s 450பதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் கிறித்தவர்களின் அடிப்படைச் சமய நூலாக விளங்குவது பைபிள். புத்தகங்களைக் குறிக்கும் பிபிலியா என்ற கிரேக்க மொழிச் சொல்லின் திரிபு வடிவமே பைபிள் என்ற ஆங்கிலச் சொல். 16-ஆவது நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தின் புன்னைக்காயல் என்ற கடற்கரைச் சிற்றூரில் வாழ்ந்த அண்டரிக் அடிகளார் என்ற போர்ச்சுக்கீசிய நாட்டு சேசுசபைத் துறவி பிபிலியா என்ற சொல்லை ‘விவிலிய’ என்றழைத்தார். இதுவே பின்னர் விவிலியம் எனத் திரிபடைந்தது.

ஞாயிறு வழிபாட்டிற்காகத் தேவாலயம் செல்லும் கிறித்தவர்கள், கருப்பு அட்டையுடனும் நூலின் விளிம்புகளில் சிவப்பு வண்ணத்துடனும் அமைந்த தமிழ் விவிலியத்தைக் கரங்களில் சுமந்தவாறோ, மார்பில் அணைத்தவாறோ செல்வது பரவலாக நாம் காணும் காட்சி. ஒருவகையில் கிறித்தவர்களுக்கான தனி அடையாளமாக இது விளங்குகிறது.

மிக எளிதாக இன்று கிடைக்கும் தமிழ் விவிலியம், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டமைக்கு நெடிய வரலாறு உண்டு. இவ்வரலாறானது, கிறித்தவம் என்ற சமய எல்லையைக் கடந்து, தமிழ் மொழியில் நிகழ்ந்த உரைநடை நூல் ஒன்றின் மொழிபெயர்ப்பின் வரலாறாகவும் அமைந்துள்ளது. இதனால் தமிழ் இலக்கிய வரலாறின் ஓர் உறுப்பாக, விவிலியத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு முயற்சிகளைக் கொள்ள இயலும்.

தமிழில் மொழிபெயர்ப்பு

பண்டையத் தமிழர்களுக்கு, பாலி பைசாசம், சமஸ்கிருதம் ஆகிய வடபுலத்து மொழிகளுடன் தொடர்பு இருந்துள்ளது. ஆயினும் இம்மொழிகளில் இருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் எவையும் இன்று நமக்குக் கிட்டவில்லை. என்றாலும் மொழி பெயர்ப்பு முயற்சிகள் தொடர்பான சான்று ஒன்று தொல்காப்பியம். எச்சவியலில் (நூற்பா. 884) காணப்படுகிறது. வடமொழி ஒலிகளைத் தவிர்த்து விட்டு தமிழ் எழுத்தில் வடமொழிச் சொற்களை எழுதுவதை இந்நூற்பா குறிப்பிடுகிறது.

மகாபாரதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதை ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும்’ என்று கி.பி. பத்தாம் நூற்றாண்டுக் காலத்திய சின்னமனூர் செப்பேடு குறிப்பிடுகிறது. ஆனால் இன்று நமக்கு இந்நூல் கிட்ட வில்லை.

நேரடியான மொழிபெயர்ப்பாக இன்றி அம்மொழியில் எழுதப்பட்ட நூல்களை வடமொழி அறிவின் துணையுடன் தமிழில் தழுவி எழுதிய நூல்கள் சில நம்மிடையே இன்றும் வழங்குகின்றன. தண்டி அலங்காரம், கம்பரது இராமாயணம் என்பன தழுவல் நூல்கள்தாம். பைசாச மொழியில் இருந்து வடமொழிக்குச் சென்ற ‘பிருகத்கதா’ என்ற காவியத்தின் தழுவலாக கொங்குவேளரின் பெருங்கதை அமைந்துள்ளது.

மொழிபெயர்ப்பு என்பதற்கு நாம் இன்று கொள்ளும் பொருளுக்குப் பொருந்துமாறு அமைந்த முதல் மொழி பெயர்ப்பு விவிலிய மொழி பெயர்ப்புதான். இம்மொழி பெயர்ப்பு திடீரென்று நிகழவில்லை. இதற்குப் படிப் படியான வளர்ச்சி நிலை உண்டு. இவ்வளர்ச்சி நிலை குறித்த அறிதலே தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு வரலாறாகும். இவ்வரலாறானது பதினாறாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் போர்ச்சுக்கீசியர் நிலைகொண்டமையில் இருந்து தொடங்குகிறது.

