படிச்சோம்... ஆனா படிக்கல...

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்னடா இவன் திருக்குறளோடு ஆரம்பிக்கிறான்னு நினைப்பீங்க?. ஒரளவு ஆரம்பப்பள்ளி வரையாவது சென்றவர் களுக்குக் கண்டிப்பாகத் தெரியும் மேலே உள்ளது திருக்குறள் என்றும் அதற்கான விளக்கமும். இப்படி பார்த்தவுடனே இது திருக்குறள் தான் என்று எல்லோரும் தெரிந்து கொள்வதற்கும், அதனை நம்மனதில் பதியவைத்தற்கும் எல்லோரும் படிக்கும் படி பொதுப்படுத்தியதற்கும் முக்கியக் காரணம் திராவிட இயக்கமும், திராவிட அரசியல் கட்சிகளும் தான்

திருக்குறளுக்கும் திராவிடத்திற்கும் என்ன சம்பந்தமென்று, தமிழ் தேசியம் என்கிற போர் வையில் இனவாதம், சாதியவாதம் பேசுற பலபேர் கேட்கின்றார்கள். ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கி றார்கள் என்று நமக்குப் புரிகிறது, அதற்கு பதிலும் அவர்களுக்கும் தெரியும், தெரிந்தும் தெரியாதது போல் நடித்து புதிதாக அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும் இளம் தலைமுறைக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தத்தான் அவ்வாறு பேசு கிறார்கள்.

பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட அடிமை களால்தான், திராவிடம் என்ன செய்தது. திராவிடத்திற்கு முன்னே இங்கே பாலாறும் தேனாறும்தான் ஒடிக்கொண்டிருந்தது, நாங்க எல்லாரும் வீட்டில் வாசலில் உட்கார்ந்து தினம் ஒரு டப்பாவில அள்ளிக் குடித்துக் கொண்டிருந்தோம், இந்தப் பாழாய்போன திராவிடம் தான் டப்பாவைப் புடுங்கிக் கொண்டது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

நாம் என்னதான் உண்மையை வாய்கிழியக் கத்தினாலும் இந்தப் பார்ப்பன அடிமைகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த நேர்மையற்ற அடிமை கள் எல்லாம் சேர்ந்து அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை தான் ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’. இவர்களது அறிவையும் கொஞ்சம் பார்த்தால் நமக்கு மெய் சிலிர்த்து விடும்.

ஒருமுறை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் சார்பாக அந்தந்தக் கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். பிஜேபியும் கலந்து கொண்டது. ஆர்.எஸ்.எஸின் ‘தமிழ்’ பிரிவான நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒருவரும் கலந்து கொண்டார். நாம் எல்லோரும் ஒரு வார்த்தைய கேள்விப் பட்டிருப்போம். Born with Silver spoon என்று வசதி யான குடும்பத்தில் பிறந்து, உழைத்து வாழத் தேவை யில்லாதவர்களை அவ்வாறு அழைப்போம்.

அதே மாதிரியான டிசைன் தான் நாம் தமிழர் கட்சி ஆட்களுக்கும். பிறக்கும் போது மனித மூளையுடன் பிறந்து, போகப்போக ஆட்டு மூளையாக மாறும் விசித்திரப்பிறவி தான் இவர்கள். அப்படி ஒரு விசித்திரக்கூட்டத்தில் வந்த ஒருவர் தான் அந்த விவாதத்தில் கலந்து கொண்டார். இவர்களுக்கு பார்ப்பனரே ‘நல்ல மேய்ப்பான்’

அந்த விவாதத்தில் பல்வேறு செய்திகளைப் பற்றிப் பேசும் போது, திமுகவைச் சேர்ந்த திரு. அப்பாவு அவர்களும், ஆதிமுகவைச் சேர்ந்த திரு. கலைராஜன் அவர்களும் (அதிமுக வில் ஒரளவாவது திராவிடக்கொள்கை பேசுபவர்களில் கலைராஜனும் ஒருவர்) திராவிட இயக்கங்களின் போராட்டங்கள் மற்றும்  திராவிட இயக்க ஆட்சியில் தான் கல்வி எல்லோருக்கும் கிடைத்தது என்று சொன்னார்கள். அதற்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அந்த நபர் சொன்ன பதில் தான் ஹைலைட்..

காவிரி, தென்பெண்ணை, பாலாறு- தமிழ்

கண்டதோர் வைகை பொருனை நதி- என

மேவிய யாறு பலவோடத்- திரு

மேனி செழித்த தமிழ் நாடு.

இந்தப் பாடலோடுதான் ஆரம்பிப்பார். இந்தப் பாட்டெழுதினது எட்டையாபுரத்தைச் சேர்ந்த சுப்புரமணி என்ற பாரதியார். இந்தப் பாட்டுக்கு மேல இன்னொரு வரி இருக்கும். அத அந்தத் தம்பி சொல்லவில்லை

வேதம் நிறைந்த தமிழ் நாடு-உயர்

வீரம் செறிந்த தமிழ் நாடு – நல்ல

காதல்புரியும் அரம்பையர் போல்-இளங்

கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு.

