பதினாறாம் நூற்றாண்டளவில் இந்தியா மற்றும் இலங்கைக்குள் நுழைந்த ஐரோப்பிய பாதிரியார்கள் மேற்கொண்ட கல்வித் திட்டங்களின் ஒரு பகுதியாகக் கல்விக் கூடங்களைத் தோற்றுவித்தலும் அச்சுக்கருவியை அறிமுகம் செய்வதுமாக அமைந்தன. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிஸ் சேவியர் போன்ற பல முன்னணி பாதிரியார்கள் பாரிஸ், கோயம்பிரா, சலமான்கா, ரோம் ஆகிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக கல்வியில் உயிர்ப்பு பெற்ற நாடுகளிலிருந்தும் பாதிரியார்கள் வந்தடைந்தனர். ஆகையால் அவர்கள் அக்காலக்கட்டத்தில் நடைமுறையில் இருந்த கல்விமுறைகளையும் நுணுக்கங்களையும் இங்கு அறிமுகப்படுத்தினார்கள். உதாரணமாக, பள்ளிக்கூடங்களை மதம் சார்ந்தும் சார்பற்றும் நிறுவி கற்பித்தல், ஆசிரியர்களைத் தேர்வு செய்து பயிற்சியளித்தல், கிறித்தவ ஆசிரியர்களுக்கும், பயிற்றுநர்களுக்கும் பொருளாதார உதவி வழங்குதல் மற்றும் தமிழை நன்கு பேசவும் எழுதவும் புலமைப் பெற்றிருந்தவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் ஆகியவை ஆகும்.  

அயல்நாட்டின் முன்னோடி கல்வியாளர்களுள் ஒருவரான ஹென்றிக் ஹென்றிக்ஸ் (1520-1600) என்பவர்தான் தமிழ் மொழியை அறிவியல் முறையில் படிக்கும் முறையை முதலில் தோற்றுவித்தவராகவும் தமிழில் ஏராளமாக எழுதியவராகவும் 1560க்கு முன்பாகவே மன்னார் அல்லது புன்னைக்காயலில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று முன்மொழிந்தவராகவும் அறியப்படுகிறார்.1 கிறித்துவ சபையினர், இத்தகைய முன்னோடியின் சிந்தனை களையும் அவர் கல்வி வளர்ச்சிக்குச் சொன்ன வழிமுறைகளையும் எல்லைகளாகக் கொள்ளாமல் புகழ்பெற்ற ஊடகமான அரங்கையும், அச்சையும் கற்பித்தலுக்கு மிக அதிக அளவில் பயன்படுத்தினார்கள்.

பாதிரியார்கள் விவிலியச் செய்திகளைப் பரப்பவும் கல்வியறிவைப் பெருக்கவும் அச்சுக்கருவியை மிகவும் சிரத்தையோடு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய எழுத்து மற்றும் அச்சுக் கலைக்கான அவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுப் பகைமை பேசப்பட்டது. ஏனெனில் அவர்களுடைய நோக்கம் மத போதனை என்ற அளவிலேயே இருந்ததாகக் கருதப்பட்டது. கல்விமுறையிலும் மொழி யியலிலும் மொழிப்படிப்பிலும் அகராதியியலிலும் இலக்கியத்தி லும் மதபோதகர்களின் பங்களிப்புகள் குறித்து இதுவரையில் தகுந்த அளவிலான மதிப்பீட்டினை ஒட்டுமொத்த இந்திய மற்றும் இலங்கையின் கல்வியறிவு தொடர்பான வரலாற்றில் பதிவு பெற்றிருக்கவில்லை.2 ஏனெனில் அவர்களுடைய நோக்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தை பரப்புவதிலும் பாதுகாப்பதிலுமே இருந்தது. ஆயினும் கல்விக்கும் இலக்கியத்திற்குமான அவர்களுடைய பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

அச்சு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது கல்வி மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். 1556இல் கோவாவிலிருந்த ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள் முதல் அச்சுக்கூடத்தை இந்தியாவிற்குள் நிறுவினார்கள். இவ்வச்சுக் கூடத்தில் ஐரோப்பா விலிருந்து கொண்டுவரப்பட்ட இலத்தீன் எழுத்து அச்சுக்கட்டை பயன்படுத்தப்பட்டது.3 ஆனால் இக்கால கட்டத்தில் கோவா அச்சுக்கூடம் தன் அச்சுப்பணியை லத்தீன் மற்றும் போர்த்துக்கீசிய மொழியிலேயே மேற்கொண்டது. இருப்பினும் முதல் தமிழ்ச் சிறுநூல் 1554இல் லிஸ்பனில் பிரசுரிக்கப்பட்டது. இந்தியாவில் அச்சு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே இது நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அச்சிறுநூல் முழுமைக்கும் தமிழ் மொழி யிலான மூலம் ரோமன் எழுத்து வடிவத்தைக் கொண்டு பிரதியாக்கப்பட்டிருக்கிறது.

முதன் முதலில் தமிழ் அச்செழுத்தால் அச்சிடப்பட்ட பிரதியை 1577இல் கோவாவில் கொண்டுவந்தார்கள். ஆனால் அவர்கள் அதில் முழுமையாகத் திருப்தியடையவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முயற்சியாக கொல்லத்தில் 1578இல் தமிழ் அச்சுக்கட்டையின் மூலம் அச்சிடப்பட்ட பிரதி திருப்தியளிக்கக்கூடியதாக அமைந்தது. கொல்லத்தில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி 1578ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட அந்நூல் பிரார்த்தனைப் பாடல்களையும், வினாவிடை முறையில் மதத்தைக் கற்பிக்கும் வழிமுறைகளையும் கொண்டதாக அமைந்திருந்தது. 16 பக்கங்களில், அமைந்த அச்சிறுநூல் ‘Doctrina Christian or Tambiran Vanakkam’ (தம்பிரான் வணக்கம்) என்று தலைப்பிடப்பட்டது. இதன் மூலம் இந்திய மற்றும் இலங்கை மொழிகளில் முதன் முதலில் புத்தகம் அச்சிடப்பட்ட மொழியாக தமிழ்மொழி அமைந்தது.

