புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், எழுத்தறிவு பெற்ற தமிழர்களுடய மனதை ஈர்த்துப் புதிய சிந்தனைகளை இலகுவாக விதைக்கக் கூடிய கவிதைகளைப் படைத்தார். சாதிய ஏற்றத் தாழ்வு, மற்றும் மொழி, இனம், பிறப்புக் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படை யிலான வைதிக மேலாதிக்கப் பிடியிலிருந்து தமிழர் சமுதாயத்தை விடுவித்து உய்விக்கச் செய்ய வேண்டும் என்பது அவருடைய முதன்மையான இலட்சியமாக இருந்தது. உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், அவர்களுக்குக் குரல் கொடுக்கவும் அவர் தயங்கியதில்லை. "பெண்ணடிமை தீருக்குமட்டும் மண்ணடிமை தீரல் முயற்கொம்பே" என்று உறுதிபட முழங்கியவர் அவரே. இவ்வாறு, பழமை வாதமும் பிற்போக்கான கண்ணோட்டமும் மலிந்துக் கிடந்த தமிழர் சமுதாயச் சூழலில் தாம் இயற்றிய கவிதைகளுக்கு ஆற்றல் வாய்ந்த சமூகச் செயல்பாட்டு விழுமியத்தை ஊட்டியவர் பாரதிதாசன். "பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்" என்று கவிதைக்கு ஒருவகைச் செயற்பாட்டு நோக்கத்தைப் படைத்துக் கொண்ட தமது ஆசானின் வழிவந்த பாரதிதாசன், தம்முடை கவிதைக்கு, "கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே" என்றாற் போல் தீர்க்கமான இலட்சியப் பண்பைப் புகட்டியவர்.
கவிதை என்பது, வெறுமே அகவணர்வு வெளிப்பாட்டிற்கான வடிகால் சாதனமாக அமைவது என்னும் நிலைப்பாட்டிலிருந்து வேறுபடும் வகையில், சமுதாயத்தைப் பாதுகாக்கப் போராடுவோரின் ஆயுதமாகக் கவிதையின் பரிமாணத்தை வலிமை மிக்கதாக ஆக்கியது பாரதிதாசனின் சாதனையாகும். அந்த ஆயுதத்தை வலிமையும் மென்மையும் கலந்த கலைநயம் மிக்க சாதனமாகவும் வெவ்வேறு நோக்கங்களுக்குத் தக்கவாறும் கையாளுவதற்கு ஏதுவாகப் பலவகை யாப்பு வடிவங்களைப் பயன்படுத்திய திறம் என்பது நமது கவனத்தை ஈர்க்கக் கூடியது.
பொதுவாக ஒரு திரண்ட பொருளையோ குறுங்கதை அல்லது பெருங்கதையையோ எடுத்துரைப்பதற்கு ஒரே விதமான யாப்புக்குப் பதிலாகப் பலவகை யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தும் வழக்கம் புலவர்களால் பின்பற்றப்பட்டதை அடியொற்றி, அது மரபாக நிறுவப்பட்டதையே யாப்பியல் வரலாறு காட்டுகிறது. காலந்தோறும் புலவர்கள் எடுத்துக் கொண்ட பாடுபொருள்கள், அவற்றை விவரிக்கும் பாணிக்கு ஏற்றவாறு, யாப்பு வடிவங்களைக் கையாளுதல் என்பது, கதையின் நிகழ்வுகளுக்குரிய சூழல்கள், கதை மாந்தர்களின் மனவுணர்வுகள், பாடலைப் புனையும் பாவலனின் மனோபாவங்கள் ஆகியவற்றைப் புலப்படுத்துவனவாகச் செயல்பட்டன.
யாப்பு மரபில் புதிய போக்கினை வெளிப்படுத்திய வகையில் சிலப்பதிகாரத்திற்குத் தனியானதோர் இடமுண்டு. எழுத்துமரபில் புனையப்பட்டு, வில்லிசைப் பாடகர்கள், கணியான் கூத்துக் கலைப் பாடகர்கள், உடுக்கடிப் பாடகர்கள் போன்ற வாய்மொழி நிகழ்த்துநர்களால் பார்வையாளர்களுக்கு முன்னால் வாய்மொழியாக நிகழ்த்தப்பட்டுக், கதைப்பாடல்களாக வடிவங் கொண்ட' நாட்டார் இலக்கியப் பனுவல்கள்' பல நம்மிடையே அச்சிடப்பட்ட நூல்களாக உள்ளன. இத்தகைய கதைப்பாடல்கள் வாய்மொழியாக நிகழ்த்துவதற்காக அண்ணாவி முதலிய கிராமியப் புலவர்களால் இயற்றப்பட்டவை. நிலைப்பனுவல்கள் என்னும் வகையில், அவை கதையை எடுத்துரைக்கவும், கதையின் வெவ்வேறு கட்டங்களை இசையோடு பாடுவதற்கும் இயலும் வகையில், வெவ்வேறு யாப்பு வடிவங்களால் (செய்யுள் அல்லது பாக்கள்) யாக்கப்பட்டவையாக அமைந்தவை. இத்தகைய வடிவ ஒழுங்கை இரண்டாம் நூற்றாண்டினது எனக் கருதப்படும் சிலப்பதிகரத்தில் காணமுடியும். கதைப்பகுதியை எடுத்துரைப்பதற்கு அகவல் அல்லது ஆசிரியம் உள்ளிட்ட பாவடிவங்களையும், காப்பியப் பாத்திரங்கள் தமக்குள் ஊடாடி உரையாடுவது, புராணப் பாங்குடைய கதையை நிகழ்த்துவது, கண்ணகி முதலிய கதைமாந்தர்கள் தொடர்புடைய சம்பவங்களை நாடகம் போல் காட்சிப்படுத்திச் சித்திரிப்பது ஆகியவற்றுக்குத் திணைக்குடி மக்களின் இசைப்பாடல் வடிவங்களையும் (நகலாக்கப் பாடல்கள்) இளங்கோவடிகள் தம்முடைய காப்பியத்தில் கையாண்டிருந்தார். வரிப்பாடல் (கானல் வரி), குரவை (குன்றக்குரவை) போன்ற திணைக்குடிகளின் இசைப்பாடல் வடிவங்களைக் கையாண்டு அவர் படைத்தளித்த காப்பியமானது ஒரு பதிய வகைமாதிரியை உருவாக்கியது. அந்நூற் கதையோடு தொடர்புடையதும் அதன் சமகாலத்திய படைப்புமான மணிமேகலையில் கதைவிவரணை வடிவமாக அகவலே அன்றி, சிலம்பின் அவ்விவரணை வகை மாதிரி பின்பற்றப்படவில்லை.
