அண்மைக் காலமாக கோயில் நிர்வாகிகள் அர்ச்சகர் திருட்டு மோசடியில் ஈடுபடும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கோயிலுக்குள்ளே இருக்கும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கடவுளை ஏமாற்றி ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவின் தேசிய அடையாளம் போல் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயில் அயோத்தியில் கட்டப்பட்ட " ராம ஜென்ம பூமி’’ கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை மோசடி குறித்து அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.
கோயிலைக் கட்டிய ராமஜென்ம பூமி அறக்கட்டளை கோயிலுக்கு நிலம் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. பல மடங்கு கூடுதலாக விலையை உயர்த்தி நிலம் வாங்கப்பட்டது. இந்த ஊழல் மூடி மறைக்கப்பட்டது.
இப்போது கோயில் கட்டுவதற்கு வசூலிக்கப்பட்ட நன்கொடையில் பெருமளவு ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அர்ச்சகர்கள் அறங்காவலர்கள் உறுப்பினர்கள் கையாடல் செய்துள்ளனர். இது குறித்து சி.பி.அய் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளது. வழக்கு வந்தவுடன் உபியில் ராமராஜ்யம் நடத்தும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மூன்று சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உ.பி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சனாதன தர்மத்தை பாஜக அவமதித்துள்ளது. ராமர் கோயிலுக்குள்ளேயே திருடர்கள் இருக்கிறார்கள், பக்தர்கள் கோயிலுக்கு நம்பிக்கையோடு தந்த நகைகளைத் திருடுகிறார்கள்; இது சனாதனத்தை அவமதிக்கிறது என்று அறிக்கை விடுத்துள்ளார். தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று தனது கனவில் ராமர் கூறியதாக பேசிய பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் குறித்து கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த முறைகேடுகள்
1. லட்டு விநியோக மோசடி (₹3.4 கோடி): 2026 மே மாதத்தில் கோயிலின் இலவச லட்டு திட்டத்தில் சுமார் ₹3.4 கோடி மதிப்பிலான முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. 2023–2026 காலகட்டத்தில் இலவசமாக வழங்க வேண்டிய லட்டுகள் சட்டவிரோதமாக விற்கப்பட்டதாகவும், கணக்கில் முரண்பாடுகள் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 6 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, 3 தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
2. உண்டியல் திருட்டு முயற்சிகள்: ராமேஸ்வரம் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற சம்பவங்கள் முன்பும் பதிவாகியுள்ளன. 2007-ல் உண்டியலின் பூட்டுகளை உடைக்க முயற்சி நடந்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
3. நகை முறைகேடு குற்றச்சாட்டுகள்: கோயில் நகைகள் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் கோயில் நிர்வாகம், மறுமதிப்பீட்டில் எடை குறைவு "தேய்மானம் மற்றும் பழுது பார்க்கப்பட்டதன் விளைவு" என விளக்கம் அளித்து, நகை கையாடல் இல்லை என்று தெரிவித்தது.
4. கோயில் நிலங்கள்: ராமேஸ்வரம் கோயிலை மட்டும் குறிவைத்து சமீபத்திய பெரிய நில மோசடி வழக்கு வெளிவரவில்லை. ஆனால் தமிழ்நாடு முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்புகள் குறித்து `Hindu Religious and Charitable Endowments Department’ துறை சார்பாக அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை
சமீப காலத்தில் மிகவும் கவனம் பெற்றது "சபரிமலை தங்க மோசடி" வழக்காகும். 2019-ல் கோயிலின் தங்க முலாம் பூசப்பட்ட சில பகுதிகள் பராமரிப்புக்காக அகற்றப்பட்டபோது, அவற்றில் இருந்த தங்கத்தின் அளவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது. பல கிலோ தங்கம் கணக்கில் இல்லை என்றும், சில தங்கப் பொருட்கள் முறைகேடாக கையாளப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணை அறிக்கைகள் கூறுகின்றன. இந்த வழக்கில் தேவசனம் வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில கோயில் நிர்வாகத்துடன் தொடர்புடைய நபர்கள் மீது விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் நெய் விற்பனை வருவாய் தொடர்பான முறைகேடு குறித்தும் உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக, இவை அனைத்தும் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்ள விவகாரங்கள்; இறுதி குற்றப்பொறுப்பு நீதிமன்றத் தீர்ப்புகளால் மட்டுமே உறுதிப்படுத்தப்படும்.
