book historyபதினாறாம் நூற்றாண்டு முதல் கிறித்தவம் தமிழ்ச் சூழலில் செயல்பட்ட வரலாறு என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. தேவைக்கேற்ப இந்த வரலாற்றை அவரவர் கண்ணோட்டத்தில் எழுதிச் செல்வதைக் காண்கிறோம். எதார்த்தமான நிகழ்வுகளைச் சமூக இயங்கியல் பார்வையில் பதிவுசெய்வது அவசியம்.

இந்தக் குறுநூல், முத்துக்குளித்துறைப் பரதவ மக்களோடு அண்ட்ரிக் அடிகளார் வாழ்ந்த வரலாற்றைப் பதிவு செய்கிறது. தமிழ்ச் சூழலில் கிறிஸ்தவம் செயல்பட்ட பாங்கைப் புரிந்துகொள்ள கீழ்க்கண்டவாறு பகுத்துக் கொள்ளலாம்.

- காலனியம் நம் மண்ணில் வரத்தொடங்கிய காலம் முதல், நவீன மரபுகளைக் கிறித்தவம் நமக்குக் கொண்டு வந்து சேர்த்த வரலாறு.

- தமிழ்மொழி நவீனப்படுதல் என்ற தன்மைக்குக் கிறித்தவம் அளித்த கொடைகள்.

- குடிமைச் சமூக உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமையும் கல்வி, பொதுநலன், குறிப்பாக மருத்துவம் ஆகியவற்றைக் கொண்டு வந்து அசாதாரணக் கொடுமைகள் வளராமல் செய்த பாங்கு.

மேலே குறித்தவை, அண்ட்ரிக் அடிகளார் (1520-1600) அவர்களது தமிழ்ச் சமூக இருப்பைப் புரிந்து கொள்ளும் நோக்கில் தொகுக்கப்பட்டவை. இத்தன்மைகளை விரித்துப் பேச இயலும்.

ஆனால் நமது தேவை கருதி அண்ட்ரிக் அடிகளார் மேல் குறித்த தன்மைகளில் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்பதை இந்நூல் வழிப்பெற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இப்பதிவைச் செய்கிறேன்.

உலகில் நவீனக் கண்டுபிடிப்புகள் என்பவை மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளன. மனித சமூகத்தின் புழங்குபொருள் பண்பாடு என்பது பல பரிமாணங்களை உள்வாங்கியுள்ளது. மனிதர்கள் உருவாக்கிய குறியீடுகளில் ஒன்று எழுத்து வடிவம், ஒலி, பொருள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட குறியீடுகளில் மனிதர்கள் கட்டமைத்தார்கள்.

அவ்வாறு உருவான எழுத்து வடிவம், அதனைப் பதிவு செய்யும் முறை, வாசிக்கும் முறை ஆகியவை மனிதக் கண்டுபிடிப்புகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

ஒலிக்கு உருவம் தருதல், பதிவு செய்தல், வாசித்தல் என்ற நிகழ்வுகளே பேச்சுவழி என்னும் ஊடக மரபிலிருந்து எழுத்துவழி ஊடக மரபுக்கு அடிப்படையாக அமைகின்றன. அவ்வகையில் எழுத்துகள் பல்வேறு ஊடகங்களில் பதிவு செய்யும் முறையில் அச்சுக் கருவியின் வருகை என்பது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

ஒவ்வொரு மொழியிலும் அச்சுக்கருவியின் வருகை என்பது, அம்மொழியின் புதிய வளர்ச்சியாக அமைகிறது. தமிழ்மொழிக்கு அச்சுக்கருவி வந்த முறையும் அதன்மூலம் தமிழ் மொழி இவ்வகையான நவீன மரபைப் பெறுவதில் முதல் மனிதராக அண்ட்ரிக் அடிகளார் அமைகிறார்.

தமிழ் மறுமலர்ச்சிக்குத் தொல் இலக்கண மரபு, தொல் இலக்கிய மரபு, தொல் வரலாறு மரபு ஆகியவை தொடர்பான கண்டுபிடிப்புகளே அடிப்படையாக அமைந்தன.

இவை 19ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சூழலில் உருவானது. ஆனால் அவை அனைத்திற்கும் மூலமாக அமைவது தமிழில் உருவான தமிழ் அச்சுப் பண்பாடு ஆகும். அச்சிடுதல் எனும் செயல் பரவலாக்கத்திற்கு அடிப்படையானது.