மேலும், ஏனைய ஐம்பெருங்காப்பியங்களிலோ, பெரியபுராணம், இராமாயணம், முதலிய நெடுங்கதை இலக்கிய நூல்களிலோ விருத்த வகைகள் பல கையாளப்பட்டனவே அல்லாமல், சிலம்பின் அவ்வகைமாதிரியின் தடயத்தைக் காணமுடியாற் போனது. ஆயினும், பக்தி இலக்கிய நூல்களில் நாட்டார் இசைப் பாடல்களை நகலாக்க முறையில் படைத்துக் கையாளும் மரபு தொடர்ந்தது. வகைமை, துணைவகைமை என்ற முறையில் பல யாப்பு வடிவங்களைப் பயன்படுத்துவது என்பது, பல்வேறு இலக்கிய நூல்களில் ஒரு மரபாகப் பின்பற்றப்பட்டாலும், அவற்றில் நாட்டார் இசைப்பாடல் வடிவங்களை நகலாக்கம் செய்துப் பயன்படுத்தும் வழக்கம் காணப்படவில்லை. இந்நிலையில் ஒரு மாற்றத்தைச் சிற்றிலக்கிய நூல் வகைகளில் பார்க்க முடிகிறது. சிற்றிலக்கிய நூல்கள் பலவகைப்பட்ட யாப்பு வடிவங்களைப் புதியனவாகப் படைத்துக் கொடுத்துப் பங்களிப்பை வழங்கியவையாகக் கூறப்படுகின்றன. அவற்றின் தோற்றம் குறித்துப் பேசும் போது, அகப்பாட்டு, புறப்பாட்டு, பத்திமைப் பாட்டு, நாட்டுப்புறப் பாட்டு என்ற நான்கின் வழிப்பட்டதாக அறிஞர் கூறுவர்.(தமிழண்ணல், 1971:324). இவற்றில் முதல் மூன்றும் பொருண்மை அடிப்படையில் அமைந்த நிலையில், நான்காவதான 'நாட்டுப்புறப் பாட்டு' என்பது, 'வாய்மொழிப் பாடல் வழியில்' வந்த சிற்றிலக்கிய நூல்களைக் குறிக்கிறது.
வாய்மொழிப் பாடலின் வடிவமைப்புக் கூறுகள் தழுவியவையாக உருவான யாப்பு வடிவங்கள் பல பிற்கால இலக்கிய நூல்களில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. எழுத்து வழக்கிலான பாடல் மரபில் வாய்மொழிப் பாடல் மரபைப் பிணைத்து உருவாக்கும் ஒருவகைப் படைப்பிலக்கிய பாணி சிலம்பில் தோற்றம் பெற்றதாயினும், சிற்றிலக்கிய நூல்களிலேயே அதன் பயன்பாடு வலிமைப் பெற்றது. பதினைந்து முதல் பதினேழாம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியைச் சிற்றிலக்கியக் காலம் என்று அறிஞர்கள் அடையாளப்படுத்துவர். அத்துடன், நாயக்கர் ஆட்சிக் காலத்தைச் சிற்றிலக்கியக் காலமாக அணுகுவர். (தமிழண்ணல், 1971: 332) பதின்மூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமே சிற்றிலக்கியக் காலம் என்றும் வரையறுப்பர். (அ.மார்க்ஸ், 2009:24). இவ்வகையில் தோன்றிய இலக்கிய நூல்களைத் தொண்ணூற்றாறு என்பர். பொதுவாகக் காலந்தோறும் படைக்கப்பட்ட தனிப்பாடல்கள், கதை விவரணை தழுவிய நூல்களில் கையாளப்பட்ட யாப்பு வடிவங்களை அடியொற்றி அவற்றின் கவிதைப் போக்கினை, நான்காக வகைப்படுத்துவர். அதாவது, சங்கப் பாடல்கள் வழி நிறுவப்பட்ட அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பனவற்றுக்கு அப்பால் இருபதாம் நூற்றாண்டில் பாரதி, பாரதிதாசன் ஆகியோர் காலத்திற்கு முன்பு வரையில் பல நூற்றாண்டுகளாக நிலவியது, தமிழ்ப் புலவர்களின் மரபுக் கவிதைப் போக்காகும். இவ்விரு கவிஞர்களின் தடத்தின் வழியே செயல்பட்டதனை மறுமலர்ச்சிக் கவிதைப் போக்கு என்பர். மற்றொன்று, எழுத்து, கசடதபற போன்ற இதழ்களின் ஊடாகத் தமிழ்க் கவிதை மரபில் புகுந்த புதுக்கவிதைப் போக்காகும். மற்றொன்று,' நாட்டார் கலையின் பகுதியென இனம்காணத் தக்க சந்தக் கவிதை' என்னும் போக்காகும். (ஞானி, 2007: 393).
சந்தக் கவிதைப் போக்கு என்பது ஒருவகையில், திணைக்குடிகளின் வாய்மொழிப் பாடல் வடிவங்களைப் போன்மையாக்க முறையில் படைத்துச் சிலம்பில் கையாளப்பட்ட இசைப்பாடல்களை அடியொற்றிய விளைவாகும். வாய்மொழிப் பாடல்களைப் போலவே, எதுகை, மோனை, இயைபு(சந்தம் அல்லது ஒலிஇயைபு) முதலிய ஒலிக்கூறுகள், சொற்கள் அல்லது அடிகள் திரும்ப வருதல், அளவொத்த அடிகள் இடம்பெறுதல் போன்ற அவற்றின் வடிவக் கூறுகளைத் தழுவிப் பாடல் இயற்றும் புலவர், கவிஞர்களின் படைப்புகளை முன்னிட்டே சந்தக் கவிதைப் போக்கு என்பது ஆளப்பட்டுள்ளது. இந்தச் சந்தக் கவிதைப் பாணி என்பது, சிற்றிலக்கிய நூல்களில் கணிசமாகப் பின்பற்றப்பட்டது.
