முகம் மறைத்த காலங்களில்

நான் கரைந்திருந்தேன்

என் முகம் என்னுடையதாய் இல்லாமல்

ஒட்டப்பட்ட முகத்தோடு

உலா வந்தேன்..

மூன்று தலைமுறைக்கு மேல்

என் முகவரி திருத்தப்பட்டிருந்தது

ஆரிய நாக்கு

அள்ளித்தெளித்த பெயருக்குள்

நான் அடைக்கப் பட்டது

அவமானத்தை மரியாதை என்று

அழைப்பதாயிருந்தது..

ஆரியச் சிலந்தி பின்னிய வலையில்

எம்மைப்பூச்சியாய் படுக்கவைத்துவிட்டு

சிலந்திவராத இடமிது என்று

சிலிர்த்தீர்கள்!

ஆரியத்திற்கு மாற்று என்றீர்கள்

ஆனால்

ஆரியம் பின்னிய

அதே மூடுதிரையைத்தான்

அணிந்தீர்கள்

முற்போக்கு என்று

முழங்கினீர்கள்!

நீங்கள் கையளித்தது எங்கள்

கண்மறைத்தது... பிறகெங்கள்

முகத்தையும் மூடிவிட்டது

நீங்கள் வழங்கிய வாள்

மூடநம்பிக்கைப் பூச்சிகளின்

சிறகுகளைச் சிதைத்தது...

சிதைத்த இடத்திலேயே

ஒன்று பலவாயும் கிளைத்தது

இதனை

ஆரியப்படை விரட்டும்

ஆயுதமென்றெண்ணியிருக்க,

அங்குதான்

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும்

காரியவாதம் கண்சிமிட்டியது

கிளைகளாய் எண்ணி- நீங்கள்

கிழித்துக் காட்டிய

கோடுகளின் பகுதிகளிலிருந்துதான்

படமெடுத்து வருகின்றன பாம்புகள்..

மூளைகளில் முளைத்த

முரட்டுக் கொம்புகளுடன்

எம் காளைகளைத் தின்று

காடுகளில் துப்புகின்றன அம்

மிருகங்கள்..

இனி

மிருகங்களை எம்

இனத்தோடு இணைத்துப் பேசாதீர்கள் !

எம்இனம்

மாந்தம் கமழ்வது..

பல்லுயிர் பூக்கப் பாரெங்கும்

தாய்மையைப் பொழிவது.. ..

இனி

எம் இனத்திலிருந்தே

என் முகம்

என்முகம் அறிந்திருக்கும்

எம் இனம்

Pin It