தனக்குப் பெரும் புகழை ஈட்டித்தரப்போகும் யாகம் நல்லபடியாக முடிந்ததில் விதேஹ நாட்டு அரசன் ஜனகனுக்குப் பெரும் மகிழ்ச்சி. யாகங்களால் உலகம் முழுவதும் நன்மையடையும் என்றாலும், அதனால் கிடைக்கும் புகழ்தான் முதன்மையானது என்று எண்ணினான் ஜனகன். எத்தனை எத்தனை சடங்குகள்.. அவற்றை சிரத்தையாக நிறைவேற்ற எத்தனை எத்தனை பிராமணர்கள்... யாகத்தின் பிரம்மாண்டத்தை இப்போதும் நினைத்து நினைத்து மலைத்துப்போனானன் அவன். இருபத்தி நான்கு வகை சோமக்கொடிகளிலிருந்து சாறு பிழிந்து, பிழிந்து கம்பளியில் வடிகட்டி பால் கலந்து தேவர்களுக்கு அளித்த யாகம். வெள்ளாடுகளும், குதிரைகளும் அலங்கரிக்கப்பட்டு, நெய் பூசி ஒன்பது துவாரங்களும் அடைக்கப்பட்டுபலி கொடுக்கப்பட்ட யாகம். மாதக்கணக்கில் நடந்த யாகம் நேற்றோடு நல்லபடியாக முடிந்தது. யாகம் நடத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லை. பொன்னும் பொருளும் மட்டும் போதாது. ஆழமான வேதஞானம் வேண்டும். ரிக்வேதத்தை முழுமையாகப் படித்த, ஹோதாக்கள் என அழைக்கப்படும் திறமையான பிராமணர்களால் மட்டும்தான் மந்திரங்களை ஓதி யாகத்திற்கு தேவர்களை அழைக்க முடியும்.
யஜூர் வேதத்தைக் கரைத்துக் குடித்த அத்வார்யுக்கள் என்று அழைக்கப்படும் பிராமணர்களுக்குத்தான் யாகத்தின் சடங்குகள் முழுமையாகத் தெரியும். மந்திரங்களைப் பாடி, சோமரசத்தைச் செலுத்தி தேவர்களை மகிழ்விக்க சாமவேதத்தைக் கசடறக் கற்றவர்களால்தான் முடியும். இத்தனைபேரையும் ஒருங்கிணைத்து யாகம் செய்து முடிந்தாயிற்று. மூன்று வேதங்களையும் முழுதும் கற்றுணர்ந்த ஞானி என யாரும் இல்லையோ? அவரவர் தமக்குத் தெரிந்ததை மட்டும் வைத்து எங்ஙானம் அந்த தேவர்களைத் திருப்திப்படுத்த முடியும்? அனைத்தையும் அறிந்த பிரம்மஞானி ஒருவன் இருந்தாலல்லவா நல்லது? அவன் கைப்பிடித்து நாமும் கரையேற முடியும். அப்படி ஒருவனைக் கண்டுபிடித்து அவனை குருவாக அடையவேண்டும் என்று அரசன் மனதில் ஆசை பிறந்தது. யாகசாலையில் இங்குமங்கும் உலவி அதற்கான வழியையும் கண்டுபிடித்தான். யாகக்கொட்டிலில் உத்தமமான ஆயிரம் பசுக்களை நிறுத்தி, அவற்றின் கொம்புகளில் தங்கக்கட்டிகளைக் கட்டிவைக்க உத்தரவிட்டான்.
காமதேனுவைப் போன்றும், நந்தினியைப் போன்றும் லட்சணம் பொருந்திய பசுக்கூட்டத்தைப் பார்த்து பிராமணர்களும், ரிஷிக்களும் திகைத்தார்கள். கொம்புகளில் கட்டியிருந்த தங்கக்கட்டிகளின் பிரகாசம் யாககுண்டத்து அக்கினியாக ஜொலித்தது. படை பரிவாரங்களோடு அரசன் ஜனகன் வந்தான். பிராமணர்களை நமஸ்கரித்தான். உயரமான ஒரு மேட்டில் ஏறிநின்று, "பெரியோர்களே, உங்களுக்குள் எவர்பிரம்ம வித்தையில் சிறந்தவரோ, அவர் இப்பசுக்களை ஓட்டிச்செல்லலாம்" என்றான்.
