சுட்டிகுழந்தையின் விளையாட்டுப் பொருள்களாய்
சிதறிக்கிடக்கும்
மரங்களினடியிலோ
அதையொத்த
பேரண்டச் சில்லுகளிலோ
விட்டேற்றிகளாய்
ஒரு விரிந்து செல்லும் புறப்பரப்பிலோ
நதிக்கரையோரம்
கிழித்து அடித்துச் செல்லப்பட்ட
கூடாரங்களிலோ
மிக முக்கியமாய்
கூட்டாஞ்சோற்று வட்டத்திலோ
முடியவே முடியாது
எனது வயதில்
எப்போதும்
வரிசையில் நிற்பதையே
விரும்புகிறேன் நான்
இங்கு தான் வாங்க முடிகிறது
சொந்தமாய் ஒரு கூண்டும்
சுதந்திரமும்
இங்கு தான் நான்
தனியாகவும் இல்லை
கூட்டமாகவும் இல்லை
ஒவ்வொருவரும்
முன்னவர்களைப் பற்றி
பின்னாலிருப்பவனிடம் பிரலாபிக்க
கடைசியில் இருப்பவன்
இன்னொருவனுக்காக
காத்திருப்பான்
நேற்று கர்ப்பக் கிரகத்தில் நின்றவன்
இன்று வாக்குச்சாவடியில் நிற்கிறான்
நாளை அவன்
ஏ.டி.எம்ல் பணமெடுக்கவோ
மத்திய சிறையில் மதிய உணவிற்காகவோ
நின்று கொண்டிருக்கலாம்
வழுக்குப்பாறையில் நிலைகொண்ட வேர்களோடு
செழித்து வளர்கிறது
வரிசை
கொப்புகளிலிருந்து பறக்கின்றன
சிவந்த மூக்குடைய கழுகுகள்
கந்தலான ஆடையிடம்
கோரிக்கை ஏதுமில்லாமல்
ஆபாசவார்த்தைகளை அள்ளித்தெளிக்கும்
பைத்தியக்காரனின் அழுக்குமேனியில்
கல்லடிகளும்
தோல் கிழிந்த கீறல்களும்
முன்பொருநாள்
வரிசையை குலைக்க முயன்றவன் அவன்தானாம்
படுபாவி
சிறுவர்களை
வரிசையில் நிற்கச் செய்வது கஷ்டம்தான்
என்றாலும் வேறென்ன செய்வது
கடைக்கோடியில் நிற்போரின் குரல்கள்
இங்கு வந்து சேர ஒளியாண்டுகளாகும் நிலையில்
என்முறை வந்தது
பொட்டலத்தை வாங்கிவிட்டு
வந்துகொண்டிருந்தேன்
கான்கிரீட் தளத்தில்
பின்னால்
திரும்பித்
திரும்பிப் பார்த்தவாறு
தனியே ஓடிக்கொண்டிருந்தான்
என் மகன்
- சபரிநாதன்