முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு கருத்தரங்கில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, “தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறுவது என்பது ஒட்டுமொத்த மக்களின் பெரும்பான்மையைப் பெற்றதாக ஆகாது. மாறாக ஒரு நிலையான அரசை அமைக்க மக்கள் அளித்திருக்கும் ஓர் உரிமை மட்டுமே அது” என்று  பேசியிருக்கிறார்.

இது பாஜக குறித்து மறைமுகமாக அவர் சொன்ன கருத்தாக இருக்கிறது.

தேசியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பெரும்பான்மை பலம் இருப்பதனால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு.

அதன் விளைவு இன்று இந்தியாவே  கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள், வணிகர்கள், மக்கள் என்று அனைத்து மட்டத்தினரும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகக் கிளம்பிவிட்டனர்.

ஜாமியா-மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் காவலர்கள் எவ்வித அனுமதியும் இன்றி நுழைந்து அமைதியாகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்த்தியதால், அதன் தாக்கம் இந்தியா முழுவதும் பரவி விட்டது.

பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையத்தளச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. உலகத்திலேயே அரசியல் காரணங்களுக்காக இணையத்தளச் சேவைகள் முடக்கப்படுவதில் முதன்மையாய் இருக்கும் நாடு இந்தியா என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

அன்றாடப் போக்குவரத்திற்குப் பெரும் பயனாக இருக்கும் மெட்ரோ ரயில்கள் சில மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

கர்நாடகத்தின் வரலாற்றுப் பேராசிரியர்கள் இராமச்சந்திர குஹா, யோகேந்திர யாதவ் கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதனை அத்துமீறிய செயல் என்று கண்டித்துள்ளார் திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள்.

 காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மெஹ்பூபா முஃப்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் உள்ளூர் மக்கள் அடக்குமுறைகளை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையைக் காண்பதற்கு நாட்டு மக்கள் யாரும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வரவேண்டியதில்லை. ஏனென்றால் காஷ்மீரின் நிலையை நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பாஜக அரசு கொண்டுபோய் விட்டது” என்று சொல்லியிருக்கிறார்.

இதைவிடத் தெளிவாக வேறுயாரும்  இன்றைய நாட்டின் நிலையை, இன்றைய மத்திய ஆட்சியின் அத்துமீறலைச் சொல்லிவிடமுடியாது. இந்த நிலை தொடர்ந்து நீடிப்பது நாட்டின் நலத்திற்கு உகந்தது அன்று.

மக்களுக்காகத்தான் சட்டமே ஒழிய, சட்டத்திற்காக மக்கள் இல்லை.

மத்திய பாஜக அரசு உடனடியாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதே இதற்கு  ஒரே தீர்வு.

Pin It