கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவு மார்க்சியச் சிந்தனையாளர்களுக்கும் இடதுசாரி யினருக்கும் முற்போக்கு இலக்கிய உலகிற்கும் மிகப்பெரும் இழப்பாகும். தமிழ் இலக்கியங்களை மார்க்சிய வரலாற்றியல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் நுட்பமான ஆய்வு நிகழ்த்தி உரைப்பதில் அவரது அலாதித் திறமை வெளிப்படும். பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியங்கள் வரை அவரிடம் தெளிந்த ஆய்வும் முடிவுகளும் இருந்தன.

அவர் எழுதிய ஆய்வு நூல்கள், கருத்தரங்கில் அவர் ஆற்றிய உரைகள் எல்லாம் தமிழ் இலக்கிய ஆய்வாளர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அறிவுச் சேகரத்தையும் ஆய்வு முறைகளையும் வழங்கின.

1932ம் ஆண்டு யாழ்ப்பாணம் கரவெட்டி என்ற ஊரில் பிறந்த அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழக வருகைப் பேராசிரியராகவும், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ்நாட்டு இடதுசாரி தமிழறிஞர்களோடும் இடதுசாரி எழுத்தாளர்களோடும் தலைவர் களோடும் கலாநிதி சிவத்தம்பி நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அவர்களோடு தமிழ் இலக்கியம், மொழி குறித்தான விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நிகழும்.

1999ம் ஆண்டு ஜனவரி செம்மலர் பொங்கல் மலருக்காக, அன்றைய இலங்கைத் தமிழ் இலக்கியம் குறித்து சென்னையில் விரிவானதொரு பேட்டியளித்தார். “பொதுவாக மக்களின் அனுபவத்திற்கும் இலக்கியத்திற்கும் தொடர்பு உண்டு. அந்த அனுபவங்கள் உண்மையான வையாய், நேர்மையானவையாய், ஆழமானவையாய் இருக்கிற பொழுதுதான் இலக்கியத்தில் உயிர்ப்பிருக்கும்” என்று தமது பேட்டியை ஆரம்பித்தார்.

1982ல் மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய 5 நாள் இலக்கியப் பயிற்சி முகாமில் பங்கேற்று இரண்டு தினங்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார். அதுபோல் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டிலும் பங்கேற்றுச் சிறப்பித்தார். ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார். சென்னையில் நடைபெற்ற இந்த எழுத்தாளர் சங்கத்தின் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

உலகத் தமிழ் மாநாடுகள் உள்பட பல மாநாடுகளிலும் பங்கேற்று இவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் 200க்கும் மேல். தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பண்டைத் தமிழகத்தில் நாடகம், சங்க கால திணைக் கோட்பாட்டின் சமுதாய அடிப்படைகள், நாவலும் வாழ்க்கையும், மதமும் மானுடமும், தமிழ்ச் சமூகம் ஒரு புரிதலை நோக்கி.. இலங்கைத் தமிழர் யார், எவர்? தொல்காப்பியமும் கவிதையும், தமிழ்ப் பண்பாட்டில் சினிமா... என்று இவர் எழுதிய நூல்கள் ஏராளம்.

தமிழ் இலக்கியத்திற்கும் ஆய்வுக்கும் காலமெல்லாம் பெருந்தொண்டாற்றி உலகப் புகழ்பெற்று மறைந்தவர் பேரறிஞர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி.

Pin It