முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்றைய சூழலில் தூக்குத்தண்டனைக்கு ஆதரவான, எதிரான கருத்துக்கள் வலுவாக இந்தியாவில் ஒலித்து வருகிறது. தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும், தூக்குதண்டனை இந்தியாவில் எதற்காக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது! உண்மையிலேயே தூக்குதண்டனை குற்றங்களை குறைப்பதற்காகவா? இல்லை உலக அளவில் இந்தியாவிற்கு என்று இருக்கும் போலியான கவுரவத்தை காப்பதற்காகவா? என்பதே எம் மனதில் திரும்ப, திரும்ப எழும் கேள்வி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16,2012) அன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ? என்ற அச்சம் நமக்கெல்லாம் எழுந்திருக்கிறது. இப்பிரச்சனை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் முக்கியப் பிரச்சனையாக எடுத்து விவாதிக்கப்பட்டது. மனித உரிமைகள் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்; பெரும்பாலானோர் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். குறிப்பாக பி.ஜே.பி.யின் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் பேசுகையில் 'தலைநகரில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களை தடுக்காமல் அரசு என்ன செய்கிறது? இது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்' என்று பேசி இருக்கிறார். மேலும் சமாஜ்வாடி உறுப்பினர் ஜெயா பச்சன், 'பாலியல் பலாத்கார குற்றத்தை கொலை குற்றத்துக்கு சமமாகக் கருத வேண்டும். இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களை தூக்கில் போட வேண்டும். அதற்கான சட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். இந்த சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்' என்று கூறி உள்ளார். மற்ற பல உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசி உள்ளனர். டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், குற்றவாளிகள் 6 பேரையும் தூக்கில் போட பரிந்துரைத்துள்ளார்.

இந்த கொடூர செயலுக்கு இத்தனைப் பேரும் கண்டனங்களை தெரிவிப்பது என்னவோ நியாயம் தான்; கண்டிக்கக் கூடியது தான்! ஆனால்....... இந்தியாவில் யாருக்கெல்லாம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? யாரெல்லாம் அதில் இருந்து தப்பிக்க வைக்கப்பட்டார்கள்? என்றால் நமக்கு தலையே சுத்தும்; இந்தியாவில் கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை மூன்று பேர் தான் தூக்கிலிடப்பட்டுள்ளனர். 1995ல் ஏப்ரல் 27, ஆட்டோ ஷங்கர், 2004ல் தனன்ஜய் சாட்டர்ஜி, 2012ல் கசாப். ஆட்டோ சங்கர் 6 பேரை கொலை செய்த குற்றத்திலும், தனன்ஜய் சாட்டர்ஜி, 14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கிலும், அஜ்மல் கசாப் 167 பேரை சுட்டுக் கொன்ற வழக்கிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார்கள்; அதன் பிறகு டெல்லியில் நடந்த தற்போதைய கற்பழிப்பு சம்பவத்திற்கு நாடு முழுவதில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன; பலர் குற்றவாளிகளை தூக்கில் போட சொல்கிறார்கள்; குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவன் மன்றத்தில் என்னை தூக்கில் போடுங்கள் என்று கூறி உள்ளான், ஆகவே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியாவையே வெட்கி தலைகுனியச் செய்த கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அதிலிருந்து தப்பிக்க வைக்கப்பட்டவர்களும் ஏராளம். விவசாயப் பெருமக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர்களை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்து விட்டு இன்று ஏகபோக சுக வாழ்க்கையை வாழ்பவர்களும் ஏராளம். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு மராட்டிய மாநில முதல்வர் சவானின் சொந்த கிராமமான கராட்டில் தலித் பெண் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாண‌மாக்கி அடித்து விரட்டினார்கள். சில நாட்களுக்கு முன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் எம்.பி. ஒருவர் வீட்டிலே 16 வயது சிறுமியை கற்பழித்து, கொன்றுள்ளனர். 1968 ஆம் ஆண்டு கீழ் வெண்மணியில் 44 விவசாயிகளை துடிக்கத் துடிக்க உயிரோடு ஒரு குடிசையில் வைத்து தீவைத்து கொளுத்தினார்கள்.