தமிழகத்தில் போர்ச்சுக்கீசியர்

கி.பி.16-ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான முத்துக்குளித் துறைக் கடற்கரைப் பகுதியில் போர்ச்சுக்கீசியர்கள் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர். இதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் கடல்சார் தொழில் மேற்கொண்டு வாழ்ந்து வந்த பரவர் அல்லது பரதவர் என்ற மக்கள் பிரிவினர் கத்தோலிக்கர்களாக மதம் மாறினர். இம்மதமாற்ற நிகழ்வே விவிலிய மொழி பெயர்ப்புக்கு வித்திட்டது எனலாம்.

அச்சுநூல்கள் அறிமுகமாகாத, அக்காலத்தில் கத்தோலிக்கக் குருக்கள், தம் சமயம் சார்ந்த வழிபாட்டு முறைகளை, புதிய கத்தோலிக்கர்களுக்கு அறிமுகம் செய்வதில் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டனர். சில அடிப்படை மன்றாட்டுகளை (செபம்) யாவது தமிழில் கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. அக்கால கட்டத்தில் இலத்தீன் மொழியே உலகக் கத்தோலிக்கத் திருச்சபையின் வழிபாட்டு மொழியாக விளங்கியது. தேவாலய வழிபாட்டின் போதும் அன்றாடம் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய மன்றாட்டுகளின் போதும் அவர்கள் கூறவேண்டிய மன்றாட்டுகளைத் தமிழாக்கம் செய்ய வேண்டிய தேவை இருந்தது. இதை நிறைவு செய்யும் வகையில் சில வழிபாட்டு மந்திரங்களையும், மன்றாட்டுகளையும் தமிழில் மொழிபெயர்த்தனர். இம்மொழிபெயர்ப்பு முயற்சிகள் விவிலிய மொழி பெயர்ப்புக்கான முன்னோடி முயற்சிகளாக அமைந்தன.

முன்னோடி முயற்சிகள்

தமிழ்நாட்டில் கிறித்தவம் அறிமுகமான 16-ஆம் நூற்றாண்டு தொடங்கி 17-ஆம் ஆண்டு முடிய விவிலிய மொழி பெயர்ப்பு தொடர்பான திட்டமிடல் எதுவும் நிகழாவிடினும் விவிலியத்தின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை மொழி பெயர்க்கும் பணியினை கத்தோலிக்கக் குருக்கள் தொடங்கி வைத்தனர்.

கிறித்தவப் புனிதர்களின் வரலாற்றைக் கூறும் ஃபிளாஸ் சாங்ட்ரோம் என்ற ஸ்பானிய மொழிநூல் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இலத்தீன் மொழியில் இருந்து மூன்றாண்டு கால முயற்சியில் அண்ட்ரிக் அடிகளார் என்ற சேசுசபைத் துறவி இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். கி.பி.1586-ஆம் ஆண்டில் அவரது இம்மொழிபெயர்ப்பு ‘அடியார் வரலாறு’ என்ற பெயரில் வெளியானது. இந்நூலில் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள யேசுவின் மலைப்பொழிவு (செர்மன் ஆஃப் தி மவுண்ட்) தமிழ் வடிவில் முதல்முறையாக இடம் பெற்றுள்ளது. இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் தமிழ் விவிலிய மொழி பெயர்ப்பின் முதல் கட்டமாக இம்மொழிபெயர்ப்பு அமைகிறது.

இதனையடுத்து 17-ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க குருக்கள் விவிலியத்தின் சில பகுதிகளை மொழி பெயர்த்துள்ளார்கள். இது வினா விடை வடிவில் அமைந்திருந்தது. ஓலைச் சுவடியில் இதை எழுதி யுள்ளார்கள். உரையாடலைக் குறிக்கும் ‘சல்லாபம்’ என்ற வடமொழிச் சொல்லால் இவை குறிக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகத்தில் ‘சல்லாபம் சுவடிகள்’ பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இச்சுவடி களைப் பார்வையிட்ட, போதகர் முத்துராஜ் சில சுவடிகளில் அவை எழுதப்பட்ட காலம் குறிப்பிடப் பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளார். கி.பி. 1666, 1667, 1677 என அச்சுவடிகளில் ஆண்டு குறிப்பிடப் பட்டுள்ளது. இச்சுவடிகள் அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ‘புதிய ஏற்பாட்டுச் சல்லாபம்’,  ‘உபாகமச் சல்லாபம்’, ‘1, 2 ராஜாக்கள் சல்லாபம்’, என்று பெயரிடப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் இவை, டி.நோபிலியால் எழுதப்பட்ட ‘நித்திய ஜீவன் சல்லாபம்’ என்ற நூலின் மூலச்சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்ட நகல்களாக இருக்க வேண்டும் என்று விவிலியமும் தமிழும் (1990) என்ற தமது நூலில்  சரோஜினி பாக்கியமுத்து எழுதியுள்ளார். அத்துடன் போதகர்  முத்துராஜாவைப் பகடி செய்யும் தொனியில் அவரது கருத்தை மறுத்துள்ளார்.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள செயசீல ஸ்டீபனின் நூல் (2017:128) போதகர் முத்து ராஜாவின் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் சில உண்மைகளை முன்வைக்கிறது.

