இந்தியாவில் கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் பார்ப்பனர்கள் தங்களுக்கு வல்லுனர் பிம்பங்களை வலிந்து உருவாக்கிக் கொள்ளுவார்கள். அவர்களே ஒருவருக்கொருவர் தங்களைப் புகழ்ந்து பாராட்டிக் கொள்வர். அவர்களுக்குள்ளேயே வாய்ப்புகளை வழங்கிக் கொள்வர். இவர்களுடைய ஆதிக்கத்தை மீறி இத்துறைகளுள் ஒருவர் வளரமுடியாது என்பதால், அவர்களைப் புகழ்ந்து பார்ப்பனர் அல்லாத சிலரும் பேசுவதை நாம் பார்க்கிறோம். அதையும் மீறிப் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிறந்த படைப்புகளை உருவாக்கிப் புகழ் பெறும் போது, பார்ப்பனர்கள் அவர்களை மௌனமாகக் கடந்து செல்வதையோ அல்லது பார்ப்பனர் அல்லாத அக்கலைஞர்கள் பார்ப்பனியத்திற்கு அடிபணிந்து விடுவதையோ நாம் பார்க்கிறோம்.

பார்ப்பனர்களின் இந்தப் போலி பிம்பமும், போலி தேசப்பற்று உணர்ச்சியும் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் “தி காஷ்மீர் பைல்ஸ்” என்பது.the kashmir files 584இத்திரைப்படத்தை இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகளின் ஆதரவோடு, மூளை முடுக்கு எங்கும் பரப்பினார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். இதனை ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கண்டித்து வந்தனர். இந்த நிலையில் கோவாவில் நடைபெற்ற 53ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவின் நிறைவுநாளில் பேசிய நடுவர் குழுவின் தலைவர் நடவ் லபிட் ‘propaganda’ என்றும் ‘a vulgar film’ என்றும் இத்திரைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியது உலக அரங்கில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்வதேச அளவில் சில ஆவணப் படங்களும், திரைப்படங்களும் ஒரு பக்க நியாயங்களை மட்டுமே முன்வைத்து, பிரச்சாரங்களை முன்னெடுத்து இருக்கின்றன. நாடு, மொழி, இனம், மதம் போன்ற அடையாளங்களைக் கடந்த கலைஞர்களின் கண்டனங்களை அப்படங்கள் பெற்றிருக்கின்றன. ஆனால் அண்மையில் வெளியான “தி காஷ்மீர் பைல்ஸ்” என்னும் திரைப்படம் போல் பொய்யான, வன்மம் நிறைந்த திரைப்படத்தை நாம் எங்கும் காண முடியாது. பார்ப்பனியத்தால், இந்தியாவிற்கே அவமானம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியா-இஸ்ரேல் உறவு, பாலஸ்தீன மக்களின் விடுதலை, இவற்றில் இருக்கக்கூடிய சர்வதேச அரசியல் போன்றவற்றால் நடவ் லபிட்டுகு சில நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மனித நேயத்தைப் போற்றும் கலைஞனாக உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார் லபிட்.

அவர் இஸ்ரேல் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இதே போன்ற ஒரு திரைப்படம் இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பப்படும் போது, வெளிநாட்டு நடுவர் உண்மையை உரக்கச் சொல்வதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன் என்றும், இது தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பிற்கான கடமை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் இருக்கும் கலைத்துறை என்பது பார்ப்பன ஆதிக்கத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறது. இங்கு லபீட் போன்ற கலைஞர்கள் தங்கள் கடமையை உணர்ந்து உண்மையை உரக்கச் சொல்வது என்பது அரிதிலும் அரிது, ஒரு சிலரைத் தவிர.

 எதற்கும் தயங்காமல், உண்மையைச் சொன்ன மதம், மொழி, நாடு கடந்த அந்தக் கலைஞனுக்கு நம்முடைய நன்றி!

- மா.உதயகுமார்

Pin It