NEET examநீட் அதன் அடிப்படையிலேயே உயர்கல்வியில் இருந்து ஏற்கனவே விலகியிருக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கும் எதிரானது. பள்ளிக்கல்வி பெறுவதே என்பது அசாத்திய சாதனையாகக் கருதும் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பெரும்பான்மையான இருக்கும் சமூகத்தில் தகுதி, தரம் என்ற பெயரில் ஆட்கொல்லி தேர்வான நீட்டைக் கொண்டு வருவது, மாணவர்களை மருத்துவக் கல்வியில் இருந்து முற்றிலும் விலக்கி விடும்.

கிராமம், நகரம் என பாரிய வேறுபாடுகளை கொண்டது தமிழ்நாடு. நகரத்தில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் வசதி கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. பள்ளிக்குச் செல்வதற்கு பல மைல் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலையில் கிராமப்புற மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில் நீட்டிற்கு தயாராவது மாணவர்களுக்கு கூடுதல் மற்றும் தேவையற்ற சுமை.

நகரம், கிராமம், ஏழை, பணக்காரர், சமூகப் படிநிலையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர்களுக்கு இடையே கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு உலக அளவில் கல்வியாளர்கள் அருகாமைப் பள்ளிகளை பரிந்துரைக்கின்றனர்.

பள்ளிக்கல்வி என்ற நிலையிலேயே மேற்சொன்ன பாரிய வேறுபாடுகள் தமிழ்நாட்டில் உள்ளன. அதைக் களைந்து, கல்வியை அனைத்து பிரிவினருக்கும் எடுத்துச் செல்ல தமிழக அரசு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகள், விலையில்லா பேருந்து பயணச்சீட்டு, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, சத்துணவு, கல்வி உதவித்தொகை எனப் பல சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டுமே கிடைத்து வந்த கல்வி வேலைவாய்ப்பை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பரவலாக்க வேண்டும் என்ற நோக்கில் தந்தை பெரியார் தலைமையில் எழுந்தது திராவிட இயக்கம். இதுகாறும் அமைந்த திராவிட அரசுகள் செயல்படுத்திய சமூகநீதி திட்டங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பரவலாகச் சென்று சேர்ந்துள்ளன.

இதன் மூலம் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் அதனூடாக இந்திய ஒன்றியத்திற்கும் பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு சாட்சியாக, பொருளாதார குறியீடுகளிலும் மனிதவள மேம்பாட்டு அளவீடுகளிலும் சுகாதார அளவீடுகளிலும் ஒருசேர உயர்ந்து நிற்கிறது தமிழகம். கல்வியைப் பரவலாக்கியதால் ஏற்பட்ட வளர்ச்சியை, சமீபத்தில் தமிழக அரசு அமைத்திருக்கும் Jean Drèze , நாராயணன் உள்ளிட்ட பல பொருளியல் அறிஞர்களும் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல பொருளியல் அறிஞர்களும் பாராட்டிப் பதிவு செய்துள்ளனர்.

கல்வியை தனியார் கையில் முழுமையாக விட்டுவிடக் கூடாது என கல்வியாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தனியாரும் பங்கேற்கும் நிலையில் தமிழக அரசின் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் லாப நோக்கில் செயல்படும் தனியார் பள்ளிகளின் ஏக போகத்தையும் விதிமீறல் களையும் தடுக்கவும் நெறிமுறை படுத்தவும் தமிழ்நாடு அரசு இதுகாறும் எடுத்த பல முயற்சிகளுக்கு தடையாக நீட் அமைந்துள்ளது.

நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் பெரும் தனியார் வணிகம் உருவாகியுள்ளது. நீட்டிற்கு மாணவர்களை தயார்படுத்த தனியார் பயிற்சி மையங்களால் மட்டுமே முடியும் என்ற ஒரு மாயத்தோற்றம் தனியார் நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாயையில் சிக்கியுள்ள பொது மக்கள் தமது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் பயிற்சி மையங்களில் சேர்க்கின்றனர். இதனால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மட்டுமின்றி அரசுக்கும் கூடுதல் சுமையாகவும் பிரச்சனையாகவும் நீட் உருவாகியுள்ளது.

மருத்துவக் கல்வி மாணவர்களின் வேலைவாய்ப்புடன் மட்டும் தொடர்புடையது அல்ல. நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையது. பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகளில் கூட சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவதற்கு பல நாட்கள் முன் பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் குக்கிராம பொதுமக்களும் எவ்வித முன்பதிவும் இன்றி காத்திருப்பும் இன்றி உடனடியாக சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறமுடியும், அதற்கு காரணம் தலைவர் கலைஞர் அரசு மருத்துவக் கல்வியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது ஆகும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மொழி பயின்றவர்களே மருத்துவக் கல்லூரி செல்ல முடியும் என்ற என்றிருந்த நிலையை நீக்கியது நீதிக்கட்சி அரசு. நீதிக்கட்சியில் வழியில் வந்த தலைவர் கலைஞர் மருத்துவக் கல்வியில் நுழைவுத்தேர்வை தடைசெய்து அடுத்த கட்டத்திற்கு தமிழ் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றார்.

நீதிக்கட்சி, பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகளால் செயல்படும் தமிழ்நாடு அரசு நீட்டை அனுமதிக்குமானால் நூறு ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும்.