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான கிராமமான வாச்சாத்தி கிராமத்தில் 1992 சூன் 20ம் தேதி 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாகப் புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர். (Wikipedia) ஆனால் வாச்சாத்திக் கொடுமைக்கு தீர்ப்போ 19 ஆண்டுகள் கழித்துதான் வெளி வந்தது. 269 பேர்களுமே குற்றவாளிகள் , இந்த 269 பேர்களில் 54 பேர்கள் இந்தப் பத்தொன்பது ஆண்டு இடைவெளியில் இறந்து போயுள்ளனர். இறந்து போய்த் தப்பித்துக் கொண்டவர்களில் ஒரு ஐ.எஃப்.எஸ் அதிகாரியும் அடக்கம். மீதமுள்ள 215 பேர்களையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை வழங்கி உள்ளது நீதி மன்றம். தண்டனை பெற்றவர்களை விட தப்பித்தவர்களே அதிகம். கடந்த ஆண்டு 2011, நவம்பர் 22ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள மண்டபம் கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகா, மாதேஸ்வரி ஆகிய நான்கு பெண்களை காவல்துறையினர் விசாரணைக்கு என்று கூறி, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.

இந்தியாவில் 2009 ஆம் ஆண்டைய புள்ளி விவரப்படி 2007யில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3010, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2106, உத்தரப்பிரதேசத்தில் 1648, பீகாரில் 1555, டெல்லியில் 598, அஸ்ஸாம் தவிர வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 1555, நாகாலாந்தில் 13, மணிப்பூரில் 20, சிக்கிமில் 24, அருணாச்சலப்பிரதேசத்தில் 48, மேகாலயாவில் 82, தென் மாநிலங்களைப் பொருத்தமட்டில் ஆந்திர மாநிலத்தில் அதிகபட்சமாக 1070, தமிழகத்தில் 523 வழக்குகளும், கேரளாவில் 512 வழக்குகளும், கர்நாடகத்தில் 436 கற்பழிப்புகளும் நடந்துள்ளன. இவை வழக்கு பதிவு செய்யப்பட்டவை மட்டும்தான். வழக்குப் பதிவு செய்யப்படாதவை எத்தனையோ? அதிலும் தண்டனை வழங்கப்பட்டது எத்தனைப் பேருக்குத் தெரியுமா? 2007யில் மொத்தம் 20 ஆயிரத்து 737 வழக்குகள் பதிவானதில் 25 ஆயிரத்து 363 பேர் கைது செய்யப்பட்டு, வெறும் 5 ஆயிரத்து 22 பேருக்கு மட்டும் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டைப் பொருத்தவரை மொத்தம் 19 ஆயிரத்து 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 23 ஆயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டு,வெறும் 5 ஆயிரத்து 310 பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. (தகவல் : நக்கீரன் : ஜூலை, 29, 2009).

அடுத்தபடியாக கொலைக் குற்றங்கள் என்று எடுத்துக் கொண்டால் அயோத்தி சென்றுவிட்டு திரும்பிய கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். குஜராத்தில் வாழும் இசுலாமியர்களை குறிவைத்து அவர்களைத் திட்டமிட்டு பழி வாங்குவதற்காகவே இந்த ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும் ஏற்பட்ட கலவரத்தில் 1,200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 600 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், 400 குழந்தைகள் காணவில்லை, 500க்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய நரேந்திர மோடி இன்று வரை தண்டிக்கப்படவில்லை, மாறாக மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் அஜ்மல் கசாப்புக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற கடந்த கால சம்பவங்களைப் பார்க்கும் போது இந்தியாவின் தற்பெருமையைக் காத்துக்கொள்ளவே கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரிதும் அறியப்படாத ஒரு குக்கிராமத்திலோ, அல்லது உலகின் பார்வைக்குப் புலப்படாத இடத்தில் எவ்வளவு பெரிய மனித உரிமைகள் மீறல் நடந்தாலும் அல்லது மனிதன் வாயில் மனிதனே மலத்தைத் திணித்து கொடுமை நடந்ததாலும், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானாலும் எந்த மனித நேயவாதியும் வாய் திறப்பதில்லை என்பது தான் வேதனையின் உச்சம். இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த‌ வேளையில்கூட இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் யாராலும் அறியப்படாத மலைவாழ் கிராமத்தில் ஏதோ ஒரு காம மிருகத்தால் யாரோ ஒரு இளம்பெண் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம்; நரிக்குறவர் சமூகப் பெண்களை சர்வசாதாரணமாக பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். இதுவரை ஒரு வழக்காவது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக நான் அறிந்ததில்லை. அவர்களை காவல் நிலையத்துக்குள்ளே அனுமதிப்பதில்லையே பிறகு எப்படி புகார் கொடுப்பார்கள், வழக்கு பதிவார்கள்? நரிக்குறவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களுக்காக உங்கள் மனித நேயம் பொங்கி புரையோடாதா? டெல்லியில் நடந்தால் அது கொலை, அது மனித உரிமை மீறல், அதுவே இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் குக்கிராமத்தில் நடந்தால் நியாயமா? தமிழக சேரிகளில் காவல் துரையின் அட்டகாசங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை; அத்துமீறி உள்ளே நுழைந்து சேரிப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை; தலித் இயக்கங்கள் போராடி, வழக்குப் பதிவு செய்யத் தூண்டினால் சாதாரண வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களிலே பிணையில் வெளி வந்துவிடுகிறார்கள்.