அச்சுக்கூடங்களின் உருவாக்கமும் அதனைத் தொடர்ந்த பல புத்தக வெளியீடும் நிகழ்ந்த காலம் பெருமைப்படத்தக்க காலமாக தமிழ் மாவட்டங்களில் கருதப்பட்டது. கடற்கரை யோரங்களில் வாழ்ந்த மீனவ சமுதாயத்தின் தமிழ் கிறித்தவர்கள் முதல் அச்சுக்கூடம் உருவாக தாராளமாக தங்களுடைய பங்களிப்பைச் செய்தார்கள்.4 அச்சாகி வெளியான முதல் புத்தகம் அதிசயிக்கத்தக்கப் பொருளாகக் கருதி வரவேற்கப்பட்டது. அப்புத்தகம் கிறித்தவர்களாலும் கிறித்தவரல்லாதவர்களாலும் மிக உயர்வானப் பொருளாகக் கருதி வாங்கப்பட்டது. அச்சிடும் கருவி கண்டுபிடிக்கப்பட்ட சாதனையை இந்திய கவிஞர்கள் செய்யுள் எழுதி கொண்டாடினார்கள்.5 இவ்வுண்மைகள் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்களின் கடிதங்கள் மற்றும் 1579இல் கொச்சியில் அச்சிடப்பட்ட தமிழ்நூலான தம்பிரான் வணக்கம், பிரான்சிஸ்கோ டிசோசா எழுதிய குறிப்பிடத்தக்க கிறித்தவ மதம் தொடர்பான முன்னுரையான ‘Oriente conquistado’வில் இருந்தும் அறிய முடிகிறது. இம்முன்னுரை மீனவப் பகுதியில் இருந்த மத போதகர்களின் பெயரில் எழுதப்பட்டு மீனவ சமுதாயத்தின் கிறித்தவர்களுக்கும் தமிழ்மொழி அறிந்த கிறித்தவர்களுக்கும் மொழியப்பட்டது உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் சொற்கத்துக்குப் பொற வழி படிப்பிக்கத்தக்க பலபல பொத்தகங்கள் அச்சிலெ உண்டாக்கவேணுமென்று அனெக முதல் அச்சுண்டாக்க சிலவளித்தீர்களெ ஆகையினால் இந்தப் பொத்தகம் உங்களுக்கு நன்கொடையாக வர விட்டோம். அனெக முதல் சிலவளித்து அச்சுண்டாக்கி வித்ததினாலே சங்கையும் கீர்த்தியும் உலொகா முன்பாகப் பெற்றீர்களெ’’

உஙகளுகமுஙகளசநததிகளுககுஞசொறகததுககுபபொறவழி

படிபபிககததககபலபலபொததகஙகளசசிலெயுணடாககவேணு

மெனறுவனெகமுதலசசுணடாககசிலவளிததீ£களெயாகையினாலி

நதபபொததகமுஙகளுககுநனகொடையாகவரவிடடொமனெக

முதலசிலவளிததுவசசுணடாககிவிதததினாலெசஙகையுஙகீ£ததி

யுமுலொகாமுனபாகபபெறறீ£களெ.

இப்பகுதி நிறுத்தக் குறியீடுகளும் புள்ளிகளும் இல்லாமல் உச்சரிக்கமுடியாத மெய்யெழுத்துக்களைக் கொண்டு நீளமாக எழுதப்பட்டுள்ளதையும் நிறுத்தக்குறியீடுகளும் புள்ளிகளும் பயன்பாட்டுக்கு வராதிருத்ததையும் காட்டுகிறது. ஆயினும் பெஸ்கியினுடைய எழுத்துச் சீர்திருத்தத்தின் மூலமாக குறியீடுகள் உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்தின் எழுத்துக் கூட்டும் அல்லது எழுத்திலக்கண முறைபற்றி அக்காலத்தில் அச்சிடப்பட்ட புத்தகப் பக்கங்களில் காண இயலும். கிறித்தவரல்லாதவர்கள் சாதாரணமாக புத்தகத்தை வாங்கவுமில்லை அதை உயர்வாகக் கருதவுமில்லை. அவர்களுள் படித்த சில ஆண்கள் ஐரோப்பியர்களின் செயலுக்கு ஒத்துழைப்பவர்களாகவும் தமிழ்மொழியையும் ஆரம்பகால தமிழ்க் கிறித்தவ முன்னோடி இலக்கியத்தின் மொழியின் போக்கையும் திருத்தம் செய்ய இணைந்து பணியாற்ற தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.6

தமிழ்நாட்டில் அச்சு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது. 1584இல் தான் சீனாவில் முதல் அச்சாக்கம் ஐரோப்பியர்களால் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பானில் 1590இலும் பிலிப்பைன்ஸில் 1593லும் முதல் அச்சாக்கம் நடைபெற்றது. 1584இல் பெரு நாட்டில் லிமா என்ற இடத்தில் ஸ்பானிஷ் குய்ச்வா (Quichua) மற்றும் அய்மாரா (Aymara) மொழியில் அச்சிடப்பட்ட ‘Doctrina’ என்ற நூல்தான் உலகின் வெளிச்சத்திற்கு வந்த முதல் அச்சு நூலாகும். இருப்பினும் ஆடெக் (Aztec) மற்றும் ஸ்பானிஷ் மொழியில் வெளியான ‘Doctrina’வின் எந்தப் பிரதியும் இதுவரையிலும் கண்டெடுக்கப்படவில்லை. இப்பிரதி மெக்சிகோ நகரத்தில் 1539இல் அச்சடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆப்பிரிக்க மொழிகளில் கங்கோலியர்களுக்காக (congolese) அவர்களின் மொழியில் 1624இல் தான் முதல் அச்சாக்கம் செய்யப்பட்டது. இதில் 1554ஆம் ஆண்டு லிஸ்பனில் அச்சிடப்பட்ட தமிழ் சிறுவெளியீடான ‘Cartilha’வில் உள்ள வரிகளே இடம்பெற்றிருக்கிறது. ரஷ்யா தனது முதல் நூலை 1563இல் அச்சிட்டது. கான்ஸ்டாண்டினோபிள் தன் முதல் அச்சுக்கூடத்தை 1727இலும் கிரீஸ் 1821இலும் நிறுவியது. இவ்வாறாக 16ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங்கள் மேற்கத்திய நாடுகளில் அச்சிடப்பட்ட மாதிரிகளினும் முதன்மையாகக் கருதப்படுகிறது. இச்செயல்பாடு ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்டிருப்பதன் விளைவே அவர்களை உடனடியாக நம் அருகாமைக்கு கொண்டுவந்துள்ளது.7

அச்சிடப்பட்ட நான்கு பிரதிகள்

இந்திய மண்ணில் இந்திய மொழியில் அச்சிடப்பட்ட முதல் நூல்களின் தன்மை மற்றும் அதன் பொருளடக்கம் குறித்து, அச்சாக்கப்பட்ட நாள் மற்றும் அச்சுக்கூடம் அமைந்திருந்த இடம் குறித்து, அறிவதில் மிகத் தொடர்ச்சியான பெரிய குழப்பமும் அதனைத் தொடர்ந்த அனுமானமும் நீடித்து வருகிறது. இருப்பினும் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிற பதினாறாம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நான்கு தமிழ் நூல் வெளியீட்டின் மாதிரிப் பிரதிகளிலுள்ள அச்சாக்கப்பட்ட இடம், நூலின் ஆசிரியர் தொடர்பான பல உண்மைத் தரவுகள் அவற்றைத் தொகுத்துப் பார்க்கிற பொழுது கிடைக்கப் பெறுகின்றன.

