ஐரோப்பாவில் புத்தொளிக் காலச் (Renaissance) சிந்தனைகளை உள்வாங்கிய சமயமாகத் தமிழகத்தில் அறிமுகமாகியது கத்தோலிக்க கிறித்தவம்.
கூட்டு வழிபாட்டைக் (Congregational Prayer) கொண்டவர்கள் என்பதால் கிறித்தவர்கள் தம் சமயம் சார்ந்த சில வழிபாட்டு மந்திரங்களை (மன்றாட்டுக்களை) அவசியம் தெரிந்திருக்க வேண்டும். கிறித்தவத்தின் புனித நூலான விவிலியத்தை வாசிப்பதும் அவசியமான சமயக் கடமையாக இருந்தது.
படிப்பறிவில்லா ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரே பெருமளவில் கிறித்துவத்தைத் தழுவியிருந்தனர். அவர்களுக்கு எழுத்தறிவு கொடுக்க வேண்டிய கடமை கிறித்தவப் பாதிரியார்களுக்கிருந்தது.
இக்கடமையை நிறைவேற்றும் வழிமுறையாகப் புதிய கிறித்தவர்கள் பயிலப் பள்ளிக்கூடங்களை நிறுவினர். நூல்களை அச்சடிக்க அச்சுக்கூடங்களை நிறுவினர். பொதுவாக மதபோதனைகள் செய்வதற்காகவும் குறிப்பாக மதம் மாறிய கலப்பினக் கிறித்தவர்களுக்கு நம் நாட்டு முறைப்படி கல்வி கற்பிக்க கல்விக் கூடங்களை நிறுவினர்.
அதற்காகப் பாதிரியார்களும் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்தனர். இவர்கள் உள்நோக்கம் கிறித்தவ மதப் பிரச்சாரமாக இருந்து வந்ததென்றாலும் இவர்கள் ஆற்றிய காரியங்கள் பாமர மக்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமைந்தன.
பள்ளிக்கூடங்களை நிறுவிக் கற்பிக்கும் பணியை அவர்கள் மேற்கொண்டனர். எண், எழுத்து என்ற எல்லையைத் தாண்டி நிலவியல். அறிவியல் போன்ற நவீன அறிவுத் துறைகளைக் கற்பிக்கலாயினர். கற்கும் மாணவர்களுக்கான இவ் அறிவுத்துறை சார்ந்த பாடநூல்களைத் தமிழில் எழுதி அச்சிட்டனர்.
ஐரோப்பாவில் புத்தொளிக் காலம் (Age of Enlightment) உருவாக்கிய புதிய அறிவு கிறித்தவத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டில் அறிமுகமானது. இது பாதிரியார் சீகன் பால்கு தமிழகம் வந்தபிறகே தொடங்கியது எனலாம்.
சீகன் பால்கு தரங்கம்பாடியில் 1709ஆம் ஆண்டு பிராமணரல்லாதாருக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார். இக்கல்வி நிறுவனமே ஐரோப்பியர் ஒருவரால் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனமாகும்.
இப்பள்ளியில் தமிழ், போர்த்துக்கீசியம் ஆகிய மொழிப் பாடங்கள் கற்றுத் தரப்பட்டன. இத்தகைய கல்வி நிலையங்கள் பௌத்த, சமணக் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் சமுதாயத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் கல்வி வழங்கிய கல்வி நிறுவனங்களாகும்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கிறித்தவ சமயப் பணியாளர்கள் ஐரோப்பிய கல்வி முறையைப் பின்பற்றி அறிவியல் கல்வியைப் போதிக்கும் நோக்கத்துடன் கணிதம், புவியியல், தாவரவியல் முதலிய பாடங்களை நடத்தினர். தமிழகத்தில் வழக்கில் இருந்த மூலிகைகளை ஐரோப்பியத் தாவரவியல் முறைகளைப் பின்பற்றி வகைப்படுத்திப் பாதுகாக்கும் முறைகளையும் அறிமுகப்படுத்தினர்.
சீகன் பால்கு - அறிவு பரப்பும் சங்கம்
சீகன்பால்கு குறித்து மேலே குறிப்பிட்டோம், அவர் கிழக்கிந்தியப் பகுதிகளில் கிறித்தவ சமயத்தைப் பரப்ப பிரெடிரிக் (Fretrick IV) ஆணைப்படி தரங்கைக்கு வந்தார். இங்கு வந்த சீகன்பால்கு தமிழ் மொழியைக் கற்றுக் கிறித்தவ சமயக் கருத்துக்களைப் பரப்பி வந்தார். பின்னர் கிறித்தவ அறிவு பரப்பும் சங்கம் (Society for promotion of Christian Knoweldge) என்ற அமைப்பைத் தொடங்கி பள்ளிகளைத் தொடங்கினார்.
பள்ளியில் புகுந்தது அறிவியல்
1725ஆம் ஆண்டு வாக்கில் தரங்கம்பாடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருபத்தோரு பள்ளிக்கூடங்கள் இருந்தன, இப்பள்ளிகளில் புதிய அறிவுத் துறைகளின் பாடங்கள் முதன் முதலாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன. இதனடிப்படையில் புதிய அறிவுத்துறை தொடர்பாக இவர் தொடங்கிய அச்சுப்பணியால் பாடநூல்களும் உருவாகின.
சீகன் பால்குவின் கணித நூல்
சுதேசிகளின் கல்விக்காகத் தமிழ் மொழியில் மலபார் அரித்மெடிக் என்ற நூலை ஓலைச்சுவடியில் எழுதியுள்ளார். இந்நூல் 1863 இல் அச்சிடப்பட்ட இந்த 31 பக்க கணித நூலின் தலைப்பு Tamil First Books of mental Arithmetic என்பதாகும். ஐரோப்பிய கணித அறிவியலின் ஒரு பகுதியான எண் கணிதத்தை முதலில் (Arithmetic) தமிழில் வெளியிட்ட பெருமை சீகன் பால்குவைச் சாரும்.1
பாதிரியார் இரேனியஸ்
தமிழ்நாட்டில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் தொடக்கத்தில் ஒரு கூடுதலான நன்மையாகச் செய்யுள் யுகம் அஸ்தமித்து உரைநடை யுகம் வளர்ந்தது. இவ்வுரைநடையின் வளர்ச்சியைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார் இறைப்பணியாளர் இரேனியஸ்.
சீகன் பால்கு காலத்திலிருந்து கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கான முயற்சிகள் மிஷனரி நடவடிக்கையாக வழக்கில் இருந்தும் இந்நடைமுறையை முன்னெப்போதும் இல்லாத அளவில் சமய சமூக மாற்றத்திற்கான மாதிரியாகத் தீவிரப்படுத்தியவர் இரேனியஸ்.