அங்கிருந்தோரில் பெரும்பாலானோர் ஒருவேதத்தை முழுமையாக ஓதி அதன்முலம் யாகத்தின் ஒரு பகுதி சடங்குகளை மட்டும் செய்யத் தெரிந்தவர்கள். வேதங்கள் அனைத்தையும் கற்று பிரம்மஞானியாக இருப்பவர் என அதிகம் யாரும் இல்லை. மேலும், பிரம்மவித்தையில் நான் சிறந்தவன் என்ற நானே கூறிக்கொள்ளலாமா? அதை எப்படி அளவிடுவது? யார் அளவிடுவார்? வேதங்களைக் கரைத்துக் குடித்த விற்பன்னர்கள் யோசித்துக் கொண்டே நின்றார்கள். பசுக்களின் மணியோசை தவிர நிசப்தம்.
கூட்டத்திலிருந்து ஒருவர் வெளியே வந்தார். தன்னுடன் இருந்த சிறுவனிடம், "சாமவேதம் அத்யாயனம் செய்யும் குழந்தாய்! இப்பசுக்களை நம் ஆசிரமத்திற்கு ஓட்டிச்செல்" என்றார். அரசன் அவரைக் கூர்ந்து பார்த்தான். நல்ல பருத்த உறுதியான தேகம். 'அர்ஜூன் வாஸ்' எனப்படும் வெண்ணிற ஆடை, வலது தோள் திறக்கும்படி மேலே ஒரு கம்பளி. பொன்னிற மஞ்சள் கூந்தல். மழுங்கச்சிரைத்த முகம். கைவளையம், கழுத்துச்சங்கிலி, மோதிரம் என செல்வச்செழிப்பைக் காட்டும் அலங்காரம். இத்தனை வேத விற்பன்னர்களுக்கு நடுவே பசுங்களை ஓட்டிச் செல்லும் துணிச்சலான இந்தப் பிராமணர் யார்? என்று மந்திரியைக் கேட்டான் ஜனகன். யாக்யவல்கியர் என்ற பிராமணராம். காடுகளில் சென்று தவம் செய்யும் போது படிக்கும் ஆரண்யகத்திற்குப் பதிலாக உயிர், உலகம் கடவுள் எனும் முப்பொருட்களையும் ஆராயும் உபநிடதம் ஏதோ எழுதுகிறாராம். மந்திரியின் உதவியாளன் அவருக்கு இரண்டு மனைவிகள் என்றான். ஒரு மனைவி அழகியாம். மற்றவள் அறிவாளியாம். அவனுக்கு அவர்கள் பெயர் கூடத் தெரிந்திருந்தது. காத்யாயனிஅழகி. மைத்ரேயி சாஸ்திரங்கள் நன்கு படித்தறிந்த பிரம்மவாதினி.
