வாசிப்பு என்பது தனிமையில் அனுபவிக்கும் சுகமாகும். எழுபதுக்கும் மேற்பட்டோர் கூடி வாசிப்பது என்பது வித்தியாசமான அனுபவமாகும். அதுவும் கூடிய இடம் மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில் காட்டுக்குள் அமைந்துள்ள கெத்தேசால் என்ற மிகச் சிறிய கிராமத்தில் என்பது இன்னும் வித்தியாசமானது. ஊருக்குள் நுழைந்ததுமே மனித உரிமைப் போராளி ச.பாலமுருகன் எழுதியுள்ள “சோளகர் தொட்டி” நாவல் நினைவிற்கு வந்தது. நாங்கள் தங்கியிருந்த கெத்தேசால் கிராமமும் ஒரு சோளகர் தொட்டிதான். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலக் காவல் துறையினருக்கு பெரும் சாவாலகத் திகழ்ந்த வீரப்பனும், வீரப்பனைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை என்ற பேரில் காவல் துறையினரும் நடத்திய கடுந் தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி மக்களுள் கெத்தேசால் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அடங்கும். இந்தியாவெங்கும் நீக்கமற வியாபித்திருக்கும் செல் போன் நிறுவனங்கள் எதுவும் இன்னும் நுழையாமல் விட்டு வைத்திருக்கும் அரிய கிராமம் கெத்கேசால். எனவே தங்கியிருந்த மூன்று நாட்களும் அலை பேசியின் தொல்லைகளின்றி நிம்மதியாக இருந்தோம்.

அமைதியும், மிதமான குளிரும், இயற்கை அழகும் நிறைந்த இந்தக் கிராமத்தை வாசிப்பு முகாமிற்காகத் தேர்ந்தேடுத்த ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர் பேரா. நா.மணி அனைத்துப் பாராட்டுதலுக்கும் உரியவராவார். அக்னி நட்சத்திரத்தின் கொடிய வெப்பத்திலிருந்து தப்பி, மே மாதம் 14, 15, 16 ஆகிய நாட்களை புத்தகங் களுடன் கொண்டாடினோம். பேராசிரியர் மணியும், பாரதி புத்தகாலயம் பொறுப்பாளர் தோழர் நாகராஜனும் ஏற்கனவே திட்டமிட்டு கல்வி தொடர்பான ஆறு நல்ல நுhல்களைத் தேர்ந்தெடுத்து அனைவருக்கும் அனுப்பியிருந்தனர். சிங்கிஸ் ஐத்மத்தாவ் எழுதிய “முதல் ஆசிரியன்”, டெட்சுகோ குரோயாநாகி எழுதிய “டோட்டோ-சான்”, பேரா.நா.மணி எழுதிய ” பள்ளிக்கூடத் தேர்தல்”, தமிழகத்தின் பள்ளிக் கல்விப் பிரச்சனை கள் குறித்து எழுதப்பட்ட சிறு கதைகளின் தொகுப்பான “ஓய்ந்திருக்க லாகாது....” என்ற நுhல், கேரளப் பேராசிரியர் எஸ்.சிவதாஸ் எழுதிய “வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்”, இத்தாலிய நாட்டு பள்ளிச் சிறுவர்கள் ஏழுதிய “ஏன் டீச்சர் எங்களை பெயிலாக்கினீங்க” ஆகிய ஆறு புத்தகங்கள் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க துணைத் தலைவர் தோழர் கமலாலயன் அவர்களின் துவக்க உரையுடன் முகாம் தொடங்கியது. ஏராளமான புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி அவர் ஆற்றிய உரை முகாமில் பங்கேற்றவர்களின் படிக்கும் ஆர்வத்தைத் துhண்டும் விதமாக இருந்தது.போரின் கொடுமைகள் பற்றி தமிழக மக்கள் அதிகம் அறிந்திராதவர்கள். எண்ணற்ற ஜரோப்பிய எழுத்தாளர்கள் போரின் கொடுமைகள் பற்றி கதைகளையும், கவிதைகளையும் புனைந் தள்ளனர். போர்க் கொடுமைகளுக்கு ஆளான ஒரு யூதக் குழந்தை தன் அனுபவங்களைப் பதிவு செய்துள்ள “தி டைரி ஆப் ஆன் பிராங்க்” என்ற புத்தகத்தை உணர்ச்சிப் பூர்வமாக விளக்கினார். பத்தொன்பதாம் நுhற்றாண்டு ரஷ்ய நாவல்கள் தொடங்கி இன்றைய தமிழ் நாவலான எஸ்.ராமகிருஷ்ணனின் “துயில்” வரை பல அரிய புத்தகங்களையும் அறிமுகப்படுத்தி பேசினார். வாசிப்பு முகாமின் முதல் அமர்வில் சிங்கிஸ் ஐத்மத்தாவ் எழுதிய “முதல் ஆசிரியன்” என்ற குறு நாவல் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. ஆசிரியர்- மாணவர் உறவின் உன்னதத்தை உணர்ச்சிப் பூர்வமாக ச் சித்தரிக்கும் இந்நாவலின் வாசிப்பு அனுபவத்தை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். தன் மாணவி அல்தினாய்க்கு இன்னல் வரும் போது தன்னுயிரையும் பொருட்படுத்தாது அவளைக் காப்பாற்றும் ஆசிரியர் துய்nஷ்ன் என்றென்றும் நல்லாசிரியருக்கு இலக்கணமாகத் திகழ்வார்.படிப்பின் அருமை தெரியாத கிராமப் புற மக்களை அன்பினால் வென்று, கிராமத்தில் பாழடைந்து கிடக்கும் குதிரைக் கொட்டடியை பள்ளிக்கூடமாக மாற்றி வெற்றி பெறும் துய்ஷேன் போன்ற நல்ல ஆசிரியனாக மாற வேண்டும் என்ற உந்துதல் இந்நாவலைப் படிக்கும் இன்றைய ஆசிரியர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அனைவரும் கருதினர்.