தமிழ்ச் சமுதாய கலாச்சார வரலாற்றை உற்று நோக்கினால். தமிழில் உரைநடை வளர்ச்சியின் காலமும் அறிவியல் நூல்கள் தழைத்து வளர முற்படும் காலமும் சம காலமாக உள்ளன. 18ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் அச்சு இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தாலும் துவக்கத்தில் கிறித்துவ மிசினரிகளும் காலனிய அரசும் மட்டுமே நூல்களை அச்சு செய்யும் உரிமை பெற்றிருந்தன. இவ்விதி 1835இல் தளர்த்தப்பட்டது.2
அச்சு ஊடகத்தில் ஐரோப்பியத் தமிழ்
தமிழகக் கிறித்தவப் பணியாளர்களில் இரேனியஸ் (C.T.E Rhenius) முக்கியமானவர். சென்னையில் 1814ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் சமய பிரச்சாரத்தில் ஈடுபட்ட இரேனியஸ் 1818இல் சென்னை கிறித்தவ அபிவிருத்தி பாடநூல் சங்கம் சார்பில் சிறுசிறு துண்டு அறிக்கைகளின் மூலம் மக்களிடம் சமூக.
சமய செய்திகளைக் கொண்டு செல்ல சென்னை துண்டறிக்கை மற்றும் பாடநூல் சங்கத்தைத் (Madras Tract and Book Society) தொடங்கினார். இவ்வறிக்கைகளை விநியோகம் செய்த பொழுது எழுத்தறிவில்லா மக்களிடம் படித்துக் காட்ட கிறிஸ்தியான் என்ற ஒரு வாசகரையும் நிமியத்தார்.
காலரா பரவியபோது வெளியிடப்பட்ட இவ்உயிர் காக்கும் துண்டறிக்கை கிறித்தவ சமயப் பணியாளர்களால் வெளியிடப்பட்ட முதல் துண்டறிக்கையாகும்.4
தமிழில் ஐரோப்பிய அறிவியல் எழுத்து முறையின் தொடக்கம் இரேனியசின் காலகட்டம், சமய எல்லைக்கு வெளியே உள்ள மக்களையும் பொதுக்கல்வியில் வளர்ச்சியினையும் மனதில் கொண்டு அவர் 1832இல் எழுதிய நூல் நூல் பூமி சாஸ்திரம் என்பதாகும்.
தமிழில் முதல் முழு அறிவியல் நூலான பூமி சாஸ்திரம் தமிழர்கள் அறிவு பெறுவதற்கு (இரேனியஸ் பாதிரியார் பூமி சாஸ்திரம் சர்ச் மிசியோன் அச்சுக்கூடம் சென்னை 1832) வெளியிடப்படுகிறது என்று இரேனியஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். ‘தமிழருக்கு அறிவுடைத்தாகும்படி பாளையங்கோட்டையிலுள்ள இரேனியுஸையராலே செய்யப்பட்டது...’ என்று 1835ஆம் ஆண்டு வெளியான பதிப்பில் கூறப்பட்டுள்ளது.
இரேனியஸின் மற்றொரு அறிவியல் நூல்
இரேனியஸ் சமயச் சார்பான நூல்களையும் பூமி சாஸ்திரம் தவிர்த்து சில அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றின் ஆங்கிலப் பெயர்ப்பட்டியல் வருமாறு 1.Evidence of mankind 2.Idulatory 3.Short History mankind 4.Solar System 5.The Phenomena of Nature 6.Substance of Religion 7.Astrology 8.the new treatment 9.Tamil Geography 10.Tamil Grammar 11.The first thousand words in Tamil English and German5 இரேனியசின் நூல் பட்டியலில் The Solar System, The Phenomena of Nature, Astrology ஆகியவை அறிவியல் நூல்களாகும்.
பிராமணிய எதிர்ப்புக்கு ஆளாகும் இரேனியஸ்
இரேனியஸ் தமது சபையின் கல்வி விஞ்ஞான அறிவைத் தமிழகத்தில் பரப்ப முனைந்தபோது உயர்குல மக்கள் தாழ்குல மக்கள் என்ற சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. இரேனியஸ் அறிவியலோடு கிறித்தவத்தையும் சேர்த்துப் பரப்பிட எண்ணினார்.
இந்நூலில் ஐரோப்பிய அறிவியல் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இரேனியஸ் கத்ரி (Guthrie) என்பவர் எழுதிய ஆரம்ப பூகோளம் (Grammar of Geography) என்னும் நுலை அடிப்படையாகக் கொண்டு இந்நூலின் முற்பகுதியில் பொதுப் புவியியலை விவரித்துள்ளார்.
மற்ற பகுதிகளில் நாடு மற்றும் மக்கள் பற்றி எழுதியுள்ளார். இதன் விளைவாகப் பூகோளம் பற்றிய அறிவியல் செய்திகள் தமிழில் கிடைக்கப் பெற்றன. இரேனியஸ் தமிழில் அறிவியல் பாடநூல்களை முதன் முதலாக சந்தி பிரிக்கப்பட்ட சொற்றொடர்களை அறிமுகப்படுத்தியவர். பயிற்றுமொழி தாய்மொழியாக இருக்க வேண்டுமென வற்புறுத்திய பெருமைக்குரியவர்.
தமிழின் முதல் கலைச்சொல்லாக்க நிபுணர்
ஐரோப்பிய அறிவியலை முதன்முதலில் நூல் வடிவில் தந்த இரேனியஸின் முயற்சியாலேயே தமிழில் தற்கால அறிவியல் சொற்கள் தோற்றம் கண்டன. அவர் ஆங்கிலச் சொல்லான Poles என்பதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக ‘முனை’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வாறு பயன்படுத்தும்போது தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லைத் தந்துள்ளார்.
பூமி சாஸ்திரத்தில் இரேனியஸ் புவியியல் தொடர்பான 51 சொற்களைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார். இரேனியஸ் தமிழின் முதல் அறிவியல் நூலாசிரியர் மட்டுமல்லாது தமிழின் முதல் கலைச் சொல்லாக்குனரும் (Terminologist) தமிழின் முதல் அறிவியல் பாட நூலாக்குனரும் ஆவார்.6 இரேனியஸ் வெளியிட்ட 51 கலைச்சொற்களில் சில வருமாறு: அவற்றுக்கு நிகரான இன்று வழக்கிலுள்ள கலைச்சொற்களும் தரப்பட்டுள்ளன.
இரேனியஸ், பூமி சாஸ்திர நூலின் மையப் பகுதியில் கலைச்சொற்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இவைகளில் பல எளிமையான தமிழ்ச் சொற்கள். Solstics என்பதற்குச் சூரியநிலை என இரேனியஸ் எளிமையாகக் கலைச்சொல்லைத் தந்துள்ளார்.
ஆனால் அவருடைய காலத்திற்குப் பின் அவற்றை மற்ற குழுக்கள் உணர்வதற்குச் சிரமப்பட்டிருக்கின்றன என்பதைப் பட்டியல் மூலம் அறியமுடிகிறது. சொற்களை இரேனியஸ் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார். இப்பட்டியலில் எழுத்துப் பெயர்ப்பு சொற்கள் இடம்பெறவில்லை.
