இப்படிச் சொல்வது பலருக்கும் வேடிக்கையாகத் தெரியலாம். எது எதற்காகத்தான் போர்க்கால நடவடிக்கை என்று சொல்வது? இயற்கை அழிவுகள் ஏற்படும் போதுதான் போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்; தமிழ் வழிக் கல்விக்கும் தமிழகம் தழுவிய தொழில்களுக்கும் கூடவா போர்க்கால நடவடிக்கைகள் என்று சிலர் சிரிக்கலாம்.
ஆம்... இவற்றுக்கும் போர்க்கால நடவடிக்கைகள் தாம் தேவை. ஆனால் அந்த நடவடிக்கைகளை அரசு செய்யும் என யாரும் நம்ப வேண்டாம். அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் தமிழக மக்கள்தாம். அரசுகள் செய்யும் அழிவுகளிலிருந்து தமிழை, தமிழகத்தைக் காப்பதற்குத் தான் அந்தப் போர்க்கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி பெறுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எளிய ஏழை மாணவர்கள் மட்டும்தான் தமிழ் வழியில் பயிலுகின்றனர். அப்படியாகத் தமிழ் வழி படிப்போர் எண்ணிக்கை குறைந்து வருவது மட்டுமல்ல, தமிழில் படிப்பதே இழிவாகக் கருதப்படுகிறது. தமிழிலே படிப்பது மட்டும் அல்ல பேசுவதைக் கூட இழிவாகக் கருதுகிறார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள் கூட பாதி அளவு ஆங்கிலக் கலப்புடனேயே தமிழைப் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே சமஸ்கிருத கலப்பால், அரசு உள்ளிட்ட பிற மொழிகளின் கலப்பால், தமிழ் சிதைக்கப்பட்டிருப்பது போதாதென்று, இப்போது ஆங்கிலத்தால் தமிழ் அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ் வழியில் படிப்பதால் பயன் ஏதும் இல்லை என்று எளிய மக்கள் கூட எண்ணுகின்றனர். உலகம் முழுக்க ஆங்கிலம்தான் கோலோச்சுகிறது என்று அவர்கள் எண்ணுகின்றனர். தமிழில் படித்தால் தமிழ்நாட்டி லேயே உழல வேண்டியதுதான்; வேலை வாய்ப்பில்லாமல் அலைய வேண்டியதுதான் என்று நினைக்கின்றனர். ஆங்கிலத்தில் படித்தால் உலகம் முழுக்கச்சுற்றி எப்படியாவது வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று விடலாம் என்று நம்புகின்றனர்.
ஆனால் அது உண்மை இல்லை என்று அவர்களுக்குத் தெரியவில்லை. உலகில் பல நாடுகள் ஆங்கிலம் தெரியாமலேயே உயர்ந்திருக்கின்றன. சீனா தான் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. சீனர்கள் முழுக்க முழுக்க சீன மொழியிலேயே படிக்கின்றனர். ஆங்கில வழியில் கல்வி பயில விரும்பும் சீனர்கள் அமெரிக்காவுக்கோ, இங்கிலாந்திற்கோ போய்தான் படிக்க வேண்டும். எனவே அங்கிருந்து அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மற்றபடி சீனாவில் ஆங்கில வழிக் கல்வியே சொல்லித்தரப் படுவதில்லை.
சப்பானில் ஆங்கிலம் இல்லை. ஜெர்மனியில், பிரான்சில், இசுபெயினில், ரசியாவில், அயர்லாந்தில் எனப் பெரும்பான்மை நாடுகளின் மாணவர்கள் அவரவர்களின் தாய்மொழியிலே தான் படிக்கின்றனர். ஏன் இந்திய ஆட்சிக்குட்பட்ட பல மாநில அரசுகள் கூட ஆங்கில வழியில் படித்தாலும் அவரவர்களின் தாய்மொழியை மொழிப்பாடமாகவாவது படித்தாக வேண்டும் என்பதே நடைமுறை. ஆனால் நம் தமிழ் நாட்டில் மட்டும் அப்படியில்லை. தமிழையே படிக்காமல், பள்ளிக் கல்வியை மட்டுமல்ல, கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வி வரை என எது வேண்டுமானாலும் படிக்க முடிகிறபடி கேடான நடைமுறை இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒருவகைக் கல்வி முறை இருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் இந்த இழிவு கிடையாது. ஏன் வேறு எந்த மாநிலத்திலும் கூட இத்தனை வகைக் கல்வி முறை கிடையாது. இந்த ஒருவகைக் கல்வி முறையில் அரசு, அரசு சார்ந்த பள்ளிக் கல்வி முறைதான் தரம் குறைந்த இழிவான கல்வி முறையாக இருப்பதாக கருத்து பரப்பியிருக்கின்றனர். கடந்த திமுக அரசும் அந்த ஏழு வகைக் கல்வி முறையில் நான்கு கல்வி முறைகளை மட்டுமே இணைத்தது. சமச்சீர்க் கல்வி எனக் கொண்டு வந்தது.