பரவலாக்கம் மூலம் பலரும் வாசிக்கும் அல்லது அறிந்துகொள்ளும் வாய்ப்பு தமிழ் இலக்கணம், இலக்கியம் மற்றும் வரலாறு ஆகியவற்றிற்குச் சாத்தியமாயிற்று. இவ்வகையில் அச்சுப் பண்பாடு தான் தமிழின் நவீன மலர்ச்சிக்கு மூலமாக அமைகிறது. இப்பண்பாட்டிற்கு மூலமாக அமைந்த மனிதர் அண்ட்ரிக் அடிகளார். அவர் கட்டமைத்த அச்சுப் பண்பாட்டைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

- 1554இல் தமிழ் மொழியின் ஒலி வடிவம் உரோமானிய எழுத்து வடிவில் கார்டில்லா என்னும் நூலாக வடிவம் பெற்றது. தமிழ் எழுத்துரு உருப்பெறவில்லை.

- 1578இல் தம்பிரான் வணக்கத்தை கொல்லத்தில் தமிழ் எழுத்துருவில் முதன்முதலாக அச்சிட்டார். 1579இல் புன்னைக்காயலில் தமிழின் முதல் அச்சகத்தை உருவாக்கி கிரீசித்தியானி வணக்கம் எனும் நூலையும் அச்சிட்டார். பின்னர் 1586இல் அடியார் வரலாறு எனும் 669 பக்கம் கொண்ட நூலையும் அச்சிட்டார்.

தமிழ் எழுத்துரு உருவாதல், தமிழ் அச்சகம் உருவாதல், தமிழில் நூல் அச்சாகுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் நடைமுறைப்படுத்தியவர் அண்ட்ரிக் அடிகள். இவை அனைத்தும் 16ஆம் நூற்றாண்டிலேயே தமிழில் அச்சுப் பண்பாட்டைத் தொடங்கி வைத்த பெருமகன் அண்ட்ரிக் அடிகள்.

காலனியம் நமக்கு வழங்கிய நவீனத்துவ மரபுகளில் அச்சு மரபு தொன்மையானது. இந்த மரபை உருவாக்கிய மனிதருக்குத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு கடன்பட்டுள்ளது என்ற உணர்வுதளப் புரிந்துணர்வு அவசியமாகும்.

இந்த வகையில் தமிழ் நவீனமான தன்மையை உள்வாங்க, மூலமாக அமைந்த மனிதரைத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு கொண்டாட வேண்டும்? அவ்வகையான புரிந்துணர்வு தமிழ்ச் சமூக வரலாறு எழுதுபவர்களிடத்தில் உள்ளதா? இதுபோன்ற பல உரையாடல்களை முன்வைக்க முடியும்.

இந்த வகையில் பெரியவர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களைத் தொடர்ந்து அருள்பணி. ரா.பி.சகேஷ் சந்தியா அவர்களின் பணி அமைகிறது. இந்நூலில் தமிழ் அச்சுப் பண்பாட்டின் முகவரியாக அண்ட்ரிக் அடிகளார் இருப்பதைப் பல்வேறு அரிய தரவுகள் மூலம் ஆய்வு செய்திருப்பதைக் காண்கிறோம்.

ஒரு தேசிய இனத்திற்கு முதன்மையான அடையாளமாக அமைவது மொழிதான். அந்தமொழி தொடர்ந்து நவீன மரபுகளை உள்வாங்கி வளரவும் மாறவும் வேண்டும். அவ்வகையான மரபுகளை மொழிக்குக் கொண்டு வந்து சேர்ப்பவர்கள் செய்யும் பணி மதிப்பிட்டுச் சொல்ல முடியாத அரும்பணி.

அவ்வகையான அரும்பணி புரிந்த அண்ட்ரிக் அடிகளை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தமிழ்ச் சமூக வரலாறு எழுதுவோர் நவீனத் தமிழ்ச் சமூகம் குறித்துச் சிந்திக்கும்போது அவர்களின் நினைவுகளில் முதன்மையாக வருபவர் அண்ட்ரிக் அடிகளார். அதற்கான புத்துணர்வை இந்நூல் வழி நாம் பெற முடியும்.

