லவ் ஆல் .....................

‘தம்’ .............. என்ற அறையில் வலையைத் தாண்டி இன்னோருவர் கைகளில் விழ எத்தனித்தது பந்து, அதை லாவகமாக அடிக்க நீட்டியக் கார்த்திக்கின் கைகளை ஏமாற்றித் தரையைத் தழுவியது….

“என்ன கார்த்திக் …… அது ஒரு ஈசி பால் …….. அதப்போய் விட்டுட்டீங்களே …..” மைதானத்தில் ஒரு குரல் எப்போதும் போல அதட்டுகிறது.

‘இதுக்கு முன்னாடி ஒரு பால் உங்க கையுள விழுந்தது, அதை கோட்டை விட்டுட்டீங்க, கேட்டா…. டைமிங் மிஸ் ஆயிருச்சுனு சொல்றீங்க உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா, என்ற ஆக்ரோஷமான முழக்கம் வெளியே யாருக்கும் கேட்காமல் கார்த்திக்கின் மனதிற்குள் ரீங்கரித்தது.

பொதுவாக விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் தாங்கள் நழுவவிட்ட சந்தர்ப்பத்தைத் தரையை வெறித்துப் பார்த்தபடி வெளியே இருக்கும் ரசிகர்களிடம் அனுதாபத்தை வாங்கிக் கொள்வது போல கார்த்திக்கும் தரையை பார்த்தபடி ஆட்டத்தை தொடங்கினான்.

கார்த்திக் இங்கு ஒரு கைப்பந்து வீராக வேண்டும் என்று வருவதில்லை. வயது நாற்பதை நெருங்கிவிட்டால், கூடவே நெருங்கிவிடும் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உபாதைகளை நெருங்க விடாமல் ஒரு உடற்பயிற்சிக்காக இங்கு வருவது உண்டு.

கார்த்திக் வேலைப் பார்க்கும் ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வருகிறது.

"நான் டாக்டர். தியாகராஜன் பேசறேன் ........."

"டாக்டர்.. நான் அவரோட மனைவி பேசறேன் ... சொல்லுங்க டாக்டர் எதாவது சொல்லனுமா" என்றாள் மரகதம்.

“அவரை எனக்குக் கூப்பிட சொல்லுங்க ……………” என்ற வார்த்தையுடன் மறுமுனை துண்டிக்கப்பட்டது.

“பசிக்குது …….. இன்னைக்கு சாப்பிட என்ன ………..” என்றுத் தரையில் ஈரத் துண்டோடு அமர்ந்தான் கார்த்திக்.

பதில் ஏதும் வந்தபாடில்லை.

சிறுது நேரத்தில் இரண்டு இட்லி தட்டில் வந்து விழுந்தது.

புயலை புரிந்து கொண்டவன் ….. இட்லியைப் பிய்த்து வாய் அருகே கொண்டு சென்றபோது ………….

“இதுவரைக்கும் ஒரு வேலைல உருப்படியா ரெண்டு வருஷம் இருந்ததில்ல, கடைசியா கிடைத்த இந்த வேலையையும் எதாவது பண்ணிராதீங்க …….

உங்க பெரியம்மா பையன் ஒண்ணுமே படிக்கல ஆனா எவ்வளவு சமர்த்தியமா சம்பாதிக்கறாங்க ……… கேட்டா நியாயம், உழைப்புனு சொல்லறது.

வார்த்தைகள் வயிற்றை நிரப்பியதால். பணியை நோக்கிப் பயணித்தான் கார்த்திக். .

எதிர்பார்ப்புகள் பல சமயம் கேள்விக் குறியாய் போவது சிலரது வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நிகழ் வாழ்வின் பயணத்தில் கலப்படமில்லாத அன்பை, அரவணைப்பை தேடிப் பயணிப்பதில் தோற்றுப் போகிறது கறைபடாத நிஜங்கள், நிழல்களாகவே வாழ்ந்து இருட்டின் பிம்பத்தை கையில் ஏந்தி நடக்கும் ஒவ்வொரு நொடியும் யுகமாய் மாறி மரணத்தின் வலியைக் காட்டிப் போகிறது.

“என்ன வேல செய்யற……. கரைக்டா சம்பளம் மட்டும் கேட்டுவாங்குற இல்ல….”

“உன்னை தான நம்பி அந்த பொறுப்பை ஒப்படைச்சேன் ………….”

“அதுனால தான் டாக்டர் ஏற்கனவே இருந்தவங்க செஞ்ச தப்ப உங்ககிட்ட சொல்லறேன்…”

“இந்த மாதிரி எதாவது சொல்லி சமாளிக்காதே… உன்னால எனக்கு நஷ்டம் தான்..”

