ஒன்றுபட்ட மலாயாவில் 40 கல்வித்துறையில் மலர்ச்சியை ஏற்படுத்த மலாயாப் பல்கலைக்கழகத்தில் அங்கு வாழும் இனமக்களின் மொழியின் அடிப்படையில் சீன மொழிக்கும் மலாய் மொழிக்கும் இடம் அளிக்கப்பட்டது. மேலும் மூன்றாவது பெரிய இன மக்களான இந்தியத் தமிழர்களுக்கும் இடமளிக்கும் வகையில் இந்தியர்களுக்கான பகுதி ஏற்படுத்த வேண்டும் என்று கார் சாண்டர்ஸ் குழு கருதியது. அப்போது மலாயாவில் 6 இலக்கம் தமிழர்கள் இருந்தார்கள். எனவே இந்தியப் பகுதியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதோடு பழமையும் வளமையும் வாய்ந்த மொழி. மேலும் மொழியோடு தமிழர்களின் பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் ஏராளமான இலக்கியங்களையும் கொண்ட மொழி என்று அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்:

1. மலாயாவில் வாழும் தமிழர்களில் 70 விழுக்காட்டினர் மலாயாவில் பிறந்தவர்கள். 1938 ஆம் ஆண்டிற்கு பிறகு குடியேற்றம் இங்கு இல்லை.

2. பலருடைய வீட்டுமொழி தமிழாகவே இருந்தது. தோட்டங்களில் உள்ள பாடசாலைகளில் 7 ஆம் வகுப்பு வரை தமிழ்க் கல்வி வழங்கப்பட்டு வந்தது. இருந்தும் 3 ஆம் வகுப்புக்கு மேல் யாரும் பாடசாலைகளில் கல்வி பயில வில்லை.

3. உயர் வகுப்பு நிலைகளில் தமிழ் படிக்க வசதியில்லை. எனவே அவர்கள் உயர் படிப்புக்காக இலங்கைக்கோ இந்தியாவுக்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பகுதி ஏற்படுத்தப்பட்டால் இந்த செலவுமிக்க வெளியேற்றம் தவிர்க்கப்படும்.

4. கீழ்நிலைப் படிப்புகளுக்கு மலாயா சிறந்த மொழியாக இருக்கும் நிலையில் இந்திய மொழிகளில் ஒன்றாவது சேர்க்கப்பட வேண்டும். அதுவும் பெருமளவில் தேவையாயிருக்கக் கூடிய மொழி தமிழ்.

இத்தகைக் கருத்துக்களை இக் குழு தெரிவித்த பின்னர், இதனடிப்படையில் ஆலோசனை வழங்க இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க திரு. நீலகண்ட சாஸ்திரியார் அழைக்கப்பட்டிருந்தார். இதனடிப்படையில் மலாயா வந்திருந்த நீலகண்ட சாஸ்திரியாருக்கு மலாக்கா நாட்டுக் கோட்டை செட்டியாரகள் சங்கம் அவருக்கு வரவேற்பளித்திருந்தது.

அவ்வரவேற்பில்,

இந்நாட்டில் வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினர் தமிழர்கள். இந்நாட்டில் எழிலும் வளமும் மிக்கதொன்றாகச் செய்த பெரும் தொண்டு அவர்களையே சாரும். இந்நாட்டில் மலாயா என்ற பேரே தமிழர்களின் பண்பாடும் இந்நாட்டு மக்களின் பண்பாட்டோடு இரண்டறக் கலந்து இன்று சிறப்புற விளங்குகின்றது என்பதும் சரித்திரம் பகரும் உண்மைகளாகும். ஆதலின் பல்கலைக் கழகத்தில் தொடங்க இருக்கும் இந்தியப் பகுதி இங்கு வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினராக இருக்கும் தமிழர்களின் எதிர்கால நலனுக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணைபுரியும் வகையில் அமைவதே சாலச் சிறப்புடைத்து.