மன்னன் நினைத்தபடியே மற்ற பிராமணர்களுக்கு அவரை பிரம்மஞானியாக ஏற்க மனமில்லை. நேற்று முடிந்த யாகத்தின் ஹோத ாவான ஆசுவலர்தான் முதலில் பேசினார். "இங்குள்ளவர்களில் நீர் தான் பிரம்ம ஞானியோ?" என்றார். அவர் குரலில் ஏளனம். யாக்யவல்கியர் நேரடி பதில் தராது "நாம் அனைவரும் பசுக்களை விரும்புகிறர்வர்கள்தானே' என்றார். ஆசுவலருக்கு என்ன கேட்பதென்று தெரியவில்லை. பக்கத்திலிருந்த உஷதரைப் பார்த்து கண்ஜாடை செய்தார். கேள்வியைக் கேட்கும் விதத்திலேயே சிக்கலானதாகத் தோன்றி இவன் பதில் சொல்ல முடியாது திணற வேண்டும் என்று மனதில் நிச்சயித்து, எந்தப் பிரம்மம் வேறொன்றை வேண்டாததாயும், அனைத்தையும் வியாபித்து, அனைத்தினுள்ளும் உறையும் ஆத்மாவாகவும் உளதோ அதை எனக்கு விளக்கிக்கூறும்' என்றார். யாக்யவல்கியர் இந்த சொற்சிலம்பத்தில் அசரவில்லை. "இந்த உம்முடைய ஆத்மாதான் அனைத்தினுள்ளும் உறைவது" என்றார் சிரித்தவாறே. 'என்னுடைய எந்த ஆத்மா அனைத்துள்ளும் உறைவது?' என்று கேலியாக அடுத்த கேள்வியைப் போட்டார் உஷதர். சிக்கலாக பதில் சொன்னால்தான் இவர் வாயை அடக்கமுடியும் என்று நினைத்த யாக்யவல்கியர், "எந்த ஆத்மா பிராணவாயுவால் பிராணனை இயக்குகிறதோ அந்த உமது ஆத்மாதான்அனைத்துள்ளும் உறைவது. அது அபானனால் அபானக்கிரியை செய்யும். வியானனால் வியானக்கிரியை செய்யும். உதானனால் உதானக்கிரியை செய்கிற அந்த உமது ஆத்மாதான் அனைத்துள்ளும் உளது" என்றார். யாக்யவல்கியரின் பதிலில் சலசலப்பு சற்று அடங்கியது. பசுக்களை ஓட்டிச் செல்லும் துணிச்சல்காரன் உண்மையிலேயே அனைத்தையும் அறிந்தவன்தானோ என்ற ஐயம் எல்லார் மனதிலும் வந்தது. சொல்லாற்றல் மட்டும் உள்ளவன் கவி. இவனோ மெய்ப்பொருளை உணர்ந்து அதைச் சொற்களால் சொல்ல வல்லவனாக இருப்பதால் இவன் ரிஷிதான். எனினும் இவன் குருவினிடத்தில் உபதேசம் பெற்ற ரிஷியாகத் தெரியவில்லை. பிரும்மத்தின் மூச்சு காற்றெனக் கருதப்படும் வேதங்களை உள்ளுணர்வால் உணர்ந்து வலிமை பெற 'மந்திரத்ரஷ்டாவா?' அவ்வாறாயின் இவனை வெல்வது அரிது.
ஆருணி தன் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு கேள்வி கேட்கத் தயாரானார். குருவின் கட்டளைக்காக உடைப்பெடுத்த மடையைத் தன் உடலாலேயே அடைத்து ஊரைக் காத்தவர் என்று சொல்வார்கள். அதன் காரணமாக உத்தாலக ஆருணி என்ற காரணப் பெயரும் உண்டு. மந்திர உபதேசம் ஆரம்பித்த சில நாட்களில் ஆருணி இந்த அருஞ்செயல் செய்தாராம். குருவின் ஆசியால் உபதேசம் தேவைப்படாமல் பாக்கி அனைத்தையும் மந்திரத்ரஷ்டாவாக உணர்ந்து கொண்டவர் என்றும் கதை உண்டு. இப்படிக் கதைகளை நம்புவதா, கூடாதா என்ற குழப்பத்தில் இருந்த பிராமணர்கள் ரிஷிகள் ஏராளம்.
"எந்த ஸூத்திரத்தினால் இகமும்,பரமும் எல்லாஉயிர்களும்ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கின்றன இகத்தையும், பரத்தையும் எல்லா உயிர்களையும் உள்ளிருந்து ஆட்டிவைக்கும் அந்தர்யாமியை நீங்கள் அறிவீர்களா?" என்றார் ஆருணி.