கி.பி.1739, 1750-ஆம் ஆண்டுகளில் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட தமிழ் விவிலிய மொழி பெயர்ப்புகள், புதுச்சேரியில் இருந்து பிரான்சுக்கு கப்பல்கள் வாயிலாகச் சென்றதாகக் குறிப்பிடுகிறார். இம்மொழிபெயர்ப்புகள் இலத்தீன் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டன. ஓலைச்சுவடியில் தமிழ் விவிலியத்தை எழுதுவதற்காக எழுத்தர்களை நியமித் திருந்தனர். இச்சுவடிகளின் தலைப்புகள் பின்வருமாறு உள்ளன.

·               கத்தோலிக்கரின் புதிய ஏற்பாட்டுச் சல்லாபம்

·               பழைய ஏற்பாட்டுச் சல்லாபம்

·               ராஜாக்களின் சல்லாபம்

இச்சுவடிகளில் உள்ள, கிரேக்க ஹீப்ருமொழிச் சொற்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படாமல் எழுத்துப் பெயர்ப்புகளாகவே இடம் பெற்றுள்ளன. ஆமென், அல்லேலுயா பாஸ்கா, ஓசன்னா என்ற சொற்கள் எழுத்துப் பெயர்ப்புகளாகவே உள்ளன.

அத்துடன் பேச்சுத்தமிழில் இடம்பெறும் ஜீவன், விசுவாசம், ரட்சிப்பு, ராப்போசனம், மாமிசம், பிதா, புத்திரன், காரியம், விசேஷம், ஜலம், சத்ரு, அபிஷேகம், ஆராதனை, ஜெபம் ஆகிய வடமொழிச் சொற்கள் பரவலாக இடம் பெற்றுள்ளன.

ஆட்பெயர்கள் சில, மாற்றம் பெற்றுள்ளன. பீட்டர் ராயப்பராகவும், ஜான் அருளப்பராகவும், பவுல் சின்னப்பராகவும் ஆண்ட்ரு பிலவேந்திரர் ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இம் மொழிபெயர்ப்புகள் ஞாயிறு வழிபாட்டில் படிக்கப்பட்டன. ஓலைச்சுவடியில் எழுதிப் பழக்கமில்லாததால் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் அய்ரோப்பாவில் இருந்து காகிதம் வரவழைத்து அதில் எழுதினார்கள். அதைப் பார்த்து ஓலைச்சுவடியில் படி எடுக்க எழுத்தர்களை நியமித்தனர். இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.

பிரான்சில் உள்ள ஒரு காகிதப்படியின் இறுதியில் ‘வைகாசி எட்டாம் நாள் அர்ச்சிஷ்ட விவிலிய புஸ்தகம் எழுதி முடிந்தது’ என்றுள்ளது (22 மே 1702 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது). இக்காகிதப் படியை எழுதியவர் பெயர் ஞானப்பிரகாசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கையெழுத்துப் படியானது  புதுச்சேரியில் இருந்து கான்ஸ்டாண்டின் நோபிள் வழியாக பிரான்சை அடைந்துள்ளது.

இவ்வாறு பகுதி பகுதியாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விவிலியத்தின் புதிய ஏற்பாடு நூல் வடிவில் 1714-ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டு வெளியானது. இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழில்தான் விவிலியம் அச்சிடப் பட்டது என்ற பெருமையைத் தமிழுக்கு வழங்கியவர் சீகன் பால்க் என்ற ஜெர்மானிய மதகுரு ஆவார்.

D 450சீகன்பால்க்

இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி என்ற கடற்கரையூர் கி.பி.1620-ஆம் ஆண்டில் டேனிசியர்களால் குத்தகைக்கு எடுக்கப் பட்டிருந்தது. டேனிஷ் மன்னனான நான்காம் பிரடரிக் என்பவனின் விருப்பத்திற்கிணங்க இங்கு கிறித்தவப் பரப்புதலை மேற்கொள்ள ஜெர்மானிய நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட சீர்திருத்தக் கிறித்தவ சபைக் குருவே பரதாமஸ் சீகன்பால்க்.

