தமிழகத்தில் சில மாதங்களாகவே அறவழியில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது அத்துமீறுதலையும், அடக்குமுறையையும் ஏவும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஜனவரியில் சல்லிக்கட்டினை மீட்க கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக கட்டுக்கோப்புடனும், ஒழுங்குடனும் போராடிய மாணவ, இளைஞர்கள் மீது காவல்துறையை ஏவி அரச வன்முறையைக் கட்டவிழ்த்ததுடன் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதற்காக அப்பாவி மீனவ மக்களின் வாழ்வாதாரங்களையே சிதைத்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு பல மாணவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு இன்றுவரை அவை நீதிமன்றங்களில் நிலுவையிலும் உள்ளது.
ஈழத் தமிழர்களுக்காக அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் அனுசரித்த திருமுருகன் காந்தி உட்பட நான்கு தோழர்கள் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் குண்டர் சட்டத்தை வன்முறையாக திணித்து இன்றுவரை அவர்களை விடுவிக்காமல் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தையே அழிக்க வந்த ஹைட்ரோகார்பன், ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனங்களை எதிர்த்து விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகித்த மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை பிரயோகித்து நீதிமன்றம் மூலம் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் நீட் எனும் சமூக அநீதியால் படுகொலை செய்யப்பட்ட அனிதாவைத் தொடர்ந்து தன்னெழுச்சியாக மாணவ, இளைஞர்கள் அறவழியில் தங்களது எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர். ஆனால் அரசாங்கம் போராடுபவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவுவதுடன் கடுமையான பிரிவுகளில் வழக்குகளையும் தொடுத்துவருவதும் நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில்தானா என்ற கேள்வியை எழுப்புவதை தவிர்க்க முடிவதில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி முன்பு அரசியல்வாதிகள் அமர்ந்து அம்மாவின் ஆசைக்கு விரோதமாக ஆட்சி நடப்பதாக தர்மயுத்தம் துவக்கலாம். ஆனால் அதே அம்மாவின் ஆசைக்கும் கனவுக்கும்விரோதமாக நீட் வன்முறையாக தமிழகம் மீது திணிக்கப்படுவதை எதிர்த்து அவரது சமாதியில் அமர்ந்த மாணவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்து, பெண்கள் என்றும் பாராமல் கடுமையாக குற்றவாளிகளைப் போல நடத்தியது மிகுந்த மனவேதனையினை அளித்துள்ளது.
சென்னையில் போராடிய திருநங்கைகள் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு, நுங்கம்பாக்கம் மாணவிகளுக்கு ஆதரவாக நின்ற மூன்று கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு, மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைதியாக போராடிய சிறுவர்கள் உட்பட89 பேர் மீது வழக்கு, திருவில்லிப்புத்தூர் கோபுரம் மீது ஏறி போராடிய மாணவர்கள் மீது வழக்கு, சேலத்தில் போராடிய 1072 பேர் மீது வழக்கு, பெசன்ட் நகரில் போராட்டம் நடத்திய 16 பேர் மீது வழக்கு இப்படி கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அவர்கள் செய்த குற்றம் என்ன.?எதறகாக போராடினார்கள்..? வியாபாரிகளை தானாக முன்வந்து கடைகளை அடைக்க சொன்னார்களா..? வாயில் சொல்ல முடியாத வார்த்தைகளால் வசைபாடினார்களா..? பேருந்தை எரித்தார்களா..? உண்மையில் இந்த குற்றங்களை செய்திருந்தால் அமைச்சர் பதவியும் அதிகாரமும் பரிசளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் போராடியது எதிர்கால சமுதாயத்திற்காக. பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த சமூக நீதிக்கு குந்தகம் ஏற்படுவதைத் தடுக்க களம் புகுந்தார்கள். காமராஜர் உருவாக்கிய கல்விக் கட்டமைப்பு குலைக்கப்படுவதைக் கண்டு மனம் வெதும்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதுதான்..அதுதான் அவர்கள் செய்த மகா பெரிய குற்றம்.