"வாயுவே அந்த சூத்திரம், வாயுவாலேயே இகமும், பரமும் எல்லா உயிர்களும் ஒன்றாகக் கட்டப்பட்டுள்ளன. எவர் எல்லா பிராணிகளிடமும் இருந்துகொண்ட எல்லாப் பிராணிகளின் உள்ளும் உறைகின்றாரோ, எவரை எல்லாப் பிராணிகளும் அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு எல்லாப் பிராணிகளும் உடலாகின்றனவோ, எவர் எல்லாப் பிராணிகளுக்கும்" உள் நின்று அவற்றை ஆள்கின்றாரோ, அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர்' என்ற நீண்ட பதில் வந்தது.
ஆருணிக்குப் பதிலால் திருப்திதான். இருப்பினும் உடனே அதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இன்னும் சிறிது விரிவாக பதில் வேண்டுமென்றார்.
"எவர் அறிவில் இருந்துகொண்டு அறிவினுள் உறைகின்றாரோ, எவரை அறிவு அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு அறிவு உடலாகின்றதோ, எவர் அறிவினுள் நின்று அதை ஆள்கின்றாரோ அவர்தான் உன்னுடைய ஆத்மா,அந்தர்யாமி, அழிவற்றவர்."
அவர் கவலைப்படாமல் காண்பவர். கேட்கப்படாமல் கேட்பவர். நினைக்கப்படாமல் நினைப்பவர். அறியப்படாமல் அறிபவர். அவரைக் காட்டிலும் வேறாகக் காண்பவர் இல்லை. அவரைக்காட்டிலும் வேறாகக் கேட்பவர் இல்லை. அவரைக்காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை. அவரைக்காட்டிலும் வேறாக அறிபவர் இல்லை. அவர்தான் உன்னுடைய ஆத்மா. அந்தர்யாமி, அழிவற்றவர். மற்ற எல்லாம் அழிவுள்ளது".
காத்யாயனி நேற்றிரவு பாலும் தேனும் கலந்த சோமரசத்தை வேண்டாம், வேண்டாம் என மறுக்க, மறுக்க அதிகமாக ஊற்றிக்கொடுத்துவிட்டாள். போதையின் லேசான மிச்சம் கவித்துவமாய் அவர் வாயிலிருந்து உதிர்ந்தன. ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும், அதற்கு வெளியேயும், வார்த்தைகளுக்கு இடையேயும் பொதிந்திருந்த பொருள், தாமாகக் கற்பித்துக்கொண்ட பொருள் என பல்வேறு விதங்களிலும் ரிஷிகளும், பிரமணர்களும் அவரது பதிலில் புதியபுதிய அர்த்தங்களைக் கண்டுகொண்டார்கள். ஆருணி ஆயிரம் பசுக்களும் இவனுக்குத்தான் என்ற முடிவிற்கு வந்து மவுனமானார்.
இருபத்தியேழு பிரம்மவாதினிகளில் பேரழகியான கார்க்கி எழுந்தாள். நல்ல உயரம். கொழுத்த உடல். எனினும் கொழுப்பு குறைந்த வயிறு. அவளது பொன்னிற உடலுக்கு அவளது கம்பளி ஆடை பொருத்தமாக இருந்தது. மஞ்சள் நிறமான 'திராபி'யைப் போர்த்தி இருந்ததால் திரண்ட தோள்களும், மார்பும் அரைகுறையாகவே தெரிந்தன. கழுத்தில் அணிவதற்கென்றே செய்யப்படும் 'நிஷ்க' எனும் நாணயத்தை சங்கிலியில் கோர்த்து மார்பில் புரள விட்டிருந்தாள். ஆர்வத்தோடு பேசும்போது, தன்னிச்சையாக அவள் விரல்கள் அந்த நிஷ்கவைத் தொட்டு விஷமம் செய்து கொண்டே இருக்கும்போது மழையின் நடுவே மின்னல் வெட்டுவது போல் இருக்கும். அடர்ந்த தனது தங்கநிறத் தலைமுடியை நான்கு ஜடைகளாகப் போட்டிருந்தாள். வலப்பக்க ஜடையை வலது மார்பின் மீது போட்டுக்கொண்டு சபையில் தானும் கேள்விகேட்க அனுமதி கேட்டாள். ஆண்கள் தாங்களாகவே பேசலாம். பெண்கள் அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும் என்ற நியதியில் கார்க்கிக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பேச அனுமதிப்பதே பாக்கியம் என்ற அளவில் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரு மனச்சமாதானம்.