இந்தியப் பகுதியில் தமிழ், வடமொழி,ஹிந்தி என்ற மூன்றில் இந்நாட்டின் நலனுக்குத் தொண்டாற்றியவர்களும் இன்று வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினரும் தமிழர்களேயாதலால் தமிழ்ப் பகுதியையே தொடங்குதல் வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். தொடர்ந்து நிலைத்து நின்று பெரும் பயன்தரும் வகையில் தங்கள் அறிவுரை அமைதல் வேண்டுமெனில் இந்தியப் பகுதி தமிழ்ப் பகுதியாக இருத்தலே ஏற்புடைத்து.

இன்று நாட்டில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் கருத்தும் விருப்பமும் வேண்டுகோளுமதுவே என்பதைத் தாங்கள் இவண் வந்ததிலிருந்து அறிந்து கொண்டிருக்கலாம்.

தங்கள் அறியவுரையால் இந்தியப் பகுதி தமிழ்ப் பகுதியாகத் திகழுமாயின் இங்கு வாழும் தமிழர்கள் தங்கள் மொழி வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் உதவி புரியும். தங்கள் செயலுக்கு என்றும் நன்றி செலுத்துவது உறுதி. ஆதலின் இலக்கியமும் பண்பாடும் மிக்க தமிழ்ப் பகுதி இந்நாட்டுப பல்கலைக் கழகத்தில் இடம்பெறுமாறு தங்கள் அறிவுரை அமைதல் வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்

என்று கூறியிருந்தனர். இருந்த போதிலும் ஏற்புரை நிகழ்த்திய நீலகண்ட சாஸ்திரி அவர்கள்,

மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு தனி ஸ்தானம் ஒதுக்க இயலா தென்றும் தமிழுக்கென்று கேட்டால் ஹிந்தி வேணுமென்ற கிளர்ச்சி அதிகப்படுமென்றும் சமஸ்கிருதம், தமிழ் வகுப்புகள் ஏற்படுத்தி அதில் ஒருவர் பேராசிரியராகவம் மற்றவர் விரிவுரையாளராகவும் நியமிக்கப் படலாமென்றும் அதன் மூலம்தான் தமிழுக்கு ஆதரவிருக்கு மென்றும் மேல் கண்ட திட்டத்திற்கு எதிர்ப்பு ஏற்படுமானால் பல்கலைக் கழகத்தில் இந்திய மொழிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுமென்றும் கூறினார்.

இவருடைய இப்பேச்சினால் ஏமாற்றமடைந்த மலாயாத் தமிழர்கள் அவருக்கு எதிராக கொதித்து எழுந்தனர். இவரின் இப்பேச்சைக் கண்டித்து தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள், சாஸ்திரியாரின் மலாக்காப்பேச்சு என்று தலைப்பிட்டு, தமிழ்முரசு 23.04.1953 நாளிதழில்,

‘பேராசிரியர் சாஸ்திரியார் மேற்கண்டவாறு பேசியிருப்பாரேயானால் அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு தனி ஸ்தானம் ஒதுக்க இயலாதென சாஸ்திரியார் கூறுவது தவறு என்பதை கார் ஸாண்டர்ஸ் அறிக்கையே பளிச்சென்று எடுத்துக் காட்டும். அந்த அறிக்கையில் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி தமிழ்மொழி விரிவுரையாளர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆதலால் மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு தனி ஸ்தானம் ஒதுக்க இயலாதென சாஸ்திரியார் சொல்வது சுத்தப் பொய் என்பது தெளிவு’

என்று கடுமையாக எழுதியிருந்தார். மேலும் 24.4.1953 ஆம் நாளைய தலையங்கத்தில், ‘சாஸ்திரியாரின் மேஸ்திரி வேலை என்ற தலைப்பில்,