டெல்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவன் மன்றத்தில் என்னை தூக்கில் போடுங்கள் என்று கூறி உள்ளான்; பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள் இச்சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளை தூக்கில் இட வலியுறுத்தும் நிலையில், பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்களின் கருத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

"டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். ஆனால் அதுமட்டுமே நாட்டின் ஒரே பிரச்சனையைப்போல் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் விதர்பா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மட்டும் 2,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை சராசரியாகப் பார்த்தால் ஒரு நாளைக்கு 47 விவசாயிகள் ஆகும். இந்தக்கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விவசாயிகள் தற்கொலையில் இது உலக சாதனை ஆகும். இதற்காக யாராவது வெடித்துக் கிளம்பிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? கண்ணீர் விட்டிருக்கிறார்களா? இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 48 சதவீதம். இது ஆப்பிரிக்கவின் மிகவும் பின்தங்கிய நாடுகளான எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை விட மிக அதிகம். அங்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் 33 சதவீதம் தான். நம் நாட்டில் இதற்காகக் குரல் கொடுப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே. மாபெரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழை மக்களுக்குப் போதிய மருத்துவ வசதியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு யாரும் குரல் எழுப்புவதில்லை.

இந்தியாவில் கல்வி, கசாப்புக்கடையைப் போல் உள்ளது. அரசின் பெரும்பாலான பணம் ஐஐடி-களுக்கும், ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மட்டுமே செலவிடப்படுகின்றது. அறிவுக்கு அடித்தளமிடும் தொடக்கப்பள்ளிகளுக்கு குறிப்பாக கிராமப்புறப் பள்ளிகளுக்கு இந்தப் பணம் செலவிடப்படுவதே இல்லை. விலைவாசியின் ராக்கெட் வேக உயர்வு. இன்னும் மிகப்பெரிய சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. இவைகளைப் பற்றிப் பேச, கேள்வியெழுப்ப, போராட, கண்ணீர் விட மக்களோ, ஊடகங்களோ ஏன் பாராளுமன்றமோ கூட தயாராக இல்லை நடந்த கற்பழிப்பு சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால் இந்த டெல்லி சம்பவம் தான் நாட்டின் ஒரே பிரச்சனை என்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்காதீர்கள். மேலும் இந்தக் குற்றத்திற்கு இந்திய த‌ண்டனை‌‌ச் சட்டம் 376 இன் படி அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படுகின்றது. ஆனால் இந்தக் குற்றத்திற்கு சட்டத்தில் இல்லாத மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூச்சலிடுவது எதற்காக என்று புரியவில்லை" என கட்ஜூ கருத்துத் தெரிவுத்துள்ளார்.