மெட்ரிக்குலேசன் கல்வி முறை, ஓரியண்டல் கல்விமுறை, ஆங்கிலோ இந்தியப் பள்ளிக் கல்விமுறை, அரசு சார்ந்த பள்ளிகளுக்கான கல்வி முறை ஆகிய நான்கு கல்வி முறைகளை மட்டுமே சமச்சீர் கல்வி என்றது திமுக அரசு. அதையும் மறுத்து இப்போது தடை செய்ய முனைகிறது செயலலிதா அரசு.
அந்த நான்குகல்வி முறை அல்லாது இந்திய அரசின் பாடத் திட்டங்களுக்குரிய சி.பி.எசு.இ. கல்விமுறை, இந்திய அரசின் ஊழியர்களுக்கான கேந்திரிய வித்யாலயங்களுக்கான தரக் கல்வி முறை, வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகப் பள்ளிக் கூடங்களுக்கான கல்விமுறை ஆகிய மூன்று கல்வி முறையின் கீழ்ப்படிக்கிறவர்களுக்குத்தான் இந்திய அரசு வேலை வாய்ப்புகள், ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம் போன்ற மேட்டுக்குடிகளுக்கான உயர்கல்வியில் இடங்கள் கொடுக்கப்படுகின்றன.
அங்கெல்லாம் மருந்துக்குக் கூட தமிழ் இல்லை. தமிழில் பேசினால் தண்டம் விதிக்கப்படுகிறது. பல பள்ளிக் கூடங்களில் தமிழில் பேசியதற்காகப் பிள்ளைகள் முட்டிப் போட்டிருக்கின்றன. இத்தகைய இழிவு வேறு எந்த நாட்டில், எந்த மொழி இன மக்களுக்கும் நடந்திருக்காது.
தாய் மண்ணில் தாய் மொழியில் பேசுவதற்கு முட்டி போடும் தண்டனை என்றால் இது என்ன கொடுமை என்று யாரும் கவலைப்படவில்லை. கல்வியில் தமிழின் நிலை இவ்வாறு இருக்க, பிற பயன்பாடுகளில் தமிழ் படுகிற பாட்டைக் கேட்டுக் கொதிப்புறாமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் எவருமே ஓர் ஐந்து நிமிடம் தமிழில் பேசுவதில்லை. பெரும்பாலானவர்கள் தமிழிலேயே பேச முடிவதில்லை. அவர்கள் பேசுகிற பேச்சில் 80 விழுக்காடு ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிச் சொற்களே கலந்திருக்கின்றன. அப்படிக் கலந்து பேசுவதுதான் நாகரிகமாகக் கருதிக் கொண்டு பேசுகிற வழக்கம் உருவாகியிருக்கிறது.
பலருக்கும் எது தமிழ் எது தமிழில்லை என்று கூடத் தெரிவதில்லை. சிறப்பு "ழ'கரத்தைப் பலுக்க (உச்சரிக்க)த் தெரியாமல் லகரமாகவோ, யகரமாகவோ (வலவலப்பான, அல்லது வயவயப்பான என்றோ) தாம் பெரும்பாலானவர்கள் பேசுகின்றனர். வானொலி, தொலைக் காட்சிகளில் தமிழ் கொலை செய்யப்படுகிறது. அவற்றில் பேசும் கலப்பு முறைகளையே மக்களும் பேசுகிற இழிவான சூழல் உருவாகிக் கொண்டே இருக்கிறது. நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காட்டினர் தங்கள் முன்னெழுத்தை (தந்தை பெயரின் முதல் எழுத்தை) ஆங்கிலத்திலேயே சொல்லவும், எழுதவும் செய்கின்றனர்.