சிற்றிலக்கியங்கள் தம்முடைய சிலவகைப் பலவீனங்கள் காரணமாக எதிர்மறை விமர்சனங்களை எதிர் கொண்டன. அதே சமயத்தில் அவற்றின் ஈர்க்கத் தக்க சில அம்சங்கள் காரணமாக 19/20 ஆம் நூற்றாண்டுகளில் மறுமலர்ச்சிக் கவிஞர்களான பாரதி, பாரதிதாசன் போன்றோரிடம் ஒருவகைத் தாக்கத்தையும் ஏற்படுத்தின. குறிப்பாகச் சொல்வோமானால், சந்தக் கவிதை மரபு என்பது, அவ்விரு கவிஞர்களிடத்தும் செலுத்திய தாக்கமானது குறிப்பிடத்தக்கது.. அவர்களுடைய தாக்கத்திற்கு ஆட்பட்ட, அவர்தம் சமகாலத்திய கவிஞர்களிடத்தும், பிந்தைய கவிஞர்களிடத்தும் இசேந்தக் கவிதை வெவ்வேறு வகைகளில் வெளிப்பட்டது. வடிவம், உள்ளடக்கம், உத்தி என்பன போன்ற பல்வேறு கூறுகளை அடியொற்றித் தமிழ்க்,கவிதை மரபுக்குப் புதிய பரிமாணம் கொடுத்த பாரதியாரின் படைப்புகளில் கருத்துப்புலப்பாட்டு ரீதியில் செயல்பட்ட இழைவுக் கூறுகளில் சந்தநயம் என்பது இன்றியமையாதது. கவிதையில் இயல்பாக ஒலியியைபுகள் விரவி வருமென்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால், அமைதியான வாசிப்பு அனுபவத்தைக் கடந்து, கேட்டல், கட்புல ஈர்ப்பு ஆகியவற்றின் வாயிலாகப் பனுவற் பொருள் என்னும் உலகிற்கு அருகே வரச்செய்து, குறைந்த எழுத்தறிவுத் திறனுடைய மக்களிடத்தும் ரசனைத் திறமுடைய ஈர்ப்பை ஊட்டவல்லதாகத் தமிழ்க் கவிதையின் உறைவிட வா யிலைத் திறந்து விட்டவர் பாரதி. அதாவது, வெகுமக்கள் இலக்கியப் பண்புகளை உட்செறித்தவையாகக் கவிதை அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதைச் சார்ந்த செல்நெறியில் முன்னோடியாகச் செயல்பட்டவர். அதனை அவர் பாஞ்சாலி சபதம் நூலின் முகவுரையில் முதன்மையானதாக வலியுறுத்தினார்.
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுமக்கள் விரும்பும் மெட்டு, இவற்றினை உடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டாண்டு நூற் பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ளே நயங்கள் குறைபடாமலும் நடத்துதல் வேண்டும்".(பாரதியார் கவிதைகள்,1971:340)
பாஞ்சாலி சபத முகவுரையில் பாரதி வலியுறுத்திய வெகுமக்களை நோக்கிய கவிதைக்கான உத்திகளை, அந்நூலுக்கானவையாக மட்டுமல்லாமல், தம்முடைய பெரும்பான்மையான கவிதைகளுக்கும் அடிப்படையானவையாகப் பயன்படுத்தியிருந்தார். பாரதிக்கு முன் சில காலமாகப் பாடுபொருள், உத்திமுறைகள் போன்றவற்றை அடியொற்றித் தமிழ் இலக்கியப் புலம் மிகவும் தொய்வடைந்திருந்ததாக மதிப்பிடுவர். அந்தக் காலப் பகுதியில் மிகவும் அதிகமாகப் பிரபந்தம் அல்லது சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூல்களே இயற்றப்பட்டன. நகலெடுப்பது போல் ஒன்றைப் போன்று மற்றொன்று எனப் பல்கிப் பெருகிய இவ்வகை நூற்பெருக்கத்தைப் புற்றீசல் படைஎடுப்போடு ஒப்பிட்டனர். ஆனால், இவ்வகை நூல்கள் சிலவற்றின் ஊடாகச் செறிவுப் படுத்தப்பட்ட நாட்டார் யாப்பு வடிவங்களான பாட்டு, கண்ணி, சிந்து முதலியன பரவல்படுத்தப்பட்டன. சிந்துக்குத் தந்தை என்று பாரதிதாசனால் புகழப்பட்ட பாரதியின் கவிதைகளில் பெருமளவில் தாக்கம் செலுத்தியவை மேற்குறித்த நாட்டார் யாப்பு வடிவங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதியின் கவிதைகளில் தாக்கம் ஏற்படுத்திய நாட்டார் யாப்பு வடிவங்கள் என்பன, உழைக்கும் கிராமத்து மக்களால் நேரிடையாகப் படைக்கப்பட்டு, வாய்மொழியாகப் பரவிய பாடல்கள் அல்ல என்றும் அவை, சிறுநகரங்கள், சிற்றூர்களில் ஆர்வமாகப் படிக்கப்பட்ட குஜிலி இலக்கியங்கள் என்றும் அனுமானிப்பர். அதாவது, பாரதியிடம் காணப்படுவது, நேரிடையான வாய்மொமி இலக்கியத் தாக்கமாக இல்லாமல்,குஜிலி இலக்கிய வழியாலான தாக்குறவாக இருக்க வாய்ப்புண்டு என்பர். அது போலவே, பாரதியை அடியொற்றி எழுதிய பாரதிதாசனிடமும் குஜிலி இலக்கியச் செல்வாக்கை அடையாளம் காண்பர்.(ஆ. இரா. வேங்கடாசலபதி, 2004: 97). அதே வேளையில், பாரதியிடம் காணப்பட்ட சிற்றிலக்கிய வகைகளின் செல்வாக்கையும் சுட்டிக்காட்டுவர் (தமிழண்ணல். 1971: 364)
வெகுமக்கள் ஈர்ப்புக்கு உரிய கலை வடிவமாகத் தமது கவிதைக்குப் பரிமாணம் கொடுத்துப் புதுவழி காட்டிய முன்னோடியாகச் செயல்பட்டவர் பாரதியார் என்றால், அவருடைய வழித்தடத்தில் சென்று, கவிதையின் பாடுபொருளைப் பல நிலைகளில் சமூகவயப்படுத்தியவர் பாரதிதாசன் எனலாம்.. அகவய உணர்வுகளுக்கும் தேசபக்தி, தெய்வ பக்தி பற்றிய உணர்வுகளுக்கும் வடிகால்களாக அமையும் வகையில், சிந்து முதலிய யாப்புகளைப் பாரதி பயன்படுத்தினார் என்றால், சமூகப் பிரச்சினைகளையும் இனம், மொழி பற்றிய கருத்துகளையும் எடுத்துரைக்க அச்சிந்து வடிவங்களையே பாரதிதாசன் கணிசமாகப் பயன்படுத்தினார். இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். பக்தி இயக்கத்தின் தாக்கம் காரணமாகத் தமிழ்ச் செய்யுள் மரபு என்பது, சமயமயப்படுத்தலுக்கு (sacralisation) ஆளாயிற்று. இருபதாம் நூற்றாண்டில் பாரதியால் அதுவே மேலும் நவீனப் பாங்கோடு செறிவூட்டப்பட்டது. ஆனால், பாரதிதாசனோ தமது பகுத்தறிவுக் கண்ணோட்டம் காரணமாகத் தமிழ்க்கவிதை மரபில் சமயச் சார்பற்ற நிலையைப் புகுத்தினார். அத்துடன், ஏற்கனவே சமயம் மற்றும் பௌராணிகத்தால் பிணைப்புற்றுக் கிடந்தவற்றை விடுவிக்கும் (desacralisation) சிந்தனைகளையும் தம்முடைய கவிதைகள் வாயிலாகப் பரப்பினார்.
