திண்ணையின் நடுவே வாட்ட சாட்டமாய் இருந்த அந்த உடல் கிடத்தப் பட்டிருந்தது. இரு கால்களின் பெருவிரல்களும் இணைத்து கட்டப்பட்டு, நெற்றியில் பட்டையிட்டு, கண்கள் மூடப்பட்டு இருந்தபோதிலும் பெரியசாமி பிள்ளைக்கு கிடத்தி வைக்கப்பட்டிருந்த பத்மநாபன் முகத்தில் இருந்த முருக்கு மீசையில் இன்னும் கம்பீரம் குறையாமல் இருந்தது போன்றே தோன்றியது.

கிடத்தப்பட்டிருந்த உடலை சுற்றிலும் உயிர் பிரிந்த அந்த உடலுக்கு, அன்னை, அக்கா, அத்தை, அண்ணி என்று ஏதேதோ முறைகளை பெற்றிருந்த பெண்கள் 'என் ராசா என்ன விட்டு போட்டியே’. 'அக்கா அக்கானு இனி யாரென்ன சுத்தி வருவா…’ இப்படி ஆளாளுக்கு ஒப்பாரி ராகத்தின் வழியே தங்கள் சோகங்களை கரைத்துக் கொண்டிருக்க, தகப்பன் முறையான பெரியசாமி பிள்ளை இரண்டடி தள்ளி நின்றபடி அவர் சோகத்தை தோள் துண்டை வைத்து வாயில் போத்தி அமுக்கி கொண்டிருந்தார்.

'நேரமாச்சு, இன்னும் யாராச்சு வரனுமா. இல்ல சடங்க ஆரம்பிச்சிரலாமா' என்று மாடசாமி கத்த ஆரம்பித்தான். அவர் அவர் வீட்டு சாவை பார்ப்பவருக்கு மட்டும் தான் சாவு ஒரு வருத்தம்.

ஊரார் வீட்டில் எங்கு பிணம் விழுந்தாலும் சடங்கு செய்து வைக்க போகிற மாடசாமிக்கு சாவு தொழில். பார்க்கும் பிணத்திடமெல்லாம் பற்று கொண்டு விட்டால் அவன் தொழில் நடக்குமா. ஆடு, கோழி இவற்றின் சாவை உணவாய் பார்க்கும் சக மனிதனின் சாவு அவனுக்கு தொழிலாய் மாறி போனதில் எந்த அதிசயமுமில்லை.

‘ரெண்டு பேரு புடிங்க. முற்றத்தில தூக்கி கிடத்திருவோம்' என்று மாடசாமி அந்த உடலின் கால்களை பிடிக்க, ஊர் காரர்கள் இருவருர் வந்து தோள் பட்டையை பிடித்து தூக்கினர்.

பத்மநாபனின் உடல் முற்றத்தில் கிடத்தப்பட்டது. எண்ணெய் குவளை ஒன்றும், அரிசி நிரப்பப்பட்ட குவளை ஒன்றும் பத்மநாபன் உடலின் தலை மாட்டில் வைக்கப்பட்டது.

வாய்கரிசி போட சொந்தங்கள் அணிவகுத்து நின்றனர். பத்மநாபனின் மூன்று அக்காமார்களும், இரு அன்னைகளும் சோகத்தில் ஓவென்று கதறி திமிர ஊர் பெண்டுகள் சிலர் அவர்களை அடக்கி பிடித்தனர்.

ஆம் பத்மநாபனுக்கு அன்னை பாசம் தந்து வளர்த்தவர்கள் இருவர். பெரியசாமி பிள்ளையின் முதல் மனைவி மரகத்திற்கு வரிசையாய் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. மூன்று பெண் பிள்ளைகளை பெற்ற மரகதம் ஆண் பிள்ளையை பெற்றெடுக்க தகுதியற்றவளாய் தோன்ற ஆரம்பித்தது பெரியசாமி பிள்ளைக்கு, ஆண் வாரிசு இல்லாத குலம் தழைக்காது என்றும், கொள்ளி போட ஆண் பிள்ளை இல்லாத பிணமாய் தான் செத்து விட கூடாதென்றும் கூறி மரகதத்தின் உடன் பிறந்த தங்கை வடிவை மரகதத்தின் சம்மதத்தோடு மணந்து கொண்டார் பெரியசாமி பிள்ளை.

வடிவிற்கும் பெரியசாமி பிள்ளைக்கும் பிறந்த ஒரே ஆண் வாரிசு தான் பத்மநாபன். அக்காவிற்கு தங்கையே சக்காலத்தியாய் வந்ததால் சக்காலத்தி சண்டை தீர்க்கும் வேலை பெரியசாமி பிள்ளைக்கு மிச்சமானது. பத்மநாபனுக்கு அன்னை பாசம் ஒன்றுக்கு இரண்டாய் கிடைத்தது.

தனக்கு வாய்க்கரிசி போடுவதெற்காக பெரியசாமி பிள்ளை தவம் கிடந்து பெற்ற பிள்ளை, இன்று அநியாயமாய் லாரியில் அடிபட்டு உயிர் பிரிந்து அவர் போட போகும் வாய்க்கரிச்சிக்காக முற்றத்தில் கிடத்தப்பட்டிருக்கிறதை பார்க்கும் பொழுது சோகம் அவர் நெஞ்சை பிழிந்தெடுத்தது.

கதறி துடித்தபடியே ஒவ்வொருவரும் அவர் அவர் முறை வாய்க்கரிசையை போட்டு முடித்தனர்.

‘எல்லாரும் போட்டாச்சா , யாராச்சு விடுபட்டிருக்கா' என்று மாடசாமி கணக்கை சரிபார்த்தான். யாரும் அவன் குரலுக்கு முன் வராததால் அனைவரின் முறையும் முடிந்தது என்று யூகிக்கப்பட்டு பட்டம் வைக்கும் சடங்கு துதுவங்கப்பட்டது.

தனக்கு குடம் எடுக்க பெற்ற பிள்ளைக்கு தானே குடமெடுத்து நீர்மாலை பட்டம் வைக்க தண்ணீரை ஒரு தோளிலும், பட்டம் சுமந்த பாத்திரத்தை மறு கையிலும் ஏந்தி வந்தார் பெரியசாமி பிள்ளை.

எல்லா சடங்கும் முடிய பத்மநாபன் உடல் சுடுகாட்டு பயணத்திற்கு தயாரானது

மாமன் மச்சான் முறை கொண்ட நால்வர் பத்மநாபனின் உடலுக்கு தோள் போட பெரியசாமி பிள்ளை மண் பாண்டம் கையிலேந்தி முன் நடந்தார். மரகதமும் வடிவும் தங்களால் இயன்ற தூரம் வரை பத்மநாபனின் உடலை பின் தொடர்ந்து கதறி அழுதபடி ஓடி பின் தளர்ந்து நடு தெருவில் மண்டியிட்டு அழுதனர்.

சற்று நேரத்தில் சுடுகாட்டில் கிடத்தப்பட்ட பத்மநாபன் உடலுக்கு பெரியசாமி பிள்ளை கொள்ளி போட பத்மநாபனின் உடலும், பெரியசாமி பிள்ளை போட்ட கணக்கும் சேர்ந்து சாம்பலானது.

- பத்மகுமாரி

Pin It