இத்தகைய கேடான நடைமுறை எந்த நாட்டிலும் இருக்காது. எந்த ஆங்கிலேயனாவது பிரஞ்சு மொழியில் அல்லது ரசிய மொழியில் முன்னெழுத்தை எழுதி விட்டு ஆங்கிலத்தில் தன் பெயரை எழுதுவானா? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த அவலம்.
தமிழ்நாட்டுத் திரைத் துறையினர் செய்யும் தமிழ்க் கொலையும், யாருக்கும் குறைந்ததன்று. நடிகர்கள், நடிகைகளின் பெயர்கள் எவையும் தமிழில் இல்லை. தமிழ்ச் செய்தித்தாள்கள் அனைத்திலும், எழுத்துப் பிழைகள், இலக்கணம் தெரியாமல் எழுதித் தமிழைக் கெடுக்கின்றன.
ஆங்கிலச் செய்தித்தாள்களில் ஏதேனும் பிழை வர முடியுமா? வந்தால்தான் உயர் மேட்டுக் குடியினர் விட்டு விடுவார்களா? உடனே மடல்களுக்கு மேல் மடல் எழுதி திருத்துவார்களா மாட்டார்களா? ஆனால் தமிழ்ச் செய்தித்தாளில் வரும் பிழைகள் குறித்து யார் கவலைப்படுகிறார்கள்? தமிழக அரசின் அறிவிப்புகளிலேயே பிழைகள் உள்ளன.
ஆக, தமிழ் மொழியைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. காரணம் யாருக்கும் தமிழ் தெரிவதில்லை. தமிழில் படிப்பதில்லை. தமிழ் முறையாகப் பள்ளிக் கூடங்களில் சொல்லித் தரப்படுவதில்லை. தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயிற்றுவிக்கிறபடி கல்வி முறை இல்லை. இப்படியே போனால் தமிழ் மக்கள் வழக்கிலிருந்து முற்றாக அழிந்து போய்விடலாம்.
ஒரு மொழியோ அல்லது ஓர் இனத்தின் கூறுகளோ அழிக்கப்படுவது என்பது அந்த இனத்தை அடிமையாக்குவதே ஆகும். அத்தகைய அடிமை குணங்களுள் தமிழினமும் ஒன்றாகிப் போய்விட்டது. இத்தகைய இக்கட்டான நெருக்கடியான நிலையிலிருந்து தமிழர்கள் மீண்டாக வேண்டும். தமிழர் உரிமைகளை, தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்தாக வேண்டும். இயற்கைப் பேரழிவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுவது போல், தமிழ் மொழி அழிக்கப்படுவதிலிருந்து அதைக் காப்பற்ற போர்க்கால நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.
தமிழ் சொல்லித்தராத பள்ளிக் கூடங்களைத் தடை செய்ய வேண்டும். அவற்றின் முன் அணி அணியாய் மக்கள் திரண்டு ஆர்ப் பரிக்க வேண்டும்.
தமிழ் இலக் கண, இலக்கியப் பயிற்சிகளை பள்ளிப் பருவத்திலிருந்தே சொல்லித் தரும் வகையில் பாடத் திட்டங்கள், உருவாக்கி வலியுறுத்திப் போராட வேண்டும்.
தமிழ் வழியில் படித்தோர்க்கே அரசு மற்றும் தமிழகத்தின் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர போராட வேண்டும்.
தமிழில் பிழைபட பேசுகிற, எழுதுகிற செய்தி நிறுவனங்கள், வானொலி தொலைக்காட்சி நிலையங்கள், செய்தித்தாள்களைக் கண்டித்து ஆர்ப்பரிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஏழுவகைக்கல்வி முறைகளுக்குத் தடை விதித்து ஒரே கல்வி முறை என்றாக்கப் போராட வேண்டும். தமிழகத்திற்குள் நுழைந்து கால் பரப்பும் இந்திய, பன்னாட்டு கல்வி நிறுவனங்களைத் தடை செய்ய போராட வேண்டும். தமிழில் கலப்பில்லாமல் பேசுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு முதற் கட்டமாய்த் தமிழ்த் தேச அரசியல் முனைப்புள்ள இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் தமிழிலேயே பேசிட வேண்டும். தமிழ் உரிமை குறித்துப் பேசும் கட்சியினரையும் அவ்வாறு பேசிட வலியுறுத்திட வேண்டும்.
ஆக இவ்வகை அனைத்து முயற்சிகளையும் இணைத்து ஒரே கட்டத்தில் முனைப்பாக முன்னெடுக்கின்ற போர்க்கால நடவடிக்கைகளாலேயே தமிழுக்கு ஏற்பட்டிருக்கிற அழிவை நீக்க முடியும்.