1) Cartilha: pp. 38, Germano Galhardo, Lisbon, 11th February, 1554.

இச்சிறு வெளியீட்டின் தலைப்புப் பக்கத்தில் அதன் முழுத் தலைப்பு இவ்வாறு அமைந்திருக்கிறது. “Cartilha Che conte breuemente ho q todo christo deue apreder pera sua saluacam, A qual el rey Dom Joham teraro deste nome nosso senhor mandou imprimir e lingoa Tamul e Portagues co ha deeraracam do Tamul por cima de vermulho.” இச்சிறு வெளியீடானது ஒரு கிறித்தவன் முக்தியடைவதற்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவற்றைச் சுருக்கமாகக் கொண்டிருக்கிறது. நம்முடைய பிரபு டாம் மூன்றாம் ஜான் அவர்களுடைய உத்தரவின்படி இந்நூல் தமிழ் மற்றும் போர்த்துக்கீசிய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு அதற்கு சிவப்பு நிறத்தில் தமிழ் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது.

இக்குறிப்பிட்ட பிரதி தற்போது லிஸ்பனில் உள்ள பீலம் (Belem) என்ற இடத்திலுள்ள “Doctor leile de vasconcellos” என்கிற மானிடவியல் அருங்காட்சியகத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்நூல் எவோரா (Evora)விலுள்ள கார்த்தூசியன் மடாலயத்தின் “Scala Cocli” நூலகத்திற்குச் சொந்தமாயிருந்தது. இப்பிரதி Jesuit Theotonio de Braganca (1536-1602) என்கிற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரால் நூலகத்திற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இவர் கோய்ம்பிரா (Coimbra)வில் பிறந்து ரோம் மற்றும் பாரிஸ் நகரங்களில் கல்வி பயின்றவர். இவர் எவோராவின் கிறித்தவ மதகுருவாக இருந்து 1598இல் கார்த்தூசியன் மடாலயமான Scala Caeliயை நிறுவினார். அப்பிரதியில் அவர் கைப்பட எழுதியிருக்கிற குறிப்பே கார்த்தூசியன் நூலகத்திற்கு அப்பிரதி அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவலைக் கொடுக்கிறது.8 அதன்பிறகு மடாலயத்திலிருந்து இப்பிரதி மறைந்துவிட்ட போது Torre do Tombo என்கிற அமைப்புக்குச் சென்றிருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் அப்பிரதி Torre do Tomboவினுடைய முன்னாள் இயக்குனரான Jose Bastosற்கு உரிமையாயிருந்தது. 1909இல் இப்பிரதி படிக்காத ஒருவர் கையில் இருந்தது, அவரிடமிருந்து Dr.Vasconcellos என்பவர் அவருடைய மானிடவியல் அருங்காட்சியகத்திற்குப் பெற்றார்.

1948ஆம் ஆண்டு போர்ச்சுகலுடைய அச்சு வரலாற்றை எழுதுவதற்கு இப்பிரதி பெறப்பட்டதன் மூலம் அதனுடைய மேன்மையால் பரவலாக அறியப்பட்டது. Americo cortez Pinto என்பவர் தன்னுடைய ஆய்வான Da famosa Arte da Imprimissaoவிற்கு தரவுகளைச் சேகரித்த பொழுது பீலமிலுள்ள மானிடவியல் அருங்காட்சியகத்தின் தற்போதைய இயக்குனராக உள்ள பேராசிரியர் மேனுவல் ஹெலினோ என்பவரை தன்னுடைய ஆய்வில் குறிப்பிட நேர்ந்தது. ஹெலினோவால் பழமையான நூல் அட்டவணையான Innocencio da silvaவினுடைய Bibliographia Lusitanaவில் குறிப்பிடப்பட்டிருக்கிற அரிய அச்சு நூல்களை தற்செயலாகக் கண்டறியமுடியவில்லை. இவரினும் பழமையான அட்டவணையாளர்களாலும் காணமுடியாமல் போனது. இந்நிலையில் பேராசிரியர் ஹெலினோ, கார்ட்ஸ் பின்டோ-வை அழைத்து அவர் தன்னுடைய அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிற அரிய புத்தகத்தைக் காணச் செய்தார். பிறகு அப்புத்தகத்தின் அடையாளம் காணப்பட்டது. Cortez Pinto அவர்கள் தன் ஆய்வில் மிகுந்த ஈடுபாட்டுடன் அபூர்வமான அப்புத்தகத்தைப் பற்றி எழுத சில பக்கங்களை ஒதுக்கினார். அத்துடன் அச்சிறுப் புத்தகத்தின் நான்கு பக்கங்கள் அவரால் வண்ண நகலெடுக்கப்பட்டது. இச்சிறுவெளியீட்டின் கையெழுத்துப்பிரதி Oportoவிலுள்ள நகராட்சி நூலகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.10

நான் 1954ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிலநாள் லிஸ்பனுக்குச் சென்றிருந்தபோது அப்பிரதியை ஆராய்ந்தேன். ஆனால் அப்பிரதியைப் பற்றி விரிவானத் தகவல் எடுக்கப்படவில்லை, தற்சமயமும் அதைப் பற்றி ஆராய, அதன் ஒளிப்படங்கள் அனுப்பப்படும் என்று எதிர்நோக்கியிருக்கிறேன். இதுவரையிலும் அப்பிரதியின் ஒளிப்படங்களோ, நுண்படங்களோ பெறுவதில் நான் எடுத்த முயற்சி வெற்றியடையவில்லை. 1554இல் அச்சிடப்பட்ட Cartilha எனும் அந்த அற்புதமான அச்சுப்பிரதியிலுள்ள அச்சையும் தமிழ் மொழியையும் ஆராய Cortez Pintoவினுடைய நூலிலுள்ள நகல்களும் நேர்மையான முறையில் செயல்படவில்லை.