9 ஜுலை 1706-ஆம் ஆண்டில் இங்கு வந்து சேர்ந்த இவர் மணலில் எழுதிப் பழகி, ஓலைச்சுவடிகளின் துணையுடன் தமிழ் கற்றறிந்தார். சீர்திருத்தக் கிறித்தவ சபையில் சேர்ந்த தமிழகக் கிறித்தவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் விவிலியத்தை கிரேக்க மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். குருண்டலர் என்ற செர்மானிய மதகுருவும் இப்பணியில் துணைநின்றார்.

இப்பணியின் முதற் கட்டமாக  கி.பி.1715இல் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழி பெயர்த்தார். யேசுவின் நேரடிச் சீடர்களான மாற்கு, மத்தேயூ லூக்கா, யோவான் என்ற நால்வரும் எழுதியவை புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளன. இவை தனித்தனி நூல்களாகும். இந்நான்கு நூல்களையும், ‘காஸ்பல்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இதை ‘சுவிஷேஷம்’ என்று முன்னர் வடமொழியில் அழைத்தனர். தற்போது ‘நற்செய்தி ஏடு’ என்ற நல்ல தமிழ்ப் பெயரால் கத்தோலிக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நான்கு நூல்களுடன், புதிய ஏற்பாடு பகுதியில் உள்ள ‘அப்போஸ்தலர் நடபடிகள்’ என்ற நூலையும் சீகன்பால்க் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த அய்ந்து நூல்களின் தொகுப்புக்கு ‘அஞ்சுவேதப் பொத்தகம்’ என்று அவர் தலைப்பிட்டிருந்தார். இத்தலைப்பை அவர் இட்டதற்கு வரலாற்றுப் பின்னணியன்று உண்டு.

17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையில் வாழ்ந்த இத்தாலிய நாட்டு சேசுசபைத் துறவி டி.நொபிலி, தமிழ்நாட்டில் வேதத்திற்கு இருந்த மரியாதையைப் புரிந்து கொண்டார். இதன் அடிப் படையில் நான்கு வேதங்கள் மட்டுமின்றி அய்ந்தாவதாக ஏசுரவேதம் என்ற ஒன்று உண்டு என்றும் தான் அதைக் கற்றறிந்த ரோமாபுரிப் பிராமணண் என்றும் வெளிப் படுத்திக் கொண்டார். அதை நிறுவும் முகமாக மார்பில் முப்புரிநூல் அணிந்து கொண்டார். அது பிதா சுதன் பரிசுத்த ஆவி என்பனவற்றின் குறியீடு என்றும் விளக்கமளித்தார்.

இவ்வாறாக வேதம் என்ற அடையாளம் விவிலியத்துக்கு டி. நொபிலியால் இடப்பட்டது. இதன் வளர்ச்சியாகவே கிறித்தவர்கள் வேதக்காரர்கள் என்ற அடையாளத்தைப் பெற்றார்கள். அவர்கள் சென்று வழிபடும் தேவாலயம் வேதக்கோவில் என்ற பெயரால் சுட்டப்பட்டு இன்றுவரை அது தொடர்கிறது.

சீகன்பால்குவின் சமகாலத்தவரான வீரமாமுனிவர் விவிலிய மொழிபெயர்ப்பை மையமாகக் கொண்டு சீர்திருத்தக் கிறித்தவர்களுடன் வாதிட எழுதிய நூலுக்கு ‘வேதவிளக்கம்’ என்றே பெயரிட்டார்.

இச்சூழலில்தான் சீகன்பால்க் தமது விவிலிய மொழிபெயர்ப்புக்கு அஞ்சுவேதப் பொத்தகம் எனத் தலைப்பிட்டார். வேதம் என்பது அடித்தள மக்கள் கேட்கவும் பயிலவும் தடைசெய்யப்பட்டிருந்த சமூக அமைப்பில் தமக்கென ஒரு வேதத்தை மத மாற்றத்தின் வாயிலாக அடித்தள மக்கள் பெற்றனர். அஞ்சுவேதப் புத்தகம் 500 படிகள் அச்சிடப்பட்டது. தாம் மொழி பெயர்த்து அச்சிட்ட அஞ்சுவேதப் புத்தகத்திற்கு:

சுதனாகிய சர்வேஸ்வரனாய் இருக்கிற யேசு கிறிஸ்து நாதரானவர் இந்த பூலோகத்தில் மனுசனாய்ப் பிறந்த விசேஷங்களையும் போதிச்சு விச்ச உபதேசங் களையும் செய்த அற்புதங்களையும் மனுசருக்கு வேண்டிப் பாடுபட்டு எல்லாரையும் ரட்சித்து வித்தவங்களையும் உயிரோடே எழுந்தருளவித்து பரலோகத்திலே மகிமையாக அவருடைய சீஷர் களாகிய அப்போஸ்தலமார்கள் லோகம் எங்கும் போய் இப்படிக் கொத்த விசேஷங்களை சகல வசனங்களுக்கும் பிரசங்கம் பண்ணினதையும் வெளிப்படுத்திய புது ஏற்பாடினுடைய முதலாம் வகுப்பாகிய அஞ்சுவேத பொஸ்தகம். கிறிஸ்து பிறந்த ஆயிரத்து எழுநூத்து பதினாலாம் வருஷமாகிற போது தரங்கம்பாடியிலே இருக்கிற பாதிரிமார் களுடைய அச்சிலே பதிப்பிக்கப்பட்டது.