தமிழுக்கு மட்டும் மலாயா பல்கலைக் கழகத்தில் இடமா என்று எண்ணியவர்களும், தமிழ், தமிழர் என்ற பெயர் மட்டில் மலாயா பல்கலைக் கழகத்தில் இடந்தேட வேண்டுமென்று கருதிய வர்களும் இப்பிரச்சனையில் தலையிட்டனர். மொழி விசயத்திலும் பல்கலைக் கழகப் படிப்பு வி­யத்திலும் சச்சரவு வேண்டாம் அதைப் பார்த்து இதரர்கள் நகைக்கவும் இடமளிக்க வேண்டாம் என்று எண்ணிய தமிழ்ப் பகுதி போர்டார் தமிழ்ப் பகுதி என்ற பெயருக்குப் பதிலாய் இந்திய பகுதி என்று பெயரமைக்க ஒப்புக் கொண்டனர். அதோடு அந்த இந்தியப் பகுதியின் தலைவர் தமிழ்ப் பேராசிரியராக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்தனர். இவைகளை நிர்ணயம் செய்த பின்னரே திரு. நீலகண்ட சாஸ்திரியார் அவர்களை வரவழைத்து இந்தியப் பகுதிக்கானப் பாடத் திட்டம் வகுத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டது. திரு.சாஸ்திரியாரை வரவழைப்பது பணச் செலவான காரியம் என்று மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அபிப்ராயப் பட்டனர். அந்த அபிப்பிராயத்தின் காரணமாய் இந்தியப் பகுதி அமைப்பும் தமிழ் படிப்பிற்கான ஏற்பாடும் நீண்ட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு விடுமென்று எண்ணிய இந்தியப் பகுதி போர்டார் திரு. சாஸ்திரியாரை விரைவில் வரவழைத்து இந்திய பகுதியின் அமைப்பிற்கு விரைவாக வழிவகுக்க விரும்பினர். இவ்வாறான முறையில் மலாயாவிற்கு விஜயமளித்திருக்கும் திரு. சாஸ்திரியார் தேவையில்லாப் பேச்சுகளைப் பேசி மலாயா இந்தியர்களிடையே வம்பை வளர்த்து விடுவது தகாத காரியம் என்று கூறுவோம்’.

என்றும் சாடியிருந்தார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் சீன, மலாய்ப் பகுதிகள் இவ்வாண்டு ஆரம்பிக்கப் படும். ஆனால் இந்தியப் பகுதி 1954 அக்டோபரில்தான் ஆரம்பிக்க இயலும் என்று துணை வேந்தர் சர் சிட்னி கெயின் பத்திரிகையாளரிடையே அறிவித்தார். தேவையான சிப்பந்திகள், பணம், மற்ற ஏற்பாடுகள் ஆகியவை பூர்த்தியடைந்து விட்டால் 1954 அக்டோபரில் இந்திய பகுதி இயங்கத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பது இன்னும் ஒருவருடத்திற்கு தள்ளிப்போடப் படுகிறது என்ற அறிவிப்பு இந்தியர்களிடையே ஒரு சோர்வையும் அதற்கான காரணத்தையும் அறிய ஆவல் ஏற்பட்டது. நீலகண்ட சாஸ்திரியார் அளித்த அறிக்கையின் படி இந்தியப் பகுதி எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு யாராலும் வெளிப்படையாகச் சொல்லப்பட வில்லை. சாஸ்திரியாரின் மலாக்கா பேச்சும் இன்னும் பிற இடங்களில் பேசியப் பேச்சும் பல அய்யங்களை இந்தியத் தமிழர்களிடையே தோற்றுவித்துவிட்டன.

எனவே இது குறித்தும் தமிழ்முரசு சார்பில் துணைவேந்தர் அவர்களிடம், ,தமிழுக்குச் தனி ஸ்தானம் கிடையாதென்றும், சமஸ்கிருதமும் தமிழும் சேர்ந்த பகுதியை ஏற்றாலன்றி இந்தியப் பகுதியே ஏற்படாதென்றும் மலாக்காவில் சாஸ்திரியார் சுட்டிக் காட்டப்பட்டபோது, மலாக்காவில் திரு.சாஸ்திரியார் பேசியது பற்றிய தப்பபிப்ராயமாக இருக்க வேண்டுமென்று சர் சிட்னி குறிப்பிட்டார். அச் செய்தியில் குறிப்பிட்டிருப்பது போன்ற எண்ணம் பல்கலைக் கழகத்திற்கோ பேராசிரியர் சாஸ்திரியாருக்கோ கிடையாது என்றார் துணை வேந்தர்.