ஆசுவலர் தலையசைத்து அனுமதித்தார்.
"ஞஞஞஞயாக்யவல்கியரே! காசிராஜனின் வீரபுத்திரனோ, விதேஹ ராஜனின் வீரபுத்திரனோ தளர்ந்த வில்லை நிமிர்த்தி நாணேற்றிக்கொண்டு, எதிரிகளை மிக வருத்தும் பாணங்களைக் கையில் எடுத்துக்கொண்டு எதிரியின் அருகாமையில் எப்படி நிற்பார்களோ அப்படி நான் உமக்கு முன் கேள்விகளோடு நிற்கிறேன்" என்றாள்.
"கேள்விகளுக்கு முன்பான இந்த அறிமுக வார்த்தைகள்போலவே உன் கேள்விகளும் சிறப்பானவையாக இருக்கும் என்று கருதுகிறேன். கேள்விகளைக் கேள், பெண்ணே", என்றார் யாக்யவல்கியர்.
'எது வானத்திற்கு மேலும் பூமிக்குக் கீழும், வானத்திற்கும், பூமிக்கும் இடையிலும் கோர்க்கப்பட்டுள்ளது?' என்றாள் கார்க்கி.
"ஆகாயத்தில் அது குறுக்கும் நெடுக்குமாகக் கோர்க்கப்பட்டுள்ளது" என அடுத்தகணம் பதில் வந்து விழுந்தது.
"ரிஷியே" எதனிடம் ஆகாயம்குறுக்கும் நெடுக்குமாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது?"
"கார்க்கி! பிரம்மஞானிகள் அதை ஆசூரம் (அழிவற்றது) எனக் கூறுகிறார்கள். அது ஸ்தூலமுமன்று. சூக்ஷ்மமுமன்று. குட்டையுமன்று, நெட்டையுமன்று, நெருப்புப்போல் சிவந்ததுமன்று, தண்ணீர் போல் ஈரமுள்ளதுமன்று, நிழலுள்ளதன்று, அளவுள்ளதன்று, அதற்கும் உள்ளும்இல்லை. புறமுமில்லை. அது ஒன்றையும் உண்பதுமில்லை. உண்ணப்படுவதுமில்லை. இந்த ஆக்ஷரத்தின் கட்டளையாலேயே வானமும், பூமியும் தத்தம் ஸ்தானங்களில் வைக்கப்பட்டிக்கின்றன" சோமபானத்தின் வீரியம் குறையாது சொற்கள் அலையலையாய் அவர் வாயிலிருந்து வந்துகொண்டே இருந்தன. தான் கேட்டதற்குப் பொருத்தமான பதில்தானா இது என்று கார்க்கிக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அடுத்து என்ன கேட்பது என்றும் மனதில் எதுவும் தோன்றவில்லை. சபையின் ஆயிரமாயிரம் கண்கள் தன்னைத் துளைத்துக்கொண்டு இருப்பதை உணர்ந்து இத்துடன் முடித்துக்கொள்வது நல்லது என்று முடிவு செய்தாள். "இவரை ஜெயிக்கக்கூடியவர் இங்கு ஒருவரும் இல்லை" என்று கூறி அமர்ந்தாள்.