இரேனியஸ் பூமி சாஸ்திரம் எழுதிய பிறகே 1848இல் டாக்டர் ஃபிஷ் கிறீன் தனது நூல்களில் கலைச் சொல்லாக்கக் கோட்பாடுகளைத் தந்தார்.அறிவியல் தமிழ்க் கலைச்சொற்களை ஆரம்பம் முதலாக நோக்குகையில் சிலவற்றைப் புரிந்து கொள்ளலாம். ஆங்கிலம் தவிர்த்து தமிழில் நூல்கள் படைக்கும் முயற்சியில் கலைச் சொற்களாகப் பெரும்பாலும் அமைந்திருப்பது வடமொழிச் சொற்களே.
இச்சொற்களுக்கு முதன்மை கொடுத்துள்ளதை நாம் வேறுவிதமாக அணுகினால் விடை கிடைக்கிறது. தமிழ் கற்க முனைந்த மேலை நாட்டினருக்கு வடமொழி முக்கியத்துவம் நிறைந்த மணிப் பிரவாள நடையிலான தமிழே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பதனை இதன் மூலம் அனுமானிக்கலாம். ஆங்கிலம் கற்ற மேல்மட்டத் தமிழர்களும் பெரிதும் வடமொழிச் சொற்களையே கலைச் சொற்களாகக் கையாண்டுள்ளனர்.
உரைநடை - ஒரு தனி நடை
இவருடைய உரைநடை வழக்கமான தமிழ் பண்டித நடையிலிருந்து கலைச்சொற்களையும் வாய்மொழி மரபிலிருந்த சொற்றொடர் தொகுதிகளையும் உள்வாங்கிக் கொண்ட நடையாகவே இருந்தது, எவ்விதச் சார்புத் தன்மை கொண்ட நடையையும் தொடராமல் புதுவித கல்விப்புலத் தீட்டு (Academic Taboos) அற்ற ஒரு நடையை இரேனியஸ் கையாள முனைந்துள்ளார்.
மொழிநடை
1832இல் பூமி சாஸ்திரம் 728 பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளது. பிறமொழி பெயர்ச் சொற்களைத் தமிழிலக்கண மரபுக்கேற்ப அவர் மாற்றியமைந்தார். சில எடுத்துக்காட்டுக்கள்:
ரேனியஸ் - இரேனியஸ் எகிப்து - எகிப்பத்து
துருக்கு - துருக்கை தைமூர் - திமூர்
பிளாட்டோ - பிளாத்தோ பிரான்ஸ் - பிராஞ்சி
‘ஜ’என்னும் ஆங்கில ஒலியினைத் தொடக்க கால கிறித்தவ மதபோதகர்கள் யகரமாகவே ஒலித்தனர். (ஜான் - யோவான். ஜேக்கப் - யாக்கோபு) இரேனியஸ் அத்துடன் தமிழ் இலக்கண மரபுக்கேற்ற இகரத்தை முன்னிறுத்தி எழுதுகிறார்.
ஜப்பான் - யப்பான் - கியப்பான்; ஜமுனை - யமுனை - இயமுனை. தாம் வாழ்ந்த திருநெல்வேலியில் பாய்கின்ற தாமிரவருணி என வழங்கப் பெறும் ஆற்றின் பெயரைத் தாம்பிரப்பன்னியாறு என்கிறார்.7
மொழிபெயர்ப்பு
இரேனியஸ் 1827இல் “An Essay on the principlï of translating the Holy Scriptures with critical remarks on various passages, particulary with critical reference to Tamil language என்ற நூலினை எழுதினார். இரேனியசுக்கு முன்பு பப்ரிஷியஸ் என்பார் வேதாகமத்தை மொழி பெயர்த்திருந்தார். இம்மொழி பெயர்ப்பு மிகக் கடினமாக இருந்தது.
சொல் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. எனவே வேதத்தைச் சொல் மட்டத்தில் மொழி பெயர்க்காமல் கருத்துக்களைக் கிரகித்துப் பின்பு தமிழ் மரபு வழக்குகளில் வெளியிடல் அவசியம் என இரேனியஸ் உணர்ந்தார். ஆகவே புதிய முறையில் வேதத்தை இரேனியஸ் மொழிபெயர்க்கப் புகுந்ததாக சரோஜினி பாக்கியமுத்து குறிப்பிட்டுள்ளார்.8
டாக்டர் சாமுவேல் ஃபிஷ்கிறீன்
மருத்துவக் கருத்துக்களைச் சொல்லுந் திறன் தமிழுக்குண்டு என்பதை யாழ்ப்பாணத்தில் தமிழ்மொழி மூலம் மருத்துவக் கல்வி புகட்டிய பெருமை அமெரிக்க சிலோன் மிஷன் மருத்துவப் பாதிரியாரான டாக்டர் சாமுவேல் ஃபிஷ்கிறீனைச் சாரும்.
மருத்துவ நூலாக்கத்திற்குக் கூட்டுமுயற்சி தேவை
மருத்துவம் தமிழில் கற்பிக்க மருத்துவ நூல்கள் எழுத முன்னேற்பாடாக 1858ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள பதிப்பாளர¤டம் உரிமை பெற்று டாக்டர் கிறீன் தானே மொழிபெயர்த்து நான்கு நூல்களை எழுதினார். இதைத் தொடர்ந்து இவரிடம் கற்றுத் தேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்களான டன்வதரால் ஒரு நூலும், த.வி.சப்மன் என்ற வைத்திலிங்கத்தால் மூன்று நூல்களும் வில்லியம் என்ற அப்பாபிள்ளை மற்றும் ச.வை.நாதானியேல் என்ற சாமிநாதனால் இரண்டு நூல்களும் எழுதப்பட்டுள்ளன.
இவைகளில் பல நூல்கள் த.வி.சப்மனால் பாஷாந்தரம் செய்ததாகவும் ச.சுவாமிநாதனால் பரிபாஷை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் கிறீன் தன் மாணவர்கள் நூல்களை எழுதிய பின்னர் அனைத்து நூல்களையும் பார்வையிட்டு. திருத்தப்பட்டதாக நூலின் முகப்பில் குறிப்பு உள்ளது. இதை நோக்கும்பொழுது நூல் சிறப்பாக விரைவில் வெளிவர ஒவ்வொரு நூலாக்கத்திற்கும் தனி மனிதன் முயற்சி மட்டும் போதாது கூட்டு முயற்சி தேவை என்பது புலனாகிறது.
டாக்டர் கிறீன் தமிழின் முதல் கலைச்சொல் கோட்பாட்டாளர். இவர் நூலில் தமிழ்க் கலாச்சாரத்தைச் சற்றேனும் குறைக்காது தமிழர்களிடையே நிலவிய அறிவியல் சார்ந்த சில நடைமுறை மருத்துவங்களையும் இணைத்து மேலை மருத்துவத்தைத் தமிழில் எழுதியதோடு நில்லாமல் 33 மாணவர்களை முதன் முதலில் தமிழ்வழி மேலை மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கிய பெருமை இந்த அமெரிக்கப் பாதிரியையே சாரும்.