தமிழகம் தழுவிய தொழில்கள் மீட்பு
தமிழ் மொழிக்கு எந்த அளவு நெருக்கடிகளும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றனவோ அந்த அளவை விட அதிகமாகவே தமிழகம் தழுவிய தொழில் களுக்கும் நெருக்கடிகளும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாடு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங் களுக்குத் திறந்த வீடாக ஆக்கப்பட் டுள்ளது. எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களே தொழிற்சாலை களை நிறுவியுள்ளன.
மண்ணின் மக்களுக்கு மின்சாரம், தண் ணீர் உள்ளிட்ட அடிப்படை ஏந்துகள் கிடைக்கின்ற னவோ இல்லையோ அந்தவெளி நாட்டுத் தொழிலகங் களுக்கு அவை யெல்லாம் தடையில் லாமல் கிடைக்கிறது. பல நிறுவனங்களுக்குத் தமிழகத்தின் மின்சாரமும், தண்ணீரும் இலவயமாகவே தமிழக அரசால் தரப்படுகின்றன.
காலையில் எழுந்து பல் துலக் கப் பயன்படும் பற்பசை முதற் கொண்டு அனைத்துப் பொருள் களும் வெளிநாட்டுப் பொருள்களாகவே ஆகி விட்டன. அன்றைக்கு ஒரு பிரிட்டீசு வெள்ளை யனை வெளியேற்றுவதற்காகப் போராடியவர்கள் இன்றைக்கு உலக வல்லரசுகள் பலவற்றையும் வரவேற்றுக் கொள்ளையடித்துக் கொண்டு போக வழி அமைத்துத் தந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் கனிவளங்களும், தண்ணீரும், உழைப்பும் வெளிநாட்டுக் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்படுகின்றன.
தமிழக நிலத்தடி நீரை உறிஞ்சி புட்டி களில் அடைத்து தமிழக மக்களுக்கே விற்றுக் கொழுக் கிறது அமெரிக்கா.
குளிர் குடிப்புகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுடையவனாகி விட்டன.
முன்பெல் லாம் தெரு வுக்குத் தெரு இருந்த காலகக் (சோடா) குழுமங்கள் எல்லாம் மூடப்பட்டு கொக்ககோலா, பெப்சி, பேன்டா, ஸ்பிரிட் என்று நூற்றுக்கணக்கான பெயர்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்து கொள்ளையடித்துக் கொழுக்கின்றன.
உடலுக்குப் போட்டுக் கொள்ளுகிற வழலை (சோப்பு) ஒன்று கூட தமிழகத்துக்குரியவர்களால் உருவாக்கப்படவில்லை. எல்லாமே வெளிநாட்டி னரால்தான் உருவாக்கப்பட்டு கொள்ளை யடிக்கப்படுகின்றன.
தூவல் (பேனா), ஈருளி கள் (டூவீலர்கள்) என எதை எடுத் தாலும் அவையெல்லாம் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான் என வெளிநாட்டுத் தொழிலக உருவாக் கங்களே.
ஆக, அவற்றை யெல்லாம் செய்கிற திறமையா, மூலப் பொருள்களோ தமிழகத்தில் இல்லையா? எல்லாம் இருந்தும் தொழில் நடத்துகிற உரிமை மட்டும் தமிழகத்திடம் இல்லை.
நம் தமிழக உதகையில் விளைந்தாலும் தேயிலை தமிழ் நாட்டுக்குச் சொந்தமில்லை. லிப்டன், ப்ரூக்பாண்ட், டாட்டா என்று வெளிநாட்டு நிறுவனங்கள்தான் அவற்றைக் கொள்ளையடித்து விற்றுக் கொழுக்கின்றன.
தமிழகத்தில் கிடைக்கும் நிலக்கரியும், கண்ணெய்யும் (பெட்ரோலும்) தமிழ்நாட்டிற்கு இல்லை.
ஆக, தமிழர்கள் எப்படித் தமிழ் வழியில் கல்வி கற்க முடியவில்லையோ, அப்படி தமிழகத்தில் தொழில் நடத்தவும் முடியவில்லை.