கார் ஸாண்டர்ஸ் சிபாரிசுக்கு மாறுபட்டதாக பேராசிரியரியர் சாஸ்திரியின் சிபாரிசு இருக்குமானால் பல்கலைக் கழகமும் கல்வி போர்டும் அதனை ஏற்குமா என்று தமிழ்முரசு நிருபர் கேட்டதற்கு அத்தகைய மாறுபாடு எழாது என்றும் அப்படி எழுந்தால் கல்வி போர்டு அது பறறி முடிவு செய்யுமென்றும் சர் சிட்னி பதிலளித்தார். (தமிழ் முரசு செய்தி)

இது குறித்து தமிழவேள் அவர்கள் 26.4.1953 ஆம் நாளைய தமிழ்முரசு இதழில்,

‘திரு. சாஸ்திரியாரின் பேச்சைக் கேட்டவர்களில் பலரும் அவருடன் சம்பா­னை நடத்தியவருள் பலரும் அவர் ஒரு சமஸ்கிருதப் பிரசாரகர் என்ற அபிப்பிராயம் கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தப்பெண்ணங்கள் தோன்றுவது இயல்பேயாகும். இந்த தப்பெண்ணங்களைப் போக்க யாராவது ஏதாவது செய்வார்களா என்று எதிர்பார்க்கிறோம். அல்லது பேராசிரியர் சாஸ்திரியார் அவர்கள் ஒரு அறிக்கையின் மூலம் தம்மைப் பற்றியும், மலாயாவிற்கு தாம் வந்த காரியத்தைப் பற்றியும் யாரும் தப்பெண்ணங் கொள்ள வேண்டாம் என்பதற்கான நியாயங்களை கூறுவாரா என்றும் எதிர்பார்க்கிறோம். மலாயா இந்தியர்களைப் பற்றி திரு.சாஸ்திரியார் தப்பெண்ணத்தோடு இந்தியா திரும்புவதும் திரு. சாஸ்திரியாரைப் பற்றி மலாயா இந்தியர்கள் தப்பெண்ணங் கொண்டிருப்பதும் சரியல்ல என்பதே நமது எண்ணம்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சாஸ்திரியார் அவர்களும் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். அவ்வேண்டுகோளில்,

‘மலாயா பல்கலைக் கழகத்தில் உத்தேசிக்கப்படும் இந்திய இலாகாவில் தமிழ் மொழிக்குரிய இடம் பற்றிய என் கருத்து சம்பந்தமாக பத்திரிகைச் செய்திகளையும் அபிப்ராயங்களையும் கண்டேன். மிகப் பெரும் பாலான தமிழர்களையுடைய இந்திய சமூகத்திற்குப் படிப்பு மொழியாக தமிழுக்குள்ள முக்கியத்துவத்தை என்னுடைய சிபார்சுகள் எந்த வகையிலும் குறைக்கவில்லை என்பதை மலாயா இந்தியர்களுக்கு உங்களுடைய பத்திரிகை மூலம் உறுதி கூற விரும்புகிற¼ன். அபிப்பிராய பேதத்திற்கிடமே இல்லை என்பதை என்னுடைய சிபாரிசு வெளிவரும் பொழுது அவர்கள் உணர்வார்கள்’

என்று கூறியிருப்பதாக தமிழ்முரசு 30.4.1953 இதழ் தலையங்கத்தில் கூறியிருந்தது.

சாஸ்திரியார் இவ்வாறு அறிக்கை வெளியிடுதற்குக் காரணம் சிங்கப்பூரில் அவருக்கு எதிராக நடந்த கண்டனக் கூட்டம் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புமே காரணமாகும். இச்செய்தியை தமிழ்முரசு நாளிதழ் (27.04.1953) அன்று கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றது:

நீலகண்ட சாஸ்திரியார் போக்கிற்கு சிங்கப்பூர் தமிழர்கள் கண்டனம்!

பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு முதலிடம் தந்தாக வேண்டுமென வற்புறுத்தல்

தமிழர்கள் ஒன்றுபட்டால் எல்லோரும் மதிப்பார்கள்; இல்லையேல்....

பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரை காணவும் அவருடைய கருத்தையறியவும் ஆவலோடு நேற்று இராமகிருஷ்ணா மிசன் ஹாலில் கூடிய ஏராளமான தமிழ் மக்கள் அவர் கடைசி நேரத்தில் பேச மறுத்து விட்டதைக்கேட்டு ஏமாற்றமும் கோபமும் அடைந்தனர்.