என்ற தலைப்பை  சீகன்பால்க்கும் குருண்டலரும் இட்டுள்ளார். இந்நூல் வெளியான காலத்தில் நான்காம் பிரடரிக் என்ற மன்னன் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்தான். இம்மொழிபெயர்ப்பு நூலை அவனுக்குக் காணிக்கையாக்கி தமிழிலும், ஜெர்மனிலும் அதை எழுதியுள்ளனர். அப்பகுதி வருமாறு:

மகா மகிமையுள்ளவருமாய், மகாவல்லமையுடைத் தானவருமாய் சகலகிருபை உள்ளவருமாய் இருக்கிற மகாராசவாகிற தென்மார்க்கச் சீமைக்கும் நார்வேயாகிய சீமைக்கும் வெரியுன்னத சீமைக்கும் சுயம் பார்பத்தியம் உடைத்தான ஆண்டவருக்காக ராச்சியபாரம் பண்ணுகிற யெங்களுடைய கிருபை யுள்ள ராசாவாயிருக்கிற பிரடரிக்கு சுவார்ட்ஸ் சென்கிறவருக்குச் சமாதானமும் பாக்கியமும் ராச்சியபாரமும் ஆசிர்வாதமும் தேவநன்மை களுடைய பரிபூரணமும் நித்திய சீவனத்தை யுடைய கிரிடமும் உண்டாகக் கடவதென்று அடியேன்கள் வேண்டிக் கொள்கிறோம்.

ஆள்வோனிடம் இறையடியார்கள் எவ்வளவு தாழ்ச்சியுடன் இருந்துள்ளார்கள் என்பதற்கு இப்பகுதி நல்ல எடுத்துக்காட்டு, ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே’ என்று நாமும் பாடி யுள்ளோமே!

கத்தோலிக்கரின் மதிப்பீடு

ஆனால் கத்தோலிக்கத் துறவியர், இம்மொழிப் பெயர்ப்பை எதிர்மறையாகவே விமர்சித்தனர். வீரமாமுனிவர் தமது வேதவிளக்கம் நூலில் மிகக் கடுமையாக விமர்சித்ததுடன் பகடியும் செய்துள்ளார். 

கத்தோலிக்கக் குருக்கள் தாம் மொழிபெயர்த்த தமிழ் விவிலியப் பகுதிகள் அனைத்துக் கத்தோலிக்கர் களிடமும் அறிமுகம் ஆவதை விரும்பவில்லை. தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை மட்டுமே வாசிக்க அனுமதித்தனர். தேவாலயத்தில் நிகழ்த்தப்படும் மறையுரைகளில் மட்டுமே அது வாசிக்கப்பட்டது. இதை, சீர்திருத்த கிறித்தவர்கள் குற்றச்சாட்டாகக் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் மீது வைத்தனர். இது ஒருவகையான ஏமாற்று வேலை  என்றனர். தமது வேத விளக்கம் என்ற நூலில் இதற்கு வீரமாமுனிவர் பின்வருமாறு பதிலளித்தார்:

எழுதப்பட்ட வேதாகமங்களை அவனவன் தன் மனதின்படியே மறுபாஷையாக திருப்பவும் திருப்பினதை அவனவன் வாசிக்கவும் அதற்கு அர்த்தஞ் சொல்லவும் நல்லதென்று பதிதர்* அபத்தமாய்ச் சொல்கிறார்கள்... வேதாமகங்கள் தேவவாக்கியமாகக் கொள்ள எவருக்கும் உயிர்தரும் அமிர்தமாகும். ஆகிலும் பசுவின்பால் அமிர்தமா யினுஞ் ஜீரண சக்தியற்றவர்களுக்கு அது விஷமல்லோ?

காகிதங்களிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே அறிமுகமாகி இந்த விவிலியம் அச்சிடப்பட்ட புத்தக வடிவில் வெளிப்பட்டு அனைவர் கைக்கும் சென்றது கத்தோலிக்க மறைப்பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கும் என்பதில் ஐயமில்லை.