மீண்டும் நிசப்தம். ஏதேனும் கடினமாய்க் கேட்டு தங்கமும், பசுக்களும் அவனுக்குக் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்ற பேராவல் ஒவ்வொருவர் மனதில் இருந்தது. என்ன கேட்பது என்றுதான் தெரியவில்லை. வேதங்களில் இருந்து கேட்பதா? பிராமணங்களிலிருந்து கேட்பதா? உபநிடதங்களின் இருந்து கேட்கலாமா? ஆரண்யகங்களிலிருந்தா? சிரௌத சூத்திரங்களில் இருந்து கேட்கலாமா? கிரிக சூத்திரங்களிலிருந்தா? அல்லது தரும சூத்திரங்களிலிருந்தா? நிருத்தங்களிலிருந்து கேட்கலாமா என்று ஒவ்வொருவர் மனதிலும் பலவிதமான எண்ணங்கள். மேதாதிதி அருகிலிருந்த கௌத்ஸரிடம், "எத்தனையோ படித்துள்ளோம். இவனை மடக்குமாறு கேள்விகளைக் கேட்க முடியவில்லையே" என்றார். 'நாம் எங்கே படித்தோம்! குரு சொல்வதை அதே ராகத்தில் திருப்பிச்சொல்லியே நம் காலம் போயிற்று. வசிஷ்டர் நம் போன்றோரை ஏளனம் செய்து ஒரு ஸ்லோகம் எழுதியிருக்கிறார். "இந்தத் தவளைகள் ஒன்று சொல்வதையே மற்றொன்று குருவைப் போல் மீண்டும் சொல்கின்றன. தவளைகளே! நீங்கள் அனைவரும் அழகாகச்சொல்லும் போது நீரின்அனைத்துப் பகுதியும் நன்றாகி விடுகிறது" என்று நாம் வேதம் படிக்கும் லட்சணத்தை மழைக்காலத்தவளைகளின் கத்தலோடு ஒப்பிட்டு ஒரு சுலோகம் எழுதி இருக்கிறாராம். அதை ரிக்வேதத்தில் சேர்த்திருக்கிறார்கள். என்றார் கௌத்ஸர். 'வித்கதர் எழுந்திருக்கிறார். அவர் என்ன கேட்கிறார் என்றுபார்ப்போம்' என்றார் மேதாதிதி.
வித்கதர் தத்துவார்த்தமாக எதுவும் கேட்கவில்லை. கேட்க வேண்டுமே என்று புள்ளிவிபரமாக 'தேவர்களின் மொத்த கணக்கு என்ன?' என்றார்.
"மொத்தம் முப்பத்தி மூன்று தேவர்கள். எட்டு வசுக்கள். பதினோரு ருத்திரர்கள். பன்னிரண்டு ஆதித்யர்கள். அதுபோக இந்திரன், பிரஜாபதி எனும் இவர்களே முப்பத்தி மூன்று தேவர்கள்."
நீங்கள் அடுத்து என்ன கேட்கப்போகிறீர்கள் என அறிவேன். நீர் கேட்கும் முன்பாக நானே கூறிவிடுகிறேன். வசுக்கள் எனப்படுவோர் இந்திரனின் ஏவலர்கள். அக்கினி, பூமி, வாயு, அந்தரிக்ஷம் எனப்படும் வெளி, ஆதித்யன் எனப்படும் சூரியன், சுவர்க்கம் எனப்படும் வானம், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவையே இந்த எட்டு வசுக்கள்.
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் இவைகள் தான் பதினோரு ருத்திரர்கள் எனப்படும். நீக்குதல், உருவாக்குதல், புரிந்துகொள்ளல், நகர்தல், பேசுதல் ஆகியன ஐந்தும் கர்மேந்திரியங்கள் என வகைப்படுத்தப்படும், முகர்தல், ருசித்தல், பார்த்தல், தொடுதல், கேட்டல் என ஐம்புலன்களின் செயல்பாடுகளும் ஞானேந்திரியங்கள் எனப்படும்.
பன்னிரண்டு மாதங்களுக்கு உரிய தேவதைகள்தான் பன்னிரண்டு ஆதித்யர்கள், நம்முடைய ஆயுளும், செய்கைகளும் இவர்களுடைய ஆட்சிக்கு உட்பட்டிருக்கின்றன என்றார் யாக்யவல்கியர்.
