "கோவிலிலிருந்து வீடு திரும்புகிற மாரியம்மாவின் காலில் முள் குத்திவிடும். உடனே அவளது மாமா சிவசாமி செருப்பு தைப்பவரிடம் போய் ஒரு செருப்பு தச்சுக்குடு என்பார். செருப்பு தைப்பவர் முதலாளிக்கா எனக் கேட்பார். செருப்பு என்ன முதலாளி மட்டும்தான் போடணுமா இது இந்த சிவசாமி பொண்டாட்டிக்கு என்பதற்குள், எதுக்குப்பா இந்த தேவையில்லாத வேலை என செருப்புத் தைப்பவர் கூறுவார்." செருப்பு என்பது “உடைமை”யாகக் கருதப்பட்டது அல்ல!!! அது “உரிமை”யாகப் பார்க்கப்பட்டது. என்பதற்கு சாட்சி இந்தக் காட்சி. இது கற்பனையல்ல அன்றைய சமூகச் சூழல் அப்படித்தான் இருந்தது. இதன் மூலமே ஒடுக்குமுறையின் அளவை நாம் புரிந்து கொள்ள முடியும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பணிந்து பொதுவில் நடக்கத் தடையும், அப்படியும் அணிந்து வருபவர்கள் உயர்சாதிக்காரர்கள் எதிரே வரும் பொழுது அதைக் கழட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, அவர்கள் கடந்த பிறகே போட்டுக் கொள்ள வேண்டும் என்றுமிருந்தது. “உரிமை இல்லாத இடத்தில் உடைமை சுமையாகும்”என்பதற்கேற்ப செருப்பு சுமையாக மாறியது.

இந்த சமூக அவலங்களுக்கெதிராக போராட்டம் நடத்தி, செருப்புப் போடும் உரிமையை பெற்றுத் தந்தவர்கள் தமிழகத்தில் தந்தை பெரியாரும் கேரளத்தில் அய்யன் காளியும். அதனால் தான் என்னவோ இறந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தந்தை பெரியார் மீதான கோபம் இந்த ஆதிக்க சாதி வெறியர்களுக்கு குறையவில்லை. அவரின் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாகக் கருதி ஆனந்தமடைகிறார்கள். அந்த அறிவிலிகளுக்குத் தெரியவில்லை, இப்படிப்பட்ட எதிர்ப்பையெல்லாம் நேரிலேயே எதிர்கொண்டவர் தந்தை பெரியார்.

ஒரு முறை கடலூரில் ரிக்சாவில் போய்க் கொண்டிருந்த பெரியார் மீது செருப்பு வீசப்பட்டது. ரிக்சாவில் விழுந்த அந்தச் செருப்பைக் கையில் எடுத்து கொண்டு, ரிக்சாவைத் திருப்பச் சொல்லி, மற்றொரு செருப்பைத் தேடி எடுத்து, ஒரு ஜோடியாக இருந்தால் பயன்படுமே என்றவர் அவர். பின்னாளில்அதே இடத்தில் பெரியாருக்குச் சிலை எழுப்பி, சிலையின் பீடத்தில் ‘செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்’ என்று கவிஞர் கருணானந்தம் எழுதிய கவிதையும் செதுக்கப்பட்டது.

இதைவிடச் சேலத்தில் நடந்த செருப்பு வீச்சு சம்பவம் தமிழக அரசியலில் இன்றைக்கு பெரும் புயலைக் கிளம்பியிருக்கிறது. துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘‘1971-ல் சேலத்தில் பெரியார் அவர்கள் , ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் கொன்டு போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டுக் கடுமையாக விமர்சித்தார். இதனால் திமுக அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் துக்ளக் பத்திரிகை பிரதிகளைக் கைப்பற்றினார்கள்.எனினும் பிளாக்கில் துக்ளக் பத்திரிகை விற்பனையாகியது” என பேசினார். உண்மைக்கு புறம்பாக ஆதாமின்றி பேசியதற்கு எதிராக திராவிட இயக்கத்தினர் மட்டுமின்றி பொதுமக்களிடமிருந்தும் பெரும் கண்டனங்கள் கிளம்பின. ஊர்வலத்தில் என்ன நடந்தது என்பதைப் பெரியாரே விளக்குகிறார்