பாரதியாரின் வழித்தோன்றலாகப் பார்க்கப்படும் பாரதிதாசன், சமூக, அரசியல் கோட்பாடுகளில் தாம் கொண்ட பிணைப்பின் காரணமாக முன்னவரிலிருந்து முற்றிலும் எதிர்நிலை வயப்பட்ட அடையாளம் உடையவர். அவருக்குரிய ஒரு தனித்த கருத்தியல் உருவம் என்பது அவர்தம் இயக்கநெறி சார்ந்த கவிதைகள் வாயிலான செயல்பாடுகளால் அமைந்தது. அவருடைய படைப்பாளுமையைப் புரட்சிக் கவிஞர் என்னும் முன்னொட்டுத் தொடர் பொருத்தமாக முன்னிறுத்துகிறது. அவரைப் பற்றிய பின்வரும் இயல்பான மதிப்பீடு நாம் நினைவிற் கொள்ளத்தக்கது:
"பாரதியாருக்குப் பின் வந்த கவிஞர்களுள் ஈடிணையற்றவரான பாரதிதாசன் திராவிடக் கழகத்தின் கவிஞர் எனலாம். பாரதிதாசன் சீர்திருத்த இயக்கம், திராவிட இயக்கம், நாத்திக இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்பவற்றோடு தொடர்படையவர். ஆனால், தமிழியக்கத்துக்குட்பட்டதே அவர் மற்றைய இயக்கங்கள். அவர் உயிரியக்கமே தமிழால் நிகழ்ந்ததெனலாம்.. அவரது இசை, காவியம், கவிதையெங்கும் தமிழியக்கம் பரந்து நிற்கிறது."
"ஆனால்,பாரதிதாசனில் அந்தணர் எதிர்ப்பு இந்து சமய எதிர்ப்பாகவும் காணப்பட்டது. அவர் கோயிலையும் உருவ வழிபாட்டையும் கண்டித்துப் பாடியுள்ளார். பரத நாட்டையும் இந்திய விடுதலையையும் அவர் பாடவில்லை. பாரதியாரிடம் இருந்த பழமைப்பற்றுப் பாரதிதாசனிடம் காணப்படவில்லை. அந்தணர் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற உதவிய சமய நெறியையும் தத்துவ நெறியையும் பாரதிதாசன் முற்றாக வெறுத்தார். அந்தணரையும் அவர்கள் செல்வாக்குக்குக் காரணமான இந்து சமயத்தையும் பல சந்தர்ப்பங்களிலே தாக்கினார். சமயக் கொள்கைகள் பல, அவருக்கு மூடக் கொள்கைகளாகத் தெரிந்தன. இயற்கை நெறிக் காலத்தில் இருந்தது போலக் காதலும் வீரமுமே தமிழ்ச் சமூக வாழ்விற் சிறப்பிடம் பெற வேண்டுமென்று விரும்பினார். அவர் வள்ளுவர் காட்டிய அறநெறியிலும் மதிப்பு வைத்திருந்தார்." (ஆர்.வேலுப்பிள்ளை,2010: 216 217).
புரட்சிக் கவிஞர் பற்றிய ஒருவகைக் கருத்தியல் படிமமாக அமைந்த மேற்குறித்த கூற்று, அவர்தம் கவிதைப் படைப்புகளின் உந்தாற்றலை உள்வாங்கிக் கொள்ளவும், அவற்றின் பொருண்மையை விளங்கிக் கொள்வதற்கும் உரிய வழிகாட்டும் குறிப்புகளை, அக்காலத்திய அரசியல் சமூக" சூழல்களோடு பொருத்தி நோக்குவதற்கும் உதவக் கூடியது.
தமிழ் மொழி, இனம், பண்பாடு, வைதிக எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, உழைக்கும் பாட்டாளிகளின் உரிமைக்குக் குரல் கொடுத்தல் என்று பரந்துப் பட்ட கொள்கைகளின் திட்ட நிரலைத் தம்முடைய கவிதைகளின் பாடுபொருளாக அரவணைத்துக் கொண்டு இயங்கிய பாரதிதாசன், அதனை வெகுமக்களிடம் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில், மிகவும் எளிமைப் பண்பும் ஈர்க்கும் தன்மையும் நிறைந்த நயமிக்க ஊடகமாகத் தம் கவிதையைப் பயன்படுத்தினார். பாரதி விழைந்து வெளிப்படுத்திய வெகுமக்கள் அளாவிய கவிதை பற்றிய கருத்துப்புலப்பாட்டு நெறியை (பாஞ்சாலி சபதம் முகவுரை) பாரதிதாசன் தம் கவிதைகள் எங்கும் விரவியிருக்கும் வகையில், அழகியல் ரீதியிலான சமூகச் செயல்பாடாகப் படைப்பாக்கப் பணியில் ஈடுபட்டார். கவிதையை வாசிப்பவன் மௌனமாகத் தனக்குள் பொருளை உள்வாங்கி, அகவயமாக ரசித்து ஆனந்தப் பட்டுக் கொள்வதற்கு உரிய சாதனமாக அல்லாமல், தமது கொள்கைத் திட்ட நிரலுக்கு ஏற்ப, விழிப்பணர்வை ஊட்டிச் சிந்திக்கவும் ஆவேசம் கொள்ளவும், எதிர்வினை ஆற்றவும் வாசகனை உசிப்பி எழுப்பும் வீறுணர்வுத் தன்மை மிக்கத் தூண்டுகோலாக அமையும் வகையில் அவருடைய கவிதை செயல்பட்டது. "கொளைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே, குகைவாழ்ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா" (வாளினை எடடா)," மானிடச் சங்கமம் நானென்று கூவு" என்பனவற்றில் உள்ள உணர்ச்சித் தூண்டல் உதாரணமாகும்.
சமூக, அரசியல் தழுவிய வீறுணர்வு மட்டுமே அவருடைய கவிதையின் சாராம்சமாகக் குறுக்கிவிடவும் முடியாது. ' பண்டைய இயற்கை நெறிக்கால காதல் மற்றும் வீரம் என்பன தமிழ்ச் சமூக வாழ்வில் சிறப்பிடம் பெற வேண்டும் என்று விரும்பினார் என்பது அவரைப் பற்றிய ஒரு கருத்து அதற்கேற்ப காதலையும் இயற்கை உலகையும் அவர் பாடுவதற்கு அவர் கையாண்ட யாப்பு நடையில் ஒரு மென்மையான போக்கு காணப்பட்டது. தமிழ் மொழியைப் பற்றிய அவருடைய கவிதைகளில் மிக உயரிய பக்தி உணர்வு புலப்பட்டெதனலாம். சைவ, வைணவப் புலவர்கள் தங்கள் கடவுளர்களைப் பாடுவதற்கு பக்தி(அன்பு) பற்றிய கருத்துருவத்தைப் பயன்படுத்தியதைப் போல், பாரதிதாசன் தமிழைத் தாயாகவும், உயிராகவும், காதலியாகவும் வரித்துக் கொண்டு பாடினார். நாயகன் நாயகி முதலிய பாவனைகளில் தன்னை வைத்துக் கொண்டு கடவுளைப் போற்றும் பக்தி இயக்கச் சிந்தனையைத் தமது கண்ணன் பாட்டில் பாரதி வெளிப்படுத்தினார். முற்றிலும் இல்லையாயினும் ஒருபகுதி அளவில் ஒப்பிடக்கூடிய வகையில், தான் தன் உயிரினும் தாய்மொழிக்குத் தெய்வத்திற்குரிய புனிதப் படிமத்தை ஊட்டும் வண்ணமாக பாரதிதாசன் தமிழைப் போற்றினார் இவ்வாறு, பலவகைப்பட்ட பொருண்மைகளை உட்கொண்ட கவிதையின் வடிவத்தைப் பரவலான விநியோக வீச்சுக்கு ஏற்றவாறு செறிவூட்டிக் கையாண்டார்.
