நூல் விமர்சனம்: வார்சாவில் ஒரு கடவுள் 

உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் தங்கள் சைன்னியர்களிடம் நாளையிலிருந்து ஆயுதங்களைத் தொடக்கூடாது இசைக்கச்சேரி நடத்துவதே உங்கள் வேலை என்று சொல்வது எப்படிப்பட்ட ஆச்சரியமான விஷயம்?’’ என்றாள் அன்னா.

கார்ல் மார்க்ஸில் இப்படி ஒரு கனவு இருக்கிறது என்றான் பியோத்தர்.’’

வ.ஒ.க. ப. 265.

1

இங்கு மேலே குறிப்பிட்டுள்ள அன்னா, பியோத்தரின் உரையாடலில் வெளிப்படும் காரல் மார்க்சின் மற்றொரு கனவு இசையென தெரிவிக்கும் நாவலிலும் நாவல் வாசிக்கும் சமூகங்கள் பெருகக் கோரும் பின் நவீனத்துவ கோட்பாட்டிலும் இப்படியான உட்கிடையன்று இருப்பதும் ஒரு பொருத்தப் பாடு எனலாம். தமிழவன் நன்கு அறியப்பட்ட விமர்சனக் கோட்பாட்டாளர்; அவரது விமர்சனக் கோட்பாடுகள் பெற்ற வாசிப்பின் தீவிரத்தால் நவீன விமர்சன மரபில் மிகப்பெரிய அறிதல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதேபோல் அவரது நான்காவது நாவலாக வெளிவரும் வார்சாவில் ஒரு கடவுள்என்ற நாவலும் ஒரு கோட்பாட்டு நூலாக வாசிக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. பொதுவாக நாம் ஒரு நாவலை வாசித்து முடித்துவிட்டு அதில் மொழியப்பட்டுள்ள கதையாடலின் நீட்சியாக கதையின் முழுமையை உள்வாங்கும் மனப்பழக்கம் கொண்டு இயங்கியுள்ளோம். ஆனால், நவீன புனைகதையென்பது அப்படியரு ஏகத்துவ வாசிப்பை மறுப்பதோடு புனைகதைப் பிரதியின் பல விளிம்புகளையும் பிரதியுடலைக் கட்டமைக்கும் கூறுகளையும் வாசித்து அதன் ஒவ்வொரு இழையின் மூலமாக நாவலை பல பன்மைகளின் சேர்க்கையாகவும் காண்பது ஏகத்துவ வாசிப்பிற்கு எதிரான மாற்றுத் தந்திரம்.

இம்மாற்றுத் தந்திரத்தின் ஒரு பகுதியாகத்தான், இந்நாவல் சந்திரனால் பேட்டிபோல் அளிக்கப்பட்டு, அது பிரதியாக்கம் செய்யப்பட்டு, அன்னாவால் போலிஷ் பத்திரிகையில் வருகிறது. மேலும் நாவலின் பல பகுதிகள் ஃபேக்ஸ் செய்திகளாகவும் மின்னஞ்சல் வடிவத்திலும் சந்திரனால் வாசிக்கப்பட்டு கேட்கிறோம். வார்சா பகுதியை சந்திரனே சொல்லிச் செல்கிறார். இதில் மிக முக்கியமான பிரதியாக்க உத்தியாக வெளிப்படுவது சந்திரனும் அஸ்வினியும் பகிர்ந்து கொள்ளும் கனவு வெளிஎனலாம். இந்தப் பகிர்வின் சூட்சுமத்தை விளக்குமுகமாக இவர் பயன்படுத்தும் ஒரு பிரதியியல் தந்திரம்தான் பரஸ்பர பிரதியாக்கம். இந்த இருவரின் ஒரே கண கனவை விளக்கும் வரிகளாக,

யாரோ ஒரு எழுத்தாளன் மேற்கோள் தான் நினைவுக்கு வந்தது. பரிச்சயமில்லாத அவரது மேற்கோள் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. தண்ணீருக்குள் போன தண்ணீர் போல எனது கனவு மங்கவும் உருகவும் ஆரம்பித்தது’’ (ப. 228) “தண்ணீருக்குள் தண்ணீர் செல்வது கனவு என்பதால்... (ப. 229)

இந்த யாரோ ஒரு எழுத்தாளன் போர்ஹெஸ். இவரது The Library of Babel என்ற கதையில் உள்ள நூலகம் பற்றிய கதையாடல் இந்நாவலில் பக்கம் 228இல் கனவில் ஒரு பெரிய நூலகம் வந்தது’’ என்ற பகுதியில் பரஸ்பர பிரதியாக்கம் பெறுகிறது.

இவ்வாறு இந்நாவலில் பயின்றுவரும் பல்வேறு நுட்பமான கூறுகளோடு பரஸ்பர பிரதியாக்கம் இயைந்துள்ளன. சந்திரனின் வம்சம் இடம்பெயர்ந்து வந்தது பர்மாவில் வான்சூயி என்யு மிலானயிர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவள். அவளை பாலியல் பலாத்காரம் செய்யவரும் பிரிட்டிஷ் கர்னல் ஜான்சென் வைட் ஹெட்டின் ஆண்குறியை கடித்து அகற்றும் கீழறுப்புச் செயலைப் பற்றி வரும் குறிப்பில் பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்புக் குழுவுடன் வான் சூயிக்கு இருந்த தொடர்பினால்தான், இத்தூண்டுதல் பெற்றதாக கூறும் பகுதியில்,

அந்த பிரிட்டிஷ்காரனை ஆண்குறியற்றவனாக ஆக்கும்படி தூண்டியவர்கள் என்று எங்கோ நான் படித்திருக்கிறேன். அவன் ஆண்குறி நீக்கப்பட்டது போல் ஒரு வெள்ளைக்காரனைக் காதலித்ததற்காக வீட்டிலுள்ளவர்களால் கைவெட்டப்பட்ட ஒரு இளம் இந்தியப் பெண் பற்றிய கதை ஒன்றை ருட்யாட் கிப்ளிங் எழுதியிருக்கிறார்’’ (ப. 53) என்று வருகிறது. இது இந்நாவலில் பெருமளவு வியாபித்திருக்கும் அங்கஹீனம் எனப்படும் உறுப்பின்மையை ஒரு பிரதியாக்க உத்தியாக புரிந்துகொள்ள உதவுகிறது. இதுவும் ஒருவகையான ‘Absence of the Prefevee’ என்று கூறப்படும் கருதுகோளோடு ஒப்புமையுடையதாகிறது. இந்த உறுப்பின்மைபற்றி கட்டுரையில் வரும் பக்கங்களில் விரிவாக வாசிக்கலாம்.