இந்தியா முழுமையும் மட்டுமல்ல உலகம் முழுமையும் விற்பனைச் சந்தைகளை வைத்து ஒவ்வொரு நாளும் கோடிக் கோடியாய் இலாபம் சம்பாதிக்கும் பெப்சி, கொக்கக்கோலா போன்ற நிறுவனங்கள், தங்கள் பண்டங் களின் விளம் பரங்களுக் காகவே பல கோடிகளைச் செலவழிக்கின்றன.
நடிகர், நடிகைகளைக் காட்டி விளம்பரம் செய்கின்றன. அறிமுகத்திற்காக மிக மலிவான விலையில் தொடக்கத்தில் குடிப்புகளை விற்கின்றன. எனவே அவற்றோடு தமிழர்கள் சிலரால் தொடங்கப்படும் நிறுவனங்கள் போட்டி போட முடிவதில்லை. அப்படியே தட்டுத் தடுமாறி தொடங்கினாலும் அந்தத் தொழிலை வளர்க்க முடியாத வகையில் பல்வேறு தொல்லைகளை அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்கின்றன.
அரசை, காவல் துறையைச் சாதகமாக்கிக் கொண்டு மிரட்டுகின்றன. தமிழர்கள் நடத்தும் தொழிலுக்கு உரிமம் இல்லை யென்றோ, வரிகள் கட்டவில்லை என்றோ பொய் வழக்குகள் போடப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்துகிற தொழில்கள் யாவும் நிலத்தைப் பாழாக்குகின்றன. வேதியல் கழிவு களை அவை நிலத்தடியில் விடுவுதால் நிலத்தடி நீர் கெடுகிறது. அணுமின் கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் வளம் பாழடிக்கப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் எந்த அரசாங்கமும் கேட்பதும் இல்லை, தடுப்பதும் இல்லை.
ஆக மொத்தத்தில் வெளிநாட்டுக் கொள்ளை யர்களுக்கு வழிவிடும் அரசாங்கமே இங்கு நடக்கிறது. இந்திய அரசு அந்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூடிக் கூட்டுக் கொள்ளை யடிக்கிறது.
மன்மோகன் சிங் ஆகட்டும் அல்லது வாஜ்பேயி ஆகட்டும் இந்தியாவை எந்தப் பேய் ஆட்சி செய் தாலும், அவை யெல்லாம் வெளி நாட்டு கொள்ளை யர்கள் கொள்ளை யடிக்க கூட்டிக் கொடுக்க வழி அமைத்துத் தருகிற கயவர்களாகவே உள்ளனர்.
அந்தக் கயவர்களுக்கு அடி ஊழியம் செய்கிற அடிமை அரசே தமிழக அரசு.
ஆக, தமிழகம் எப் படி கல்வியில் உரிமையற்ற வகையில் தமிழ் வழிக் கல்வியைப் படிக்க முடியவில்லையோ, படித்தாலும் அது மதிக்கப்படுவதில்லையோ, மதிக்கப் பெற்றாலும், வேலைவாய்ப்பு கிடைக்கவில்லையோ, அப்படி தமிழகத்தில் தமிழர்கள் ஒரு தொழிலை நடத்த முடியவில்லை. தொடங்கினாலும் அது நிலைப்பட முடிவதில்லை.
ஆக இந்த நெருக்கடிகள் தீர வேண்டுமானால் முதலில் பன்னாட்டு மூலப் பணங்களின் கீழ் நடத்தப்படும் தொழிகலங்களை எல்லாம் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்.
பொருள்களை உருவாக்கும் தொழில்கள் மட்டும் அல்லாமல் எந்தப் பொருளையும் உருவாக்காமல் நடத்தப்படுகிற தகவல் தொழில் நுட்பம் அலுவலகங்களையும் இழுத்து மூடியாக வேண்டும்.
இந்தத் தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி) பூங்காக்கள் என்பவை பன்னாட்டு நிறுவனங் களின் கணக்கு வழக்குகளை இங்கே போடுவதோடு, தமிழகத்தை அதன் கனிம வளங்களை, இயற்கை வளங்களை, மூலிகை வளங்களை, பழங்கள், பூக்கள் வளங்களை எல்லாம் அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு போக உளவு சொல்பவையாகத் தொடங்கப் பட்டுள்ளன. புற்றீசல்களாய் இன்றைக்கு தமிழகத்தில் செயல்படும் பன்னூறு தொழில் நுட்பப் பூங்காக்களையும் இழுத்து மூடியாக வேண்டும்.
அந்த இடங்களையெல்லாம் தமிழக மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உருவாக்கும் தொழிலகங்களாக மாற்ற வேண்டும்.