ஓசை, சந்தம் அல்லது ஒலிஇயைபு, உள்ளிட்ட சிலவகைக் கூறுகள் ஆதிக்கும் செலுத்தக் கூடிய நாட்டார் யாப்பு வடிவங்களான தெம்மாங்கு உள்ளிட்ட சிந்து வகைகள், கண்ணி, பாட்டு முதலிய இசைப்பா வடிவங்கள் கவிதையில் ஒருங்கிணைத்துக் கொள்ளப்பட்டன.. கவிதை இசைப்பாங்கானதாக மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு. பாரதிக்கு முன்னர், சிற்றிலக்கியங்களில் சில நூல்கள் இசைப்பாங்கான நாட்டார் பாடல் வடிவங்களைக் கையாண்டுத் தனித்த அடையாளம் பெற்றன. அவற்றை நாட்டுப்புறப்பாட்டின் வழிப்பட்டது அல்லது நாட்டுப்புறச் சிற்றிலக்கியங்கள் என்று வகைப்படுத்தினர் (தமிழண்ணல், 1971: 334). அவற்றுள் பள்ளு, குறவஞ்சி போன்றவைக் குறிப்பித்தக்கவை. மற்றொரு நிலையில், பொதுவெளியில் மக்களிடையே காத்தவராயன், மதுரைவீரன் போன்ற கதைகளைப் பாட்டாகப் பாடி நிகழ்த்துவதற்கும் கூத்து அல்லது நாடகமாக நிகழ்த்துவதற்கும் ஏற்ற பிரதிகள் இயற்றப்பட்டன. கிராமியப் புலவர்கள், அண்ணாவிகளால் இயற்றப்பட்ட இவ்வகை நூற்பிரதிகள் விருத்தப் பாக்களையும் சந்தப் பாடல்களையும் கொண்டவை. கதையை எடுத்துச் சொல்லும் விவரணை முறையும் பாத்திரங்கள் உரையாடுவதற்குக் கண்ணிகள், தெம்மாங்கு முதலிய சிந்துப் பாடல்களும் அமைந்துப் பொதுவெளி நிகழ்த்துகையைப் பொலிவுமிக்கவையாக ஆக்கின.(உம்: காத்தமுத்து நாடகம்) இவ்வாறே, சிறு, பெருநகரங்களில் மக்களிடையே, அவ்வப்போது நடக்கும் எதிர்பாராத, அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளான கொலை, தற்கொலை, கொள்ளை, இரயில்விபத்து ஆகியவற்றைப் பற்றிக் குறுங்கதைப் பாடலாக இயற்றித் தோலிசைக் கருவிகளை இசைத்துப் பாட்டாகப் பாடிக் கதை சொல்லும் ஒருவகை நிகழ்த்துகை மரபும் வழக்கத்தில் இருந்தன. இவ்வகைப் பாடல்கள் கொலைச் சிந்துகள் என்னும் பெயரில் மலிவு விலை நூல்களாகவும் வெளியிடப்பட்டன. (காண்க: அ. மருததுரை,1991).
எழுத்திலக்கிய மரபும் வாய்மொழி இலக்கிய மரபும் இணைந்தவையாக அச்சு ஊடக வழியாக ஒருவகை நிலைப்பனுவலாக (idealised text) உருவம் கொடுக்கப்பட்ட நிலையில், அப்பனுவலையே ஆதாரமாக்க கொண்டு, வெகுமக்கள் முன்னிலையில் வீதியிலோ, திறந்த வெளியிலோ வாய்மொழி நிகழ்த்துகை, நாடகம் அல்லது கூத்து மற்றும் ஆட்ட நிகழ்த்துகை என்பன போன்ற படிமுறையின் இறுதி விளைவாக அமையும் கலைப்பாங்கான கருத்துப்புலப்படுத்தமே (artistic communication) பாரதி போன்ற புதுகேக் கவிஞர்கள் தங்கள் கவிதையை முன்னிறுத்தி எதிர்நோக்கியது. அதுவே "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுமக்கள் விரும்பும் மெட்டு" என்னும் கூற்றில் வெளிப்பட்ட கருத்தியல் சாராம்சமாகும்.
பாரதிதாசன் படைத்த கவிதைகளில் கணிசமானவை மேற்குறித்த கருத்தியல் சாராம்சத்தைத் தம்மியல்பாக உட்கொண்டிருப்பவை எனலாம். யாப்பு வடிவங்களில் அகவல் என்பது ஒரு சுருக்கமான அல்லது நீண்ட பொருளை ஆற்றொழுக்காக விவரிப்பதற்கு ஏற்ற வடிவமாகும். அவ்வாறே, அறுசீர்களில் அமைந்தவை உள்ளிட்ட விருத்த வகைகள் என்பன, ஒரு கருத்து, சிந்தனை, சமூகப் பிரச்சினை, மனவுணர்வு, நெடுங்கதை என்று எப்பொருளையும் எளிமையான சொற்கள் தழுவிய தெளிந்த நீரோடை போன்ற நடையில் எடுத்துரைக்க ஏற்றவாறு கவிஞரின் கவிதை இயற்றும் வினைத் திறனை வெளிப்படுத்த உதவுகின்றன என்பதற்குப் பல கவிதைகள் சான்றாக உள்ளன. அழகின் சிரிப்பு நூலில் உள்ள 'அழகு' என்ற தலைப்புக் கவிதை,(எண்சீர் விருத்தம்), இயற்கைப் பொருட்கள் மட்டுமல்லாமல் சமூக உலகின் நடத்தைகளிலும் எங்கும் வியாபித்திருக்கும் அருவுருவான அழகு என்னும் கருத்தை உயிரோட்டம் நிறைந்த ஒரு காட்சிப் படிமமாகச் சித்திரிக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மிகவும் ஏற்ற வடிவம், விருத்தமாகும் என்னும் கருத்து (மு..வரதராசன், 2007: 25 ) புரட்சிக் கவிஞரின் பல பாடல்களில் உறுதி பெறுகிறது. கருத்தும் உணர்ச்சியும் கலந்த ரெளத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த,
"இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின் றாரே
வாயடியும் கையடியும் ஓய்வ தெந்நாள்?"
என்ற இப்பாடலடிகள் ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும்.