மரண தண்டனையே கூடாது என்பது தான் நம் நோக்கம், முழக்கம் எல்லாமே. ஆனால் மரண தண்டனை என்ற பேரில் மனிதநேயம் சாகடிக்க‌ப்பட்டு, காவி வெறி கொண்ட இந்தியாவின் போலி கவுரவம் தான் நிலை நாட்டப்படுகிறது என்பதே கசப்பான, பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. டெல்லியில் நடந்த கொடூர செயலுக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு நின்றுவிடாமல், மேலும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க குற்றங்கள் செய்யத்தூண்டும் காரணிகள் எவை என்பதை அறிந்து அரசு அதை களைய முன்வரவேண்டும். மேலும் இந்த சம்பவத்திற்காக அரசுக்கும் நீதித்துறைக்கும் காந்தியடிகள் பொன்மொழி ஒன்றை நினைவுப் படுத்துகிறேன், கண்ணுக்குக் கண் என்றால் கடைசியில் நமக்கு எஞ்சுவது குருடர்களின் உலகமாகத்தான் இருக்கும்.

- அங்கனூர் தமிழன் வேலு

Comments

12 comments

12
குருநாதன் சிவராமன்
"சமுதாயச் சீர்கேடுகளை ஒழிப்போம், தனிமனித ஒழுக்கத்தை வளர்ப்போம். சமுதாயத்தை திருத்துவோம்" என்னும் கருத்துக்களோடு யாரும் முன்வருவதில்லை. அப்படியே ஒருசிலர் வந்தாலும் அவர்களை நாம் கண்டுகொள்வதில்லை.

இதுபோன்ற போராட்டங்கள் அரசை ஸ்தம்பிக்கச் செய்யும். ஆனால் சமுதாயத்தை சீர்திருத்தாது.

பலரும் சொல்லுகிறபடியே குற்றவாளிகளை தூக்கிலிடுவோம். எல்லோரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். இனிப்பு வழங்குவோம். மகிழ்ச்சி அடைவோம். அதற்கு அப்புறம்?? குற்றங்கள் குறைந்து விடுமா? சமுதாயம் நல்வழியில் பயணிக்குமா?

திருத்தப்பட வேண்டியது ஒட்டுமொத்த சமுதாயமும்!