கிறிஸ்தவத் தொண்டூழியர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருந்த அலுவலர்கள் ஆகியோர் தமிழ்மொழி நவீனமாக்கப் படுதலுக்குப் பெரிதும் உதவினார். காலனிய ஆட்சி நிகழ்ந்தபோது தமிழ் நவீனப்படுதல் எனும் தன்மை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தொல்பழம் மொழியாக இருந்து வந்த தமிழில் எழுத்து மரபு, குறிப்பாகச் செய்யுள் மரபு ஆட்சி செலுத்தி வந்தது. இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள், கல்வெட்டுகள் அனைத்தும் செய்யுள் வடிவில்தான் தமிழில் இருந்தன. இத்தன்மை, மொழி நவீனப்படுதலுக்கு வாய்ப்பாக அமையவில்லை. பேச்சுமொழியைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் சூழல் இல்லை. வேற்று மொழியினர் இத்தன்மையால், தமிழ் மொழியை முதன்மைப்படுத்திச் செயல்படும் சூழல் உருவானது. இதனைப் பின்வரும் வகையில் தொகுக்கலாம்.

- பேச்சுமொழியை முதன்மைப்படுத்தி அதற்கென வழிகாட்டி நூல்கள் ஆகியன உருவாக்குதல்.

- பேச்சு மொழியை எழுத்து மொழியாகக் கட்டமைத்தல் மூலம் உரைநடையை உருவாக்குதல்.

எழுத்துப் பயிற்சி இல்லாத முத்துக்குளித்துறை மக்களோடு வாழ்ந்த அண்ட்ரிக் அடிகளார் மேற்குறித்த இருநிலைகளிலும் தமிழ்மொழி நவீனப்படுதலுக்கு வழி கண்டுள்ளார். அச்செய்திகளை இந்நூல் விரிவான உரையாடலுக்கு உட்படுத்தியிருப்பதைக் காண்கிறோம்.

19 ஆம் நூற்றாண்டில் கூட எழுத்துத் தமிழ் என்றும், செந்தமிழ் என்றும், பேச்சுத்தமிழ் என்றும், கொடுந்தமிழ் என்றும் பேசப்பட்டது. இச்சொல்லாட்சியை உருவாக்கியவர் வீரமாமுனிவர் (1680-1746) ஆனால் இவர்களுக்கு முன்னோடியாக இத்துறையில் செயல்பட்டார் அண்ட்ரிக் அடிகளார்.

1548இல் பேச்சுத் தமிழ் இலக்கணத்தையும் அண்ட்ரிக் அடிகளார் உருவாக்கினார். தமிழில் முதன்முதலில் இப்பணியைச் செய்தவர் இவரே. இந்நூல் பற்றிய முதல்பதிவு இந்நூல் என்று இந்நூலை மொழியாக்கம் செய்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.

அண்ட்ரிக் அடிகளார் எழுதிய இலக்கண நூலை 2013இல் மொழியாக்கம் செய்து Harvard University  வெளியிட்டுள்ளது. அந்நூலின் பெயர் The Earlist Missionary Grammer of Tamil: Fr. Hanriquess, Arte Da Lingua Malabar; Translation, History and Analysis  இந்நூலை உருவாக்கியவர்கள் Jeann Hein மற்றும் வி. எஸ். ராஜமும் ஆவார். ராஜம் தமிழியல் ஆய்வாளர்.

இந்நூல், 16ஆம் நூற்றாண்டில் பரதவ மக்கள் பேசிய மொழியைப் பதிவு செய்துள்ளது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் வாழும் மீனவ மக்களின் மொழி பற்றிய முதல் பதிவு இந்நூல் என்று இந்நூலை மொழியாக்கம் செய்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.

அண்ட்ரிக் அடிகளார் மக்களிடம் சென்று நேரடியாகப் பணியாற்ற விரும்பினார். மொழிபெயர்ப்பாளர்கள் உதவியோடு மக்களிடம் பணியாற்ற அவருக்கு விருப்பம் இல்லை. தம்மைப் போலவே மக்களுக்குப் பணியாற்ற விரும்புவோரும் மக்கள் மொழியைக் கற்றுக்கொள்வது சரியாக இருக்கும் எனக் கருதினார்.

எனவே பேச்சுத் தமிழுக்கான இலக்கணத்தை உருவாக்கும் வேலையில் இறங்கினார். அடிகள் மேற்கொண்ட இப்பணி மூலம் தமிழ் நவீனமயமாதல் எனும் செயல் நடைமுறைக்கு வந்தது. மொழியில் எழுத்து மொழி எவ்வளவு முதன்மையானதோ, அதே அளவிற்குப் பேச்சுமொழியும் முதன்மையானதுதான்.