தமிழர் சங்கத்தின் சார்பில் கூட்டப்பட்டிருந்த அக் கூட்டம் சாஸ்திரியார் வர மறுத்ததை ஆலோசிக்கும் தமிழர்களின் பொதுக் கூட்டமாக மாற்றப்பட்டது. திரு. சாஸ்திரியார் மீது ஒரு கண்டனத் தீர்மானமும் ஏகமனதாக கூட்டத்தில் நிறைவேறியது.

நிறைவேறிய தீர்மானமாவது:

சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க 26.4.53 இல் தமிழர் பொதுக் கூட்டமொன்றில் பேச ஒப்புக்கொண்ட பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் அன்று பகல் வரை அவரின் ஏற்பாடுகள் எல்லாவற்றையும் நிறை வேற்றிக் கொண்டிருந்து விட்டு குறிப்பிட்ட தமிழர் கூட்டத்திற்கு மட்டும் வர முடியாதென சீட்டனுப்பி சிங்கப்பூர் தமிழ் மக்களை அவமானப்படுத்தியதால் அவரின் இச் செயலை சிங்கப்பூர் தமிழர்களின் இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நோரிஸ் ரோடு இராமகிருஷ்ண மிசன் ஹாலில் தமிழர் சங்க ஆதரவில் அதன் தலைவர் திரு.ஜகனாதன் தலைமையில் பேராசிரியர் திரு. நீலகண்ட சாஸ்திரியார் ‘தமிழர் சரித்திரமும் பண்பும்’ என்ற தலைப்பில் பேசுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஏராளமான மக்கள் குறித்த நேரத்தில் ராமகிருஷ்ணா ஹாலிலும் வெளியிலும் இடம் நிறைந்து விட்டதால் கட்டிடத்தின் கீழே சாலையிலும் குழுமி யிருந்தனர்.

வராததற்குக் காரணம்:

ஆனால் சங்கத்தின் காரியதரிசி திரு. எஸ்.வீராசாமி, பேராசிரியர் சாஸ்திரியார் கால்வலியின் காரணமாக கூட்டத்திற்கு வர முடியாதென கடிதம் எழுதியிருப்பதாக ஒலி பெருக்கியில் அறிவித்தார். திரு. சாஸ்திரியார் கூட்டத்திற்கு வராதது கால் வலி காரணம் என்பது ஒப்புக் கொள்ளக் கூடியதாயில்லை என்று சொல்லி பேராசிரியரே தான் முதல் நாள் மாலை காந்தி ஞாபகார்த்த கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் அன்று காலை கூட ரேடியோ மலாயாவுக்குச் சென்று ஒரு பேச்சை பதிவு செய்து விட்டு வந்ததாகவும் மறுநாள் மலாயா பல்கலைக் கழகத்தில் நிச்சயமாகப் பேச போவதாகவும் தன்னிடம் சொன்னதாக திரு. வீராசாமி தெரிவித்தார். தமது உடல்நிலையின் காரணமாக பேராசிரியர் விருந்துகளில் கலந்து கொள்வதையோ மற்ற தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதையோ நிறுத்த வில்லை என அவர் குறிப்பிட்டார்.

திரு. நீலகண்ட சாஸ்திரியார் தமிழர் சங்க காரியதரிசிக்கு எழுதியிருந்த கடிதத்தில் உங்கள் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு நான் ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தோனே´யாவில் என் சுற்றுப் பிரயாணத்தின் போது வலக்காலை மிகவும் வருத்திக் கொண்டு விட்டேன். மேலும் நோவச் செய்யும் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டாமென டாக்டர் ஆலோசனை கூறியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கூட்டத்திற்கு வந்திருப்பவர்களில் சிலரே தமிழர் சங்கத்தில் அங்கத்தினர்களாதலால், ஏராளமான தமிழர் நிறைந்திருக்கும் இக்கூட்டத்தை தமிழ் மக்களின் சார்பிலே நடத்தலாம் என்று தமிழர் சங்கத் தலைவர் திரு. ஜெகனாதன் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் சார்பில் திரு.சாரங்கபாணியைக் கூட்டத்திற்கு தலைமை தாங்குமாறு கேட்டுக் கொள்கையில் சாஸ்திரியார் இக்கூட்டத்திற்கு வராததன் மூலம் தமிழ் மக்களை அவமானப்படுத்தி விட்டார் என்று குறிப்பிட்டார்.

