“கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை”

 - என்கிறார் பெரும்புலவர் திருவள்ளுவர்.

ஆந்திரம், கர்நாடகம் நீர்பிடிப்புப் பகுதிகளில் கொட்டிய கனமழையால் காவிரி ஆறிலும், தொண்ணூற்றி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாலாறிலும், தமிழகத்தின் எல்லா ஆறுகளிலும் வெள்ளம் கரைகளைத் தாண்டிப் பெருக்கெடுக்கத் தொடங்கியது.

தமிழகத்தில் ஒருபுறம் அளவுக்கு அதிகமான கனமழையும், மறுபுறம் அணைகளின் கொள்ளளவைத் தாண்டியதால் திறந்து விடப்பட்ட உபரி நீரும், வீடுகளுக்குள்ளும், வேளாண் நிலங்களிலும் புகுந்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தி விட்டது.

ஊர்களைச் சூழ்ந்து தெருவெல்லாம் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகளுக்குள் நீர் புகுந்தும், பல வீடுகள் இடிந்தும், பல குடிசைகள் வெள்ளத்தோடும் போயின.

விளைந்த பயிர் நிலங்களில், நீர் தேங்கி நின்றதால் வேளாண் மக்கள் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளார்கள்.

இந்த இழப்புகளைச் சரி செய்வதற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தி.மு. கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். தமிழக அரசின் சார்பாக வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 2,079 கோடி வேண்டும் என்றும், முதல் கட்டமாக ரூபாய் 550 கோடியை விடுவிக்கவும் வேண்டுகோள் வைத்தார்.

இந்நிலையில் ஒன்றிய அரசின் உள்துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையில் ஒரு குழு தமிழகம் வந்து பார்வையிட்டுச் சென்று அறிக்கை அளிக்க உள்ளது.

இவை எல்லாம் ஒரு நடைமுறைதான். என்ன நடைமுறை இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கேட்ட வெள்ளப் பேரிடர் நிவாரண நிதியை முழுதுமாக இதுவரை ஒன்றிய அரசு கொடுத்ததில்லை. கேட்கும் நிவாரணத் தொகையில் பாதியளவுக்கும் குறைவாகவே கொடுத்து வந்துள்ளது.

எடுத்துக் காட்டாக 2018 கஜா புயல் பாதிப்பிற்குத் தமிழகம் கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 14,910 கோடி. ஆனால் ஒன்றிய அரசு கொடுத்ததோ வெறும் 1,500 கோடிதான். இப்படிச் செய்வதால் மக்களின் துயரை, நான்கில் ஒரு பங்கு கூட தீர்க்க முடியாது.

 பா.ஜ.கவைப் புறக்கணிக்கிறார்கள் தமிழக மக்கள் என்பதற்காக , மக்களின் துயர் துடைக்க இப்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடருக்காகத் தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரணத் தொகையை முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும், கொடுக்க வேண்டும்.

கேட்பது தமிழக அரசின் உரிமை. கொடுப்பது ஒன்றிய அரசின் கடமை.

Pin It