பொது சுகாதாரம் பெரும்பான்மையான மக்களை இன்னும் சென்றடையாத சூழலில் தகுதி, தராதரம் என்ற பெயரில் மாணவர்களை வடிகட்டுவது சரியாக இருக்காது. அதன் விளைவுகள் தமிழ்ச் சமூகத்தின் பொது சுகாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

கிராமப்புற பள்ளியில் படித்து மருத்துவ கல்வி பெறும் மாணவர்கள் அவர்கள் பிறந்து வளர்ந்த கிராமப்புறங்களில் மருத்துவ சேவை ஆற்றுவதற்கு முன்வருவார்கள். அதை தமிழக அரசு உணர்ந்தே, கிராமப்புறத்தில் மருத்துவ சேவை புரிபவர்களை ஊக்கப்படுத்த முதுநிலை மருத்துவப் படிப்பில் தனி இட ஒதுக்கீடு தந்தது. நீட் அனுமதிக்கப்படுமானால் இப்படிப்பட்ட மாணவர்கள் இளநிலை மருத்துவம் படிக்கவும் வரமாட்டார்கள்.

நீட் அனுமதிக்கப்படுமானால் அதன் மூலம் மருத்துவ கல்வி பெறும் மாணவர்கள் கிராமப்புற பகுதிகளுக்கு மருத்துவ சேவை செய்ய முன் வரவும் மாட்டார்கள். அப்படியானால் நகரப்பகுதிகளில் மருத்துவ சேவை மேம்படுமா என்ற கேள்வி எழும், ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை, ஏனெனில் நீட் தேர்விற்கு தயாராவது என்ற நிலையை ஒரு மாணவர் எடுப்பார் எனில் இன்றைய நிலையில் பல லட்சங்கள் செலவழிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

பல ஆண்டுகள் முதலீடுகளும் தேவை. பல லட்சங்கள் செலவழித்து மருத்துவக் கல்லூரியைப் பயிலும் மாணவர்கள், கல்வி பயின்று முடிந்தவுடன், கல்வி கற்க ஏற்பட்ட செலவை ஈடுகட்ட கூடுதல் வருமானம் கிடைக்க, எங்கு பணி செய்ய வேண்டுமோ அங்கு பணி செய்வார்கள். இதன் மூலம் மருத்துவ சேவை பரவலாக்க படுவது தடையாகும்.

சமச்சீர் கல்வி என்ற மிகச்சிறந்த பாடத்திட்ட முறையை கொண்டு வந்தது தமிழக அரசு. நீட் தேர்வுகள் மாநில பாடத் கல்வி திட்டத்தின் அடிப்படையில் அமையுமானால், ஏற்கனவே தமிழக கல்வித் துறை நடத்திய பள்ளி இறுதித் பொதுத்தேர்வில் தேர்ச்சி ஆனவர்கள் மீண்டும் ஒரு முறை அதே பாடத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் நீட் தேர்வுகளையும் சந்திக்க வேண்டும்.

இரட்டைத் தேர்வுகள் ஏன்? ஒன்றிய அரசு பாடத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படுமானால், மாநில அரசின் பாடத்திட்டத்தையும் மாநில அரசின் உரிமைகளையும் குழி தோண்டி புதைக்க கூடிய விஷயமாக நீட் அமைகிறது. மாணவர்களும் இரட்டைச் சுமை ஏற்படும்.

கல்வி மாணவர்களை பயமுறுத்துவதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்க முடியாது, மகிழ்ச்சியான, இயல்பான கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதே சரியானது. நீட் இன்றளவில் மாணவர்களை அச்சுறுத்துகிறது, மருத்துவக்கல்வி வேண்டாம் என்ற முடிவை எடுக்க தூண்டுகிறது. தற்கொலைக்கு தூண்டுகிறது. தோல்வி பயத்தை ஏற்படுத்துகிறது, பாடத்திட்டத்திற்கு வெளியே தனியாக படிக்கவேண்டிய சுமையை, மன உளைச்சலைத் தருகிறது.

பாடத்திட்டத்திற்கு வெளியே மாணவர்கள் தனிப்பயிற்சி தயார் செய்ய வேண்டிய நிலை நீட்டினால் ஏற்படுமானால், ஏற்கனவே தமிழக அரசு நடத்தும் பாடத்திட்டத்திற்கான தேவை என்ன? கல்வி கற்க விரும்பும் மாணவர்களை பயமுறுத்துவதோ அல்லது இடைநிற்றலை அதிகப்படுத்துவதோ அரசின் நோக்கமாக இருக்கமுடியாது.

நீட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பெறுவது குறைந்துவிட்டது என்பதை அரசு வெளியிட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன அதை அரசே ஒத்துக்கொண்டதால் தான் . நீட்டினால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது.

அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிராமப் புற மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நீட்டை அனுமதித்து விட்டு, அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருவதோ தனி இட ஒதுக்கீடு தருவதோ சரியாகாது. முன்வாசல் வழியாக நீட்டை அனுமதித்துவிட்டு பின்வாசல் வழியாக அரசுப் பள்ளி மாணவர்களை மருத்துவக் கல்வியில் இருந்து வெளியேற்றும் செயல் இது.

எவ்வழியில் பார்த்தாலும் மாணவர்களுக்கும் மட்டுமல்ல தமிழ் நாட்டு அரசுக்கும் எதிரான செயலாகவே நீட் இருக்கிறது. எனவே நீட் தடை செய்யப் பட வேண்டும்.

- சு.விஜயபாஸ்கர்

Pin It