தமிழ் மொழி சமூக அடையாளம் தமிழர் என்ற இனவுணர்வும் தமிழ்மொழியைத் தம் உயிரினும் மேலானது என்று போற்றும் மனப்பாங்கும் அம்மொழிக்குப், பண்பாட்டு அடையாளச் சின்னங்களில் ஒன்று என்பதற்கு அப்பால், ஒட்டுமொத்த சமுதாயமும் தனது புனிதச் சின்னத்திற்கு கொடுக்கும் மரியாதையை விட, மேலதிகமான அளவில் தகுதிநிலையக் கொடுத்துத் தமிழை அணுகுவதற்கு அடிப்படைகளாகும். தமிழின்பால் புரட்சிக் கவிஞர் காட்டிய நேயமானது, வேறு எந்தக் கவிஞர்களிடமிருந்தும் எவளிப்பட்டதை விட, மிகவும் மேலானது என்று மதிப்பிடுவர்..தேமிழுணர்வின் வீறு பாரதிதாசனிடம் வெளிப்பட்ட அளவுக்கு வேறு யாரும் வெளிப்படுத்தவில்லை" என்ற கூற்றும் (267) "தமிழ் அவரைப் பொறுத்தவரை தெய்வம். தமிழை வணங்க அவரது பகுத்தறிவுணர்வு தடையாக இல்லை"(267) என்பதும் தமிழுக்கு அவர் படைத்திருந்த புனிதப் பண்புருவத்தின் அளப்பற்ற நிலையை நாம் புரிந்து கொள்ள உதவும். தமிழ் மீதான அவருடைய ' பக்தியணர்வை'யும் அதற்குரிய புனித எல்லையைத் தாண்டுவதற்கு யாரையும் அனுமதியேன் என்ற நிலைப்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு மிகவும் வெளிப்படையான ஓர் எடுத்துக்காட்டு உண்டு. அதாவது, ஒரு தருணத்தில் பெரியார் தமிழை இகழ்ந்துப் பேசிய போது, அதற்காகப் பெரியாரை எதிர்த்துப் பேசியவர் பாரதிதாசன்(ஞானி, 2007: 259).என்பதுதான் அச்சான்றாகும்.
மேற்குறித்த பாரதிதாசனின் தமிழணர்வு பற்றிய கருத்துநிரலைத் தாங்கிப் பற்றுவன பின்வரும் பாடற்சான்றுகள்.
தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்
தமிழ்இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் !
தமிழுக்கு மணமென்று பேர் இன்பத்
தமிழ்எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத்
தமிழ்எங்கள் உரிமைச்செம்பயிருக்கு வேர் ! (இன்பத் தமிழ்)
இயற்கையில் காணப்படும் நிலவு, மணம், வான், தேன், தீ என்பனவற்றோடு தமிழை ஒப்பிடுவதோடு மட்டுமல்லாமல், அதனை உயிருக்கு இணையானது, சமூக வளர்ச்சிக்கு நீராதாரம் போன்றது, வாழ்க்கையின் நில ஆதாரம், தமிழர் உரிமை எனும் பயிரின் வேர், இளமைக்கு உரமூட்டும் பால், புலவர்களுக்கு வேல் போன்ற ஆதேம், தமிழர் உயர்வின் எல்லையற்ற வானம், அறிவைத் தாங்கும் தோள், கவிதைத் திறனை உரசி அளவிடும் வாள் என்று தமிழைப் பலவகைக் கூறுகளோடு ஒப்பிடுவதில் தனியொரு பாணியைப் பாரதிதாசன் கையாளுகிறார். ஒருவகைப் பக்திப் பரவச நிலையில் நம்பிக்கை மரபில் தோய்ந்துக் கடவுளைப் போற்றிக் கொண்டாடும் புலவனைப்போல், எமக்கு' எல்லாமும் நீயே' என்று தமிழை முதன்மைப் படுத்துகிறார். அனைத்திற்கும் மேலாக, தமிழர்களைப் பெற்றெடுத்த தாய்(" தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்") என்று தாயின் இடத்தில் தமிழை வைத்துப் போற்றுவது என்பது குறிப்பிட்ட சமுதாயத்தின் பண்பாட்டுத் தளத்தில், ஏனைய பண்பாட்டுக் கூறுகளில் அடங்கும் மற்றொன்று என்னும் சாதாரண நிலைக்கு அப்பால் மிக உயரிய இடத்தில் வைத்து நோக்கத் தக்கது என்பதையே சுட்டுகிறது.
பொதுவாகத் தமிழர் சமூகத்தின் பண்டைய சமூக நிலையைப் பற்றி ஆராயும் அறிஞர்கள், அதனைத் தாய்வழிச் சமூகம் என்றும், தாய்த் தெய்வ வழிபாட்டினது என்றும் அடையாளப்படுத்துவர். நிலம், பயிர் உற்பத்தி, விருத்தி ஆகியவற்றோடு பெண்ணை இணைத்து நோக்கிய தொல்குடிகளின் சிந்தனைகளை அடியொற்றித் தோன்றிய கருத்துருவமே தாய்த்தெய்வ வழிபாடாகும்.. ஆனால், பாரதிதாசன் தமிழ்ச் சமூகத்தின் தோற்றமூலத்தின் வித்தாகவும், அதன் விருத்தியாகவும் தமிழையே காண்கிறார். பாதுகாப்பு அரணாகவும் தமிழே திகழ்கிறது. ஆதியில், நிலவிய தாய்த் தெய்வ வழிபாடு என்ற இடத்தில், அதாவது, தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் தமிழையே தாய்த்தெய்வமாக நிலைநிறுத்தும் உட்பொருளையே அவருடைய தமிழைப் போற்றும் ஏனைய பாடல்கள் வாயிலாகவும் நாம் அனுமானித்துக் கொள்ளத் தோன்றுகிறது. பாரதிதாசன் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியலை அடியொற்றி, இவ்வனுமானம் பொருந்துவதாகவும் உள்ளது. தமிழர் சமூகத்தில், இடைக்காலத்தில் தோன்றி, அதனைப் பிளவுப்படுத்தும் எதிர்மறைச் சக்திகளாகச் செயல்படும் சாதி, சமயம் ஆகியவற்றை அழித்தொழித்து, பிளவுப்பட்டுக் கிடப்பதை ஒன்றுபடுத்தும் ஆற்றல் தமிழிலேயே உள்ளது என்பதே அவரது நம்பிக்கை. இந்தக் கோணத்தில் அணுகத் தக்கவையாக சாதி, சமயம் பற்றிய அவர்தம் பாடல்கள் உள்ளன.