இந்தப் பாட்டின் பிழையை நாம் பிறகு பார்ப்போம். திராவிடம் தான் உங்களையெல்லாம் படிக்க வைத்தது என்றால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் மேலே உள்ள பாடலை மூச்சுவிடாமல் அவங்க கம்பெனி ஓனர் போல (அதாங்க நம்ம நியோ பிராமிணத் தல சீமான்) பாடிவிட்டு, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்ன திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார். அப்ப திராவிடம் இருந்ததா? என்று  அதி புத்திசாலித்தனமான ஒரு கேள்வியைக் கேட்டார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குத் தான் உடம்பு அதிகமா சிலிர்த்து தெற்க, வடக்க இழுக்க ஆரம்பித்துவிட்டது. உடனே தொலைக் காட்சியை அணைத்துவிட்டு என்னை நானே காப்பாற்றிக் கொண்டேன். என்ன அற்புதமான கேள்வி, ச்சே சான்ஸே இல்லை, கேள்வியக் கேட்டவர் ஒரு வழக்கறிஞர் கூட. கேள்வியின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் பதில் நாம சொல்லித்தானே ஆகணும். ஒரு அசுரகுலத்தில் பிறந்து இதுக்கெல்லாம் பயப்படமுடியுமா? .

இங்கே நம்மைப் படிக்கவைத்தது திராவிடம் தான் என்று சொன்னால்,  அதற்கு அவர் இல்லை இங்கு எல்லா இயற்கை வளமும் இருந்தது என்று சொல்லி சுப்புரமணிய பாரதியாரின் பாட்டைப் பாடுகிறார். இயற்கை வளம் இருந்தால் போதுமா? கல்வி தானாக வந்துவிடுமா? இயற்கை வளம் அதிகமாக இருக்கிற எத்தனையோ மாநிலங்களில் கல்வி அறிவு இல்லாததால் அவர்களுடைய வளங்களும் சுரண்டப்படுக்கின்றன.  இரண்டாயிரம் வருசத்திற்கு முன்னாடி எழுதிவைத்ததை எல்லோரும் படிக்கனுமில்ல, ஏன் படிக்கவில்லை, யார் படிக்கவிடல, இப்ப யார் படிக்கவைத்தது. என்பதை சிந்தித்து பார்க்க வேண்டுமில்லையா?

இரண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி எங்க பெரும்பாட்டன் வள்ளுவர் சொந்தமாக படித்து திருக்குறளை எழுதினார், அவர் எந்தத் திராவிடத் தால் படித்தார்? என்று கேட்கிற நம்ம ஆட்டு மூளைக்காரர்கள், பதிலுக்கு நாம் நீ ஏண்டா உங்க பெரும்பாட்டன் எழுதினதப் படிக்கலைன்னு கேட்டா?, இல்ல எங்களை திராவிடம் தான் படிக்க விடல என்று சொல்வார்கள். இப்ப எப்படி படிச்சன்னு கேட்டா, நாங்கெல்லாம் அப்பவே அப்படின்னு உளற ஆரம்பிப்பார்கள்.

இரண்டாயிரம் வருசமாக வெளியிலிருந்து இங்க வந்த ஆரியம் தான் நம் கல்வியை மறுத்தது. அதை மீண்டும் நமக்களித்தது திராவிடம். சூத்திரனுக்கு கல்வியை வழங்காதே என்றது ஆரியம். திராவிடத்திற்கு முன்னே இங்கே யாரும் படிக்க வில்லையா என்று கேட்டால், படித்தார்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, வசதி வாய்ப்பில் மேலோங்கி இருந்த பார்ப்பனரல்லாதவர்களுக்கு அந்த வாய்ப்பு இருந்தது. கல்வியும் வேலைவாய்ப்பும், கல்வி கற்பதற்கான சூழல் முழுவதும், பார்ப்பனர்கள் வசமே இருந்தது.

சென்னையில் பார்ப்பனரல்லாதார் மாணவர் கள் தங்கிப் படிப்பதற்கு கி.பி.1913 வரை ஒரு விடுதிகூட இல்லை. கி.பி.1914ம் ஆண்டு நீதிக்கட்சியைச் சேர்ந்த டாக்டர். நடேசன் அவர்களால் ‘திராவிடர் இல்லம்’ என்ற விடுதியைத் தொடங்கி பார்ப்பனரல்லாதார் மாணவர்கள் சென்னையில் தங்கிப் படிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். அந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குமான செலவையும் ஏற்றவர். கி.பி.1923ல் மதராஸ் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். எல்லாவற்றிக்கும் முன்மாதிரியாக விளங்கும் சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிசன் அமைப்பதில் பெரும்பங்கு வகித்தார்.