அன்று மாலை கெத்தேசால் கிராம மக்களிடம் நேரில் உரையாடி அவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வின் அருமைகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். கெத்தேசால் கிராமத்தில் அமைந்திருந்த உணவு-உறைவிட நடுநிலைப் பள்ளி தான் அப்பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கும் கல்வி கொடுக்கும் ஒரே மையமாக இருக்கிறது. இப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக உயர்த்தி னால் தங்களுக்கு பெரிதும் உதவிடும் என்றனர். இந்நிலையிலும் கிராமத்தைச் சேர்ந்த இருவர் பட்டப் படிப்பை முடித்திருந்தது வியப்பைத் தந்தது. கெத்கேசால் பள்ளியில் பணி யாற்றும் ஏழு ஆசிரியர்களும் நாள்தோறும் சத்தியமங்கலத்தி லிருந்து வந்து தங்கள் பணியை செவ்வனே ஆற்றுகிறார்கள் என்பதறிந்து மனம் மகிழ்ந்தோம். பொதுவாக ஆசிரியர்கள் மலை வாழ் மக்கள் வாழும் பகுதிகளை புறக்கணிக்கிறார் கள் என்ற வாதம் இங்கு பொய்யாகியுள்ளது.

இரண்டாம் நாள் காலை காட்டுக்குள் நடைப் பயணம் சென்றது மறக்க முடியாத இனிய அனுபவ மாக இருந்தது. இயற்கை ஆர்வலரும் ஓய்வு பெற்ற கல்லுhரி முதல்வருமான பேரா.இளங்கோவன் அவர்களும் ஓய்வு பெற்ற வன அதிகாரி திரு.ராம சேகர் அவர்களும் நல்ல வழி காட்டிகளாக இருந்து நடத்திச் சென்றனர். வழி நெடுகக் காணும் பறவைகளையெல்லாம் சுட்டுத் தள்ளினார் ராமசேகர் தன் கேமிராவினால்.