‘உண்மையை உரக்க பேசு ..... நிமிர்ந்து நில் ... ஆதிக்க குரலை ஒடுக்கு...’போன்ற வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்கள் கண்களுக்கு முன்னே திரையாய் விழுந்து மறைந்தார்கள். அதற்குள் மரகதத்தின் வார்த்தைகள் மின்னலாய் காதோரத்தில் முளைத்தது. மௌனம் கார்த்திக்கை வாரிக் கொண்டது.

இரவை சுமந்து கொண்டிருந்தது காற்று. வீட்டை நெருங்கிக் கொண்டிருந்த கார்த்திக் வீட்டினுள் தன் அப்பா சத்தம் கேட்டதும் வாசல் ஓரமாக நின்று கொண்டான்.

“அவனுக்கு இந்த வயசுல என்ன விளையாட்டு கேக்குது…. எப்போப் பார்த்தாலும் எதாவது புத்தகத்தை படிக்க வேண்டியது, எதாவது கிறுக்க வேண்டியது, அப்பறம் விளையாட போகவேண்டியது. இவன் உருப்பட மாட்டான், இவன் தம்பியை பாரு… டாக்டருக்கு படிக்கிறான் நல்ல அறிவா இருக்குறான்.

‘என்ன எதாவது புத்தகமா? ........... ஏதோ என்று இருந்த என்னை ..... எதுவுமாய் இருக்க செய்தது. காரல் மார்க்ஸ், அம்பேத்கர், மகாகவி, பெரியார் ...... இவர்களாய் நான் பயணிக்க முடியாமல், இவர்களுள் நான் பயணிப்பதை, ஒரு சமூகம் தடைச் சொல்ல வேண்டாம், ஒரு வீடு போதும்’ ........ என்ற விரக்தியுடன் வீட்டிற்குள் நுழைந்தான். உரையாடல் நின்று போகிறது.

இரவு சிற்றுண்டியை முடித்துவிட்டு, கணிப்பொறியின் முன் அமர்ந்து

மின்னஞ்சலில் விரிகிறான் கார்த்திக். கணிப்பொறியில் சற்று ஆறுதல் தேடுகிற கூட்டம் இன்றளவில் இறைந்துக் கிடக்கின்றது. நாம் தேடுவதை தேடிக் கொடுக்கிறது, எந்த பதில் சொல்லும் வராமல். யாருடனோ பேசுகிற அலைவரிசையை அப்போது அமைத்து கொடுக்கிறது. சக மனிதனை புரிந்து கொள்ளுவதில் தோற்று போகிறது இன்றைய தலைமுறை.

கணிப்பொறியை அனைத்துவிட்டு அன்றைய தேதியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

தினமும் இப்படி எல்லோரிடமும் வசவு வார்த்தைகள் வாங்குவதற்கு, எங்காவது ஓடி போகலாம் .... எங்கே போவது ? ........... இல்ல பேசாம வாழ்க்கையை முடிச்சுக்கலாம் ... தைரியம் பத்தாது ..... நண்பர்கள் ... அறிவுரை பக்கம் பக்கமாக பிரசுரிப்பார்கள்..... என்னை புரிந்தவள்.. பெற்றகடன் முடிந்துவிட்டதாய் எண்ணி.. அவள் முடிவை தேடிக் கொண்டாள் ... இனி யார் நம்மை புரிந்துகொள்வது ... புரிதலுடன் கூடிய அன்பும், அரவணைப்பும் ஒரு வயதுக்குமேல் கிடைப்பதில்லை.

இப்படி எண்ணங்கள் ஒரு குட்டிப்போட்ட பூனையை போல உலாவியது.

‘அப்பா ….’ என்றது குழந்தை

குழந்தை பருவம் முடிவதற்குள், இந்த ஒற்றை சொல்லுக்கு வாழ்ந்துவிடலாம்.

“போ……… மா…. போய் … தூங்கு ………….”

“நான் பால் ……. விழையாடுறேன் …”

பந்தை உயர தூக்கி தன் கைகளால் அடித்தது குழந்தை.

ஒரு கோள வடிவத்தில் காற்றை அடைத்துக் கொண்ட பந்து, குழந்தை எவ்வளவு முறை அடித்தாலும், அதன் உருவத்தையும், நிறத்தையும் மாற்றிக் கொள்ளாமல் கீழிருந்து மேல உயர பறந்து காற்றை கனத்தது.

பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் மனது ஒரு சிறகாய் மிதந்து.

- சன்மது

Pin It