2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆகியனவற்றைத் தொடர்ந்து இப்போது 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும், திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனை ஆங்கிலத்தில் ‘ஹாட்ரிக்’ என்று சொல்வார்கள்!

உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக பெற்றுள்ள வெற்றியை விட, இத்தேர்தல்களில் சமூக நீதி பெற்றுள்ள வெற்றியே நாம் மிகவும் கொண்டாடத்தக்கது.

priya rajan chennai mayor1996 உள்ளாட்சித் தேர்தலில், தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, பெண்களுக்கு 33% இடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்போது அதனையும் தாண்டி 50% இடங்களில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில், 11 மாநகராட்சிகளில் பெண்களே மேயர்களாகப் பதவி ஏற்றுள்ளனர் என்பது திராவிட மாடலின் இன்னொரு சாதனை என்றே கூற வேண்டும். அதிலும், தலைநகரமான சென்னையில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் மேயராக ஆகியுள்ளார் என்பது வரலாற்றுச் சிறப்புடையது என்றே கூறலாம்.

இப்படி நாம் கட்சியின் வெற்றியையும், சமூக நீதியின் வெற்றியையும் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், பாஜகவும் தாங்கள் பெரு வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறிக் கொள்கிறது. பரிதாபத்திற்குரிய அந்த வெற்றி குறித்து நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தாங்கள் 308 இடங்களில் வெற்றி பெற்று விட்டதாகவும், 11 மாநகராட்சிகளில் காலூன்றி விட்டதாகவும் அவர்கள் பெருமை பேசிக் கொள்கின்றனர். ஏதோ 400 இடங்களில் அவர்கள் 308 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டதைப் போல அவர்கள் பேசுகின்றனர். மொத்தமுள்ள 12830 இடங்களில் 308 இடங்களில் வெற்றி பெற்றதைப் பாஜகவைத் தவிர, உலகில் எவரும் கொண்டாட மாட்டார்கள்! அந்த 308 இடங்களில் 200 இடங்கள் குமரி மாவட்டத்தில் மட்டும் கிடைத்த வெற்றி.

ஆனால் நாங்கள் மொத்தமுள்ள எல்லா இடங்களிலும் போட்டியிடவில்லை. ஏறத்தாழ 5400 இடங்களில் மட்டும்தான் போட்டியிட்டோம். மொத்த இடங்களிலும் போட்டியிட்டிருந்தால் இன்னும் கூடுதல் வெற்றியைப் பெற்றிருப்போம் என்கின்றனர். அவர்களை எல்லா இடங்களிலும் போட்டியிடக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? எல்லா இடங்களிலும் போட்டியிடுவதற்கே ஆள் இல்லாத கட்சிக்கு இவ்வளவு பெருமை கூடாதல்லவா!

தங்களின் கோட்டை என்று அவர்கள் கூறிக்கொண்ட கொங்கு மண்டலத்தில் ஓர் இடத்தில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பது இன்னொரு அவலம்!

இருப்பினும் நாம் கவனமாக இருக்க வேண்டிய இடம் ஒன்று இருக்கிறது. அந்த இடம் குமரி மாவட்டம். எப்போதும் குமரி மாவட்டம், தமிழ்நாடு அரசியலிலிருந்து சற்று விலகியே நின்றுள்ளது என்பதை நாம் அறிவோம். அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தியதைப் போல, அடுத்து குமரி மாவட்டத்திலும் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது என்பதுதான் இந்தத் தேர்தல் நமக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம்!

- சுப.வீரபாண்டியன்

Pin It