பல மாணவர்களைப் போல பிக் பாஸ் பார்த்து, ஓவியாவா ஜூலியா என்று சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலோ, ப்ளூ வேல் மூலம் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தாலோ அவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்திருக்காது. அதெப்படி சமூகத்தில் முளைக்கும் கள்ளிச் செடிகளை களையெடுக்க களம் இறங்கலாம்..? அணி அணியாய் பிரிந்து தமிழகத்தை விற்றுப் பிழைக்கும் ஆளும்கட்சியினை எப்படி எதிர்க்கத் துணியலாம்..?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போராட்டங்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று பெருமிதத்துடன் சொன்ன அதே சட்டமன்றத்தில் நின்று கொண்டு போராட்டத்தில் தேச விரோதிகள் புகுந்துவிட்டனர் என்று முன்னாள் முதல்வரும், பெண்களையும் குழந்தைகளையும் வைத்து போராடுவது ஃபேசனாகிவிட்டது என்று இந்நாள் முதல்வரும் பின்னால் வரும் சமுதாயம் பாடம் படிக்க ஏதுவாக பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகளை உதிர்த்துள்ளனர். ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது பேருந்தை எரித்து மூன்று மாணவிகளை கொன்ற சமூக விரோதிகளைக் கொண்டிருந்தது யார்..? வீதிகளில் ஒப்பாரி வைத்து கடைகளை அடைக்க சொல்லி, ரோட்டுக்கடையை உடைத்து வயதான பெண்மணியை தாக்கிய மாதர் குல விளக்குகளை போராட்டகளத்தில் இறக்கியது யார்..? இந்த கேள்விகளை கேட்டுவிட்டு பிறகு போராட்டம் பற்றியும், போராடுபவர்கள் பற்றியும் முன்னாள், இந்நாள் முதல்வர்கள் பேசுவது நலம்.
மது அரக்கனால் கணவனை இழந்து கைம்பெண்களாக நிற்கும் அபலைகள், தந்தையை இழந்து அனாதைகளாக எதிர்காலம் பற்றிய கேள்வியுடன் நிற்கும் குழந்தைகள் இவர்களைவிட மதுவை எதிர்த்து போராட தகுதியுடையவர்கள் வேறு யார் இருக்கமுடியும். ? தான் பெற்ற கல்வியால் சமூகத்திற்கு பலன்தர முடியவில்லையே என்று ஏங்கியிருந்த இளைஞர் சமுதாயத்திற்கு தன் எதிர்கால சந்ததியின் கல்வி உரிமையை கானல் நீராக்கும் ஓர் அரக்கனை அழிக்க களம்புகும் வாய்ப்பு கிடைத்தால் அதனைத் தவறவிடுவார்களா..?
சல்லிக்கட்டு போராட்டம் மூலம் இப்படியும் போராட முடியும் என்று உலகிற்கு எடுத்துக்காட்டிய எமது இளைய சமுதாயத்தை இப்படி அடக்குமுறைகள் மூலமாகவும், வழக்குகள், சிறைக் கொட்டடிகள், சர்வாதிகாரம் மூலமும் அடக்க நினைப்பது மக்களாட்சிக்கு அழகல்ல. ஒரு அரசு தனது கடமையில் இருந்து தவறும்போது மக்கள் வீதிகளுக்கு வரத்தான்செய்வார்கள். தனது தவறை உணர்ந்து நேர்வழியில் திரும்பி மக்கள் நலநடவடிக்கைகளில் இறங்குவதுதான் நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகு. அதைவிடுத்து போராடுபவர்களை தீவிரவாதிகளாகவும், சமூகவிரோதிகளாகவும் சித்தரித்து கடுமையான பிரிவுகளில் வழக்குகளை ஏவுவது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும் என்பதே நிதர்சனம். அரசு உணர்ந்து செயல்படவேண்டும்.
- அபுல்ஹசன்