இந்தியாவிலேயே முன்னோடியாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத் தைக் கொண்டு வந்தவர் நீதிக்கட்சியை உருவாக் கியவர்களில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயர்.  நீதிக்கட்சி வருவதற்கு முன்பு மருத்துவத்திற்கு நுழைவுத்தேர்வாக சமஸ்கிருதம் தான் இருந்தது. அதை மாற்றியதும் திராவிடம் தான். இப்படி கல்வியில் ஒரு பெரும் புரட்சி செய்துதான் நாம் கல்வியைப் பெறமுடிந்தது.

இரண்டாயிரம் வருசத்திற்கு முன்னாடி எழுதப்பட்ட திருக்குறளை பெரியாரும், பெரியார் இயக்கங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். பெரியார் மட்டும் திருவள்ளுவரை கையில் எடுக்க வில்லையென்றால். திருவள்ளுவருக்கு எப்போதோ பூணூல் அணிவிக்கப்பட்டிருக்கும். வள்ளுவருடன் சேர்ந்து திருக்குறளும் மயிலாப்பூரில் ஜீவ சமாதி யாகிருக்கும். திருக்குறளை மக்களிடம் கொண்டு சொல்ல பெரியாரும், பெரியார் இயக்கங்களும் செய்தது என்னவென்று பார்ப்போம்.

புலவர்கள் மத்தியில் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய முதன் முதலில் சென்னையில் மாநாட்டைக் கூட்டினார் தந்தை பெரியார். அதில் அறிவாய்ந்த தமிழ்ப் பெருமக்களைப் பங்கு பெறச் செய்தார்.  15.01.1949 அன்று திருவள்ளுவர் - குறள் மாநாடு கூட்டப்பட்டது.

பெரியார் வேண்டுகோள்!

திருவள்ளுவர் மாநாடு சென்னையில் பிரபல மாய் பல அறிஞர்கள் தலைமையையும், சொற் பொழிவுகளையும் கொண்டு இம்மாதம் 15, 16 சனி, ஞாயிறுகளில் நடக்கின்றது.

திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதி நெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திரமல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு தமிழர் வேறு என்று பாகுபடுத்துவது தவறு என்றும் கூறுவதோடல்லாமல், குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகியவைகளைக் காட்டும் தமிழ்மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும், பெரும் அளவுக்கு ஆரியர்கள் பிரசாரம் செய்வது மாத்திர மல்லாமல் பலவகைத் தமிழர்களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறு பட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றப்படி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.

ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமே யானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு, விலக்குவதை விலக்கலாம்.

நீண்ட நாள் நம் கலைகள், பண்புகள் எதிரிகளின் இடையிலேயே காப்பு அற்றும், நாதி அற்றும் கிடந்ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்ததாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறுதல்கள் புகுவது, நேருவது இயற்கையே யாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்துவிட வேண்டும் என்பது அவசியமல்ல.

எனவே, குறள் தத்துவத்தை விளக்கிட வென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெருமளவுக்கு அவசியமாகும். ஆதலால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர்க் கழகத்தார் நல் வாய்ப்பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

தோழர் பெரியார் -விடுதலை 10.01.1949

திரு.வி.க.

பெரியார் இன்று குறளைக் கையில் ஏந்தியுள்ளார். பலப்பல நூல்களை ஒதுக்கிக் கொண்டே வந்த பெரியார் குறளை மட்டும் கையில் ஏந்தியிருக்கும் காரணம் என்ன? திருக்குறள் உலகப் பொதுநூல். பெரியாரின் உலகப் பொது இயக்கத்திற்கு ஏற்ற உலகப் பொது நூல் திருக்குறளே! எனவேதான் அது பெரியாரின் கையிலே வீற்றியிருக்கிறது.

யார் யாரோ குறளைப் பாராட்டினார்கள். போற்றினார்கள். ஆனால், அவர்கள் தொண்டின் பயனாகவெல்லாம் குறள் தனக்கு உரிய இடத்தை அடைந்ததில்லை. இன்று பெரியார் குறளை ஏந்தியிருக்கிறார். இனி மிக விரைவில் குறள் தன் சிறப்பிடத்தை எய்துவது உறுதி! உறுதி!

அந்த திரு.வி.கல்யாணசுந்தரமே சொல்லி விட்டார், பெரியார் திருக்குறளை கையிலெடுத்த பிறகு தான் அது எல்லோருக்குமான ஒன்றாக மாறியது என்று. ஆதலால் இந்த நவீன கல்யாண ராமன்களையும், கல்யாணசுந்தரங்களையும் புறம் தள்ளுவோம். கல்வியில் பெரியாரும், திராவிட இயக்கங்களும் செய்த புரட்சியையும் அடுத்தடுத்து பார்ப்போம். பார்ப்பனீயம் தமிழர்களை மற்றும்தான்  ஏமாற்றுகிறதா ???

- பார்ப்போம்

Pin It