2. Doctrina Christam en Lingua Tamul or தம்பிரான் வணக்கம், pp.16, Colligio do Saluador, Quilon, 20 Febraruy, 1577.

பிரார்த்தனைகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படைத் தத்துவங்களடங்கிய இச்சிறுநூல் ஹார்வர்ட் கல்லூரியால் வாங்கப்பட்டதற்கு முன்பாக ஆராய்ச்சியாளர்கள் இதனை முற்றிலும் அறியாதவர்களாய் இருந்தார்கள். இந்நூலைப் பற்றியான சிந்தனை 1952ஆம் ஆண்டின் இளவேனில் காலத்து ஹார்வர்ட் நூலக அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஹார்வர்டிலுள்ள நூலகரான G.W.Cottrell Jr. என்பவரின் உதவியால் இச்சிறுநூலின் புகைப்படப்பிரதி தற்சமயம் எனக்கு கிடைக்கப்பெற்றது. இந்திய மொழிகளுள் குறிப்பிட்ட ஒரு மொழியின் எழுத்தால் அச்சிடப்பட்ட முதல் நூலுக்குச் சான்றாக இந்த ஹார்வர்ட் பிரதி அமைந்திருக்கிறது. அத்துடன் இந்தியாவில் இந்திய மொழி ஒன்றில் அச்சிடப்பட்டு கிடைக்கப் பெறுகிற முதல் நூலுக்குச் சான்றாகவும் இது அமைந்திருக்கிறது.

பாதிரியார் Pedro de Fonseca (1527-1599)வின் ஊகத்தின்படி இப்பிரதி இந்தியாவிலிருந்து ரோமுக்கு அனுப்பப்பட்டு நவம்பர் 1579ஆம் ஆண்டில் பெறப்பட்டிருக்கிறது. இவர் ரோமில் 1573-81 வரை ‘General of the Jesuit order’ இல் போர்ச்சுகலுக்கான துணைவராகப் பணியாற்றியிருக்கிறார். இவர் தன் வாழ்க்கை வரலாற்றுக் கையெழுத்துப் பிரதியில் பின்வருமாறு எழுதியிருக்கிறார். “Portata dall India. Hauuta dal pre Fonseca del mese di novembre M.D. Lxxix”. இப்பிரதி 1773இல் Jesuit order தடைசெய்யப்பட்டது வரை சியனா (Siena)வில் உள்ள ஒரு கிரேக்கப் பாதிரியார் நடத்தும் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. பிறகு வியன்னாவிலுள்ள Fideikommissbibliothek எனும் இடத்தின் அரசனான Liechtenstain என்பவரிடம் இருந்தது. சமீபத்தில் இப்பிரதி ஐரோப்பா மற்றும் அமெரிக்கப் புத்தக சந்தைகளுக்கு அனுப்பப்பட்டது. பிறகு லண்டனிலுள்ள William H. Robinson Ltd என்ற நிறுவனத்திடமிருந்து ஜனவரி 1951ஆம் ஆண்டு ஹார்வர்ட் கல்லூரியின் நூலகத்திற்காக வாங்கப்பட்டது.11

3. Doctrina Christam: கிரீசித்தியானி வணக்கம், pp. 120, Collegio da madre de Deos, Cochin, 14 November, 1579

இப்பிரதி “Bibliotheque de I Universite de France” என்று முத்திரையிடப்பட்டு Sorbonne நூலகத்தில் இடம்பெற்றிருந்தது என 1928ஆம் ஆண்டு Fr. Robert Streit. O.M.I. அவர்களால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.12 அதன்பிறகு இப்பிரதி Sorbonne நூலகத்திலிருந்து காணாமல் போய்விட்டது. அநேகமாக பிரதி இடம்மாறி இருக்கவேண்டும் அல்லது இரண்டாம் உலகப் போரின்போது வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். எதிர்பாராத வகையில் இப்பிரதி இன்னும் Sorbonneவிலேயே கிடைக்கப்பெறுகிறது. St.Francis Xavier என்பவரின் அதிகாரத்தின் மூலம் கிறித்து ஆராய்ச்சியாளர் Fr.Georg Schurhammer அவர்களுக்காக உரிய காலத்தில் ஒளிப்படம் எடுக்கப்பட்டது. இவரால் இவ்வொளிப்பட நகல் தூத்துக்குடியிலிருந்த பிரெஞ்சுப் பாதிரியார் T.Roche S.J. அவர்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இப்பாதிரியார் 1951ஆம் ஆண்டு எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். இப்பிரதியை ஆராய்ச்சி செய்யவும், நுண்படம் எடுக்கவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 1952ஆம் ஆண்டு இரவலாகத் தரப்பட்டது. ஆயினும் இப்பிரதி எனக்கே உரிமையாக இருந்து வருகிறது.

1732ஆம் ஆண்டின் கடைசிவரை ‘Doctrina’வினுடைய பிரதிகள் தென்னிந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. டானிஷ் மிஷினரியைச் சார்ந்த Sartorius என்பவர் 1732ஆம் ஆண்டு தன் நாட்குறிப்பில் இந்நூலின் பிரதியை பழவேற்காட்டிலும் மற்றொரு பிரதியை தரங்கம்பாடியிலும் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.13

4. Flos Sanctorum o Libro de las vidas di algunos santos trasladas en lengua malavar, pp. 669, (Tuticorin or Punnaikayil), 1586.  

நான் இந்நூலினுடைய பிரதியை ஜூன் 1954இல் வாடிகன் நூலகத்திலுள்ள கையெழுத்துப் பிரிவில் கண்டறிந்தேன். மீனவர் பகுதியில் அச்சிடப்பட்ட Flos Sanctorum நூல் அச்சேறிய ஆண்டு குறித்து பல எழுத்தாளர்கள் பலவாறாகக் கூறுகிறார்கள். நூலின் கடைசியில் கொடுக்கப் பட்டிருக்கிற மாதா கோயில் தொடர்பான நாட்குறிப்பைக் கொண்டு பார்க்கிறபொழுது இந்நூல் 1587ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முன்பாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்று காரணத்தோடு நம்பப்படுகிறது. ஏனெனில் நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கிற நாட்குறிப்பில் சாம்பல் புதன் (Ash wednesday), ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (Easter Sunday) போன்ற பல நிகழ்வுகளுக்கான நாட்கள் ஒரு பக்க அளவில் 1587 தொடங்கி 1614 வரை தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுக்கு கூறப்பட்டிருக்கிறது. இந்நூலாசிரியரின் ஸ்பானிஷ் மொழியிலமைந்த முன்னுரை எந்த சந்தேகமுமின்றி காலம் தொடர்பான கருத்தைக் கூறுகிறது.  