http://rsgurunathan.blogspot.in/2012/12/blog-post_24.html
Guest
மிக நல்ல கட்டுரை
Fighter85
Insightful. Delhi rape incident is actually one in hundreds of rapes happening in India per day. The perperators should be punished for their life term. After the justice to this incident, rape will stop in India? I guess NO coz the real problem lies in some of the people mind. People should be inculcated with values of fairness towards gender. Parents should not think like only the colleges restricting boys-girls talk are the real good ones. Coz never a boy have a chance to understand the other gender. Please think in the big picture to solve these mysteries instead of being reactionary toward some incidents and once the time is passed everyone forget and go back to their normal works.
viyasan
தில்லி வ‌ன்புண‌ர்வு இந்தியாவை ம‌ட்டும‌ல்ல‌, முழு உல‌கையையுமே உலுக்கியிருக்கிற‌து. அத‌ற்காக‌ இந்தியாவிலோ அல்ல‌து ம‌ற்ற‌ நாடுக‌ளிலோ ந‌டைபெறும் க‌ற்ப‌ழிப்புக‌ளையும் ,கொடுமைக‌ளையும், ஏழைகளின் த‌ற்கொலைக‌ளையும் குறைத்து ம‌திப்பிடுவ‌தாக‌க் க‌ருத்த‌ல்ல‌. உதார‌ண‌மாக‌ அண்மையில் அமெரிக்காவில் ஒரு பாட‌சாலையில் ந‌டைபெற்ற‌ குழ‌ந்தைக‌ளின் ப‌டுகொலைக‌ள் முழு வ‌ட‌ அமெரிக்காவின் இத‌ய‌த்தையும் பிழிந்து விட்ட‌து, அமெரிக்க‌ ஜ‌னாப‌தி ஒபாமா வெளிப்ப‌டையாக‌க் க‌ண்ணீர் சிந்த‌வும் செய்தார், அத‌ற்காக‌ யாராவ‌து நீ எதற்காக‌ அமெரிக்காவில் அன்றாட‌ம் ந‌டைபெறும் ம‌ற்ற‌க் கொலைக‌ளுக்கெல்லாம் க‌ண்ணீர் விட‌வில்லை என்று ஒபாமாவிட‌ம் யாரும் கேட்க‌ மாட்டார்க‌ள், அப்ப‌டிக் கேட்ப‌து போன்ற‌து, தான் இந்த‌க் கட்டுரையும். சில‌வேளைக‌ளில் சில‌ கொடிய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் அந்த‌ நாடு முழுவ‌தின‌தும் க‌வ‌ன‌த்தைப் முற்று முழுவ‌தாக‌ப் பெற்று விடுகிற‌து. அப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் தான் ச‌மூக‌த்தில் நடைபெறும் வேறுப‌ல‌ கொடுமைக‌ளைப் ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வை ம‌க்க‌ளுக்கு ஏற்ப‌டுத்துகிற‌து. அந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில், நாடு முழுவ‌தும் ஒரு அப்பாவிப்பெண்ணுக்கு ந‌ட‌ந்த‌ கொடுமைக‌ளுக்காக‌ அழுது கொண்டிருக்கும் போது, இது என்ன‌ பெரிய‌ கொடுமை, அப்ப‌னே, இதைவிட‌ப் பெரிய கொடுமைக‌ள் எல்லாம் உண்டு என்று எழுதுவ‌து ஒரு வ‌ள‌ர‌த்துடிக்கும் எழுத்தாள‌ருக்கு அழ‌க‌ல்ல‌.மேலும் குஜ‌ராத்தில் வாழும் இஸ்லாமிய‌ர்க‌ளைத் தாக்குவ‌த‌ற்காக‌ இந்துக்க‌ளே த‌ங்க‌ளில் 59 பேரை உயிரோடு தீவைத்துக் கொன்றார்க‌ள் என்ப‌து அமெரிக்கர்க‌ளே த‌ங்க‌ளின் விமான‌த்தால் நியுயோர்க்கைத் தாக்கி 4000க்கும‌திக‌மான‌ அமெரிக்க‌ர்க‌ளை கொன்றார்க‌ள் என்று சில‌ர் கூறுவ‌து போல் இருக்கிற‌து. இருந்தாலும் மோடியைத் தாக்கிய‌ கையோடு, "கண்ணுக்குக் கண் என்றால் கடைசியில் நமக்கு எஞ்சுவது குருடர்களின் உலகமாகத்தான் இருக்கும்" என்று இஸ்லாமிய‌ நாடுக‌ளில் ந‌டைமுறையிலுள்ள‌ சாரியா ச‌ட்ட‌த்தையும் எள்ளிந‌கையாடும் அங்க‌னூர் த‌மிழ‌ன் ம‌த‌ச்சார்பற்ற‌ ந‌டுநிலையாள‌ர் என்ப‌தை யாராலும் ம‌றுக்க‌ முடியாது. : )