டாக்டர் கிறீன் முதன்முதலாக மொழிபெயர்க்கத் தொடங்கிய நூல் கல்வின் கற்றரின் Anatomy, Physiology and Hygiene என்ற ஆங்கில நூல். இதன் தமிழாக்கம் அங்காதிபாதம், சுகரணவாதம், உற்பாலனம் (1852). இதுவே தமிழில் மருத்துவ நூல்கள் வரிசையிலுல் வெளிவந்த முதலாவது மேலை மருத்துவ நூல்.இதில் வெளிவந்துள்ள முன்னுரையில் அன்றைய மொழிநடை. சொற்பிரயோகம்.
கிரந்த எழுத்து. கலைச் சொல் பயன்பாடு. பண்டிதத்தமிழ். பேச்சுத் தமிழ் ஆகியவற்றை அறிந்துகொள்ள ஏதுவாகிறது. (எ.கா) ‘வைத்தியனாகிய கல்வின் கற்றர் இளைஞர்கள் கற்றுக் கொள்ளும்படி எழுதின ஓர் புத்தகத்திலிருந்து இப்புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டது. அவருடைய தயாளத்தினால் இப்பதிப்பில் பல படங்கள் சேகரித்துக் கொள்ளும்படி கிடைத்தன, அப்புத்தகத்திலே தமிழ்நாட்டாருக்கு ஒவ்வாதெனக் கண்ட சில அற்ப காரியங்களை மாத்திரம் அதினின்று சொற்ப விகற்பமாக்கி, இதிலே அவர்களுக்கு இணங்க எழுதியவை இத்தேசத்தவர்கள் அறியவேண்டிய வேறு சில காரியங்களும் கூட்டி எழுதப்பட்டிருக்கின்றன.’9
இதுபோன்ற சுய ஆசிரியர்களின் தோற்றம் முக்கிய சமூக அசைவாக்கமாகக் கருதப்படுகிறது. இவர்களே நவீன அறிவியலை சுதேசி மொழியில் படைத்தவர்கள். தாய்மொழியில் கல்வி என்ற கொள்கையின் தொடர்ச்சியாக அறிவியல் பாடநூல்களை மொழிபெயர்த்து பதிப்பித்தவர்கள்.
இங்க மேலைநாட்டுச் சிந்தனைகள் கருத்துகள் முதலியன அதே கலாச்சார வடிவில் இல்லாது உள்வாங்கும் கலாச்சாரத்தின் கூறுகள் உட்புகுத்தப்பட்டு பாரம்பரிய அறிவு வடிவிற்கு விளங்கக் கூடியதாக மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.
ஆகவே மொழிபெயர்ப்பு எனும் இச்செயல்பாடு நவீனத்தைத் தன் கலாச்சாரத்தினுள் வசப்படுத்தும் (Domestication) போக்கு என கருத இடமுண்டு. ‘இப்புத்தகத்தில் புதிய சொற்கள் அளவோடு கையாளப்பட்டுள்ளன. அவைகளும் அச்சொற்கள் வழங்கப்பட்ட பொருள்களின் சில குறிப்புகளைப் பற்றிச் சமஸ்கிருத பாஷையிலிருந்தே தெரிந்து கொள்ளப்பட்டன.’10
நூலில் பேச்சுத் தமிழ்
இவர் நூலில் உள்ள பாயிரத்தில் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வழக்கில் இருந்த (பேச்சு வழக்கு) பாயிரம், சுகத்தைக் காக்கும் விதம், பரிமாணங்கள், வைத்தியம், தயாளம், சொற்பவிகற்பம் காரியங்களுங்கூட்டி போன்ற சொற்களும் சொற்றொடர்களும் இலகுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் காணமுடிகிறது.
அறிவியல் துறையில் உழைத்த கிறீன் இறை பக்தியுடன் பாயிரத்தை முடித்தலும் தமிழ் இலக்கங்களைக் குறிப்பிடுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கன. இந்நூலில் எலும்புகள். பேசிகள், சீரண உறுப்புக்கள், இரத்த உறுப்புகள், சுவாசம், தோல், நரம்பு மண்டலம் போன்றவற்றிலே மூன்று பகுதிகள் விவரம், தொழில், பேணும் முறை ஆகியவை தனித்தனியாக உள்ளன. இது மாணவர் தெளிவு பெற உதவும் வண்ணம் தெளிவான படங்களுடன் தரப்பட்டுள்ளன. இப்படங்கள்.
‘கல்வின் கற்றர்’ (Dr.Calvin cutter) வழங்கியவை. ஒவ்வொரு அதிகாரத்திலும் முதற்பக்கத்திலே அவ்வதிகாரத்திலுள்ள கலைச்சொற்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் நூலில் உள்ள கலைச்சொற்கள் தமிழ் விளக்கத்துடனும், ஆங்கிலக் கலைச்சொல்லுடனும் இணைத்துத் தரப்பட்டுள்ளன.
இந்நூலை மொழி பெயர்க்கும்போது தமிழ்நாட்டாருக்கு ஒவ்வாதன கண்ட சிலவற்றை நீக்கியும் அறியவேண்டிய வேறு சில காரியங்களைக் கூட்டியும் எழுதிய யுக்தி ஆகிய இன்றைய சமுதாயத்தில் மொழி பெயர்ப்பா? தழுவலா? எது பொருத்தமானது என்போர்க்கு ஒரு சிறப்புச் செய்தியைக் கூறுகிறது.
மாணவர் நூலே பொதுமக்களுக்கும்
இரண வைத்தியம் (1867) என்ற நூலின் அறிமுகப் பகுதியில் மனித உடற்கூறு உடல் இயக்கம் பொதுவாக விவரிக்கப்பட்டுக் கடைசியில் கலைச்சொற்கள் விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் மருத்துவ மாணவர்களுக்கென எழுதப்பட்டுள்ளது என்றாலும் தமிழ் பாஷையைக் கற்றறிந்தவருக்கும் இது தெளிவாய் விளங்கும் என்பதே துணிவு என்று கூறியதிலிருந்து தமிழ்மொழி அறிந்த அனைவருக்கும் இந்நூல் பயன்பட்டுள்ளது அறியமுடிகிறது.
இந்நூலின் மொழிபெயர்ப்பு முறையை நாம் அறியும்போது அப்பட்டமான நேரடி மொழிபெயர்ப்பாக இல்லாது கிறீனுக்கு நல்லதென்று பட்ட உள்நாட்டு அறுவை முறைகளையும் இணைத்து எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கெமிஸ்தம் (1875) என்ற நூலில் உள்ள முகவுரையில் தாம் ஒரு சீர்திருத்த கிறித்தவப் பாதிரியார் என்பதை நிலைநாட்டி இந்து மதத்தைச் சாடவும் தயங்கவில்லை. இதை இப்புத்கத்தின் முகவுரை வழி அறிவோம். ‘இல்லாத சரித்திரமென்ற மப்பில் பதுங்கி தமிழருக்கு நாசமோசத்தை வருவிக்கும் சகுனம், சூனியம் முதலிய பொய்கள் நித்தமும் தடையின்றி உலாவுகின்றன. ரஸவாதத்திற்குப் பதிலாகப் பொருள்களின் கூறுகளைக் குறிக்கும் கெமிஸ்த வித்தையையும். சோதிட சாஸ்திரத்திற்குப் பதிலாக வான சாஸ்திரமும். பொய்யான கல்விக்குப் பதிலாக மெய்யான அறிவைத் தேசத்தில் நிறுத்துவது, ஊரிலும் மக்களிடமும் உள்ள கெட்ட எண்ணங்கள் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அகற்றுமென்று நம்பி விரும்புகிறபடியால் இப்புத்தகம் வெளியிடுகிறது.’ இதுவே இந்நூலின் நோக்கமாக அமைந்துள்ளது.
