யார் மீதாவது கால் பட்டால் “ஏம்பா! செருப்பு காலை வச்சு மிதிக்கிற” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். வெறுங்கால் படுவதை ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் செருப்புக் கால் மிகுந்த அவமானம். அதாவது கத்தியால் குத்துவதைக் காட்டிலும் செருப்பால் அடிப்பது என்பது இந்தியச் சமூகத்தில் பெருத்த அவமானம்.

ptr palanivel thiagarajanதமிழ்நாட்டில் இந்த மனோபாவம் நிறைய மாற்றம் பெற்றிருந்தாலும் கூட சாதிய, மத வெறி ஊறிய மனிதர்கள் கையில் செருப்பு ஒரு இழிவு செய்யும் ஆயுதமாகவே இன்றும் உள்ளது. இப்போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் வாகனம் மீது வீசப்பட்ட செருப்பு ஒன்று முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

தங்களின் கொள்கைக்கு மாறான மனிதர்கள் மீதான வெறுப்பை எந்த வகையிலாவது காட்டி அதன் மூலம் அரசியல் லாபம் பார்க்கும் பாஜக வீசிய செருப்புதான் அது. பாஜக தொடர்ந்து நம் மக்களிடம் செல்வாக்கு இழந்து வருவதைக் காண்கிறோம். NOTAவோடு போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு அந்நியமான செயல்களை மட்டுமே எப்போதும் செய்து வரும் பாஜக எப்படியாவது, எதைச் செய்தாவது மக்களின் மனதில் இடம்பிடித்து விட நினைக்கிறது. அதிலும் அண்ணாமலை போன்ற அறிவுஜீவிகள் செய்யும் காரியம் எல்லாம் விளம்பரத்தனமாக வெகுஜன மக்களுக்கு வேகமாக சென்று சேர்ந்தாலும் இறுதியில் நகைப்பில்தான் முடிகிறது. நகைப்புக்குரியவர்கள் நிராகரிக்கப்பட்டால் மனநிலை பாதித்து என்ன செய்வார்களோ அதைச் செய்கிறார்கள். அதை ஆதிகாலத்தில் இருந்தே செய்கிறார்கள். இப்போதும் செய்துள்ளார்கள். மாறவே இல்லை.

அதேசமயம் இந்தச் செருப்பு வீச்சுக் குறித்து ‘சின்ரல்லா’ கதையைச் சொல்லி அவர்களை நிலைகுலையச் செய்துள்ளார் பிடிஆர். அவர் பார்த்து, படித்து அறியாத வரலாற்று செருப்புகள் உண்டா என்ன? திராவிட இயக்க முன்னோடி வீட்டுப் பிள்ளையாயிற்றே? அது அவருக்கு தெரியாதா என்ன? இந்த இடத்தில் 2 பழைய செருப்புகளைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்த 2 செருப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக நாம் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஒன்று கடலூரில் தந்தை பெரியார் மீது 29.07.1944ல் வீசப்பட்ட செருப்பு. இன்னொன்று 24.1.1971ல் சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டுப் பேரணியில் பெரியார் மீது வீசப்பட்ட செருப்பு.

முந்தைய 2 செருப்புக்குகளுக்கு மட்டுமல்ல இப்போது விழுந்த ஒற்றைச் செருப்புக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

முதல் செருப்பின் வெற்றி 28 வருடம் கழித்துச் சிலையாக நின்றது. இரண்டாவது செருப்பின் வெற்றி இந்தியாவிலேயே அதிக இடத்தில் வென்ற கட்சி என்ற சாதனையை அப்போது திமுக தேர்தலில் பெற்றது. இப்போது மூன்றாவதாக பிடிஆர் மீது வீசப்பட்ட செருப்பு இன்னும் சிறப்பாக, வீசப்பட்ட அதே நாளிலேயே மன்னிப்புக் கேட்டுள்ளது.

பிடிஆர் போன்ற நம் கொள்கை வழிவந்தவர்கள் செருப்பிலாத கால்களுக்குச் செருப்பை அணிவிக்கும் பணியைச் செய்கிறார்கள்.

 நிதியமைச்சரின் கையெழுத்து செருப்பை எரிந்த அந்தப் பெண்ணின் கால்களுக்கும் சேர்த்துத்தான் போடப்படுகிறது. நடந்து தேய விடாமல் அப்பெண்ணை இலவசமாய்ப் பேருந்தில் ஏற்றுகிறது.

திராவிட இயக்கப் பதிலடி அதுதான். இன்னா செய்தாரை அவ்வாறு ஒறுப்போம்.

Pin It