இரண்டாம் நாள் முதல் அமர்வில் “ஏன் டீச்சர் எங்களைப் பெயிலாக்கினீங்க?” என்ற புத்தகம் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பங்கேற்ற இளம் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் தங்களின் அனுபவங்களை பதிவு செய்தனர். பணக்கார மற்றும் ஏழை குழந்தை களுக்கு கொடுக்கப்படும் இரு வகையான கல்வி முறை நிலவுவது மிக மோசமான பாகுபாடு என்று அனைவரும் கூறினர். தேர்வு முறை, மதிப்பெண் முறை, மாணவர்களைத் தரம் பிரிக்கும் முறை போன்றவற்றினால் மாணவர்கள் மனம் மிகவும் ஆழமாகப் பாதிக்கப்படுவதை கவலையோடு விவாதித்து, இவைகளில் எல்லாம் தேவையான மாற்றங்களை உடனே ஏற்படுத்திட வேண்டும் என்று உணர்ந்தனர். இரண்டாம் நாள் இரண்டாம் அமர்வில் வன விலங்கு ஆர்வலர் முகம்மது அலி அவர்கள் வன விலங்குகள் பற்றிய பல அரிய உன்மைகளை விளக்கினார். மனிதர்கள் அறிந்தும் அறியாமலும் செய்யும் காரியங்களினால் வன விலங்குகளுக்கு ஏற்படும் அழிவினை பட்டிய லிட்டுக் காட்டினார். இயற்கையை நேசிக்கவும், பாதுகாக்கவும் நாம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். இரண்டாம் நாள் மூன்றாம் அமர்வில் திருவள்ளுர் மாவட்டத்தில் “குழந்தைகளைக் கொண்டாடுவோம்” என்ற அமைப்பின் கீழ் ஆசிரியர்களைத் திரட்டி மாற்றுக் கல்விக்கான முயற்சியில் வெற்றி நடைபோட்டு வரும் ஆசிரியை சுடர்ஒளி அவர்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்தி அனைவரையும் வியப்படையச் செய்தார்.இப் புத்தகங்களைப் படித்து பயன் பெற வேண்டும் என்ற ஆர்வத்தையும் துhண்டினார். போதிய நேரம் இல்லாததால் அவர் கொண்டுவந்திருந்த பல புத்தகங்களை அறிமுகப் படுத்த முடியவில்லை. குழந்தைகளுக்கான இலக்கியங்களை கண்டறிந்து குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துவது ஆசிரியர்களின் மிக முக்கிய மான கடமை என்பதை அனைவருக்கும் உணர்த் தினார்.

அடுத்து பேரா.மணி எழுதிய “பள்ளிக்கூடத் தேர்தல்” புத்தகம் குறித்த விமர்சனம் நடந்தது. மாணவர்களிடையே அவர் நடத்திய சோதனை முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. நல் லாசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் தகுதி மாணவர் களுக்கே உண்டு என்று அனைவரும் ஒத்துக் கொண்டனர். மாணவர்கள் தயக்கமின்றி ஆசிரியர் களின் கற்பிக்கும் திறனையும் அரிய பண்புகளையும் எடை போடுகிறார்கள் என்பதை பேரா.மணி அவர் கள் தன்னுடைய முயற்சியால் நிலை நாட்டியுள்ளார்.

இரண்டாம் நாள் நடந்த கடைசி அமர்வில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த திரு.ஷாஜகான் குழந்தைகளுக்கான பத்திரிகைகள் பற்றி கருத்துரையாற்றினார். முதலாளித்துவ சமுதாயச் சிந்தனைகளைப் பிரதிநித்துவப் படுத்தும் “சுட்டி விகடன்”, இன்னும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளிலிருந்து வெளிவராத “அம்புலிமாமா”, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தால் வெளியிடப்படும் துளிர் ஆகிய சிறுவர் பத்திரிகைகள் பற்றிய விமர்சனத்தை முன்வைத் தார். ஒவ்வொன்றின் பலத்தையும் பல வீனத்தை யும் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டினார். அதிலும் குறிப்பாக “துளிர்” பத்திரிகை குழந்தை களின் எந்த வயதினரைச் சென்ற அடைய வேண்டும் என்பதில் இன்னும் தடுமாற்றத்தில் இருக்கிறது என்றார். துளிர் பற்றிய விமர்சனத்தில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துளிர் இதழை செழுமைப்படுத்திட வேண்டும் என்ற ஆர்வம் அனைவரிடமும் இருப்பது தெரிந்தது.