அடுத்து ‘மனுஷ சுகரணம்’ (1883) எனும் நூல் கிறீனினால் பார்வையிடப்பட்டு, த.வி.சப்மனால் எழுதப்பட்டது. இந்நூலின் முன்னுரையில் ‘இப்புத்தகம் வருங்காலத்துத் தமிழருள் இக்கல்வி ஓட்டத்துக்குத் தொடக்கமான நிலையாய் இருக்கட்டும். இவ்வோட்டம் மேற்கு தேசத்தாருள் முன்கண்ட ஓட்டத்துக்கு நிகராகக் கடவது’ இதுவே கிறீனின் ஆசையாக இந்நூலின் முன்னுரையிற் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேனாட்டில் மெத்த வளர்ந்துள்ள விஞ்ஞானம் தமிழரிடையே சரிநிகர் சமானமாகப் பரவுதல் வேண்டும். அதற்குத் தமது முயற்சி தொடக்கமாக அமைதல் வேண்டும் என்று விரும்பியது முன்னேற்றப் பாதையில் தமிழ்நாட்டினரை இட்டுச் செல்ல வழி வகுத்தது என நினைக்கத் தோன்றுகிறது.
மனுஷ அங்காதிபாதம் (1872) எனும் நூல் கிரே உடல் கூறு நூலை அடிப்படையாகக் கொண்டு த.வி.சப்மனால் எழுதப்பட்டு கிறீனினால் திருத்தப்பட்ட உடற்கூறு நூல் ஆகும். இந்நூலில் மிக விளக்கமான முறையில் படங்களும் விளக்கச் சித்திரங்களும் அமைந்துள்ளன. தமிழில் இது புதுமையான வெளியீடாகும்.
அகராதி
நூலினை இலகுவாகக் கற்க அங்காதிபாதம் சுகரணவாதம் உற்பாலனம் எனும் நூலின் இறுதியில் அருஞ்சொல் அகராதி தமிழ் விளக்கத்துடன் ஆங்கில கலைச்சொல்லுடன் தரப்பட்டுள்ளன. இதுபோலவே கெமிஸ்தம் நூலிலும் நூலின் இறுதியில் கலைச்சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இச்சொற்களைத் தவிர்த்து ஒரு தனி நூல் அருஞ்சொற்களை அடக்கிய அகராதி Vocabularies of Meteria medica and pharmacy of mid wifery and Diseases of Women, Children and of medical jurisprudence எனும் நூல் 1878இல் வெளிவந்தது. இதில் சொற்கள். பதார்தசாரம். சிகிச்சம். மருத்துவம். ஸ்திரி வைத்தியம். பாலர் வைத்தியம் ஆகிய துறைகளில் பிரயோகிக்கப்படும் அருஞ்சொற்கள் அமைக்கப்பட்ட முறை, சொல்லாக்க விதிகள் கூறப்பட்டுள்ளன, இந்த அருஞ்சொல்லகராதியில் ஆங்கிலம் - தமிழ், தமிழ் - ஆங்கிலமாக இரு தொகுதிகள் உள்ளன.
கலைச்சொல் மதிப்பீடு
1850ஆம் ஆண்டிலேயே கலைச்சொற்களைத் தொகுத்து புதிய சொற்களை உருவாக்க கிறீன் திட்டமிட்டிருந்தார். தமிழ்மொழியில் கலைச் சொற்களை உருவாக்குவது கடினமல்ல என்பது அவர் கருத்து. இதனை ‘அநேக சொற்கள் இப்பொழுதே தமிழில் உள்ளன. அவை அருமையான வைத்திய சொற்களாகும்.’11 என்ற கருத்து உறுதிப்படுத்தும்.
கிறீன் தம்முடைய நூல் தொடர்பான மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டபோது கலைச்சொற்களையும் கலைச்சொல்லாக்கக் கோட்பாட்டையும் உருவாக்கினார். கலைச்சொல் உருவாக்கத்தில் கிறீன் மொழித் தேர்வு முறையைக் கடைபிடித்துள்ளார்.
மொழித் தேர்வின் முதல் நிலையில் தமிழும் அடுத்த நிலையில் சமஸ்கிருதமும் இறுதி நிலையில் ஆங்கிலமும் இடம் பெற்றுள்ளன. இம்மூன்று மொழிகளிலிருந்து கிறீன் தம் கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார். சொற்களைத் தமிழிலும் தொடர்ந்து சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தேடவேண்டும் என விதி வகுத்துள்ள கிறீன் தமிழில் சொற்கள் இல்லாதபோது மட்டும் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என விதி வகுத்துள்ளார்.
அனைத்துலகப் பயன்பாட்டிறக்கான கலைச்சொல்
கிறீன் முறையான கலைச்சொல் கோட்பாட்டை வகுத்துக் கொண்டு பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார். திட்டவட்டமான விதிகளை அமைத்து அவற்றுக்கமைய புதிய சொற்களை ஆக்கிய கிறீன் கலைச்சொற்கள் பிரயோகத்தில் தமிழ்பேசும் மக்களிடையே ஒருமைப்பாடு காணவும் முயற்சி எடுத்தார்.
12 வேதியியல் சொற்களைக் கலைச்சொல்லாக்கும் போது சர்வதேச ஒருமைப்பாடு வேண்டும் என நினைத்த கிறீன் பெரும்பாலான வேதியியல் சொற்களை எழுத்துப் பெயர்ப்பு செய்துள்ளார். சொற்கள் இல்லாதபோது மட்டும் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என விதி வகுத்துள்ளார்.
துணையாளியின் கடமை என்ற அதிகாரத்தில் அறுவை மருத்துவரைச் சந்திர வைத்தியர் என்றும் வேகம் என்பதற்கு சடுதி என்றும் குளியலுக்கு, ஸ்நானம் என்றும் வடமொழியிலேயே அன்றைய நிலையில் கருத்துத் தெளிவுடன் இலகு தமிழில் கருத்துப் பரிமாற்றம் உள்ளது. இதில் பல நல்ல தமிழ்ச் சொற்களும் அமைந்துள்ளன... கிதீஷீக்ஷீtவீஷீஸீ கருவழித்தல்.
தமிழின் பொது மொழி வழக்கிலிருந்து சொற்களைத் தோ¢ந்தெடுக்கலாம் என்று பரிந்துரை செய்த கிறீன் பேச்சுமொழி நாட்டுப்புற வழக்குச் சொற்களின் பயன்பாட்டைப் பற்றிக் குறிப்பிடவில்லை. எனினும், நாட்டுப்புற வழக்குச் சொற்களையே அதிக எண்ணிக்கையில் கலைச்சொற்களாகப் பயன்படுத்தியுள்ளார். சான்றாகப் பின்வரும் சொற்களைக் குறிப்பிடலாம்.