கேள்விகள் எதுவுமில்லாத மௌன சபையாக சிறிது நேரம் கழிந்தது. லேசான செருக்கோடு "வேறு ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?" என்று கேட்டார். யாக்யவல்கியர். சபையின் மௌனம் கேள்விகள் இல்லை என்றது. யாக்யவல்கியரே பிரும்மவித்தையில் தலைசிறந்தவர் என்பது நிரூபணமாயிற்று. தங்கத்தோடு பசுக்களை ஓட்டிச்செல்ல யாக்யவல்கியர் எழுந்தார். இத்தனை தங்கத்தையும், பசுக்களையும் பார்த்தால் காத்யாயனியும், மைத்ரேயியும் எப்படிப் பரவசம் அடைவார்கள். அந்தப்பரவசம் தன்னை எங்கெல்லாம் இட்டுச்செல்லும் என்ற கற்பனையே அவருக்கு மிகவும் சுகமாக இருந்தது.
அரசன் ஜனகன் அருகில் வந்தான். யாக்யவல்கியரை நமஸ்கரித்து, "என்மனதின் அடியாழத்தில் உள்ள ஒரு கேள்வியை நான் கேட்க அனுமதியுண்டா?' என்றான். மிக மகிழ்ச்சியான மனநிலையில் இருந்த யாக்யவல்கியர் உற்சாகமாக, 'ராஜனே! எதுவாகினும் கேள். பதில் தருகிறோம்", என்றார். அரசன் மிகுந்த தயக்கத்துடன், 'புரிந்ததும், புரியாததுமான எத்தனையோ விஷயங்களை அறிந்து விளக்கவல்ல பிரம்மஞானியான தங்களுக்கு எதற்கு இவ்வளவு தங்கமும், இத்தனை பசுக்களும்?" என்றான். கேட்டு முடித்ததும் தான் அவனுக்கே தன் கேள்வியின் ஆழம் புரிந்தது. ரிஷி தன்னையும், தன் சந்ததியினரையும் சபிக்கப்போகிறார். அதனால் என்னென்ன துன்பங்கள் நேருமோ என மனம் நடுங்க ஆரம்பித்தது.
யாக்யவல்கியர் கோபப்பட்டு இத்தனை செல்லவத்தையும் இழக்க விரும்பவில்லை. அவர் புன்னகைத்தார். "ராஜன்! நீ நேர்மையானவன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் அறியாதவன். உன் நேர்மைக்குத் தலைவணங்கி, நானும் நேர்மையாகப் பதிலளிக்கிறேன். இத்தனை நேரம் நான் பேசியதனைத்தும் வெறும் வார்த்தைகளின் சித்து விளையாட்டு, என் அறிவை, வாக்சாதுர்யத்தைக் காட்ட மட்டுமே பயன்படும் ஏட்டுச்சுரைக்காய். என்னைச்சுற்றி, மீண்டும் மீண்டும், கருத்தரித்து உத்தமமான புத்ரபுத்திரிகளை ஈன்றெடுக்கும் அழகான இரு மனைவிகள், எண்ணிலடங்காக் குழந்தைகள், சீடர்கள் எனப் பெரும் படை உண்டு. இத்தனை பேரின் வயிற்றையும் நான் இதுவரை பேசிய பிரும்மஞானம் நிரப்பாது. எனக்கும், என்னைச் சுற்றி இருப்போருக்கும் பால்வேண்டும். தயிர் வேண்டும். நெய் வேண்டும். அத்தனைபேருக்கும் கம்பளியாடை வேண்டும். இளங்கன்றின் சுவையான மாமிசம் வேண்டும். ஏராளமான தங்கம் வேண்டும். உண்மையில் அனைத்திற்கும் ஆதாரம் ஆத்மா அன்று. பொருள்தான் அனைத்திற்கும் ஆதாரம். இதை நான் உரக்கக் கூற முடியாது எனினும், பொருளைத் தரக்கூடிய உன்னிடம் உண்மையைக் கூறுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்" என்றார்.
அரசன் புதுஞானம் பெற்றான்.