தலைமை வகித்துப் பேசுகையில் திரு.சாரங்கபாணி சொன்னதாவது:‡ சிங்கப்பூர் தமிழ் மக்களிடம் அறிமுகம் செய்து கொள்ளவும் அபிப்ராயத்தைப் பரிமாறிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒரே கூட்டத்தில் சாஸ்திரியார் கலந்து கொண்டிருந்தால் கெளரவமாய் இருந்திருக்கும். படிப்பாளியான அவரின் பேச்சைக் கேட்டு மக்கள் இன்புற்றிருப்பர். அவர் உடல் நலத்தைக் காரணம் காட்டி வர இயலாது என்று கடைசி நேரத்தில் கூறியதை எவரும் ஒப்புக் கொள்ள முடியாது. தமிழ் மக்களைச் சநதிக்க சாஸ்திரியாருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவர் இரண்டு மூன்று நாட்களில் ஊருக்கு போவதற்கு முன்பு சம்மதம் தெரிவித்தால் அவர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்ய தமிழ் மக்கள் தயாராயிருக்கின்றனர்.

தமிழுக்கு முதலிடம் தருக:

இப்பொதுக் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டிய வி­யம் என்னவென்பது பற்றி தலைவர் கூட்டத்தினரைக் கேட்டார். திருவாளர்கள் எஸ். வீராசாமி, சின்னப்பனார், நாகராசன், து. லெட்சுமணன், சோமசுந்தரம், சி.த. ஆதிமூலம், எம்.கே. பக்ருதீன், சு.கிருஷ்ணன், சு.தெ. மூர்த்தி, ம.ப.ரத்தினசாமி, நடராசன் ஆகியோர் பேசினர். சனிக்கிழமை மாலையும் வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட பேராசிரியர், தமிழர் கூட்டத்திற்கு வராதது பற்றி வருத்தம் தெரிவித்தனர். மலாக்காவிலும் கோலாலம்பூரிலும் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழுக்குத் தனியிடம் தர இயலாதென அவர் பேசிய செய்திகளில் பேச்சாளர்கள் சஞ்சலம் தெரிவித்தனர். தமிழுக்கு முதலிடம் கொடுத்தாக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஒரு தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களின் கண்டனத்தை பேராசிரியர் சாஸ்திரியாருக்குத் தெரிவிக்க வேண்டுமென்று அவர்கள் கோரியதற்கிணங்க தீர்மானத்தை தலைவர் பிரரேபிக்க ஏகமனதாக கூட்டத்தினர் நிறைவேற்றினர்.

சந்தேகம் வளர்ந்த விதம்:

தலைமை வகித்த திரு.சாரங்கபாணி தமது முடிவுரையில் சொன்னதாவது:

‘சாஸ்திரியார் பற்றிய சந்தேகம் வளர்ந்திருப்பதற்கு அவர் தமிழ் மக்களை சந்திக்காமை ஒரு காரணம். அவர் பெடரேசனில் குறிப்பாக மலாக்காவிலும், கோலாலம்பூரிலும் தெரிவித்த கருத்துகளும் சந்தேகத்தை அதிகப்படுத்தின. கோலாலம்பூர் ஆங்கிலப் பத்திரிகையான மலாய் மெயிலுக்கு பேராசிரியர் அளித்த பேட்டியில், இந்தியர்கள் தங்களுக்கிடையே உள்ள தகராறைத் தீர்த்து வைக்குமாறு என்னைக் கேட்டுக் கொள்வதிலேயே என் நேரத்தை வீணாக்கி விட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். பிறகு இநதிய அராசாங்க தகவல் அதிகாரி ஒரு மறுப்பு அனுப்பினார். அதில் இந்தியர்களிடையே அடிப்படையான அபிப்ராய பேதம் இருப்பதாக சொல்லவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இந்த காரணங்களினால் இங்கு நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை பேராசிரியர் சாஸ்திரியாருக்கும் இந்திய அரசாங்க பிரதிநிதிக்கும் அனுப்ப வேண்டும்’ என்று திரு. சாரங்கபாணி பிரரேபித்ததை கூட்டம் ஏகமனதாக ஆமோதித்தது.