அக்குறிப்பிட்ட ஆண்டிற்கு முன்பாக அச்சிடப்பட்ட சில புத்தகங்களைக் குறிப்பிட்டிருப்பதன் மூலம், ‘துறவிகளின் வாழ்க்கையைப்பற்றி கூறுகிற இந்நூல் 1586ஆம் ஆண்டு அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதே முன்னுரையில் ஆசிரியர் தான் மீனவர் பகுதியில் 37 ஆண்டு காலம் பணிபுரிந்ததாகக் கூறியிருக்கிறார். ஹென்றிக்ஸ் அவர்கள் 1546இல் கோவா வந்தடைந்த ஓரிரு ஆண்டுகளில் மீனவர் பகுதிக்கு வந்தடைந்தார். இனி, ஹென்றிக் அவர்கள் மீனவர் பகுதிக்கு 1548 அல்லது 1549இல் வந்தடைந்திருந்தாரேயானால் முன்னுரை கொடுக்கிற ஆதாரம் சரியாகிறது. ஹென்றிக்ஸ் பாதிரியார் ‘Doctrina’வை 1579இல் அச்சிடுகிறார், அதன் பிறகு Flos Sanctorum1587இல் அச்சிடுகிறார், இடைப்பட்டு அவருக்குக் கிடைத்த போதுமான கால அளவே அவரை நிரந்தரமாக நினைவுபடுத்தக்கூடிய 669 பக்கங்கள் கொண்ட நூலை அச்சுதொகுத்து அச்சிட முடிந்திருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக வாடிகனில் உள்ள இப்பிரதி தமிழிலமைந்த தலைப்புப்பக்கம் மற்றும் அதனைத் தெடர்ந்த தொடக்கப் பக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. மூலப்பிரதியில் நிச்சயமாக இவை இருந்திருக்க வேண்டும். இருந்திருப்பின் அச்சடிக்கப்பட்ட நாள் மற்றும் இடத்தைப்பற்றியான திட்டமான தரவுகளைக் கொடுத்திருக்கும். இதற்கு பதிலாக ஸ்பானிஷ் மொழியில் கையினால் எழுதப்பட்ட சிறு அளவிலான அறிமுகவுரையும் பொருளடக்க அட்டவணையும் உள்ளது. ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்ட மூலப்பிரதியிலிருந்த பக்கங்களுக்கு மாற்றாக இந்த கையெழுத்துப் பக்கங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இந்த வாடிகன் பிரதியினுடைய நம்பகமான தரவுகளைத் துல்லியமாக அறியமுடியவில்லை. Fr. S.G. Perera S.J. என்பவர் தன்னுடைய Jesuits in Ceylon என்கிற நூலில் Fr.Henrique Henreques அவர்களின் பணியைப் பட்டியலிடுகிறபோது பின்வருமாறு கூறுகிறார். “Vitae Christi Domini, Beatissimae Virginis et aliorum Sanctorum” எனும் ஹென்றிக்கின் தமிழ்ப்பிரதி நூல் 1602 ஆம் ஆண்டு ரோமுக்கு அனுப்பப்பட்டது. தற்போது அது “Bibliotheca Vaticana”வில் உள்ளது.14 Fr. S.G. Perera அவர்களால் இத்தகவலுக்கான ஆதாரத்தை என்னிடத்தில் தரமுடியவில்லை. அதேபோல வாடிகன் நூலகர்களும் இத்தலைப்பிலமைந்த நூலைப்பற்றி எந்த அறிதலையும் கொண்டிருக்கவில்லை. இத்தகைய காரணங்களால் Fr. S.G. Perera அவர்களால் விளக்கமாகத் தலைப்பிட்டுக் கூறப்பட்ட ‘Flos Sanctrum’ நூலைப் பற்றி நம்புவதிலிருந்து நான் விலகுகிறேன். வாடிகன் பிரதியான Flos Sanctrum நூலின் அட்டைக்கு அடுத்துள்ள வெற்றுத்தாளில் “Se dar alla biblioteca Vaticana” என்று கையால் எழுதப்பட்டக் குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.

ஆசிரியர்பற்றி 

1. Carilha of 1554

இச்சிறுவெளியீட்டின் முகவுரை லிஸ்பனில் வாழும் மூன்று இந்தியர்களால் எழுதப்பட்டது. Vicente de Nazareth, Jorge Carvalho. மற்றும் Thoma da Cruz என்று அவர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்புக்கும், ஒலி பெயர்ப்புக்கும் இவர்களே பொறுப்பு வகிக்கிறார்கள். வழக்கமானத் தரவுகள் இவர்கள் தொடர்பான எந்தத் தகவல்களையும் கொடுக்கவில்லை.

இருப்பினும் முகவுரையின் அடிப்படையில் அவர்களுடைய பணிகளை Fra Joam de vila de conde என்பவர் மேலாய்வு செய்திருக்கிறார். Fra Joam என்பவர் பலரும் அறிந்த பிரெஞ்சுக்காரர். 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சிலோன் விவகாரங்களில் மிகமுக்கியமான பங்கை வகித்திருந்தார். தமிழ்ச் சமூகத்தின் சூழ்நிலையை Fra Joam நன்கு அறிந்தவராக இருந்தார் என்பதை பலவகையான நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன. சிலோன் மற்றும் இந்தியாவிலுள்ள தமிழ்ப் பகுதிகளில் இவர் பயணம் மேற்கொண்டு அப்பகுதிகளில் இருந்த பாதிரியார் களோடு தொடர்ந்து கடிதத் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.15

சிலோனிலுள்ள கொட்டெ அரசனான Bhuvanaike Bahu (1521-1551)வின் அரசவையில் Fra Joam உரையாற்றியபோது திருக்குறளை மேற்கோள்காட்டி அரசனும் அவையும் எவ்வாறு செயல்பட்டால் அரசன் புகழைப்பெறுவான் என்பதைக் கூறியிருக்கிறார்.16 கொழும்பில் தமிழ்க் கிறித்தவ சமூகத்தினரிடம் பணியாற்றிய பிரெஞ்சுக்காரர்கள் 16ஆம் நூற்றாண்டளவில் வெளியேற்றப்பட்டார்கள். கொழும்பில் வாழ்கிற ஒரு தமிழ்பேசுகிற கத்தோலிக்கக் கவிஞன் வினாவிடையில் அமைந்தவாறு பாடவேண்டிய செய்யுளை இயற்றினான். Fra Joamமினுடைய உள்ளுணர்வால் பாடல்களை அவர்மீதும் பாடியிருந்தான். பிறகு ஹென்றிக்ஸ் அவர்களின் தொடக்ககால தமிழாய்வுக்கு உதவ நாட்டில் நன்றாகத் தமிழறிந்த’’ பாதிரியான Fra Joam கொழும்பிலிருந்து மன்னாருக்கு அனுப்பப்பட்டார்.17