இதனைத் தமிழ்ப் புலமை உலகம் கவனத்தில் கொள்ளவில்லை. எழுத்துப் பயிற்சி இல்லாதவர்களின் மொழியை அங்கீகரிக்காத அதிகார மனநிலை இருந்தது. இதனை உடைத்து பேச்சுமொழி, எழுத்துமொழி இரண்டையும் சமமாகக் கருதும் சூழல் அண்ட்ரிக் அடிகளார் மூலம் உருவானது. இவரது இம்முயற்சி பின்னர் பல இலக்கண நூல்கள் உருவாக்குவதற்கு வழிகண்டது.

நவீனமயமாதல் என்பது புதிய புதிய மரபுகள் ஒரு மொழியில் அல்லது சமூகத்தில் இடம் பெறுவதன் மூலமே சாத்தியம். இவ்வகையில் பேச்சுமொழிக்கான இலக்கணம், தமிழ் நவீனமயமாக்கலுக்கு வழி கண்டது. பேச்சு மொழியை எழுத்து வடிவில் எழுதும்போதுதான் வாசிப்பு எளிதாகும்.

இதனால், அடிப்படைக் கல்வி பெற்றவர்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு உந்தப்படுவர். எழுத்து மொழி, பேச்சு மொழி என்ற இரட்டைத் தன்மையை உடைப்பதில் உரைநடைக்கு முக்கிய இடமுண்டு.

இத்தன்மையை உருவாக்கியது அச்சு ஊடகமே. நவீனமாக உருவான அச்சு ஊடகம் நவீன மொழியையும் உருவாக்கியது. அம்மொழி செய்தித்தாள்களின் மொழியாகவும் உருப்பெற்றது. இதன்மூலம் இதழியல் என்னும் துறை உருவானது.

மேற்குறிப்பிட்ட பின்புலத்தை உணர்ந்து அண்ட்ரிக் அடிகள் தமது போதனைகளை எழுத்து வடிவில் தரும்போது பேச்சுமொழி வடிவில் தந்தார். இதன்மூலம் திருவிவிலியத்தில் பேசப்படும் செய்திகள் வெகு எளிதாக மக்களைச் சென்றடைந்தது.

புதிய மொழியாக விருவிவிலியம் மொழி அமைந்தது. தமிழ் உரைநடை உருவாக்கத்தில் திருவிவிலியம் போதிக்கப்பட்ட முறைகள், திருவிவிலியம் மொழியாக்கம் செய்யப்பட்ட பாங்குகள் ஆகியவை மூலம் தமிழில் புதிய உரைநடை உருவானது.

பின்னர் அகராதிகள் உருவாக்கம் நிகழ்ந்தபோது இலக்கியப் புழக்கத்தில் உள்ள சொற்களுக்குப் பேச்சுப் புழக்கத்தில் உள்ள சொற்களைப் பொருள் விளக்கமாகக் கூற முடிந்தது. இதன்மூலம் மொழி வெகுமக்களுக்கான பயன்படு கருவியாக வடிவம் பெற்றது.

பண்டிதன் - பாமரன் எனும் முரணைக் குறைப்பதற்கு உதவியது. அண்ட்ரிக் அடிகள் உருவாக்கிய பேச்சு மொழிக்கான இலக்கணம் மற்றும் பேச்சுமொழியைப் பயன்படுத்திய முறை தொடர்பான பல்வேறு குறிப்புகளை இந்நூலில் காண்கிறோம். இதன் மூலம் அண்ட்ரிக் அடிகள் தமிழ் நவீனமயமாக்கல் எனும் சமூக நிகழ்விற்கு எவ்வகையில் பாத்தியதை உடையவர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு இந்நூல் நல்ல ஆவணமாக அமைகிறது.

முதல் அச்சகத்தை உருவாக்கியது போல் முதல் கல்லூரி, முதல் மருத்துவமனை ஆகியவற்றையும் தமிழ் மண்ணில் உருவாக்கியவர் அண்ட்ரிக் அடிகள். இவற்றின் மூலமே அரச உருவாக்க மரபிலிருந்து சமூகம் படிப்படியாக குடியரசை உருவாக்கும் குடிமைச் சமூகமாக மாற்றமடைகிறது.

நீண்ட நெடுங்காலமாக அரசமுறை நிர்வாகத்தில் இயங்கிய தமிழ்ச் சமூகம் 16 ஆம் நூற்றாண்டு முதல் படிப்படியாக குடியரசு சார்ந்த சமூகமாக மாறத் தொடங்கியது. இதில் ஐரோப்பிய புத்தொளி இயக்கம், உலகம் தழுவிய தொழில்புரட்சி, பல்வேறு நாடுகளில் நடந்த மக்கள் புரட்சிகள் ஆகியவை காரணங்களாக அமைந்தன.