மூன்றாம் நாள் முதல் அமர்வில் “வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்” பற்றிய வாசிப்பு அனுபவம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. கேரளா அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவதாஸ் எழுதிய இப்புத்தகம் இயற்கையின் இயல்புகளை குழந்தைகளுக்கு எளிய முறையில் விளக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. அறிவியல் இயற்கையை வெல்லுவதற்காக அல்ல இயற்கை யைப் புரிந்து கொள்வதற்காகவே என்பதைக் குழந்தைகளுக்கு வலியுறுத்திட வேண்டும் என் கிறார் பேரா.சிவாஸ். தீராத வாசிப்புக்கு உரிய புத்தகம் இயற்கையே என்பதே ஆசிரியரின் வாதம். இயற்கையை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டி யதன் அவசியத்தை சுவையான கதை மூலம் விளக்கினார். விலங்குகள் பற்றி நிலவி வரும் தவறான கருத்துக்களை நீக்கி சரியான புரிதலை உண்டாக் குவது ஆசிரியர்களின் கடமையாகும் என்கிறார் சிவதாஸ்.

பிரபல எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளருமான ச.தமிழ்ச்செல்வன் மாற்றுக் கல்வி குறித்த சிந்தனையின் முக்கியத்துவத்தை வலி யுறுத்திப் பேசினார். பெண்களையும் குழந்தை களையும் மதிக்கும் சமுதாயமே பண்பட்ட சமுதாய மாகும் என்றார். வகுப்பறை வன்முறை என்பது அடிப்பது மட்டுமல்ல. குழந்தைகளின் மனதை ஏதேனும் ஒரு வகையில் ஆசிரியர்கள் புண்படுத்தி விடுகிறார்கள் என்று வேதனைப்பட்டார். வகுப்பறைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது கல்விச் சூழலுக்கு நல்ல தல்ல என்றார். வகுப்பறைகள் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாகக் கூடி கற்கும் இடம் என்பதை நாம் உணர வேண்டும்.

முகாமின் நிறைவுரையில் மூட்டாவின் முன்னாள் தலைவர் பேரா.கே.ராஜு இத்தகு முகாம்கள் மாவட்டந் தோறும் நடந்திட வேண்டும் என்றார். ஆசிரியர் இயக்கங்கள் அனைத்தும் மாற்றுக் கல்வி குறித்த சிந்தனைகளை வளர்த்திட வேண்டும் என்றார். எழுபதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இம்முகாமில் கண் பார்வையற்ற ஆசிரியர்கள் நான்கு பேர் பங்கேற்றது கல்வி குறித்த சிந்தனையில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் புலப்படுகிறது. நிகழ்வுகளுக்கே இடையே கண் பார்வையற்ற ஆசிரியர் தனக்கோடி தன் இனிய குரலில் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடி பேராசிரி யை மோகனா வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார்.

மூன்று நாட்களும் நல்ல உணவு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக மலைவாழ் மக்களின் உணவான கேழ்வரகுக் கழியை அனைவரும் விரும்பிச் சாப்பிட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி சேலம் மாவட்ட அறிவியல் இயக்கப் பொறுப் பாளர் பாலசரவணன் அறிவிப்புகள் செய்தார். விமர்சனம் செய்யாமல் விடுபட்ட டோட்டோ -சான், மற்றும் ஓய்ந்திருக்கலாகாது... ஆகிய புத்தகங் களை அடுத்த முகாமில் எடுத்துக் கொள்ளலாம் என்றார். பேரா.மணியின் நன்றியுரை யுடன் முகாம் முடிவுற்றது.

Pin It