தமிழைச் சிவனோ, அகத்தியனோ படைத்தனர் என்பதை அவர் ஏற்க வில்லை. "சும்மாதான் சொன்னார் உன்னை ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே" (அழகின் சிரிப்பு) என்பது அவருடைய மறுப்பாகும். வட்டார வேற்றுமை, சாதி, சமய வேறுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வு போன்ற எதிர்மறைக் கூறுகளைக் களைவதன் வாயிலாகச் சமூகத்தை ஒருமைப்படுத்தும் பிணைப்பாற்றல் கொண்டதாகத் தமிழை முன்னிறுத்துவது ஒரு சரியான கண்ணோட்டமாகும். வாய்மொழி அல்லது குரலொலி, எழுத்து வழக்கு என்பனவற்றை அடியொற்றித் தோன்றும் மொழிக்குப் பருண்மை உருவிலான நம்பிக்கை உணர்வை ஊட்டும் ஒரு புனிதச் சின்னத்திற்கு இணையான அடையாளமாகத் தமிழை நிறுத்துவதில் ஒரு தர்க்க நியாயம் உண்டு.
வடமொழியைத் தேவபாஷை என்று உயர்த்தியும், தமிழை நீச பாஷை என்று தாழ்த்தியும் மதிப்பிடுவது, தமிழர் சமூகப் பண்பாட்டை சமஸ்கிருதவயமாக்குவது, மனுவின் பிறப்புக் கோட்பாட்டை அடியொற்றிச் சமூக ஏற்றத் தாழ்வை நிறுவுதல் என்பன உள்ளிட்ட வைதிக மரபினரின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதில் முனைந்து நின்ற திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான பெரியார், அண்ணா, ஆகியோருக்கு நிகராக இருந்தவர் பாரதிதாசன். அத்துடன், பாரதிதாசனின் தனித்திறன்களே திராவிட இயக்கத்தைத் தமிழ் மக்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்தன. (ஞானி, 2007:267) எனவே, திராவிட இயக்கத்தின் கருத்தியல்களைத் தாம் படைத்த கவிதைகள் வாயிலாக மக்களிடம் எடுத்துச் சென்று பரப்புவதில் அவர் ஆற்றிய பங்கு முதன்மையானது.
தமிழ் மொழியைத் தமிழர் சமூகத்தின் கூட்டுத் திரளின் ஆற்றலாகவும் (collective force) அச்சமூகத்தின் பிரதிநிதித்துவ மாற்று அடையாளமாகவும் (emblem) பாரதிதாசன் கவிதைகள் முன்னிறுத்தின. மொழியை வெறும் கருத்துப்புலப்பட்டுச் சாதனமாக அணுகுவோரின் கருத்திலிருந்து வேறுபடுவது இது. சமூகத்தின் ஒருங்கிணைந்த அடையாளமாகவும் முதன்மையான பண்பாட்டுக் கூறாகவும் திகழ்வது. அதே வேளையில், தம்முடைய திராவிட இயக்கச் சிந்தனைகளை எடுத்துரைக்க வல்லதான பாடல்களை இயற்றி, வெகுமக்கள் நோக்கிய கருத்துப் பரவலுக்குத் தமிழைப் பயன்படுத்திய நிலையில், அதன்பால் சமகாலத்தியத் தன்மையை ஊட்டினார். அதனுடைய ஒருபகுதி வெளிப்பாடுகளில் ஒன்றுதான், கருத்துகள், சிந்தனைகள் தழுவிய பாடுபொருளை நயமாக எடுத்துரைப்பதற்கு ஏற்றவாறு, கவிதை அல்லது பாடல் என்ற வடிவத்தைச் செழுமைப்படுத்திக் கையாண்டமையாகும். சமகாலத்திய சூழலோடு பொருந்தும் வண்ணம் மக்களை ஈர்க்கும் சக்தியுடையதாகக் கவிதையின் வடிவக் கூறுகளில் (formal features) நேர்த்தியைப் படைக்க வேண்டும் ஏன்று வலியுறுத்திய பாரதி இங்கு நினைவு கூரப்பட வேண்டியவர். அவர் வலியுறுத்திய கவிதையின் கருத்துப் புலப்பாட்டுப் பாங்கு என்பது பாரதிதாசனின் கவிதைகளில் இயல்பாகப் பொருந்தியது. வழிவழியாக வந்த செழுமை வாய்ந்த கவிதை மரபும், அவர் காலத்திற்குச் சற்று முற்பட்டுத் தொடர்ந்து வந்த வெகுமக்கள் கவிதை மரபும் ஒருங்கிணந்தவையாகப் பாடல்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டன. எளிய பதங்களும், ஓசை ஒழுங்கும்,உவமை, உருவக உத்திகளுமாக நிறைந்த மரபுக்கவிதைகளைப் படைத்தளித்தது ஒருபுறமெனில், மறுபுறம், காவடிச்சிந்து என்பதன் வாயிலாகப் பரவலாக அறியப் பட்ட சிந்து வகைப்பட்ட இசைப்பாடல்கள் பலவற்றைப் படைத்தார். அவற்றுள் கணிசமானவை, காலந்தோறும் வேண்டும் தருணங்களில் இசைநிகழ்த்துகை நடத்துவதற்கு ஏற்ற நிலைப்பனுவலாக அமைந்தன.
இனிமைத் தமிழ்மொழி. எமது எமக்கு
கின்பத் தரும்படி வாய்த்தநல் லமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு !
தனிமைச் சுவையுள்ள சொல்லை எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்!
............................................................................
தமிழென்று தோள்தட்டி ஆடு நல்ல
தமிழ்வெல்க வெல்க என்றே தினம் பாடு!" (எங்கள் தமிழ்)
இவ்வாறு, சந்தநயம் தோய்ந்த பாடல்கள் பலவற்றை இயற்றித் தமிழ்மொழி மீதான ஈடுபாட்டைப் புலப்படுத்தியதோடு, தமிழர்களிடம் தம் தாய்மொழிப் பற்றி ஊட்டினார்.
பெண் விடுதலை
பெண்கள், ஆண்களால் உருவாக்கப்பட்ட கருத்துலகின் ஒடுக்குமுறை, அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற்றுத் தங்களுக்குரிய சுய அடையாளத்தோடு, ஆணுக்கு நிகராக வாழவேண்டும் என்று எழும்பிய போர்க் குரல்களுக்கு இடையே உரக்க வீறு கொண்டு எழுந்தது பாரதிதாசனின் கவிதைக் குரலாகும்.
கைம்மைப் பழி என்ற அவருடைய கவிதை அதற்கொரு சான்று :
கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு
வேரில் பழுத்த பலா மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்யுண
குளிர் வடிக்கின்ற வட்டநிலா!
சீரற்றி ருக்குதையோ குளிர் தென்றல்
சிறந்திடும் பூஞ்சோலை சீ
சீஎன்றிகழ்ந்திடப் பட்டதண்ணே நறுஞ்
சீதளப் பூ மாலை!
கைம்பெண்களின் நிலையை எடுத்துரைக்க சிந்து இசைப்பா வடிவங்களில் ஒன்றைத் (சிந்து கண்ணி) தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். வேரில் பழுத்த பலா, கொடியதென்று கருதப்படும் குளிர்நிலா, தென்றல் சிறந்திடும் பூ...சோலை, இகழப்படும் நறுஞ்சீதளப் பூமாலை, விலக்கப்படும் நறுங்கனி, ந...சென்று சொல்லப்டும் வீணை நரம்பின் தொனி, சூடத்தக்கதல்ல என்று புறக்கணிக்கப்படும் கிரீடம், தொடத்தகாதது எனப்படும் தேன்நிறந்த பொற்குடம் என்று இப்படிப் பல இயற்கைப் பொருட்களுடன் மறுமணத்திற்கு மறுக்கப்படும் இளங்கைம்பெண்ண ஒப்பிடுகிறார்.