2. The Doctrina Christam (தம்பிரான் வணக்கம்) of 1577

போர்ச்சுக்கலில் எழுதப்பட்டக் குறிப்பின்படி இச்சிறுநூல் கிறிஸ்து சமூகத்தைச் சார்ந்த Fr. Anrique Anriqueg (Same as Henrique Henriques) மற்றும் புனித பீட்டரைச் சார்ந்த Father Manuel ஆகியோரால் அச்சிடப்பட்டிருக்கிறது. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர் மதச்சார்பற்ற பாதிரியாராக இருந்திருக்கிறார். இவர் கிறிஸ்து சமூகத்தைச் சாராமலிருந்ததால் பெயர் குறிப்பிடப்படவில்லை.

“Doctrina Christaa tresladada em linqua Tamul pello padre Anrique Anriquez de copanhia de Jesu pello padre Manoel de sao pedro”. இருந்தாலும் தமிழ் தலைப்பு தனிப்பட்ட நிலையில் Father Henriques S.J. அவர்களின் பெயரைத் தாங்கியிருக்கிறது. முதல் பக்க அச்சுக்கட்டையின் கீழ் அமைந்திருந்த கட்டுப்பாட்டான இடத்தின் காரணமாகவே இரண்டாம் ஆசிரியரின் பெயர் விடுபடலுக்கு காரணமாக அமைந்திருக்கக்கூடும். தமிழ் தலைப்பு கீழ்வருமாறு படிக்கப்படுகிறது.

கொமபஞஞிய தெ செசூ வகையிலணடிறிககிப

பாதிரியார தமிழிலெ பிறிததெழுதின தமபிரான வணககம

இதனை இன்றைய எழுத்திலும், எழுதுகிற விதத்திலும் கீழ்வருமாறு படிக்கவேண்டும்.

கொம்பஞ்சிய தெ சேசு வகையில் அண்டிறிக் பாதிரியார்

தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்.

Fr. Manuel of St. Peterப் பற்றி ஆசிரியர் குறிப்பில் கூறப்பட்டிருக்கிற தகவலைத் தவிர்த்து வேறெந்த தகவலும் இல்லை. வெளிப்படையாக இவர் தமிழ்ப்பேசுகிற மதச்சார்பற்ற பாதிரியாக இருந்தார் என்பது தெளிவாகிறது. போர்த்துக்கீசிலிருந்து வந்த இவர் கோவாவில் பயிற்சி பெற்றிருக்கிறார். பிறகு தொடக்கத்தில் அவர் இருந்த மாவட்டத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். Father Henrique அவர்களின் உதவியாளர்களுள் ஒருவராக இருந்தவர் Father Pero luis, S.J. என்பவர். இவர்தான் முதன்முதலில் பார்ப்பன சமூகத்திலிருந்து கிறித்து சமூகத்திற்கு மாறியவர். இவர் Henrique பாதிரியார் தமிழ் ஆய்வதற்கும் அவரின் நூலை தொகுப்பதற்கும் உதவியாக இருந்திருக்கிறார். ஆயினும் நமக்குக் கிடைத்திருக்கிற அச்சடிக்கப்பட்ட எந்த நூலிலும் இணை ஆசிரியர் என்ற முறையில் இவருடைய பெயர் எங்கும் இடம்பெறவில்லை.

குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த Quilon Catechism (1578) என்பது வினாவிடை போதனை முறையில் அமைந்த நூல். இதனை St. Francis Xavier என்பவர் முதலில் 1542ஆம் ஆண்டு போர்த்துக்கீசிய மொழியிலும் 1544ஆம் ஆண்டு தமிழிலும் உருவாக்கினார். முறைப்படி இது St. Francis Xavier அவர்களால் Doctrinaவிற்கு தயாரிக்கப்பட்டு Joam de Barros அவர்களால் போர்ச்சுக்கலில் 1539இல் வெளியிடப்பட்டது. ஆகையால் இந்நூல் முதலில் Fransis Xavier அவர்களாலும் அவரைத் தொடர்ந்து Father Henriques அவர்களாலும் விரிவான நிலையில் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கவேண்டும்.18

16ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தமிழ் நூல்களின் பிரதான தொகுப்பாளராகத் திகழ்ந்தவர் Father Henrique Henriques. S.J. அவர்கள், கொய்ம்பரா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்ற மாணவரான இவர் 1545ஆம் ஆண்டு தன்னுடைய 25வது வயதில் கிறிஸ்து சமூகத்தில் சேர்ந்தார். 1546இல் கோவா வந்தடைந்த இவர் அடுத்த ஆண்டில் மீனவர் பகுதிக்கு அனுப்பப்பட்டார். பிரான்சிஸ் சேவியரின் அறிவுரைப்படி தன்னை இருத்தி, இரவு பகலாகத் தமிழ் மொழியைக் கற்றதாகக் கூறுகிறார். தான் மீனவர் பகுதிக்கு (தூத்துக்குடி, புன்னைக்காயல்) சென்ற நாள் தொடங்கி Joam de Barrosன் இலத்தீன் இலக்கணத்தை மாதிரியாகக் கொண்டு முறையாகத் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியிருக்கிறார். 1552க்கு முன்பாகவே இவர் தமிழ் இலக்கணத்தை போர்த்துக்கீசிய மொழியில் தொகுத்து இதனை அச்சிட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ரோமுக்கு அனுப்பியிருக்கிறார். 1561 முதல் 1564 வரை மன்னாரில் வசித்திருக்கிறார். அப்போது திரிகோணமலையின் தலைவரை கிறித்துவ மதத்தில் சேர்த்திருக்கிறார். இவரிடத்தில் யாழ்ப்பாணத்தின் அரசதிகாரத்தை வழங்க போர்த்துக்கீசியர்கள் திட்டமிட்டிருந்தார்கள். இவரோ இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் சந்தித்து அவர்களிடத்தில் பிரசாரம் செய்வதில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அத்துடன் அவர் எழுதிய தமிழ்க் கைப்பிரதியிலுள்ள மொழிநடையின் போக்கு குறித்து கிறித்தவரல்லாத படித்தவர்களிடம் ஆலோசனை செய்வதில் விருப்பம் கொண்டவராக இருந்திருக்கிறார். இது தவிர கீழே கூறப்பட்டிருக்கிற புத்தகங்களை அச்சிடுவதற்கான தொகுப்புப்பணியை மேற்கொண்டிருக்கும் செய்தியை தொடர்ச்சியாக அவர் எழுதிய கடிதங்களின் மூலம் அறிய முடிகிறது.