இந்நாவலின் கட்டமைப்பிற்குப் பெரிதும் உதவும் இரட்டைகள் என்பவை உடலியல் ரீதியான இரட்டைப் பிறவியென்னும் அல்லாத பிரதியியல் சாத்தியம்தான் இலக்கிய இரட்டை. இவை நாவல் பிரதியெங்கும் விரவியிருக்கின்றன. அவை நேரடியாகவும் சற்று பூடகமாகவும் சில இன்மைகளிலும் சஞ்சரிக்கின்றன. இந்த இரட்டைத் தன்மையை இனங்காணும் விதமாக நாவலில் வரும் மற்றொரு பரஸ்பர பிரதிதான் R.L.Stevensonனின் ஜெக்கில் மற்றும் ஹைட்’.

இலக்கியங்களில் இரட்டைகள்; ஒரு விதத்தில் எழுத்தாளர் ஸ்டிவன்சனின் ஜெக்கில் மற்றும் ஹைட் பாத்திரங்கள் வேறுபாடுகள் அழிக்கப்பட்ட, ஜெக்கில் மற்றும் ஹைட் பாத்திரம் இருக்கக்கூடாது என்ற விதி ஏதும் இருக்கத் தேவையில்லை தானே! (ப. 196).

ஆக ஜெக்கில் ஹைட் பாத்திரங்களின் வேறுபாடுகள் அழிக்கப்பட்ட பாத்திரங்கள் வார்சா நாவலில் உலவுகின்றன. இதன் வெளிப்பாடாகத்தான் தமிழவனின் முன்னுரையில் நாவல்களையோ நாவலையோ பார்த்து எழுதுவதுதான் ஒரு புதிய நாவல் என்பது என் பழைய கோட்பாடு’’ என்கிறார். இதுதான் இந்நாவலின் பிரதியியல் சூத்திரம். இன்னும் சில இடங்களில் வரும் பரஸ்பர பிரதிக் குறிப்புகளைக் கீழே தருகிறேன். லியோன் ஆவியாக தோன்றுவதற்கு சற்று முன்பு சந்திரன் Alain Danelionவின் while the god play 91 பக்கம் வாசிக்கும் தருணத்தில்தான் லியோன் தோன்றி மஞ்சள் நிறமாக பேசுகிறான். ராஜேஷ் அன்பழகன் என்ற இரட்டையின் மறைதலில் கண்ணாடியை உடைத்து பறந்து போகும் இடத்தில் கிடக்கும் இறக்கைகள் மார்குவஸின் Innocent Errendinaவில் வரும் இறக்கை சம்பந்தமான கதையாடலை நினைவுப்படுத்துகின்றன. பிறிதொரு இடத்தில் மனநோய் ஆலோசகரிடத்தில் பேசும் பியோத்தர் சொல்லும் ஆல்பர் காம்யூவின் அந்நியன்’, டால்ஸ்டாயின் போரும் வாழ்வும்ஆகியவை இந்நாவலின் பிரதியில் பருண்மையாக வெளிப்பட்டிருக்கும் பரஸ்பர பிரதியாக்க சாத்தியப் பாடுகளின் திறவுகோல்கள்.

2

நவீன நாவல் எழுத்தென்பது தன்என்பதற்கும் எழுதப்படும் பிரதிக்கும் இடையே ஏற்படும் ஒருவகை erasune என்று கொள்ளலாம். தன்என்ற நிலை மொழியாக்கப்படும்போது இடைப்பட்ட மொழிவெளியில் சுய அழிப்பிற்கும் மறு ஒப்பனைக்கும் ஆட்பட விழைகிறது. இதன் மாற்றுதிசையின் மறுவெளிப்பாடே இரட்டைஎன்கிற மொழிப் பிறப்பு. அத்தகைய இரட்டைகள் ஒருவகையில் காண விழைந்தால் மொழி உயிரிகள். இத்தகைய இரட்டைகள் நாவல் இலக்கியத் துவக்ககாலப் பிரதிகளான லாரன் ஸ்டெர்னின் Thiltrem shardy ரபலாவின் Garantwa and Pantagruel, செர்வாண்டாஸின் Don Quixote, லேடி முராசாகியின் The tale of Gens ஆகியவைகளில் ஏற்படும் தன்என்பதின் எரேசரில் எழுதப்பட்ட புத்தகத்தின் எதிர் புத்தகம் இரட்டையின் உள் வடிவமாக நாவல் பிரதிக்குள்ளேயே பருண்மைப்பட்டிருக்கிறது. இவ்வாறு நாவலாக்க கொடி மரபுடன் பின்னிப் பிணைந்துள்ள இரட்டைகள் வெளிப்படை யாகவும் புலப்படா தன்மையுடனும் இன்மையுடனும் பயின்றுள்ளன.