தமிழ்த் தேசத்திற்குரிய தொழில்களைப் பெருக்க வேண்டும்.
தமிழக மக்களின் வாழ்வில் தேவைகளின் நிறைவுக்கு எஞ்சியவைவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் அதன்வழி வெளிநாடு களிலிருந்து தேவைப்படும் பொருள்களைப் பெறுவதும் வேண்டும்.
எளிய பொருள்களை வகை வகையாய் உருவாக்கி உலக அளவில் உயர்ந்து நிற்கின்றன உரிமை பெற்ற நாடுகள்.
ஒரு தேசம் தன்னளவில் உரிமையுடன் தொழில் செய்ய முற்படுகிறபோதே, பொருள் களின் விலைகள் குறையும், தொழில்கள் பெருகும். வேலைவாய்ப்பும் பெரிதாக்கப்படும். சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். ஆனால் ஒரு தேசத்தின் தொழில்களை வெளி நாடுகளுக்கு விற்றால், அந்தத் தேசம் எக்கேடு கெட்டால் என்ன என்று, வெளிநாட்டு நிறுவனங்கள் அந்தத் தேசத்தைப் பாழடித்து விடும்.
இன்றைக்கு சோமாலியாவின் நிலை ஓர் எடுத்துக்காட்டு. ஒருகாலத்தில் ஓரளவு வளமான சோமாலியா இன்று பட்டினிச் சாவுகள் அதிகமுள்ள நாடாகி விட்டது.
ஒரு மாதத்திற்கு முப்பதாயிரம் பேர் பட்டினி யால் செத்துப் போகின்றனராம்.
தமிழகமும் அந்த நிலைக்கு வந்து விடலாம். வெளிநாட்டவர்களுக்கெல்லாம் திறந்த வீடாய்த் தமிழகம் ஆகிவிட்ட சூழலில் அவரவர்கள் சுரண்டி, உறிஞ்சி கொள்ளையடித்துக் கொண்டு ஓடிய பின் எஞ்சிய நிலத்தில் தமிழர்கள் பஞ்சப் பராரிகளாக அலைய வேண்டுமாகி விடும். பட்டினியால் சாகத்தான் வேண்டும் என்றாகி விடும்.
தஞ்சை வாழ் மக்களே எலிக்கறி சாப்பிட்டதையும், திருப்பூர் மக்களே கஞ்சித் தொட்டிக்கு அலைந்ததையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனவே இக்கட்டான இந்தச் சூழலை எப்படி நாம் எதிர்கொள்ளப் போகிறோம்.
வெளிநாட்டுக் கொள்ளையர்களை எப்படி வெளியேற்றப் போகிறோம்? தமிழ்த் தேசத் தொழில் களைப் பெருக்குவது எப்படி?
இந்த வேலைகளையெல்லாம் திட்டமிட்டுப் போர்க்கால அடிப்படையில் விரைந்து செய்தாக வேண்டும்.
தமிழகத் தொழில் கள் முடக்கப்படு வதையும், பன்னாட்டுத் தொழில்கள் கொழுத்துப் பெருகு வதையும் வீதிக்கு வீதி பரப்பியாக வேண்டும்.
தெருமுனை நாடகங்கள், பாடல்கள், சிற்றிதழ்கள், தெருமுனைக் கூட்டங்கள் என இவ் உரிமை முழக்கச் செய்திகளைக் காட்டுத் தீயாய்ப் பரப்பியாக வேண்டும்.
தமிழக உருவாக்கப் பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போக வழியாக இருக்கும் துறைமுகங்கள், வானூர்தி நிலையங் களில் முற்றுகையிட்டுத் தடுத்திட வேண்டும்.
வெளிநாட்டுக் கூட்டால் உருவாக்கப்படும் பொருள்களைப் புறக்கணிப்பதோடு, அவற்றை யெல்லாம் பறி0முதல் செய்ய வேண்டும்.
தமிழ் தேசம் பற்றிப் பேசுகிற இயக்கங்கள் எல்லாம் மற்ற சிக்கல்களை யெல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டு, இவ்விரு கோரிக்கை களுக்கும் ஓரணி திரண்டாக வேண்டும். அப்படியான மக்கள் எழுச்சியுடன் கூடிய போர்க்கால நெருக்கடி களாலேயே தமிழ் வழிக் கல்விக்கு வழி கிடைக்கும். தமிழியத் தொழில்களுக்கு வழி திறக்கும்.