1. தமிழ்மொழி இலக்கணம் (A Grammer of the Tamil Language)

2. தமிழ்க் கலைச்சொல் அகராதி (A Vocabulary of Tamil words and terms)

16ஆம் நூற்றாண்டில் இவரின் புத்தகங்கள் எத்தனை அச்சிடப்பட்டிருக்கின்றன என்பதை இதுவரையில் திட்டவட்டமாக அறியமுடியவில்லை Flos Sanctorum நூலுக்கான இவரது முன்னுரையில் 1586க்கு முன்பாகவே “algunos libros” (சில புத்தகங்கள்) தமிழில் வெளியாகியிருப்பதாகக் கூறுகிறார்.19

3. Doctrina Christam (கிரீசித்தியானி வணக்கம்) கொச்சின், 1579

உண்மையானப் போக்கில் அமைந்த வினாவிடை போதனை நூலுக்கு இந்நூலே சான்றாக இருக்கிறது. Marcos Jorge S.J. அவர்களால் போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்டு வெகு பிரபலமடைந்த வினாவிடை போதனை நூல் முதன்முதலாக 1566இல் லிஸ்பனில் வெளியிடப்பட்டது. இந்நூலின் தமிழாக்கமாகவே கிரீசித்தியானி வணக்கம் இருக்கிறது. இவ்வகையான வினாவிடை நூல்களுக்கு 17ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்நூலே முன்மாதிரியாகத் திகழ்ந்தது. Robert Bellarmine எழுதிய Doctrina நூலின் வருகைக்குப்பிறகு இந்நூல் புறந்தள்ளப்பட்டது. இவ்வினா விடையில் அமைந்த போதனை நூலை கிறிஸ்து சமூகம் வெளியிட்டது. அப்பொழுதிலிருந்து போர்ச்சுகல் மற்றும் பிற ராஜ்ஜியத்தைச் சேர்ந்த கிறித்தவர்கள் மிக விரிவான அளவில் இதன்மூலம் பயனடைந்தார்கள். அதனால் தமிழ்ப் பேசுகிற கிறித்தவர்களும் அதே பலனைப் பெற இந்நூல் தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று Marcos Jorge தன் முன்னுரையில் கூறுகிறார்.

Marcos Jorgeயினுடைய இம்மொழிபெயர்ப்பு இந்தியா மற்றும் சிலோனில் மிக விரிவான அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. 17ஆம் நூற்றாண்டுப் பகுதியில் இந்நூலில் கூறப்பட்டிருக்கிற அறிவுரைகள் மிகச் செம்மையான முறையில் யாழ்ப்பாணத்துப் பாதிரியார்களால் சொல்லி கொடுக்கப்பட்டது. அதனால்தான் கிழக்கிந்தியப் பகுதியிலேயே யாழ்ப்பாணச் சபையிலிருந்த சிறுவர்கள்தான் மிகச்சிறந்த முறையில் கிறிஸ்து சமூகத்தின் மூலம் போதிக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்று சொல்லப்பட்டது. வினாவிடை நூலின் தமிழ்ப் பிரதிகள் 1644இலிருந்து அங்கு தெளிவான முறையில் பயன்படுத்தப்பட்டது. இதனை Figureydo பின்வருமாறு எழுதுகிறார்: எங்களுடைய பாதிரியார்கள் மூலம் அவர்கள் மிக நன்றாக போதிக்கப் பட்டிருக்கிறார்கள். இவ்வினா விடை போதனை நூலை முழுவதுமாக அறியாத சிறுவர் அல்லது சிறுமியர் மிக அரிதாகவே இருப்பர். மேலும் Morcos Jorgeயினுடைய முழுப்புத்தகமும் அவர்களுடைய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.’’20

4. Flos Sanctorum, 1586

வாடிகனிலுள்ள பிரதியான Flos Sanctorum நூலிலுள்ள ஸ்பானிஷ் மொழியில் கையால் எழுதப்பட்ட முன்னுரையானது அந்நூலின் ஆசிரியர் தொடர்பான பல ஆவலை எழுப்பும் தகவல்களைக் கூறுகின்றது. புதிய தலைமுறைக் கிறித்தவர்களுக்கு துறவிகளின் வாழ்க்கை’’ (Lives of saints) பற்றியான மிக விரிவான முழுமையானத் தகவல்கள் அவ்வளவு முக்கியமானதல்ல என்று கருதிய Father Henriques அவர்கள், அத்துறவிகளில் மிகவும் ஏற்ற பொருத்தமானவர்களின் வாழ்க்கையை மட்டும் புதிய தலைமுறைக் கிறித்தவர்களுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆகையால் அவர் Friar Diegodel Roasioவின் Flos Sanctorumமின் ஒரு பகுதியையும், Lipomaniயின் Flos Sanctorumமின் ஒரு பகுதியையும், Perionனின் Lives of the Apostlesயையும் மொழி பெயர்த்திருக்கிறார். மேலும் அவர் இதற்கு தொடர்பாகத் தோன்றியதையும், பிரதிபலிப்பை ஏற்படுத்தக்கூடியதையும், கவனத்தை ஈர்க்கக் கூடியதையும் வாசகர்களுக்கு ஏற்ற வகையில் இணைத்திருக்கிறார். தமிழ்ப் பேசுகிற மக்களிடையே அவர் 37 ஆண்டுகாலம் ஊழியம் செய்து Algunos libros எழுதினார். பின்னர் இது அனுமதிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டது. இதற்காக அவர் மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்ற வேண்டியிருந்தது. இறுதியாக 1586ஆம் ஆண்டு Flos Sanctorumஐ வெளியிட்டார். இதை இவர் சரிபார்த்தபோது “algunos naturales que saben y entienden bien esta lengua” (இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு நன்கு கற்றவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.)