கவலை வேண்டாம்:

தொடர்ந்து தலைவர் பேசுகையில் சொன்னதாவது:

‘தமிழுக்கு மலாயா பல்கலைக் கழகத்தில் இடம் கிடைக்காது போய்விடுமோ என்ற அச்சத்தை நீக்குமாறு உங்களைக் கோருகிறேன். பல்கலைக் கழக கல்வி போர்டு அங்கத்தினன் என்ற முறையில் உங்களுக்கு இந்த உறுதியை நான் சொல்ல முடியும். இந்திய பகுதியில் தமிழுக்கு முதலிடம் இல்லாது போகவே போகாது. அப்படி முதலிடம் மறுக்கப்படுமானால், தமிழுக்கு முதன்மையிடம் கிடைப்பதற்காக தமிழ் மக்கள் சார்பில் எல்லா முயற்சியும் செய்வதாக உறுதி கூறுகிறேன். இந்த நாட்டுக்குப் பயன்படக் கூடியது இந்திய மொழிகளிலேயே தமிழ் ஒன்றுதான். அரசாங்கமும் இதனை ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தைத் தவிர மக்கள் மொழியாக அரசாங்கம் அங்கீகரித்து ஆதரவு காட்டும் மொழிகள் தமிழ், மலாய், சீனம் என்பதை யாரும் மறுக்க முடியாது’.

‘மலாயா பல்லைக் கழகத்திற்கு பொதுமக்களிடம் நிதி கேட்கப்பட்ட பொழுது முதன் முதலாக பணம் கொடுத்தது ஒரு தமிழ் இளைஞர். தமிழுக்கு முதலிடம் தருவதாக பல்கலைக் கழகம் தீர்மானம் செய்து போதிய பணமின்மையால் சில ஆண்டு களுக்கு இந்தியப் பகுதி ஆரம்பிப்பதை ஒத்தி வைக்கிறோம் என்று சொன்னால் நாம் என்ன செய்வது?’

அவன் கூட மதிக்க மாட்டான்:

‘சாஸ்திரியார் சொன்னது தப்பு, சமஸ்கிருதம் வேண்டாம் என்று கூச்சல் போட நமக்குத் தெரிந்தால் மட்டும் போதாது’.

‘நாம் செய்ய வேண்டுவது என்ன என்ற பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். சாஸ்திரியார்களோ மற்ற கோஷ்டியார்களோ அலட்சியம் செய்கிற நிலையில் நாம் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கலாகாது’

‘தமிழர்களிடம் சக்தியிருக்கிறது. உணர்ச்சியிருக்கிறது. ஒன்றுபட்டு அவற்றை செயல் முறையில் திருப்ப வேண்டும். தமிழர் , தமிழ் மொழி சம்பந்தப் பட்ட எந்தக் காரியத்திலும் உற்சாகம் காட்ட வேண்டும். ஆயிரக் கணக்கில் திரள வேண்டும். அப்படியிருந்தால் யாரும் தமிழரை எளிதாக நினைக்க மாட்டார்கள். ஓராயிரம் இளைஞர்களாவது தமிழ் சேவை செய்ய வருவோம் என்று உறுதி கூற வேண்டும். அப்பொழுதுதான் தமிழனுக்கு எதிர்கால வாழ்வு உண்டு. இல்லையேல் தமிழரை சாஸ்திரி மட்டுமல்ல பேச்சா காடிக்காரன் கூட மதிக்கமாட்டான்’. (தமிழ்முரசு 27.04.1953).

இறுதியில் நீலகண்ட சாஸ்திரியாரின் சமஸ்கிருதத்தை மலாயாப் பல்கலைக் கழகத்தில் புகுத்தும் முயற்சி தோல்வியடைந்தது.

Pin It