Chest - நெஞ்சு; Mania - பையித்தியம்.
Alopecia- மொட்டை; Condiment - காரசாரம்14
சமஸ்கிருத சொற்களையும் சமஸ்கிருத - ஆங்கில, ஆங்கில - சமஸ்கிருத அகராதியிலிருந்து தேர்ந்தெடுத்து இரண்டு அகராதிகளிலும் இடம்பெற்றுள்ள சொல்லைச் சரியானதாகத் தேர்ந்தெடுத்து கலைச்சொல்லாக்க வேண்டும் என்பது அவர்தம் நெறிமுறை.
பொதுச் சொற்களையும் அகராதிச் சொற்களையும் கலைச் சொற்களாகக் கருத விதி வகுத்த கிறீன் அச்சொற்களைக் கலைச்சொற்களாகக் கருதும்போது ஒரு குறிப்பிட்ட பொருளிலேயே வழங்க வேண்டும், பொருள் வரையறை செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறார். தமிழ் சமஸ்கிருத மொழிகளில் உள்ள பகுதி விகுதிகளை இணைத்தும் தமிழ், சமஸ்கிருதம் சொற்களை உருவாக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளார். ஆங்கில கலைச்சொற்களுக்கு இணையான சொற்களைத் தொகைச் சொல்லாக்க முறையில் உருவாக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.15
மொழிபெயர்ப்பு - விதிமுறைகள்
ஆங்கிலக் கலைச்சொல்லின் பகுதிகளைத் தனித்தனியே மொழி பெயர்த்து கலைச்சொற்களை உருவாக்கலாம் என விதி வகுத்துள்ள கிறீன் ஆங்கிலத் தொடரின் பகுதிகளைத் தனித்தனியாகத் தமிழில் மொழி பெயர்த்து பின் அவற்றை இணைக்கலாம் எனவும் ஆங்கிலத் தொடரின் பகுதிகளைத் தனித்தனியாக சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து பின் அவற்றை இணைக்கலாம் என்பதும் அவர் விதிகளில் ஒன்று.
கலைச்சொல்லாக்கத்தில் சொற்கள் கிடைக்காதபோது பிறமொழிச் சொற்களை இணைத்துச் சொல்லாக்கும் கடன் கலப்பு முறையை ஏற்றுக் கொள்ளவும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார். மூலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லுடன் சமஸ்கிருதத்தை இணைத்து வழங்கலாம் எனவும், மூலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லுடன் ஆங்கிலச் சொல்லை இணைத்து வழங்கலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளார்.
ஆங்கிலக் கலைச்சொற்களின் முன்னொட்டுக்களையும் (Prefixes) பின்னொட்டுக்களையும் (Surfixes) மொழி பெயர்ப்பதற்கான விதிகளை கிறீன் வகுத்துள்ளார். இந்த முறையைப் பயன்படுத்தியுள்ளதால் அவருடைய சீர்மை புலப்படுகிறது.
எழுத்துப் பெயர்ப்பு
உள்நிலையாக்கம் மொழிபெயர்ப்பு பற்றிக் கருத்து தெரிவித்துள்ள கிறீன் எழுத்துப் பெயர்ப்பு பற்றிய சொல்லை அதன் ஒலிப்படி தமிழ் எழுத்தால் எழுதிக் கொள்ளவும் என விதி வகுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக டாக்டர் கிறீனைப் பார்க்கும்போது மருத்துவ, வேதியியல், தாவரவியல் நூல்களை வெளியிட்டவர் என்ற பெருமையோடு இவரே தமிழின் முதல் கலைச்சொல் கோட்பாட்டாளர் என்று கூறுவது மிகப் பொருத்தமுடையதாகும்.16
அறிவியல் தமிழுக்கான இலக்கண நெகிழ்வு கிறீன் காலத்திலேயே தொடங்கிவிட்டது.
மூலநூல் ஆசிரியரை ‘வெல்சு பண்டிதர்’ (Dr.Wells) எனத் தமிழாக்கிய கிறீன் Chemistry என்பதனை, கெமிஸ்தம் என எழுதினார். ஆங்கிலச் சொல்லின் உச்சரிப்பைப் பேணி விகுதியைத் தமிழ் மொழிக்கமைய எழுதும் அவரது கலைச் சொல்லாக்க வழிக்கு இது ஓர் உதாரணமாகும்.17
ஒலியமைதிக்காதத் தேவையான இடத்தில் வட எழுத்துக்களும் உள. Samuel என்ற பெயரை சமுல் எனவும் Daniel என்ற பெயரை தனெல் எனவும் ஒலிபெயர்த்துள்ளார்.
தமிழில் சில எழுத்துக்கள் முதலில் வருதல் தமிழ் வழக்கல்ல. (எ.கா). ட, ல. Daniel என்ற பெயர்ச் சொல்லை இக்காலத்தில் நாம் டானியல் என எழுதத் தொடங்கி விட்டோம். ஆனால். அன்று கிறீன் அதை தனெல் எனத் தமிழாக்கினார். லண்டன், லங்கைக்கு ‘இ’ புகுத்தப்படவில்லை.
எனவே. தமிழாக்கும்போது ஒலியமைதி பெறுவதை கிறீன் குறிக்கோளாகக் கொண்டாரன்றி இலக்கண மரபை அல்ல என்பது தெளிவு. மற்றொரு எடுத்துக்காட்டு Crystal என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பு கிருஸ்தல் எனப்படுகிறது. இதில் வட எழுத்துடன் தமிழ் விகுதியையும் இணைத்துள்ளார். உரைநடை சொல்லாட்சியின்போது மிச்சமான, சீசா, கொஞ்சம் போன்ற பேச்சுத் தமிழ்ச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன.
கிறித்தவ வட்டார மொழிக் கல்விச் சங்கம் - ஜான்முர்டாக்
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிறித்தவ வட்டார மொழிக் கல்விச் சங்கம் சென்னை மாகாணத்தில் மிகப் பெரும் அச்சு சக்தியாக வளர்ந்தது. இதன் செயலாளர் ஜான்முர்டாக். இவர் வட்டார மொழிக் கல்வி பரவுதலை ஆதரித்தார். கல்விப் பாடநூல்கள் முதலியன கருத்தியல் சார்ந்தவை என்பதை கி.வ.க.சங்கம் உணர்ந்திருந்தது.
இச்சங்கத்தின் மூலம் முர்டாக் வெளியிட்ட பாடநூல்கள் மிசினரி பள்ளிகளில் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்தன. இவைகளில் பலவற்றில் தாய்மொழிக் கல்வியே நடைபெற்றது. மிசினரி பள்ளிகளில் மட்டுமின்றி மற்ற பள்ளிகளிலும் இப்பாடநூல்கள் பயன்படுத்தப்பட்டன.