‘‘சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மகாநாடு நடத்திட்டு இருந்தேன். ஜனங்களிடம் இருந்து ஆதரவு இருந்தது. அதுல கடவுள் பத்தின ஆபாசத்தை பத்தியும்தான் வெளியிட்டு இருந்தேன். கடவுள் இல்லை கண்டிக்குற மாதிரி. அங்கே ராவணனை கொளுத்தினா, இங்கே ராமனைக் கொளுத்த ஏற்பாடு பண்ணி அதற்குக் காரணம் சொல்லுற விதமா இத பண்ணான், அத பண்ணானு அட்டையில் எழுதி, துணியில் எழுதி ஊர்வலத்தில் விட்டேன். ஊர்வலத்தில் ராமன், அவன் பொண்டாட்டி சிலையா இருக்கிற மாதிரி, புராணத்தில் என்ன இருக்குதோ அதையே செய்தேன், நானா கற்பனை செய்யல. அந்த ஊருல இருந்த தேவாலயப் பாதுகாப்புச் சங்கம் கருப்பு கொடி காமிச்சுக்கிட்டு வந்தான். நம்ம ஆளுங்க ராமன் ஒழிகன்னு சொல்ல, ஆனா அவன் நம்ம பேரை சொல்லி ஒழிகன்னு சொல்லிட்டான். அந்த கூட்டத்தில இருந்த ஒருத்தன் கால்ல இருந்த செருப்பை கழட்டி எறிஞ்சிட்டான். நம்ம கூட்டத்தில வந்து விழுந்தது. அதை எடுத்தவங்க அதவச்சே ராமன் படத்தை அடிச்சாங்க. ஒருத்தன் அடிச்சான், இரண்டு பேர் அடிச்சான், அப்புறம் சுத்தி அந்த படத்தை அடிச்சாங்க..இத எடுத்துகிட்டாங்க.

ராமனை செருப்பால அடிச்சுட்டாங்க, செருப்பால அடிச்சவங்களுக்கா உங்களோட ஓட்டுனு பிரச்சாரம் பண்ணான். ஒரு பத்திரிகை நடத்தினான் இன்னமும் நடக்குது..சோ னு என்னமோ. 3 லட்சம் சுவரொட்டி விளம்பரம், அதுல நான் செருப்போட இருக்குற மாறியும் எதுத்தாப்ல ராமன் படம், பக்கத்தில கருணாநிதி சபாஷ்னு சொல்லுற மாறியும் ஊரெல்லாம் ஒட்டுனாங்க”.

இராமனைச் செருப்பால் அடிப்பதற்கு முன்பாக 138 இடங்களில் வென்றிருந்த திமுக சேலம் நிகழ்விற்கு பின் நடந்த தேர்தலில் 183 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இனி இராமனைச் செருப்பால் அடித்து விட்டுத்தான் ஓட்டு கேட்க வேண்டும் என்றனர் அன்றைய திமுகவினர் .

அண்மையில் நீலகிரியில் நடைபெற்ற விழாவுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்து ஒரு பழங்குடியினச் சிறுவனை "டேய் இங்க வாடா வந்து செருப்ப கழட்டி விடுடா" என்றது பெரும் சர்ச்சைக்குள்ளானது. பின்னர் அமைச்சர் அந்த சிறுவனிடமும் அவனது குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கேட்டதை நாம் அறிவோம்.

இதைப் போலவே உத்திரப்பிரதேசத்தில் சிறுதொழில் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் லட்சுமி நாராயன் சிங், யோகா நாள் அன்று யோகா செய்து முடித்ததும் அவருக்கு அதிகாரி ஒருவர் செருப்பு மாட்டிவிட்டார். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பும் போது - இது ராமன் வாழ்ந்த பூமி, இங்கு 14 ஆண்டுகள் வெறும் செருப்பை வைத்தே ஆட்சிநடந்தது, ஆகையால் செருப்பு புனிதமானது, எனக்குச் செருப்பு மாட்டிவிட்ட அதிகாரிக்கு புண்ணியம் கிடைக்கும் என்று பதிலளித்தார்.

இப்படிப் பல்வேறு நிகழ்வுகளை உலக வரலாறு செருப்பு பற்றி பதிவு செய்துள்ளது. காரணம் அது வெறும் செருப்பு அன்று. அதற்குப் பின்னால் வரலாறும், வலியும், அரசியலும் உள்ளன.

Pin It