குறையைச் சுட்டிக் காட்டுவது என்பது வேறு, இது வரவேற்கத்தக்கது. குறையைப் போல இட்டுக்கட்டிச் சொல்வது என்பது வேறு, இதனை அரைவேக்காடு என்பார்கள்.
பிரதமர் மோடியுடன் கொள்கை அடிப்படையில் முரண்பட்டு இருந்தாலும், அவர் பிரதமர் என்பதை நாம் மறக்கவில்லை.
பிரதமர் தமிழ்நாடு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தமிழகம் வந்தார். அப்போது அவருக்குத் தமிழக அரசு கொடுத்த பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாகத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்கிறார். என்ன குளறுபடி? நேரு விளையாட்டு அரங்கில் மெட்டல் டிடெக்டர் கருவி வேலை செய்யவில்லை என்கிறார்.
இதற்குக் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகையின்போது எந்தவிதமான பாதுகாப்புக் குளறுபடியும் ஏற்படவில்லை என்றும், நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சரியான முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும், தமிழகத்தில் காவல்துறைக்கு வழங்கும் உபகரணங்கள் தரமானதாக உள்ளதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதாகவும், மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் உபகரணங்கள் கேட்டு வாங்கும் அளவுக்குத் தரமாக உள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
பிரதமரின் பாதுபாப்பு என்பது ஒன்றிய அரசின் பாதுகாப்புக் குழுவின் கீழ் இருக்கிறது. அதைத் தாண்டி மாநில அரசின் காவல் கூட நுழைய முடியாது என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகிறார்.
பொறுப்பு வாய்ந்த காவல்துறைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் தந்துள்ள இந்த விளக்கங்களுடன், தமிழ்நாடு அரசும் பிரதமரின் பாதுகாப்பு விசயத்தில் மிகக் கவனமாகச் செயல்பட்டது என்பதை நாடே அறியும்.
முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலைக்கு இது கூடத் தெரியாதா?
அண்ணாமலை அரசியல் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை.
போலி, பித்தலாட்ட அரசியல் செய்யாமல் இருப்பது நல்லது.