லெனின்
துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஒபாமா அதன் விளைவால் 32 குழதைகள் இறந்தால் அவர் அதற்காக கண்ணீர் விடுவதை யார் காதில் பூ சுத்துகிறீர்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக குறல் கொடுக்கும் அன்பர்களே உங்கள் குறல் ஏன் கடை நிலை வாழ் உயிர்களுக்கு கொடுமையிலும் கொடுமை நிகழ்ந்தால் கூட ஊமை ஆகி விடுகிறது என்றுதான் அவர் கேட்கிறார். ஊழலை ஒழிப்பதற்கு கார்பரேட்கள் உதவியுடன் அன்னா ஹசாரே களம் இறங்கியதைப்போல, இந்த பாலியல் வன் கொடுமைக்கு மோடி தலைமை தாங்க போகிறாரா. மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினால் அந்த போராட்டத்தில் யாருக்கு ஆதாயம். ஆனி வேர் இருக்க கிளைகளை களை எடுப்பது என்ன நியாயம். உயர் சாதி பெண்ணை ஒரு தாழ்ந்த சாதி ஆண் தீண்டினாலே கொன்று பழி தீர்க்கும், ஆனால் தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணை உயர் சாதி நாய் கற்பழித்தால் கூட குற்றமில்லை என்னும் மனு தர்ம சாக்கடையை உடம்பில் பூசி அதுதான் கொள்கை என்று கொண்டிருக்கும் இந்துத்துவ பின்னோடிகளாக இருக்கும் இந்த காங்ரசும், பிஜேபி யுமா இதற்கு நீதி வாங்கித்தரப்போகிறார்கள். நல்ல வேடிக்கைதான் போங்கள். சூசகமாக உங்கள் மோடியின் கொலை எண்ணிக்கையை 59 என்று குறைத்துவிட்டீர்கள். திறமைதான்.
மகேந்திரன்
எந்த மனிதனும் உணர்வின் அடிப்படையில் சிந்திப்பதில்லை.
எல்லோருமே பாகுபாட்டுடன் கூடிய சிந்தனைதான். வியாசன் போன்ற மனிதர்கள் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வழியில் சிந்திப்பதில்லை.தற்போதிய சூழலுக்கு எடுத்துகாட்டு கூறி அவசர நியாயம் தேடுகிறார்கள். நடந்தது அநியாயம் என்றாலும் அதற்கு அவசர தண்டனை கோருவது சரியல்ல.நியாயதின் அடிப்படையில் மரண தண்டனை சரியென்றாலும் இது ஜெனனாயகத்துக்கும் மனித உரிமைக்கும் எதிரானதாகும். எல்லா கற்பழிப்புகளும் ஒன்றுதான் அனைத்துமே மனித உரிமை மீரல்தான் என்றாலும்
இது உயர் சாதி மற்றும் பணக்கார ஆதிக்க சக்திகளின்ன் கற்பழிப்பு என உணர்த்த செய்கிறது. உங்கள் உணர்வுகள் இதயத்துடன் இயங்க செய்யுங்கள்.
viyasan
முத‌லில் ச‌முதாய‌த்தில் ந‌டைபெறும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் அனைத்தையும் சாதிய‌டிப்ப‌டையிலும், சாதிக்க‌ண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்ப‌தையும், ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ச‌முதாய‌த்தின‌ர் நிறுத்த‌ வேண்டும். ஏனென்றால் அப்ப‌டிச் செய்வ‌த‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளாக‌வே த‌ம்மைத் தாங்க‌ளே சாதி என்ற‌ ஒரு மூலைக்குள் நிறுத்திக் கொள்கிறார்க‌ள். தில்லியில் ஒரு அப்பாவிப்பெண் கொடுமையான பாலிய‌ல் வ‌ன்முறைக்குட்ப‌டுத்த‌ப்ப‌ட்ட ச‌ம்ப‌வ‌ம், உல‌க‌ம் முழுவ‌தின் க‌வ‌ன‌த்தையும் ஈர்த்தமைக்கு இன‌, ம‌த‌, மொழி, சாதி, நாடு என்ற‌ கார‌ண‌ங்க‌ளும் கிடையாது. அந்த‌ப் பெண்ணுக்கு எந்த‌வ‌கையிலும் தொட‌ர்பில்லாத‌ வெள்ளைய‌ர்க‌ளும், க‌றுப்ப‌ர்க‌ளும், சீன‌ர்க‌ளும் கூட‌த் தான் அந்த‌ப் பெண்ணைப் பார்த்துப் ப‌ரிதாபப்ப‌டுகின்ற‌ன‌ர். அத‌ற்குக் கார‌ண‌ம் இந்தச் ச‌ம்ப‌வ‌ம் உல‌க‌ளவில் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு விட்ட‌து. அத‌னால் தான் ம‌க்க‌ள் உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌டுகிறார்க‌ள். தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளுக்கு ந‌டைபெறும் கொடுமைக‌ளும் இவ்வாறு ஊட‌க‌ங்க‌ளில் பெரிதுப‌டுத்த‌ப்ப‌ ப‌ட‌வேண்டும். அப்ப‌டிப் பெரிதுப‌டுத்த‌ப்ப‌ட்டால், சாதி, இன‌, ம‌த‌ வேறுபாடுக‌ளை ம‌ற‌ந்து எல்லோரும் க‌ண்டிப்பார்க‌ள், நீதி கேட்பார்க‌ள். அத‌ற்காக‌ இந்த‌ப் பெண்ணுக்குக் கிடைக்கும் அனுதாப‌மும், ஆத‌ர‌வும் நியாய‌ம‌ற்ற‌து என வாதாடுப‌வ‌ர்க‌ள் அந்த‌பெண் அனுப‌வித்த‌ கொடுமைக‌ளைக் கொச்சைப்ப‌டுத்துகிறார்க‌ள். நான் ஒன்றும் ம‌ர‌ண‌த‌ண்ட‌னையை நியாய‌ப்ப‌டுத்த‌வில்லை. ஆனால் இஸ்லாமிய‌நாடுக‌ளில் ந‌டைபெறும் சாரியா ச‌ட்ட‌த்தை நியாய‌ப்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளும், சிறிய‌ குற்ற‌ங்க‌ளுக்குக் கூட‌, கையையும், காலையும் ஏன் த‌லையையும் கூட‌த் துண்டிக்கும் இஸ்லாமிய‌ நாடுக‌ளின் ச‌ட்ட‌ங்க‌ளை எதிர்த்து ஒரு வ‌ச‌ன‌மாவ‌து த‌ன்னுடைய‌ சொந்த‌ வ‌லைப்ப‌திவில் கூட‌ எழுத‌த் துணியாத‌வ‌ரர்கள் பயங்க‌ர‌வாதிக‌ளையும், இப்ப‌டியான‌ பாலிய‌ல் கொடூர‌ங்களைப் புரிந்த‌வ‌ர்க‌ளையும் கூட‌த் தூக்கிலிடுவ‌து த‌வ‌றென‌ பம்மாத்து விடுவ‌தைப் பார்த்தால் சிரிப்பு வ‌ருகிற‌து.
sp.maragathaselvam
அருமையான கட்டுரை வியாசன் போன்ற ****** ஒதுக்குவோம் ,இஸ்லாமியர்கள் மேல் இருக்கும் வெறுப்பு அவர் எழுத்திலே தெரியுது .இவர் வந்து மனிதநேயம் பேசுறார் .........உருப்படும்
மகேந்திரன்
தனிப்பட்ட மனிதனான எனக்கு பதில் சொல்வதை நிருத்துங்கள் . கண்ணை மூடிக்கொண்டு இந்த நாட்டில் நடந்த அனைத்து சம்பவங்களையும் மணதாய்வு படுத்துங்கள். நீங்கள்
விளக்கிய ஒவ்வொன்றையும் கேள்வியாக கேட்கிறேன். இந்த நாட்டின் கடை நிலை மனிதனர்களின் மீது இழைக்கப்படும் எல்லா வன்மங்களையும் கண்டிக்காததும் கண்டுகொள்ளாததும் யார் குற்றம்? ஆய்வு படுத்துங்கள். அந்த விளிம்பு நிலை மனிதர்களின் பாதிப்பை யார் வெளிச்சத்திற்கு கொண்டு செல்வது? இதுவரை நடந்த பாலியல் கொடுமைகள் ஏன் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவா நடந்ததா? தண்டனை என்பது ஒரே வழிதான். திருத்துவதற்கு ஆயிரம் ஆயிரம் வழிகள் உள்ளது. அதை நடைமுறை படுத்துவதில்தான் கோடி சிக்கல்கள். ஏன் என்றால் திருத்த்ப்படுவர்கள் யாவரும் தவறு செய்பவர்கள். அந்த தவறு செய்பவர்க்ள் எல்லாம் யார்? தாழ்த்தப்பட்டவனா? இல்லை ஒடுக்கப்பட்டவனா? இல்லை உயர் குடிகள் . இப்போது நடந்திருப்பதும் உயர் குடிகளின் விளம்பர போராட்டம் போல் தான் இருக்கிறது. அனைத்து குற்றங்களையும் சம அளவில் பார்க்க மணம் ஏற்காமல் காரணம் தேட முற்படுகிறோம். மாற்றம் வேண்டுமானால் உங்கள் உணர்வின் வெளிப்பாடு பாகுபாடில்லாத நியாய தேடல் வேண்டும். பதில் கூறுவதை நிறுத்த்ங்கள். நன்றி
kulothungan
メகவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் தான் ஈடுபடுவார்கள் என்றால் அதன் பேர் போராட்டமும் இல்லை. அப்படி போராடுபவர்கள் போராளிகளும் இல்லை. நம் நாட்டின் துரதிர்ஷ்டம் எந்த தவறையும் இல்லாதவனும் சாதியால் தாழ்த்தப்பட்டவனும் செய்தால் அதற்கு மேட்டுக்குடிகளும் கல்வியாளர்களும் நம் மரியாதைக்குரிய (?) என்.டி.டி. ஹெட்லைன்ஸ் டுடே உள்ளிட்ட ஊடகங்களும் பெரிதாக விளம்பரம் கொடுத்து போராடி(?) குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்து விடுவார்கள். அதே தவறை பெரும்புள்ளிகளின் தறுதலை வாரிசுகள் செய்தால் அது ஒரு பெட்டிச் செய்தியாக கூட வராது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகளாகவோ பழங்குடிகளாகவோ இருந்துவிட்டால் அந்த குற்றங்கள் எல்லாம் அவர்கள் மீதே திருப்பிவிடப்பட்டு அதற்கான தண்டனையும் அவர்களுக்கே கிடைக்கும். இது நம் நாட்டின் வழக்கம். ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டபோதும் நம் சகோதரிகள் கற்பழிக்கப்பட்டபோதும் வாயைத் திறக்காத ஊடகங்கள் நம் தலைவர் மேதகு பிரபாகரன் இறந்ததாக வெளிவந்த செய்தியை திரும்ப திரும்ப ஒளிபரப்பின. பாவம் வியாசனுக்குத் தெரியாது நம் நாட்டில் ஒவ்வொரு சமூகப் பிரச்சனையிலும் சாதியம் கலந்திருக்கிறது என்று.. வாச்சாத்தி மக்களுக்கு நியாயம் கிடைக்க உலகின் கவனத்தை ஈர்க்க எப்படி விளம்பரம்(?) செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லையே..
karuthaan
அய்யா !பாலியல் வன்கொடுமை என்பது ஒரு தனி பிரச்னை அல்ல அது சமூக இயக்கத்தின் ஒரு தொடர்விளைவே பழங்குடி சமூகத்தில் பாலியல் வன்கொடுமை ஏன் இல்லை என்பதை பரிசீலியுங்கள் மனித குலத்தின் ஒரு உன்னதமான பாதுகாப்பான அமைப்பே குடும்பம் இதன் சிதைவே இன்று நாட்டில் நிலவக்கூடிய ஒழுக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப அமைப்பை ஜனநாயகமாக மாற்றுவதற்கு பதில் அதனை தன உற்பத்தி முறையின் மூலமும் தன்னுடைய நுகர்விய கலாச்சாரத்தின் மூலமும் சிதைத்து வருகிறது ஏகதிபத்தியம் இன்று கணவனுடன் மனைவி சேர்த்திருக்கும் குடும்பங்களை காண்பதே அரிதாகி விட்டது படித்தவர்கள் வேலை வாய்ப்புக்காக உலகம் முழுக்க விரட்ட படுகிறார்கள் விவசாயயாம் அழிக்கப்பட்டு கிராமங்களில் இருந்து விவசாயிகள் நகரம் நோக்கி விரட்டபடுகிறார்கள் மாணவர்கள் கல்விக்காக குடும்பங்களை பிரிய வேண்டியுள்ளது ஆகவே இது போன்ற குற்றங்களுக்கு தனி மனிதனை மட்டும் குற்றம் சொல்லாமல் ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்கு போராடுவோம்
manithan
ஐயா,
உங்களின் வீரத்தை மெச்சுகிறேன்..
பாலியல் வன்புணர்ச்சிக் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பதை எதிர்த்துக் கடந்தகாலங்களில் தூக்கு தண்டனைக்கு எதிரான இயக்கம் நடத்திய தலைவர்கள் தற்போது வீதியில் இறங்கி தூக்கு தண்டனை ஆதரவாளர்களுக்கு எதிராகத் தங்களின் கருத்துகளை வீதி தோறும் எடுத்துரைக்கலாமே...
மணியரசன், தியாகு, சுபவீ, இன்னும் இதுபோன்ற தலைவர்கள் அதை இப்போது செய்ய முன்வருவார்களா?
அவர்களின் வீரத்தை உலகு மெச்சுமே...!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.