ஜான் முர்டாக் இச்சங்கத்தின் மூலம் மொத்தமாக 240 பாடப் புத்தகங்களையும். பிற புத்தகங்களையும் 14 இந்திய மொழிகளில் 3 மில்லியன் பிரதிகளை வெளியிட்டார். இவர் இந்திய மரபு வழி அறிவு முற்றிலும் பயனற்றது, தவறானது, மூட நம்பிக்கை உடையது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
இந்தியாவின் மரபுப் பழக்கங்களில் உள்ள குறைகளை, தீமைகளைச் சுட்டிக் கடுமையாக எதிர்த்தவர் முர்டாக். இயற்கைத் தத்துவக் கருத்துக்களை வெளிப்படுத்துவதாக அவருடைய சங்க நூல்களும் அமைந்திருந்தன. இவைகள் இந்திய மரபுக் கருத்துக்களை மூடநம்பிக்கை என சாடியது. மேலும் சோதிடம், பெண்களுக்குக் கல்வி அளிக்காமை, சாதியம் முதலியவற்றை விமர்சிப்பதாக அமைந்திருந்தது.
ஜான் முர்டாக் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அதுவரை வெளியான நூல்களில் தகவல்களைத் திரட்டி இரண்டு நூலடைவுகளை 1868இல் தயாரித்தனர். இத்தகைய நூலடைவு மூலம் மறுவெளியீட்டுக்கும் மொழிபெயர்ப்புக்கும் ஏற்ற நூல்களையும் வாசகர்கள் விரும்பும் நூல்களையும் கண்டறிவது அவரது நோக்கமாக அமைந்தது.
1706இல் டேனிஷ் மிசினா¤களின் வெளியீடுகள் முதற்கொண்டு 1868 வரையில் சற்றேறக்குறைய 4200 வெளியீடுகள் பற்றிய தகவல் இந்நூலடைவில் உள்ளது. இந்த நூலடைவில் வகுப்பு டி (Class - D) எனும் பிரிவில் இயற்கை அறிவியல் எனும் தலைப்பில் அறிவியல் நூல்களைத் தொகுத்துள்ளார்.18
இந்நூல்களில் பெரும்பான்மை சித்த மருத்துவம் ஆயுதர்வேத மருத்துவம் சார்ந்ததாகவும் சிறுபான்மை அலோபதி மருத்துவம் சார்ந்ததாகவும் உள்ளன.
முர்டாக் தமது பட்டியலில் ஒவ்வொரு நூலின் சுருக்கமும் ஆசிரியர் பெயரும் அதன் விலையும் அச்சான ஆண்டும் பக்க எண்ணிக்கையும் வெளியிட்டவர் பெயரும் கொடுத்துள்ளார். இலக்கிய வரலாறு எழுதுகிறவர்களுக்கு இக்குறிப்புகள் முடிவில்லாத பயனைத் தருவதாக உள்ளது.
முர்டாக் நூலடைவில் கிறித்தவ சமய நூல்களே மிகுதி. இதற்குக் காரணம் நடைமுறையில் இருந்த அச்சகச் சட்டம். முர்டாக்கின் இப்பட்டியல் மற்றொரு மறைமுகப் பயனையும் தந்தது. தமிழர்களுக்கு அச்சான நூல்களை வெளியிடுவதில் ஐரோப்பியர்களைவிட பின்தங்கியுள்ளதை உணர்கின்றவர்களுக்கு மேலும் பல நூல்களை வெளியிட ஊக்கம் அளித்தது.
இத்தகைய நூலடைவு மூலம் மறுவெளியீட்டுக்கும் மொழி பெயர்ப்புக்கும் ஏற்ற நூல்களையும் வாசகர் விரும்பும் நூல்களையும் கண்டறிவது அவரது நோக்கமாக அமைந்தது. கலை சம்பந்தப்பட்ட நூல்கள் சிலவே உள்ளதை முர்டாக் காட்டியுள்ளார். ஆயினும் ஓவியம், சிற்பம், கட்டிடம், கலை தொடர்பாக எந்த நூலும் இல்லை என்பதையும் சுட்டியுள்ளார். இக்கருத்து தமிழருக்கு ஒரு மறைமுக அறிவுரையாகக் கருதத் தக்கது,
மதிப்பீடுகள்
காலனி ஆட்சியின் தொடக்கத்தில் வெளியான இயற்கை அறிவியல், மருத்துவம் சார்ந்த நூல்கள் அனைத்தும் ஐரோப்பியர் அதுவும் குறிப்பாக பாதிரிகளால் எழுதப்பட்டவை. பிஷ்கிறீன் பல மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதினார்; கற்பித்தார், மாணவர்களையும் எழுதத் தூண்டினார். அவருக்கு அரசு அங்கீகாரம் முதலில் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தமிழில் நூல்களை வெளியிட்டார்.
ஆகவே இவரைத் தமிழ்வழி மருத்துவத்தின் தந்தை எனலாம். இவர்கள் அறிவியல் ஆய்வில் ஈடுபடுவது மதத்திற்கு முரணாகக் காணப்படவில்லை. கடவுளின் பெருமையை விளக்கும் ஓர் மார்க்கமாக அறிவியல் காணப்பட்டது. இந்தப் பின்னணியில் பொய்யான மதத்தையும் மெய்யான கடவுளையும் சுட்டிக் காட்டுவது என்ற மிசினரிகளின் பணியின் ஓர் அங்கமாக அறிவியல் நூல் வெளியீடுகள் அமைந்திருந்தன.
19 மேலும் இப்பாதிரிகளால் உருவாக்கப்பட்ட கிறித்தவ வட்டார மொழிக் கல்விச் சங்கம் பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவித்ததால் பள்ளிகள் பெருகின. மேலும் வட்டார மொழிகளில் நூல்கள வெளிவந்ததால் பள்ளிகள் பெருகின. மேலும் வட்டார மொழிகளில் நூல்கள் வெளிவந்ததால் தாய்மொழிக் கல்விக்கு வித்திட்டது.
ஆங்கில ஆட்சிக்குப் பிறகு மேலைக் கருத்துக்களின் தாக்கத்தின் விளைவாகவும் அரசு அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவும் தமிழ்ச் சமுதாயத்தில் சில அசைவாக்கங்கள் உருவாயின. கல்வி என்பது போற்றுதலுக்குரியதாகிறது. சமூகம் முன்னேற கல்வி ஓர் ஏணியாக பயன்பட்டது. முன்பு நிலவி வந்த பிறப்பின் அடிப்படையில் சமூக அந்தஸ்து என்ற நிலைக்கு இப்புதிய போக்கு சவாலாக அமைந்தது.
தமிழ்க் கலாச்சாரத்தில் உள்ள மூடப் பழக்கங்களை ஒழிப்பது கல்வி மூலம் அகற்றுவது என்ற நோக்கில் பல நூல்கள் எழுதப்பட்டன. கல்வி பரவுதலுக்கான பாடப் புத்தகங்கள் தயாரிப்பு என்ற தேவையின் தொடர்ச்சியாக அறிவியல் நூல்கள் சுதேச மொழியில் வெளியிடப்பட்டன. மேலை மருத்துவமும், சுதேசி மருத்துவமும் கலந்து சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
துண்டுப் பிரசுரங்கள் வழியே காலரா போன்ற நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாளடைவில் ஐரோப்பியர்கள் மட்டுமே அறிவியல் நூல்களைப் படைக்கும் நிலை மாறித் தமிழ் மக்களும் அறிவியல் நூல்களை எழுத முற்படும் நிலை ஏற்பட்டது.