வார்சா நாவலிலுள்ள இரட்டைகள் குறித்து விவாதிக்கலாம். நேரடியான இரட்டைகளாகத் தென்படும் அன்பழகன் ராஜேஷ் என்ற இரட்டைப் பற்றி, நாவல் பகுதியானது அஸ்வினி பிரதாப்பின் என்கௌன்டருக்காக தன் தந்தையை சுட்டுப் பழிவாங்கிய பின்பு சிறைத் தண்டனை அநுபவித்துவிட்டு, ஆதிவாசிகளின் நிலமீட்பு போராட்டத்தில் உயிர்நீத்த தன் காதலன் பிரதாப் செயலாற்றிய மலை பிரதேசத்திற்கு செல்கிறாள். அங்கு ராஜேஷ் என்ற இளைஞனுடன் அவள் பழக நேரிடுகிறது. அவன் ஒரு மரக்கட்டுமான அரண்மனையைக் காண்பிக்கிறான். அங்கு ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடக்க அஸ்வினி எத்தனிக்கும்போது ஆதிவாசிகளின் பறையலியும் குலவைச் சத்தமும் கேட்க, ராஜேஷ் சொல்கிறான்; குறிப்பிட்ட எல்லைக்குள் அந்நியர் பிரவேசித்தால் ஆதிவாசிகள் நம்மை கொன்று விடுவார்கள் என்று மீண்டும் லாட்ஜிற்கு வந்து அடுத்தநாள் காலை பார்க்கும்போது அறையின் மேற்புற கண்ணாடியை உடைத்துக் கொண்டு பறந்து விடுகிறான். சில இறகுகள் மட்டுமே அங்கு காணப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு தினசரியை கண்ணுற்ற அஸ்வினி அதில், “அன்பழகன் காணாமல் போன செய்தியும், புகைப்படமும் வந்திருந்தன. அந்தப் புகைப்படம் நான் பின்லே ஹொட்டலில் தங்கியிருந்தபோது சந்தித்த சாட்சாத் ராஜேஷின் புகைப்படம்’’ (பக். 408-409) விஜயாவின் தற்கொலைக்குக் காரணமான அன்பழகன் இரண்டு ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தபின் ஆதிவாசிப் பகுதியில் வாங்கிய தோட்டத்தில் நிலத்தகராறு நீடித்ததாகவும் அது சம்பந்தமாக அவர் அங்கு சென்றதாகவும் நாவல் கூறுகிறது.

நாவலின் இறுதியில் அமலாவை சந்திக்கும் சந்திரனுக்கு எங்கு தேடியும் வார்சாவின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் கிடைக்காத வாஷ்பேசின் அமலாவின் வீட்டில் தென்படுகிறது. அப்போதும் அமலாவுடன் கனவில் ஏற்படும் உடலுறவின் இன்மை அனுபவம், இனி விஜயாவிடம் பெறவியலாத ஒன்றை அமலாவிடம் பெற இயலும் வேட்கையின் சரடு எனலாம். உடல் உறுப்பின்மைதொடர்ந்து நாவலின் பல இடங்களில் பல்வேறு விதமான சொல்லாடல் களங்களை அமைத்துத் தருவதைப் பார்க்க முடிகிறது. சந்திரன் தன் மனைவியின் தற்கொலை சம்பவத்தை அறிந்து ஊருக்கு செல்லும் இடத்தில், எதிர்பாராதவிதமாய் நேரும் அமலாவின் சந்திப்பில் குறிக்கப்பெறும் வலதுகாலில் பெருவிரல் இல்லாததைக் கவனித்தேன்’’ (ப. 211) என்பதிலிருந்து சந்திரன் அமலா இடையே ஒரு பாலியல் வேட்கைக்கான கதையாடல் கட்டப்படுகிறது. அவளது விரலின்மையை பார்க்கும் சந்திரனுக்கு அமலா, “என் இந்த விரலில்லாத அங்கஹீனத்தை பார்க்கக்கூடாது நீங்கள்’’ என்றாள். அப்படி யாராவது பார்க்கும்போது என்னை யாரோ அம்மணமாக்கிப் பார்ப்பதாகப்படும் எனக்கு’’ (ப. 213)

ஆனால் சந்திரன் தொடர்ந்து அதை உற்றுப் பார்க்க பார்க்க ஒரு கட்டத்தில் அமலா இயைந்து சொல்கிறாள். இனி நீங்கள் என் காலின் விரலில்லா அங்கஹீனத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்கலாம்’’ (ப. 215) எனக் கூறும் அமலாவின் பாலியல் எழுச்சியைக் குறிக்கும் குறியீடாக செயல்படுவதை அவள் சந்திரனுக்கு மறுபடியும் சொல்லும் போது, “என் விரலில்லாக் கால்களை நீங்கள் பார்த்ததுபோல் உலகில் யாரும் பார்க்கமுடியாது. அன்று என் அங்கஹீனத்திற்கு ஒரு பூரணத்துவம் கொடுத்து விட்டீர்கள் என்று நான் இத்தனை ஆண்டுகளாய் மனப் பூர்வமாக நம்பி வாழ்ந்து வந்தேன். என் துபாய் நண்பனிடம் எத்தனை தடவை, நீங்கள் என் விரலில்லாக் கால்களைப் பார்த்த விதத்தைப் பற்றிச் சொல்லி சொல்லி அவனைக் காம உணர்வு அடைய வைத்திருக்கிறேன்’’ (ப. 333). காம உணர்வைக் கிளப்ப அமலாவின் விரலின்மையை பருண்மைப்படுத்தலின் மூலம் பிரதியாக்குகிறது. இதேபோல் நாவலில் வரும் பிற உறுப்பின்மைகளைப் பார்ப்போம். சிவநேசம் இடது கையில் இரண்டு விரல்கள் மட்டுமே இருத்தல் அந்த விரலின் மாயத்தன்மை பற்றிய இடத்தில் சிவநேசம்,

அதோ தெரிகிறதா வானத்தில் வெள்ளையாக, வெள்ளி நிறத்தில் ஒரு சூரியகாந்திப் பூ... அப்போதுதான் அவரது இடதுகையின் இரண்டு கைவிரல்கள் எனக்கு சுட்டிவிட்டு மின்னல்போல் மறைந்துவிட்டன என்ற உண்மை புரிந்தது. ஒருவேளை அந்த இரண்டு விரல்களும் உற்பத்தி செய்ததோ இந்தக் காட்சி’’ (ப. 296)

இதைத் தொடர்ந்து மாக்தா சொல்லும் கனவில் வரும் என் கனவுகளில் அடிக்கடி லியோனையும் ஒற்றைப் ஃபெடல் உள்ள சைக்கிள்களையும் பார்க்கிறேன்’’ என்பதும் (ப. 193) ஒரு விநோதமான இன்மையைக் குறிக்கிறது. தொடர்ந்து பிறரின் உறுப்பின்மையை கவனித்துவரும் சந்திரனுக்கும் உறுப்பிழுக்கு அனுபவம் நேருகிறது. திடீரென்று கனவு போல தோன்றும் ஒரு காட்சியில் மரணத்தை குறிப்பீடு செய்யும், “சிவநேசம் ஒரு க்ஷணத்தில் தோன்றிக் கையைத் துண்டித்த அபூர்வமான காட்சியும் நான் வார்ஸாவுக்கு வந்த அன்று மூர்ச்சை கெட்டு விழுந்ததும் ஞாபகத்துக்கு வந்தன’’ (ப. 266). 