இந்தியாவில் மேற்குறித்த நிகழ்வுகளின் தாக்கங்களைக் கொண்டு வந்ததில் காலனியத்திற்கு முதன்மையான பங்குண்டு. காலனியத்தோடு இணைந்தும், தனித்தும் செயல்பட்ட கிறிஸ்தவத் தொண்டூழிய மரபும் குடிமைச் சமூகம் உருவானதில் பங்களிப்பு செய்துள்ளது.

குடியரசு மூலம் குடிமைச் சமூகம் என்பது பின் கண்ட அடிப்படைகளைக் கொண்டிருப்பதாக அமைதல் வேண்டும்.

- சமூக முரண்கள் செயல்படும் அதே வேளையில் வெகுமக்களிடத்தில் நல்லிணக்க மரபும் உருப்பெறுதல், இதன்மூலம் பன்மைத்துவம், சிறுபான்மை மரபுகள் ஆகியவை குடிமைச் சமூகத்தில் இயல்பாகச் செயல்படுத்தப்படும் நடைமுறை இருப்பது அவசியம்.

- பொதுத்துறைகள் உருவாக்கப்படுதல், குறிப்பாகக் கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவை இதனால் சமூக முரண்களை மீறிய பொதுப் பயனைச் சாதாரண குடிமகன் பெறுவதற்குக் குடிமைச் சமூகம் வழிகாணுதல் அவசியம்.

மேற்குறித்த பண்புகளைக் கொண்டிருக்கும் சமூகம், குடியரசு சமூகம் என்று அழைக்கப்படும். இதில் அரசாங்கம், சமயம், தனிப்பட புரவலர்கள் ஆகிய பிற பொதுமக்களுக்கான நலன்மீது அக்கறை கொண்டு உருவாக்கப்பட்ட வேண்டும். இவற்றிற்குப் பொதுநலனே முதன்மையான நோக்கம்.

வணிகம் மற்றும் மதிப்பீடுகள் சார்ந்த பார்வைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதில் கிறிஸ்தவ சமய அமைப்புகள், குடிமைச் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இந்தப் புரிந்துணர்வு அண்ட்ரிக் அடிகள் உருவாக்கிய கல்வி நிறுவனம், மருத்துவமனை மற்றும் “பிறரன்புச் சகோதர சபை” ஆகியவை குடிமைச் சமூகத்தில் வாழும் சாதாரண மனிதரை நோக்கிய செயல்கள்.

இவற்றின் மூலம் முத்துக்குளித்துறையில் வாழும் எளிய மக்கள் பெற்ற நலன்கள் முதன்மையானவை. அதனை வெறும் சமயச் செயல்பாடாக குறுக்கிப் பார்ப்பது தவறு. மக்களுக்கான பணி என்பதே முதன்மையாக அமைகிறது. இவ்வகையில் காலனிய காலத்தில் உருவான குடியரசு முறைமை சார்ந்த குடிமைச் சமூக வாழ்க்கைக்கு அண்ட்ரிக் அடிகளார் செய்த பங்களிப்பு திரிந்துபேசும் வகையில் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

அண்ட்ரிக் அடிகளின் செயல்பாடுகள் பற்றிப் பேசும் இந்நூல் பதினாறாம் நூற்றாண்டில் முத்துக்குளித்துறையில் வாழ்ந்த மக்களின் வரலாறு குறித்த ஆவணமாகவும் உள்ளது. அந்த மக்களின் வரலாற்றுப் போக்கில், அண்ட்ரிக் அடிகளார் பெறும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புரிந்துணர்வை இந்நூல் நமக்குத் தெரிவிக்கிறது. இந்நூலை உருவாக்கியுள்ள அருள்பணி. ரா.பி.சகேஷ் சந்தியா அவர்களைப் பெரிதும் பாராட்டி மகிழ்கிறேன். அண்ட்ரிக் அடிகளார் குறித்தும், தமிழ்ச் சமூக வரலாறு குறித்தும் அறிய விரும்புவோருக்கான அரிய நூல் இது. இந்நூலை வாசித்து இப்பதிவைச் செய்ய வாய்ப்பளித்த அருள்தந்தை குழந்தை அவர்களுக்கும் எனது அன்பும் நன்றியும்.

- வீ.அரசு

Pin It