ஏமாற்றும் வஞ்சகமும் இருக்கக் கண்டும்
எனக்கென்ன என்றிருப்பாh எண்ணில் கோடி
தாமாற்றும் துணிவற்றார் தாழ்ச்சியுற்றார்
தமிழரின் அழிவினையும் தடுத்தற்கில்லார்
நாமாற்றுவோ மென்பார் நாட்டி லெங்கே
நரிக்குணத்தார் உறுதியிலார் நாணமற்றார்
“*ஆமாற்றுந் துணிவுடையேன்” அறிவிப்பார் யார்?
அவரோடு செயல்படவே அழைக்கின்றேனே
அணையாத தீமீண்டும் அழிக்கும் அப்போல்
அழிக்காத பகையழிக்கும் அறிவாண்மைக்குத்
துணையாகாத் துடைநடுங்கிச் செயலும் சொல்லும்
துயர்துடைக்க உதாவது; சொத்தைக் கும்பல்
இணையாது தனித்தனியே இயங்கித் தோற்றும்
இவைகட்சி, அரசியலார்க்(கு) இனிப்பே; பாயும்
கணையாகக் கனலாகக் கருத்து நுட்பம்
கலந்தொன்றித் திரண்டாலே காண்போம் வெற்றி!
• ஆமாற்றுந்துணிவு = ஆம் + ஆற்றும் + துணிவு
சுதந்திர தின சிந்தனைகள்
யூனியன்ஜாக் இறக்கப்பட்டது
மூவண்ணக்கொடி ஏற்றப்பட்டது
மாற்றம் கொடி மட்டும்
பருந்தின் நிழல் நிழலாகாது
கோழிக் குஞ்சுகளுக்கு
பாரம் தாங்க முடியாமல்
கீழிறக்கி விலக வேண்டும்
பாரதத்திடமிருந்து
- தமிழ்நெஞ்சன்
உலகமெங்கும் ஏப்ரல் 1
எங்களுக்கு மட்டும் ஏன்
ஆகஸ்டு 15?