3

சந்திரனின் தாய்க்கு தீபற்றிய அதீத அறிதல் ஆற்றலும் தந்தைக்கு தண்ணீரைக் கண்டறியும் ஆற்றலும் இருந்ததால் சந்திரன் தன்னை நெருப்பாலும் தண்ணீராலும் ஆன கலவை யென்கிறான். எதிரெதிர் பண்புகளைக் கொண்டவன் என்பதில் பரஸ்பர ஒருங்கிணைவு பண்புள்ளவனாக ஒருவகை Yin-Yang என்ற கீழை தாவோயிய தன்மையுடையனாகவும் நாம் வாசிக்கலாம். அதன் முக்கியப் பண்புகளான ஆண் பெண் என்ற தனிநிலை கரைந்த ஒரு ரசவாத நிலையை தாவோ மொழிகிறது. ஆண் பண்பும் பெண் பண்பும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்து பாலுக்கப்பால் கடந்து செல்லும் உயிரி நிலையென்பதை உரைக்கிறது. இதன் கூறுகள் வார்சா நாவலில் பல இடங்களில் வெவ்வேறு விதமாக விகசித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. தனக்கு ஒரு வாரிசு உருவாக குகையன்றிற்குள் அழைத்துச் செல்லும் விஜயா ஒரு பச்சிலைச் சாற்றைத் தந்து, தன் பையிலிருக்கும் இரண்டு பழங்களில் ஒன்றை அவளும் ஒன்றை சந்திரனும் சாப்பிட ஒரு பாலியல் தலைகீழ் மாற்றம் நிகழுகிறது. விஜயாவைத் திரும்பிப் பார்த்தேன். ஒரு அரசனின் கிரீடத்தோடு நின்று கொண்டிருந்தாள். என்னை அழைத்தாள். திடீரென்று நான் அவளுடைய ஆடைகள் அணிந்து காணப்பட்டேன். அவள் ஆணாகவும் நான் பெண்ணாகவும் மாறிப் போயிருந்தோம் (ப. 143). ஆண்பாலியல் தன்மை கொண்டவளாய் சந்திரனை புணர்ந்தாள். அப்போது உடலியலே ஒருவித உருமாற்ற மடைந்ததாக கதையாடல் புனைகிறது.

பின்பு ஒரு கட்டத்தில் அவள் அணிந்திருந்த அரச கிரீடம் ஒருமூலையில் சற்று நேரத்தில் போய் விழுந்தது. நான் அணிந்திருந்த அரசியின் கிரீடம் இன்னொரு மூலையில் விழுந்தது’’ என முடிகின்றது. ஒரு குறிப்பிட்ட காலப் புள்ளியில் பிரதிக்குள் கதையாடல் மொழி இருவரையும் சுய பாலியல் எதிரிடையாக மாற்றும் மாயம் நிகழ்கிறது. இதை ஒருவகையான பாலின உருமாற்றம் எனலாம். மேலும் பல நூதனமான பாலின குறிப்பீடுகள் இப்பிரதியில் விரவியிருக்கின்றன. கதையாடலின் பல இடங்களில் சந்திரன் பெண்களை சித்திரிக்கும்போது அதிகமாக பிருஷ்டபாகம்என்ற குறிப்பிட்ட அங்கத்தை அதிகபட்சமாக மீண்டும் மீண்டும் அழுத்தம் பெறும் படியாக கையாளுகிறான். எங்கிருந்து இந்த பாலியல் அங்க குறிகிளைக்கிறது என்றால் சந்திரனின் பதிமூன்றாம் வயதில் தன் உறவினர் வீட்டிற்கு செல்லும் இடத்தில் சந்திக்கும் ஒரு விநோதமான பெண் போன்றவளுடன் ஏற்படும் பரிமாற்றம் அவள் இவனுக்கு ஊற்றுகளைப் பற்றி நிறைய சொல்கிறான். அதில் ஒருநாள் திடீரென்று சிவப்பு நிற ஊற்றுஒன்றைக் காண்பிப்பதாக கூறுகிறாள்.

இதற்கிடையில் ஒருநாள் அவளுடன் நடந்து கொண்டே பேசும் சந்திரன் திடீரென ஒரு சூறாவளிக் காற்றை எதிர்கொள்கிறான். அப்போது முன்னே நடந்து போகும் அப்பெண்ணின் ஆடை பறந்து மேல் கிளம்ப, “அவளது வாளிப்பான பிருஷ்டபாகம் எந்த உள்ளாடைகளும் இல்லாமல் வெறுமனே இருந்ததை அன்று முழுதும் மறக்க முடியவில்லை.’’ (ப. 322) சற்று சுதாரித்த பெண் இவனால் தான் இந்தச் சூறாவளி’’ (ப. 323) என்கிறாள். இவனது பெண் அங்கத்தை காணும் வேட்கை தான் சூறாவளியென எண்ணத் தோன்றுகிறது. பிறகொரு நாள் சிவப்பு ஊற்றை காட்டும் அப்பெண், “நானும் அந்த உயரமான பெண்ணும் குனிந்து பார்த்த அந்த நேரத்தில், சூரியன் நடுவானில் வந்திருந்ததால் அதிக ஆழமில்லாத அந்தக் கிணறு போன்ற ஒடுகலான பள்ளத்தில் சூரிய ஒலியில் சிவப்பு நீர் கட்டி நிற்பது தெரிந்தது. அது மாயமான ஒரு காட்சியாக எனக்கு பட்டது’’

ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கும் சந்திரனின் அரைக்கால் சட்டையின் வழி அவளது கையைப் போட்டு நீண்ட விரல்களால் என் உறுப்பை உடும்புப்பிடிபோல் பிடித்துக் கொண்டு இருந்தாள்’’ (பக். 327-28). இவ்வாறு அப்பெண்ணின் காம வேட்கையும் பதிமூன்று வயது சந்திரனுள் பாலியல் உணர்வும் விழிப்பு நிகழுகிறது. இதனால்தான் என்னவோ சந்திரன் மூன்று முறை அக்காஎன்று அழைத்ததை அவள் கோபத்துடன் மறுத்தாள்.