மேலும் 1857இல் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இங்கிலாந்து இராணி இந்திய அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் விளைவாக ‘மதராஸ் ஸ்கூல் புக்ஸ் அண்ட் வெர்னாகுலர் லிட்டரேட்சர் சொசைட்டி’ எனும் நிறுவனம் நிறுவப்பட்டது. இச்சங்கம் மலிவு விலையில் பள்ளிப் பாட நூல்கள் மற்றும் அறிவியல் இலக்கிய நூல்கள் முதலியவற்றை வெளியிட்டது.
1880களில் தமிழகத்தில் ஒரு புதிய வளர்ச்சி ஏற்பட்டது. தமிழகத்தில் பல பகுதிகளிலும் அறிவியல் மற்றும் இலக்கியச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. 1885இல் தொடங்கப்பட்ட விழுப்புரம் கல்விக் கழகத்தின் குறிக்கோளாக அறிவியல் மற்றும் இலக்கியங்களைப் பற்றி விவாதித்து கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கு முற்படுவது என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர பல நூலகங்களும் தொடங்கப்பட்டன. இத்தகைய சங்கங்கள் வேறுபட்ட மொழி, இனம், மதம், ஜாதிப் பிரிவுகளிலிருந்து உருவான பல படித்த புதிய பிரிவினர்களை ஒருமுகப்படுத்தும் மேடையாக அமைந்ததோடு நில்லாமல் காலனியாதிக்கத்திற்கு எதிராகக் குரலெழுப்பும் மேடையாகவும் திகழ்ந்தது.
இக்கால கட்டத்தில் தமிழகத்தில் வளர்ந்து வந்த இச்சங்கங்கள் படித்த புதிய சமூகப் பிரிவினர் சமூக மதிப்பு அடைய வழி வகுத்ததோடு அல்லாமல் கல்வி என்பதற்குச் சமூக மதிப்பை உயர்த்தி உறுதிப்படுத்தியது. கிருத்துவப் பாதிரியார்கள் முன்னத்தி ஏர்போல மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகத் தமிழில் புதிய உரைநடை, வரலாறு ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட்டது. கலைச் சொற்களை உருவாக்குவதோடு நின்றுவிடாமல் அவற்றை அகராதிகளாகத் தொகுக்கின்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையில் மு.ஜெகந்நாத நாயுடு போன்ற தமிழில் ஆர்வமுடைய சான்றோர் தொடர்ந்து மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதினார்கள். எண்பதுகளில் தோன்றிய தமிழ்ப் பல்கலைக்கழகமும் தொடர்ந்து அறிவியல் மருத்துவ நூல்களை வெளியிட்டு வருகின்றது. கலைச் சொற்கள் உருவாக்கமும், தரப்படுத்தலும் செய்யப்பட்டு. கலைச் சொல்லகராதிகள் வெளிவருகின்றன. இவையாவற்றிக்கும் கிருத்துவப் பாதிரியார்களின் புதிய மருத்துவ அறிவியல் நூலாக்க முயற்சிகளே அடிப்படை என்று துணிந்து கூறலாம்.
அடிக்குறிப்புகள்
- C.S.Mohanavelu, German Temilology, (Chennai: Saiva Siddhantha publications, 1993), 132.
- சு.நரேந்திரன், கிறித்தவமும் அறிவியலும் (சென்னை: கொற்றவை வெளியீடு. 2014), 156.
- தொ.பரமசிவம், பதி., இரேனியஸ் தமிழியல் முன்னோடி (திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2000), 4.
- கா.மீனாட்சிசுந்தரம், ஐரோப்பியர் தமிழ்ப்பணி (சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம், 1974), 62.
- இரா.பாவேந்தன், தமிழில் கலைச்சொல்லியல் (தஞ்சாவூர்: தமிழ் பல்கலைக்கழகம், 2003), 101.
- இரா.பாவேந்தன், தமிழில் அறிவியல் இதழ்கள் (கோயம்புத்தூர்¢: சாமுவேல் ஃபிஷ்கிறீன் பதிப்பகம், 1998), 164.
- சு.நரேந்திரன், கிறித்தவமும் அறிவியலும், 96.
- தொ.பரமசிவம், பதி., இரேனியஸ் தமிழியல் முன்னோடி (திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 200), 30.
- அம்பி, மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன் (சென்னை திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1995), 78.
- மேலது, 107.
- மேலது, 106.
- மேலது, 109.
- மேலது, 109.
- கிறீன். மனுஷ அங்காதி பாதம் (யாழ்ப்பாணம் மானிப்பாய் அச்சுக்கூடம், 1872), 890.
- இரா.பாவேந்தன், தமிழில் கலைச்சொல்லியல், 169.
- மேலது, 170
- அம்பி, மருத்துவத்தமிழ் முன்னோடி, டாக்டர் கிறீன், 142.
- சா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சா.உதயசூரியன், பதி., அறிவியல் தமிழ் வளா¢ச்சி (தஞ்சாவூர் அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 1872), 13.
- த.வி.வெங்கடேஸ்வன், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் அறிவியல் புரிதல்களும் போக்குகளும் (தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 2000), 289.
சான்றாதாரங்கள்
- அம்பி. மருத்துவத்தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன். சென்னை: திருநெல்வேலி. தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். 1995.
- கிருஷ்ணமூர்த்தி, சா. மற்றும் உதயசூரியன், சா., (பதி.) அறிவியல் தமிழ் வளா¢ச்சி. தஞ்சாவூர்: அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், 1999.
- கிறீன். மனுஷ அங்காதி பாதம், யாழ்ப்பாணம்: மானிப்பாய் அச்சுக்கூடம், 1872.
- நரேந்திரன். சு., கிறித்தவமும் அறிவியலும், சென்னை: கொற்றவை வெளியீடு, 2010.
- பரமசிவம். தொ., பதி., இரேனியஸ் தமிழ¤யல் முன்னோடி. திருநெல்வேலி: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2000.
- பாவேந்தன், இரா., தமிழில் அறிவியல் இதழ்கள். கோவை: சாமுவேல், ஃபிஷ் கிறீன் பதிப்பகம், 1998.
- பாவேந்தன், இரா., தமிழில் கலைச்சொல்லியல். தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்ழகம், 2003.
- மீனாட்சிசுந்தரம், கா., ஐரோப்பியர் தமிழ்ப்பணி. சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம், 2003.
- வெங்கடேஸ்வரன்,த.வி., இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் அறிவியல் புரிதல்களும் போக்குகளும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 2001.
- Mohanavelu, C.S,German Tamilology. Madras: Saiva Siddhantha Publications, 1993
- டாக்டர் சு.நரேந்திரன்