சீகன்பால்கின் சமகாலத்தவரான வீரமாமுனிவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் புலமை மிக்கவராய் இருந்தார். இவரளவுக்கு சீகன்பால்க் தமிழ்ப்புலமைமிக்க வரல்லர்தான். ஆனால் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற வகையில் மக்களது பேச்சு மொழியில் விவிலிய மொழிப்பெயர்ப்பைச் செய்துள்ளார். தமிழ் இலக்கிய இலக்கணப் புலமை கொண்ட வீரமாமுனிவர் சீகன் பல்குவின் மொழி பெயர்ப்பில் இருந்து சில பகுதிகளை மேற்கோளாகக் காட்டி மொழிபெயர்ப்பின் தரத்தைக் குறை கூறினார். குறிப்பாக மத்தேயூ (4:18, 18:17), லூக்கா (6:14), ரோமர்கள் (9:22) கொரிந்தியர் (7:3, 9:5) பீட்டர் (2:2) தீமத்யூ (3:6) ஹிப்ருக்கள் (13:4) ஆகிய பகுதிகளைச் சுட்டிக்காட்டினர்.

அழகு குன்றிய தமிழில் (பேச்சுத் தமிழில்) விவிலியத்தை மொழிபெயர்த்ததானது ஒளிவீசும் அணிகலனை சேற்றில் புதைப்பதையும், அமுதத்தில் நஞ்சைக் கலப்பதையும் அழகிய ஓவியத்தின் மீது கரியைப் பூசுவதை ஒக்கும் என்றும் குறிப்பிட்டார். அஞ்சுவேதப் புத்தகம் குறித்த எள்ளல் தன்மையுடன் கூடிய அவரது விமர்சனத்தின் ஒரு பகுதி வருமாறு:

ஒரு வரி முடியா முன்னே பார்த்த கண்ணும் வேக, உச்சரித்த நாவுந் துவர்ப்ப, கேட்ட காதுங் கைப்ப, மிகவும் வருந்துதற் காரணமாக, தொடரெழுதி யைந்த வகையும் எழுத்து வழுவி, யெடுத்த நீச்ச சொல்லுங் கீழிறந்த திடறிய சொல்லை கூட்டின வசனமும் யிவையெல்லாம் ஒன்று தளர்ந்து மயங்கி செந்தமிழ் கெடுக்கவும், கேட்டார் காதிரண்டையும் பிளந்து உரித்து கொடுந்தீயூட்டி உச்ச வருந்தனங் கொடியர் நினைத்த மற்றோர் பாஷை அதென்று, பொங்கிய வெகுளியோடு அதை தானெறிந்து வந்ததைக் கொணர்ந்த சிறிய சிந்தாயினை சினந் தடித்ததையென துரத்த மிகவும் வருந்தா நின்றதாம்.

வீரமாமுனிவரின் இக்கடுமையான விமர்சனத்துக்கு அவரது தமிழ்ப்புலமை மட்டுமே காரணமல்ல. அல்லது சமயப்பரப்பலில் தன் போட்டியாளராக சீகன்பால்க் இருந்தார் என்பதும் காரணமல்ல. அவர் சார்ந்திருந்த கத்தோலிக்கத் திருச்சபை விவிலியம் தொடர்பாகக் கொண்டிருந்த அணுகுமுறையே காரணமாகும்.

கிரேக்க, ஹிப்ரூ மொழிகளில் இருந்து இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட விவிலியத்தையே தன் அதிகாரப்பூர்வமான விவிலியமாகக் கத்தோலிக்கத் திருச்சபை கொண்டிருந்தது. அதைப் படித்து விளக்கம் தரும் உரிமையைத் தன்னிடமே வைத்துக் கொண்டது. செர்மானிய மொழியில் விவிலியத்தை மொழி பெயர்த்ததன் விளைவாக மார்டின் லூதர் கத்தோலிக்கத் திருச்சபையின் சீற்றத்துக்கு ஆளானார் என்பது வரலாறு கூறும் செய்தி. சீகன்பால்குவின் செயல் விவிலியத்தை அடித்தள மக்களிடம் கொண்டு சேர்ந்தது. இதுவே வீரமாமுனிவரின் சீற்றத்துக்கு காரணம் எனலாம்.

காஸ்டன் லாரெண்ட் என்ற பிரெஞ்சு சேசுசபைத் துறவி 1741 செப்டம்பர் 20-ஆம் நாள் எழுதிய கடிதம் ஒன்றில் இம்மொழிபெயர்ப்பின், மொழி, நடை அமைப்பு ஆகியன சிறப்பாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன் ஒரு புனித நூலுக்குப் பெருமை சேர்ப்பதாக அமையவில்லை என்றும் எழுதியுள்ளார்.