பியோத்தரின் பாட்டி காசா போஸ்னான் என்ற போலந்தின் முக்கிய நகரத்தில் வாழ்ந்துவந்தாள். அந்த இடம் நாஜி ஜெர்மானியர்களின் கைவசமிருந்தது. ஜெர்மானிய அதிகாரி கொன்ராட் குருண்டஸிடம் மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்தார். அவள் கம்யூனிஸ்டுகளைக் கூட உடலை விற்று வாழ்பவர்களே நாசிசத்தின் எதிரியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையுடையவள்’’ (ப. 346). காசாவின் தோழி ஒருத்தி பாலியல் தொழில் செய்து வருபவள் அவள் ஒரு விசித்திரமான மனிதனுடன் உடலுறவு கொள்ள நேரிடுகிறது. அதில் அவள் பாலியலுக்கும் நாசிசத்திற்கும் உள்ள ஒரு நுண்ணிய அரூப இழைத்தொடரை அறிகிறாள். அவளது கதையாடல், “அந்த ஆணும் பெண்ணும் அல்லாதவள் போல் தோன்றிய மனிதன்.... அவன் முதன் முதலாக என்னைத் தொட்டதும் ஏதோஒரு ஆடோ, மாடோ உடம்பில் உரசிக் கொண்டு போவதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. போகப்போக அந்த மனிதன் மாட்டின் உடலையும் மனிதனின் மனத்தையும் கொண்டவன் என்ற எண்ணம் தோன்றியதை.... அவன் வழக்கமான பாலியல் முறைகளைவிட வழக்கமல்லாத முறைகளையே அதிகம் விரும்பியவன் போல முதலில் நடந்து கொணடான். அது புதிதல்ல. அதிகமும் ஜெர்மன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு என்னிடம் வருபவர்களின் குணம் மாறியிருப்பதைக் கவனித்தேன்.’’

ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதொன்பது செப்டம்பருக்கு முந்திய ஐரோப்பியர்கள் வேறு, அதற்கு பிந்திய ஐரோப்பியர்கள் வேறு. சில ஆண்கள் அது அதற்கான உறுப்புகளைத் திடீரென்று மறந்து ஒவ்வொரு உறுப்பையும் வேறுவிதமாக பயன்படுத்துவதில் இன்பம் காண்பார்கள்’’ (ப. 355). இவ்வாறு பாலியல் நாசிசத்தின் அலகுகளோடு ஒப்புமைப்படுத்திக் காட்டும் கதையாடலில் வரும் அந்த பாலியல் தொழிலாளி ஜெர்மானிய ஸோல்ஜர்களால் கைகுண்டு (கிரனெட்) ஒன்று வெடிக்க வைத்து உடலின் கீழ்பகுதி சிதறி சாகிறாள்.

4

கும்மாங்குத்துவான இளைஞன் சிவநேசம் நாவல் பிரதியின் மிக முக்கியமான கதையாடல்களைக் கொண்டு வருகிறார். கள்ளத்தனமாக நாடுவிட்டு நாடு போகும் சிவநேசம் பிழைப்பைத் தேடி செல்கிறார். அவர் பல நாட்டு எல்லைகளைக் கடந்து போகும் பயணம் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. அவர் அந்த மரணத்தின் எல்லையை நாட்டின் எல்லையோடு கடக்கும் அபூர்வ பயணமாக நாவல் சொல்லிச் செல்கிறது. மரணம் அவருள் ஏற்படுத்தும், “பயம் வயிற்றில் தான் பரவும். சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்தாள். மணி இந்தியாவில் இப்போது ஒன்பது. இங்கு இன்னொன்று என்பது போன்ற விவரங்களை மாமா சொல்லி அனுப்பியிருந்தான். திடீரென்று ஒரு உணர்ச்சி அடி வயிற்றைப் பீடித்தது. பின்பு அது மெதுவாகப் பரவ ஆரம்பித்தது’’.

அப்போதுதான் முதன் முதலில் கடவுளின் குரலைக் கேட்டான். கும்மாங்குத்து.

இவ்வாறு கும்மாங்குத்து இன்மையான கடவுள் பருண்மைப்படுவதை ஏறக்குறைய ஆறு தடவை கடவுள் அவனிடம் பேசுகிறார். குறிப்பாக இப்பயணத்தின் போது பனி ஆற்றில் உள்வாங்கி சாகும் சக பயணி பின் மின்சாரம் பாய்ச்சி லாரியின் பெட்டியில் கருகிச் சாகும் மற்றொரு சக பயணியின் மரணமும் அந்த பெட்டிக்குள் பூட்டப்பட்டு நாட்டின் எல்லைத் தாண்டும் பயணம் சவப்பெட்டிபோன்ற ஒரு குறியீட்டை மனக்கண் முன்பு நிறுத்துகிறது. இதிலிருந்து ஜெர்மெனியை அடையும் கும்மாங்குத்து. நீதிமன்றத்தில் நீதிபதியிடம் கடவுள் என்னுடன் பேசுகிறார் என்று தன்னை நம்ப வேண்டும் என்றும் கூறி கிறித்துவ மத பூஜாரிகள் போன்ற தொழிலைச் செய்யும் குலத்தில் பிறந்தவன் என்று தன்னை அறிவிக்க, நீதிபதி நீ பார்ப்பனனா? என்று கேட்க ஆம்என்று மொழிபெயர்ப்பாளர் சொல்லச் சொல்கிறார். ஆம்என்ற கும்மாங்குத்துவுக்கு நீதிபதி அவனது குலக்குறியான பூணூலை பார்க்க ஆசைப்பட கும்மாங்குத்து பூணூலைக் காட்டுகிறான்.