Flos Sanctorum தொடர்பான முதன்மை மூல ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்றன. Historia das vidas e feitos heroycos e obras insignes dos Sanctos, Com muitos sermoes e praticas spirituais que servem a muytas festas do anno எனும் நூலின் திருத்தப் பதிப்பினை 1577ஆம் ஆண்டு கொய்ம்பிராவில் வெளியிட்டார்.

இத்திருத்தப் பதிப்பு Father Henriques கையில் கட்டாயம் கிடைத்திருக்க வேண்டும். அவருடைய இரண்டாவது வெளியீட்டுக்கு அவர் பயன்படுத்திய ‘the Sanctorum priscorum patrum vitae centum sexaginta tres’ எனும் பெயரிலான தொகுதிகள் முதன் முதலில் அறிவியல் முறையில் துறவிகளின் வரலாற்றை விளக்கும் தொகுதிகளாக அமைந்திருந்தன. இத்தொகுதிகளின் ஆசிரியர் Luigi Lippomano என்பவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் எட்டுத் தொகுதிகளாக அமைந்த இந்நூலினை முதலில் 1551இல் வெனிஸிலும் பிறகு 1560இல் ரோமிலும் வெளியிட்டார். ஹென்றிக் தன் முகவுரையில் குறிப்பிடும் மூன்றாவது நூல் De rebus gestis vitisque Apostolorum liber என்பது, இந்நூலைத் தொகுத்தவர் Joachim Perion எனும் பிரெஞ்சுப் பிரார்த்தகர், இவர் 1551ஆம் ஆண்டு பாரிஸில் இந்நூலினை வெளியிட்டார்.21

அடிக்குறிப்புகள்

1. S.G. Perera, S.J., The Jesuits in Ceylon, P.18, De Nobili Press, Madura, 1941; D. Ferroli, S.J., The Jesuits in Malabar, Vol.1, Bangalore Press, Bangalore City, 1939.

2. Americo cortez pinto, Da famosa Arte da Imprimissa, esp. p. 297ff., Editora “Ulisseia” Limitada, Lisbon, 1948.

3. Georg Schurhammer, S.J., G.W. Cottrell, Jr., The First Printing in Indic Characters, Pp. 147-160, in Harvard Library Bulletin, Vol. VI, No.2, Spring 1952.

4. Ibi., P. 150.

5. Francisco De sousa, S.J., Qriente conquistado a Jesus Christo pelos Padres de companhia de Jesus de Provincia de Goa, Vol.II, PP.256-257, Lisbon, 1710; Americo Cortez pinto, Da famosa Arte, op. cit, pp. 368-369.

6. See Preface to Doctrina Christam, Cochin, 1579: தமிழை நன்றாயறிந்த சில கல்விமான்களைக் கொண்டு தமிழுக்கு நன்றாயினங்கத்தக்க சில வாத்தைசாவை தீர்த்துக்கொண்டு இடறுகள் வராமல் அநேகமெல்லாந் தெண்டித்தார்.’’

Preface to Flos Sanctoru, 1586: “agora nuevamente en esteano di 86 se imprimio esto libro cli la vida de los sanctos las quales communiqui con algunos naturales que saben y entienden boen esta lengua, y porque estas vidas saliessen bien apuradas gaste en las tresladar en esta lengua mas de tres anos”.

7. See references to early printing in the works quoted above of Americo Cortez Pinto, Da famosa Arte, and Georg Schurhammer and G.W. Cottrell, The first printing in Indic Characters, O.C., cf. S.H. Steinberg, Five hundred years of printing, Penguins ltd., Harmondsworth, Middlesex (England), 1955. The Welsh Bible was printed in 1588 and the first book in Irish was published in 1571.

8. “Livro da cartuxa de Scala Caeli deg.

Illmo et Revmo Sor D. Theotonio de

Braganca, Archbpo de Evora, che fez

donaca e foy fundador da mesma casa.

9. See article on this booklet by Sousa Viterbo in the daily, Diario de Noticias, March 16, 1909, also Disuonario Bibliografico Portuguez, Vol.II, P.216; Vol VII, pp.433, 434; ANTONIO JOAQUIM ANSELMO, Bibliografia das obras impresas em Portugal no secolo xvi, No. 650, Lisbon, 1926; AMERICO CORTEZ PINTO, Da Famosa Arte, op. cit., pp.357-359 and plates xvii-xi.

10. Antonio Joaquim Anselmo, Bibliografia das obras impresas em portugal no secolo xvi, op. cit. No. 650.

11. Georg Schurhammer and G.W. Cottrell, The first printing in Indic characters, O.C. Containsa Description of this booklet.

12. Robert Streit, Bibliotheca Missionum IV, 145.

13. See C.E.K., Notes on Early Printed Tamil Books, in Indian Antiquary, Vol.II (1873), Pp. 180-181, and early printing in India, P. 98

14. S.G. Perera, The Jesuits in Ceylon, O.C., P.157.

15. See P.E. Pieris and M.A.H. Fitzler, Ceylon and Portugal, Vol.I, Verlag der Asia Minor, Leipzig, 1927; G. Schurhammer, Ceylon Zu Zeit des konigs Bhuvanka Babu and Franz Xavers, 2 Vols., Leipzig 1928.

16. Fernao De Queyroz, The Temporal and Spiritual Congust of ceylon, Book II, P. 241, Colombo Government press, 1930.

17. S.G. Perera, The Jesuits in Ceylon, O.C., Passim.

18. Georg Schurhammer and G.W. Cottrell, J.R., The first printing in Indic Characters, O.C., P. 157.

19. For particulars regarding Fr. Henriques, See Monumenta Historica Societatis lesu, IO sephus wicki, Documenta Indica in which the letters of H. Henriques are reproduced. See also Xavier S. Thaninayagam, Tamil Manuscripts in European Libraries, in Tamil Culture, Vol.III (1954), pp 219-220, and BSOAS, Vol.III, P. 147. 

20. S.G. PERERA, The Jesuits in Ceylon, O.C., P. 157.

21. See Joseph Wicki, O. “Flos Sanctorum” do P.H. Henriques, Impresso no Lingua Tamul em 1586, in Bulletin do Institut wascoda gama, No. 73 (1956), pp. 43-49, Goa.

மொழிபெயர்ப்பு: தே.சிவகணேஷ்

முனைவர் பட்ட ஆய்வாளர். தமிழ் இலக்கியத் துறை, சென்னை பல்கலைக் கழகம்.

'Tamil Culture' தொகுதி VII (ஜூலை 1958) இதழில் வெளிவந்த கட்டுரை.