பெர்ரி கிலூனி என்ற சேசு சபைத் துறவி தமது ஆண்டு மடலில், இம்மொழிப்பெயர்ப்பில் நயமற்ற தமிழ் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டதுடன் அவர்களது விளக்கவுரைகளையும், தவறுகளையும் விமர்சனம் செய்துள்ளார். அதே நேரத்தில் நூலாக்கத் திற்குப் பயன்படுத்தியுள்ள அச்செழுத்துக்களைப் பாராட்டியுள்ளார்.

bible 1850 450திருத்திய பதிப்பு

சீர்திருத்தக் கிறித்தவ மறைப்பணியாளர்கள் சிலரும் பேச்சு மொழியில் விவிலிய மொழிபெயர்ப்பு அமைந்தது தவறு என்றனர். இவ்விமர்சனங்களை ஏற்று மத்தேயு நற்செய்தி நூலின் திருத்தப்பட்ட பதிப்பு 25 மார்ச் 1739-இல் தரங்கம்பாடி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. இந்நூலின் தமிழ்த் தலைப்பானது ‘யேசு கிறிஸ்து சுவாமியின் சீசனாகிய அப்போஸ்தலரும் சுவிசேஷிகளுமாயிருந்த அர்ச்சிஷ்டமாத்தி என்பவர் எழுதுவித்த ஆகமம் என்றிருந்தது.

இப்பதிப்பிற்காக சீகன்பால்க்கின் முந்தைய பதிப்பை மட்டுமின்றி கத்தோலிக்கர்கள் பயன்படுத்தி வந்த வேறு இரு விவிலிய மொழி பெயர்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். இத்துடன் விவிலிய மொழி பெயர்ப்பு நின்றுவிடவில்லை. இது மேலும் தொடர்ந்தது.

தொடர்ந்த பணி

சீகன்பால்கு அச்சிட்ட அஞ்சுவேதப் புத்தகம் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை உள்ளடக்கியது. இதனையடுத்து விவிலியத்தின் பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடத் திட்டமிட்டார். இதன் பொருட்டு கத்தோலிக்கத்தின் சேசுசபைத் துறவியர் நாகப்பட்டிணத்திலும் சென்னை சாந்தோமிலும் பயன்படுத்தி வந்த பழைய ஏற்பாட்டுச் சுவடிகளை 1711 டிசம்பரில் பெற்று அதைப் படித்தறிந்தார். பின் ஹிப்ரூ மொழியில் இருந்து தாமே மொழி பெயர்க்கலானார். இதன் மொழிநடை பேச்சுவழக்கிலேயே இருந்தது. 1719 பிப்ரவரி 23-இல் இவர் இறக்கும் முன்னர் பழைய ஏற்பாட்டின் பகுதிகள் அச்சுக்கு ஆயத்தமாய் இருந்தன. அவர் இறந்த பின்னர் தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் மிஷன் அச்சகத்தில் 1724-ஆம் ஆண்டில் 400 படிகள் அச்சிடப்பட்டன. இதன் தலைப்பு இலத்தீன் மொழி யிலும், தமிழிலும் அச்சிடப்பட்டிருந்தது. தமிழில் இந்நூலின் தலைப்பு பின்வருமாறு காணப்படுகிறது.

அளவில்லாத ஞானமுள்ளவருமாய் அளவில்லாத கிருபையுள்ளவருமாய் அளவில்லாத தெய்வீக முள்ளவருமாய், இருக்கிற பராபர வஸ்துவானவர். பழைய ஏற்பாட்டினுடைய காலத்திலே திருவுளம் பத்தின வேத பொஸ்தகத்தின் ரெண்டாம் பகுப்பு:

விவிலிய மொழிபெயர்ப்புடன் மட்டுமின்றி விவிலியத்தில் இடம்பெறும் சொற்களுக்கான அகராதி ஒன்று. ‘தேவ அருள்  வேதபுராணம்’ என்ற தலைப்பில் 1731-ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் வெளியானது. சீகன்பால்குவின் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பை கி.பி.1772-இல் திருத்தியமைத்து, சென்னை வேப்பேரி அச்சகத்தில் ஆயிரம் படிகள் அச்சடித்து இவர் வெளியிட்டார். இம்மொழிபெயர்ப்பு, ‘நமது கர்த்தரும் இரட்சகருமாகிய யேசு கிறிஸ்துவினால் உன்னத கிருபையின் உடன்படிக்கையாகிய புது ஏற்பாடு’ என்ற தலைப்பில் வெளியானது.