திருப்பதி லட்டு
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மத்தியப் புலனாய்வு அமைப்பு (CBI) தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு (SIT) தனது விரிவான விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் இறுதி குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. சுமார் 15 மாதங்கள், 12 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த விசாரணையில், ரூ.250 கோடி மதிப்பிலான மிகப்பெரிய நெய் மோசடி மற்றும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
போலி நெய் விநியோகம்: ‘உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரி’ (Bhole Baba Organic Dairy) நிறுவனத்தின் இயக்குநர்களான பொமில் ஜெயின், விபின் ஜெயின் ஆகியோர் இந்த மிகப்பெரிய மோசடியின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
பால் இல்லாத டெய்ரி: இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்தே மாட்டுப் பாலைக் கொள்முதல் செய்யவில்லை என்றும், முழுக்க முழுக்க போலி நெய் தயாரிப்பதற்காகவே இது இயங்கியுள்ளது என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 36 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மோசடி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த திருப்பதி தேவஸ்தான (TTD) கொள்முதல் மற்றும் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும் அடங்குவர்.
செயற்கை வேதிப்பொருட்கள்: தூய்மையான பசு நெய்க்குப் பதிலாகப் பாமாயில், பாம் கெர்னல் ஆயில் (Palm Kernel Oil), பாமோலின் ஆயில் போன்ற தாவர எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
போலி மணம் மற்றும் நிறம்: இந்தத் தாவர எண்ணெய்களை நெய் போல மாற்றுவதற்காக, மஞ்சள் நிறத்தைத் தரும் பீட்டா-கரோட்டின் நெய் வாசனைக்கான செயற்கை ஃபிளேவர்கள் மற்றும் அசிட்டிக் ஆசிட் ஈஸ்டர் போன்ற வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன.
5-ஆண்டுகள் நீடித்த முறைகேடு
விசாரணைக் குழுவின் தகவல்படி, இந்த முறைகேடு 2019 பிப்ரவரி முதலே (ஆட்சி மாற்றத்திற்கு முன்பிருந்தே) தொடங்கப்பட்டு, 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மிகவும் திட்டமிட்டு ஒரு கூட்டணியாக அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த மோசடியை அய்ந்து ஆண்டுகள் தடையின்றி நடத்த, போலி நிறுவனங்கள் தரப்பில் இருந்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் சில நிபுணர்களுக்கு ரூ.19.86 கோடி வரை ஹவாலா மூலமாகவும், நேரடியாகவும் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பணமாக மட்டுமின்றி, தங்க, வெள்ளி நாணயங்கள் மற்றும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களும் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலை: திருப்பதி தேவஸ்தானம் தற்போது நெய் கொள்முதல் விதிகளை மிகவும் கடினமாக்கியுள்ளது. மேலும், லட்டு பிரசாதத்தின் ‘புனித’த்தன்மையையும், பக்தர்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் வகையில் கோயிலில் ‘சாந்தி ஹோமம்’ போன்ற தூய்மைச் சடங்குகள் நடத்தப்பட்டன! மேலும், நெய்யின் தரம், சுவை மற்றும் மணத்தைச் சோதிக்க பிரத்யேக நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் (மே 2026), தரம் குறைபாடுடைய நெய் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கக் கூடுதல் விசாரணை ஆணையம் ஒன்றையும் ஆந்திர அரசு நியமித்துள்ளது. இப்படி கடவுளிடம் நெருக்கமாக இருப்பவர்கள் கடவுள் தண்டிப்பார் என்று அச்சப்படாமல் கடவுள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள்.
- விடுதலை இராசேந்திரன்