நீதிபதியிடம் இந்தப் பூணூலால் சலுகை ஏதும் கிடைக்குமென்ற தன் எண்ணம் பொய்த்துப் போகிறது. இது இந்தியா என்ற இட பரிமாணத்தை தகர்க்கும் முகமாக காட்சி பொருள்போல் பூணூலைப் பார்த்த நீதிபதி தன் வழக்கமான தீர்ப்பைத் தருகிறார். குலக்குறி அ-அதிகாரவயப்படுகிறது. கும்மாங்குத்துவுக்கு க்ஷயரோக வியாதிக்காக ஜெர்மனி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் ஒரு இரவு நேர நர்ஸின் தாயன்பு போன்ற அரவணைப்பைப் பெறுகிறான். அந்த நர்ஸ் ஆஷ்விஸின் காஸ் அறையில் யூதர்களைக் கொன்றபோது அங்கு நர்ஸாக வேலைபார்த்தவர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருப்பினும் கும்மாங்குத்து மனதில், “கொலையும், உயிரைப் பாதுகாப்பதும் ஒரே மனித மூலத்திலிருந்து எப்படி தோன்ற முடியும்?’’ (ப. 298) என்ற தன் ஐயத்தை போக்கும் விதமான அனுபவம் அவனுக்கு ஏற்படுகிறது. அந்த இரவுகளில் பிச்சைக்காரனைப் போல் ஜெயில் ஆஸ்பத்திரியில் கிடந்த என் தலையைக் கோதிவிட்டுப் போன கைகளை எனக்குத் தெரியும். எந்தக் குற்ற உணர்வும் இல்லாத கைகள் அவை.

இந்த உணர்வு நிலையோடு ஒப்புமை கொண்ட மற்றொரு பகுதி, சந்திரனின் தாய் குழந்தையாக பர்மாவில் காப்பாற்றும் தென்னிந்தியரின் அன்பு’. “சரித்திரம், மரபணு, வம்சம், ரத்தம்... இப்படி இப்படி... சொல்லி இரண்டாம் உலக யுத்தத்திற்கு இடப்பட்ட அத்தனை தத்துவ ரீதியான அடிப்படைகளையும் தென்னிந்தியாவில் ஒரு மனிதர், மனித அன்பால் உந்தப்பட்டு ஒரு குழந்தை பரிதாபமாக சாகக் கூடாது என்ற ஒரே எண்ணத்தில் உதறி எறிந்திருக்கிறார்’’. இவ்வாறு இந்த இருவேறு இனத்தவரின் மனித அன்புதான் இந்நாவலின் வெளியைக் கட்டமைக்கிறது. இதில் வரும் கும்மாங்குத்து என்கிற சிவநேசம் ஐரோப்பியர்களை எந்த முன் நிபந்தனையுமின்றி தன் சீடர்களாக ஏற்றுக் கொள்கிறார். இதில் ஒரு கீழைத்தேய மானுட விழுமியம் அடிநாதமாக இழையோடுவதை இப்பிரதியில் காண முடியும். இதைத்தான் நாவலின் 419ஆம் பக்கத்தில் அதுதான் மனித உறவு பற்றிய ஒரு புதிய தரிசனம்என்கிறது. இந்தக் கருத்தை மாற்றுவடிவில் மனநல மருத்துவரிடம் தன் கனவை விவரிக்கும் பியோத்தர், “என் சிநேகிதி யுத்த ஆயுதங்களுக்குப் பதிலாக ஒவ்வொரு நாடும் பூக்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தால் எவ்வளவு அழகிய இடமாக உலகம் மாறும்’’ என்பதும் ஐரோப்பியர்களின் நாசிச சொல்லாடலிலிருந்து விடுபட எத்தனிக்கும் கீழை பின்நவீனத்துவ கதையாடலாக கொள்ளலாமா? சிவநேசத்தை தன் குருவாக வரித்துக் கொள்கிறார் லியோனின் தங்கை லிபியா. இந்த நிகழ்வின் மூலம் லியோன் என்னவாக ஆகவேண்டும் என்று நினைத்தாரோ அதுவாகவே காட்சியளிக்கிறார் சிவநேசம்.

லியோனின் கதையாடல் இந்நாவலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. தான் சார்ந்த கத்தோலிக்க மத குருக்களை தயாரிக்கும் குருமடத்தில் மதகுரு பயிற்சிக்கு செல்பவன் அங்கு ஒரு புதிய ஆதியாகமத்தை, அதாவது வழக்கில் உள்ள ஆதியாகமத்திற்கு எதிர் ஆதியாகமம் ஒன்றை எழுத முற்படுகிறான் அதைப் பற்றி லிடியா, “அண்ணன் ஆதியாகம்போல் இன்னொரு சாத்தானின் ஆதியாகமம் ஒன்றை எழுத முயற்சி எடுத்தது கண்டுபிடிக்கப் பட்டது’’ (ப. 94) “எப்படியோ கடவுளைவிட சாத்தான்தான் மிகுந்த சக்தியும், சிருஷ்டிக் குணமும் கொண்டவன் என்று வாதிட ஒரு கூட்டம் போலிஷ் இளைஞர்களை என் அண்ணன் உருவாக்கிவிட்டான்’’ (ப. 94) என்று கூறும் லிடியா இத்தகைய சொல்லாடலைக் கட்டுவதற்கு அவனுக்கு பின்புலமாக செயல்பட தூண்டிய மூலப்பிரதியாக அண்ணன் நீட்சேயின் சிந்தனை களையும் ஸ்டாலினிச ஆட்சியின் அரசியல் சமூகக் கூறுகளையும் குருமடங்களில் காணப்படும் பாலியல் அடக்குமுறைகளையும் இணைத்து உருவாக்கிய உருவகம்தான் சாத்தான் வழிபாடு’’.