இதிலே அர்ச்சிஸ்ட ரூத் என்கிறவருடைய முதலாம் பொஸ்தகமும் அர்ச்சிஸ்ட் சாமுவேலன்கிறவருடைய முதலாம் பொஸ்தகமும், ரெண்டாம் பொஸ்தகமும், பரவிப் போலென்று சொல்லப் பட்ட  முதலாம் பொஸ்தகமும், ரெண்டாம் பொஸ்தகமும் யெச்சேருவென்கிற வருடைய பொஸ்தகமும், யோபு யென்கிறவருடைய பொஸ்தகமும், தாவீதென்கிறவர் யெழுதிவைத்த ஞானசங்கீதங்களென்கிற பொஸ்தகமும், சால மோன்யென்கிறவர் பேசின வாக்கியங்களுடைய பொஸ்தகமும் யெசக்கியேல் யென்கிற நாமத்தைக் கொண்டிருக்கிற பொஸ்தகமும் உன்னதமான பாட்டினுடைய பொஸ்தகமும் அடங்கியிருக்கிறது. கிறிஸ்து பிறந்து 1724 வருஷமாகிய போது இது தரங்கன்பாடியிலேயிருக்கிற பாதிரிமார்களுடைய அச்சிலே பதிப்பிக்கப்பட்டது.

சீகன்பால்குடன் இணைந்து விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை மொழி பெயர்த்த ஸ்வார்ட்ஸ் எஞ்சிய பகுதிகளை மொழி பெயர்த்து 1727 அக்டோபர் மூன்றாம் நாளான்று தரங்கம்பாடி அச்சகத்தில் 400 படிகளை அச்சிட்டு வெளியிட்டார். இந்நூலில் சீகன்பால்க் மொழிபெயர்த்த பகுதிகளும் இடம் பெற்றிருந்தன.

சென்னை வேப்பேரி, சிராம்பூர், புதுச்சேரி, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய ஊர்களில் தமிழ் விவிலியம் அச்சானது. போர்ச்சுக்கீசியரும், டச் நாட்டினரும், மொழி பெயர்ப்பிலும், அச்சாக்கத்திலும் முன்நின்றனர். இவ்வாறு மொழி பெயர்த்தவர்களுள் ஜோனோப் பிலிப் பப்ரிஷியஸ் என்ற சீர்திருத்தக் குரு முக்கியமானவர்.

பணியின் தொடர்ச்சி

கத்தோலிக்க குருக்களால், இலத்தீன் மொழியில் இருந்தும், போர்ச்சுக்கீஸ் மொழியில் இருந்தும், மொழி பெயர்க்கப்பட்ட விவிலியம், சீகன்பால்குவினால் கிரேக்க மொழியில் இருந்தும் ஹீப்ரு மொழியில் இருந்தும் மொழி  பெயர்க்கப்பட்டது. அத்துடன் அச்சுவடிவம் பெற்று அனைவருக்கும் கிடைத்தது. இது தமிழ் அறிவுத்துறையில ஏற்பட்ட பெரும் மாறுதலாகும்.

சீகன்பால்குவின் விவிலிய மொழி பெயர்ப்பும் அச்சாக்கமும் தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது. அத்துடன் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே புழங்கிய ஓலைச் சுவடி களுக்கு மாற்றாக அச்சுப் புத்தகப் பண்பாட்டை அறிமுகம் செய்தது. இதன் வளர்ச்சி நிலையாக தொடக்கக் கல்விக்கான பாட நூல்கள் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டன.

இவ்வாறு 16-ஆம் நூற்றாண்டில் அண்ட்ரிக் அடிகளார் என்ற போர்ச்சுக்கீசியக் கத்தோலிக்கத் துறவி தொடங்கி வைத்த விவிலிய மொழி பெயர்ப்பானது 18-ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தக் கிறித்தவ சபையின் சீகன்பால்க், குருண்டலர் பெப்ரிஷியஸ் ஆகியோரால் அச்சு வடிவம் பெற்றது.

தமிழ்நாட்டின் தொடக்கக்காலக் காலனியவாதி களான போர்ச்சுக்கீசியர், டச் நாட்டினர், டேனிஷியர் ஆகியோரை அடுத்து வந்த பிரெஞ்சு, ஆங்கிலக் காலனிய வாதிகள் 19-ஆம் நூற்றாண்டில் விவிலிய மொழி பெயர்ப்பையும், அச்சாக்கத்தையும் தொடர்ந்தனர்.

நூல் பிரதி கிடைக்குமிடம்:

Louis Savinien Dupuis Research Centre

IMMACULATE GENERALATE

19, St. Therese Street,

Pondicherry – 605001

(தொடரும்)