தமிழ்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை எட்டிப்பார்த்து விட்டு நெல்லூருக்கு அருகில் கரையக் கடந்த மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மிகக் கடுமையானது.

இவைகளுக்கு உரிய நிவாரண உதவிகளை தமிழ்நாடு அரசு செய்துமுடிக்கும் முன்னரே மிகக்கடுமையான கனமழையினால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்டச் சில தென்மாவட்டங்களின் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நெல்லை மாவட்டம், திருவைகுண்டம் இரயில்நிலையத்தில் நுழைந்த விரைவு இரயில் அங்கிருந்து புறப்பட முடியாமல் அப்படியே எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் நின்றுவிட்டது இரண்டு நாட்களாக. அரசின் உதவி கூட பெற முடியாத நிலையில் பசி, பட்டினியோடு அந்த இரயிலில் இருந்த ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் உள்ளிட்ட 800 பேர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்?

அவர்களில் ஒருவர் தொலைக் காட்சியில் இப்படிச் சொல்கிறார்,”பக்கத்தில் இருந்த கிராம மக்கள், ரயில் நிலையத்தின் அருகில் இருந்த பத்ரகாளியம்மன் கோவிலில் திங்கட்கிழமை காலையிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை மூன்று வேளையும் உணவு சமைத்து எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் முகம் தெரியாத எங்கள் அனைவருக்கும் பசியாற்றினார்கள்.

இரயிலில் இருந்த குழந்தைகள், ‘கிராம மக்கள் மாட்டில் பால் கறந்து அதைக் காய்ச்சி இரயிலில் இருந்த ஒவ்வொரு பெட்டியாகப் போய் பால் தேவைப் படுபவர்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று குழந்தை வைத்திருந்த ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கேட்டுக் கொடுத்தார்கள். இரயில் இருந்த நாங்கள் அந்தக் கிராம மக்களுக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளோம்” என்று.

தங்கள் அடையாளம் எதையும் காட்டிக் கொள்ளாமல், மனிதநேயத்தை மட்டுமே காட்டி இருக்கிறார்கள் அந்த திருவைகுண்டத்துக் கிராம மக்கள்.

அதே நாளில் டில்லியில் பிரதமரைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர்

 வெள்ளப் பாதிப்புக்கு ரூ.12,659 கோடி நிவாரணம் வழங்குமாறும், அதில் தற்காலிகமாக ரூ.7,033 கோடியை. வழங்க வேண்டும் என்றும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சில நாள்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயல் பாதிப்பு முதல்கட்ட நிவாரணமாக முதல்வர் கேட்ட 6050 கோடிக்குப் பதிலாக வெறும் 450கோடி மட்டுமே கொடுத்தார் பிரதமர். இப்பொழுது தென்மாவட்டங்களுக்கும் சேர்த்து நிவாரண நிதியைக் கேட்டுள்ளார் முதல்வர்.

திருவைகுண்ட கிராம மக்கள் காட்டிய மனிதநேய உதவியைப் போல, புதுடில்லிப் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் கோரிய நிவாரண நிதியை விடுவிப்பார். என்று நம்புவோம்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It