இதிலிருந்து துவங்கும் லியோனின் கீழை ஞானத் தேட்டம் அவனை தந்திர யோகத்தில் ஈடுபாடு கொண்டவனாக மாற்றுகிறது. அடக்கப்பட்ட ஐரோப்பிய பாலியலை விடுவிக்க, “மீண்டும் அதை வெளிப்படுத்த, இயல்பாக மாற்ற, இந்தத் தந்திரயோகம் கூறும் ஸ்கலிதம் வெளிப்படாத செக்ஸ் செயல் ஒரு தீர்வாக முடியுமா?’’ என யோசித்திருக்கிறான். இந்திய தத்துவத்தைப் பற்றிய நிறைய புத்தகங்கள், ஆவணங்கள், தாந்தரீக தகடுகள் ஆகியவைகளை சேகரித்து வைத்துள்ளான். அதில் சூலம்ஒன்று உள்ளது. தன் புறச்சமய தேடலின் குறிப்பீடாக அதைக் கொண்டிருந்தான் என வாசிக்கலாம். ஒரு கார்விபத்தில் இறந்துபோகிறான் லியோன். லியோன் ஆக நினைத்தது நீட்சேயின் மீ மனிதனா? என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. இதன் மற்றொரு வடிவமாக சிவநேசத்தை லிடியா அங்கீகரிக்கிறாள். அந்த சூப்பர் மானின் பெயர் சிவநேசம்’’ (ப.421) லியோனுக்கு நிழல் கிடையாது அதற்கு அர்த்தம் சொல்லும் லிடியாவின் தோழி அவனுக்கு பின் தொடர சீடர்கள் இல்லை என்பதாக கூறுவதை இங்கு இணைத்து பார்க்கலாம்.

5

பல விநோதமான கூறுகளில் ஒன்று ஒரு மாணவி தன் பேராசிரியருக்கு கொம்புகள் இருக்கிறதா? என்று கேட்க திடுக்கிட்டு போகிறார். தனக்கு கொம்புகள் உள்ளது என்ற நினைவுடன் வாழ்ந்து வருகிறார். இதனை எதார்த்தத்திற் கும் தொன்மத்திற்கும் இடையே வேறுபாடற்ற பின் நவீனத்துவ சூழலைப்பற்றி சொல்லும்போது நாவலை ஆதிவாசியின் மனநினைவின் நீட்சியாக இக்கொம்புகளை குறிவயப்படுத்து கிறது. வார்சாவை விட்டு கிளம்புமுன் சந்திரனிடம் வீடு பேசத் துவங்குகிறது. அங்கு தன் மனைவி விஜயாவின் தற்கொலை மரணத்தின் போது கடிகாரம் காணாமல் போகிறது. அதை அவளது அம்மா குறிப்பிடுகிறார். அந்த கடிகாரம் மீண்டும் வார்சாவின் வீட்டில் கிடைக்கிறது. அப்போது சந்திரனின் மனவோட்டத்தில் ஒருவேளை என் வீட்டில் இருந்த பழைய கடிகாரம் காணாமல் போனதும் என் மனைவி விஜயா தன்னை அழித்துக் கொண்டதும் ஏதோ ஒன்று இன்னொன்றோடு பின்னிப் பிணைந்தது என்ற எண்ணம் என்மனதில் தோன்றியது’’ (ப. 393). என்று நினைக்க அப்போது பார்த்து வீடு பேசியது’’ அதன் தொடர்ச்சியாக, “வீட்டின் உள்ளிருந்து ஒரு சதுரமான பொருள் வெளிப்பட்டது. அது வேறு ஒன்றுமல்ல. என்னுடைய வீட்டில் தொங்கிய அதே பழைய கடிகாரம். மெதுவாக ஏதோ சொல்லியது. எனக்கு கேட்கவில்லை’’ (ப. 393). “வயதாகிப் போனது, கோழிக் குஞ்சு’’ என்றது கடிகாரம் (ப. 393)

சிறுவயதில் அம்மணமாக திரிந்த சிறுவன் சந்திரனை கிராமத்தார் அழைத்த பெயர். இவ்வாறு தன் பர்மிய நினைவுகளை கடிகாரம் வீட்டுடன் பகிர்ந்து கொள்கிறது. வீட்டிற்கும் கடிகாரத்திற்கும் இடையே நடக்கும் உரையாடலின் இடையே மாட்டிக் கொள்கிறான். இதை அவன், “நான் காலத்துக்கும் இடத்துக்கும் இடையில் அகப்பட்டவன் போல் வீட்டிற்கும் பழைய கடிகாரத்திற்கும் நடுவில் நடக்கலானேன்’’ என்கிறார். சந்திரனின் பயணமே காலத்திற்கும் இடத்திற்கும் இடையே நடக்கும் கதையாடலின் இரண்டகம்தான். இந்த இரண்டகத்தை சற்று நீட்சிப்படுத்தும் இடம்தான் அஃறிணைப் பொருள்களுக்கும் உயர்திணைப் பொருளான சந்திரனுக்கும் இடையே கிளைத்துவரும் கதையாடல் மொழி. அதன் இணைவுப் புள்ளிதான், “எதிர்காலத்தில் புரட்சி அஃறிணைப் பொருள்களுக்கும் உயர்திணைப் பொருள்களுக்கும் சம உடைமை வேண்டும் என்பதே’’ (ப. 397)

இவ்வாறு ஒரு அ-மனித மையகதையாடல் நாவலின் இறுதியில் வருவது நாவல் பற்றிய சில முன் அனுமானங்களை தகர்ப்பதாக உருக்கொள்கிறது. பொதுவாக இந்நாவலின் அறை விகித எதார்த்த மொழிநடையைக் கொண்டிருந் தாலும் வழக்கமாக எதார்த்தவாத தகவலில் கையாளப்படும் மனித மைய சித்திரிப்புமுறை; இந்நாவலில் அஃறிணைப் பொருள்கள் உயர்திணைப் பொருள்கள் உடலியல் பருண்மை எல்லை கடந்த ஆவியாக இதில் புதிய இணைவை ஏற்படுத்தும் வெள்ளை நிற யோகிலியோனின் கூட்டோடு புதிய பரிமாணத்தை கதையாடல் அடைகிறது. அப்போது நாங்கள் மூவரும் எதிர்பார்க்காத ஒருயோகி, செய்போர்டில் உள்ள சோல்ஜர் வடிவில் எங்கள் முன் திடீரென்று தோன்றினான். வீட்டை விட சற்று உயரம். ஆனால் பழைய கடிகாரத்தைவிட குள்ளம். அவன் எங்களைப் போலவே தரையில் ஒலி எழாமல் நடந்தபடி இருந்தான். குரல் மட்டும் இரும்புச் சாமான்கள் ஒன்றை ஒன்று தட்டும்போது ஏற்படும் ஒலிபோல் கேட்டது (ப.401).

இப்படி வந்த யோகியின் தாய் இறந்திருந்த தருணம் அது. ஒருவேளை தன் தாயின் மரணத்தை காண வந்தானோ எனத் தோன்றுகிறது. தன்னை லியோன்என்று வெள்ளைக்கார யோகி அறிமுகப்படுத்திக் கொள்கிறான். இந்த உரையாடல் பயணம் தொடருகிறது. இதற்கிடையில் ஒரு கட்டத்தில் எங்களுக்கு குளோபலைசேஷன் பற்றித் தெரியும்’’ என்கிறது வீடு. சந்திரன், “குளோபலை சேஷன் என்றால் என்ன தெரியுமா?’’ (ப. 391) என்று கேட்க அது சொல்கிறது, “உங்கள் மொழியில் என்ன பொருளோ தெரியாது. எங்கள் மொழியில் உலகமெல்லாம் இருக்கும் வீடுகள் தங்களுக்குள் பேசுவதே குளோபலைசேஷன்’’ (ப. 391). என்று சொல்லிக் கொண்டே நடை தொடருகிறது. ஒரு கம்ப்யூட்டரை பற்றி யோகியிடம் பேசும் சந்திரனுக்கு யோகி நீங்கள் ஞான மார்க்கத்தை விட்டு கம்யூட்டர் என்ற தொழில் நுட்பத்திற்கு திரும்பியது பிடிக்கவில்லை என்கிறான். மறுபடியும் வந்த இடத்திற்கு திரும்பலாம் என்று நினைக்கும்போதே யோகியும், வீடும், கடிகாரமும் தட்தட்டென்று பெரிய சாலையின் குறுக்கே பாய்ந்தன. இடது பக்கத்திலிருந்து வந்த கார் கொஞ்சம் தயங்கி மீண்டும் சீறிப்பாய்ந்தது. மூன்று உயிர்கள் காரில் அடித்து தள்ளப்பட்டன. எந்த ஓசையும் இல்லாமல் மூன்று ஜீவன்கள் காரில் சிக்கி மூன்று இடங்களில் கொஞ்சம் கொஞ்சம் இரத்தத் திட்டு ஏற்பட்டிருந்தது. கார் போன பிறகு தெரு விளக்கில் நன்கு தெரிந்தது வீடும் யோகியும் ஓரிடத்திலும் கடிகாரம் கொஞ்ச தூரத்திலும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன’’ (ப. 403) என்ற சம்பவம் நடந்தேறியது.

இதில் வெள்ளை யோகி ஏற்கனவே கார் விபத்தில் இறந்தவன் மீண்டும் இக்கதைப் பிரதியில் அஃறிணைப் பொருட்களோடு உயிர்ப்புற்று மீண்டும் தன் பழைய விதியை சந்திக்கிறான். இந்நாவலில் வரும் இப்பகுதி அஃறிணைகளின் சொல்லாடலை கதைக்களத்திற்குள் எழுதும் பிரதிச் செயல்பாடு பின் - நவீனத்துவ நுண்ணிய கதையாடல் என்பதற்கு அழுத்தம் தருவதாக அமைகிறது. நவீனத்துவத்திற்கு சற்றே அப்பால் இயங்கும் அஃறிணை- உயர்திணை சொல்லாடல் களம் பெருங்கதையாடல் என்பதை கீழறுப்பு செய்யும் புதிய பிரதியியல் நுட்பமாக ரஸலில் செயல்படு கிறது. இந்நாவலை நாம் வாசித்த முறையை பிரதிபலிக்கும் முகமாக நாவலில் வரும் சில வரிகளைக் காணலாம்.

இன்று நாம் பேசுவது எல்லாம் ஃபிரிவலஸ், ஓரமானவை, மார்ஜினல், முக்கியமற்றவை, விளையாட்டு என்று நினைத்தேன்.’’ (ப. 252) என்ற வரிகளில் வரும் பதங்கள் ஃபிரிவலஸ் / ஓரமானவை / மார்ஜினல் / முக்கியமற்றவை / விளையாட்டு என்று நாவலின் பிரதியியல் புள்ளியிலிருந்து துவங்கி நாவலை வாசிக்கும் முயற்சியே பின் நவீனத்துவ நாவல் வாசிப்பு.

சந்திரன் வார்சாவை விட்டு கிளம்புவதற்கு முன்பு சிவநேசம் அவனுக்குச் சொல்லும் வார்த்தைகள், ‘நடுவில் புகுந்து எதுவும் செய்யாதிங்க’. இந்த வார்த்தை அவனை அமலாவின் மும்பை சந்திப்பின் முன்பும் பின்பும் தொடர்கிறது. இதன் உள்ளார்ந்த உள்ளீடாய் வரும் வரிகளுடன் இந்த நாவல் வாசிப்பை முடிக்கிறேன். பியோத்தரின் எச்சில்கள் தீம் என்பதில் வரும். குழாயிலிருந்து விழும் நீருக்கடியில் தெரியும் அமைதி’’ வட்டத்தில் நீங்கள் சேர்ந்து கொள்கிறீர்கள்.

- எஸ்.சண்முகம்

(கட்டுரையாளர் தமிழ்ச்சூழலில் 1980கள் முதல் செயல்படும் திறனாய்வாளரும் மொழிபெயர்ப்பாளரும் கவிஞரும் ஆவார்) 

Pin It