தமிழர் மரபுச் (சாதி) சமூகங்களிலோ, சிலவற்றின் உட்பிரிவுகளிலோ 'மணமுறிவு' செய்து கொண்ட பெண்ணும், கணவனை இழந்தவரும் மறுமணம் புரியும் வழக்கம் நிலவுகிறது. ஆனால், அது பரவலாகத் தமிழ்நாட்டில் இல்லை. சமூகமாறுதல் என்பது, ஒரு தொடர்படிமுறையாக இருப்பினும், பெண்ணை அடிமைப்படுத்தும் கருத்துருவங்களும் வழக்கங்களும் ஏனைய பிற்போக்கு நடைமுறைகளும் நமது சமூகத்தில் நகமும் தசைமோகவே உள்ளன. இந்நிலையில் 'கைம்மைப் பழி'யின் கருப்பொருள் சமகாலப் பிரச்சினையே ஆகும். அப்பிரச்சினையைப் பேசும் முறையில், நேர்மறை எதிர்மறை நிலைப்பட்ட பொருட்களை எதிரிணையாக நிறுத்தி நம்மை முன்னிலைப் படுத்தி உரையாடும் பாணியைக் கையாளுகிறார். இந்தச் சிந்துவகைப் பாட்டில், கவிஞரின் ஏனைய விருத்த வகைப்பட்ட பாடல்களில் வெளிப்படும் இலகுவான கருத்துப்புலப்பாட்டுப் பாங்கு இல்லையாயினும், மடக்கடிகளின் ஈற்றில் இடம்பெறச் செய்யும் இயைபொலிச் சொற்கள் வாயிலாக எழுப்பும் சந்தநயத்திலும் உத்தியிலும் தோயும் கவிஞரின் மன ஈடுபாட்டை அறிய முடிகிறது. கைம்மைக் கொடுமை, கைம்பெண் நிலை, இறந்தவன்மேல் பழி, கைம்மைத் துயர், கைம்மை நீக்கம் போன்ற பிற பாடல்களும் சிந்து வகைப் பாடல்களாக அமைந்தவை.
மார்க்சியர் அறியத் தவறிய புரட்சிக் கவிஞர்
உழைக்கும் பாட்டாளிகள், அடித்தள மக்களிடம் பாரதிதாசன் பரிவுமிக்கவராக விளங்கினார். அவர்களுடைய உரிமைகளுக்காகப் போர்க்குணம் மிக்க பாடல்கள் வாயிலாகக் குரலெழுப்பினார். அவரிடம் திராவிட இயக்கச் சார்புநிலையே கூடுதலாக இருந்தது என்றும், பொதுவுடைமை, புரட்சி போன்ற கருத்துக்களில் அழுத்தம் கொண்டிருந்த போதிலும் அவரை மார்க்சியர் என்று கூற முடியாது என்றும் கூறுகிறார் ஞானி. அதே சமயத்தில், மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்துகள் அவரிடம் வெளிப்படையாக இல்லை யாயினும், அந்நோக்கத்தில் ஒருவர் ஆய்வில் ஈடுபட்டால், மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள் சிலவற்றையேனும் பாரதிதாசனிடமிருந்து வகுத்துக் கொள்ள முடியும் என்கிறார். திராவிட இயக்கம், மார்க்சிய இயக்கம் ஆகியவற்றின் இணைப்புப் பாலமாக விளங்கியவராக அவரை மதிப்பிடுகிறார். தமிழ்ச் சூழலை எதிர்மறையாக நோக்கிய மார்க்சியர்கள், அது காரணமாக, பாரதிதாசனை இகழ்ந்துரைத்ததை நாம் ஏற்க முடியாது என்று வாதிடும் ஞானி, மார்க்சியர்கள் பாரதிதாசனிடமிருந்துக் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டனர் என்கிறார்(2007: 267).
இந்தக் கருத்துக்களின் பின்புலத்தில் பாரதிதாசன் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் பாடிய பாடல்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்:
"புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கை திசைஎட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்"
(புதிய உலகு செய்வோம்)
"சித்திரச் சோலைகளே ! உமை நன்கு
திருத்த இப் பாரினிலே முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே! (நீங்களே சொல்லுங்கள் )
பாடுபட்டீர்கள் பருக்கை இல்லாதொரு
பட்டியில் மாடென வாழ்கின்றீர் மதக்
கேடர்கள் காலிலே வீழ்கின்றீர்
ஒண்ட வீடுமில்லாமலே தாழ்கின்றீர் !
(பலி பீடம்)
இவ்வாறு புரட்சிக் கவிஞர் உழைக்கும் மக்களைச் சுரண்டும் அநீதியாளர்களுக்கு எதிராகவும் உழைப்பாளிகளுக்குச் சார்பாகவும் எழுதிய கவிதைகள் பலவாகும். முற்போக்கான சிந்தனைகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக எளிமையான பொருள் புலப்பாட்டு. நோக்கத்தை அடியொற்றி, கண்ணி, பாட்டு, என்பனவற்றோடு சந்தநயம் தோய்ந்த சிந்துப் பாடல் வடிவங்கள் பலவற்றைத் தம்முடைய கவிதைளின் படைப்பாக்கத்தில் கையாண்டார்.
"பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை இந்தப்
பிழைநீங்குவதே உயிருள்ளாரின் கடமை நம்மில்
குறைசொல வேண்டாம் உறவினர் பகை நீங்குங்கோள் உங்கள்
குகையினை விட்டே வெளிவருவீர் சிங்கங்காள்!"
(சகோதரத்துவம்)
இவ்வாறு, இசைப்பாடல் மரபைத் தழுவிய சிந்து வடிவங்களைக் கையாண்டு, புரட்சிக்கவிஞர் எழுதிய பாடல்கள் ஏராளமாகும். நாட்டாரின் வாய்மொழி மரபில் முதன்மையானதாக அறியப்பட்டது, தெம்மாங்கு ஆகும். இது, பத்து வகையான சிந்துப்பாடல்களில் ஒன்றாகும். ஏனைய சமநிலைச் சிந்து, வியநிலைச் சிந்து, நொண்டிச் சந்து, வழிநடைச் சிந்து, ஆனந்தக் களிப்பு, காவடிச் சிந்து, வளையல் சிந்து,தங்கச் சிந்து, குள்ளத்தாராச் சிந்து ஆகிவற்றின் செல்வாக்கினைப் பாரதிதாசன் பாடல்கள் பலவற்றில் காணவியலும்.
இவ்வெதார்த்தம் காரணமாகவே, பாரதிதாசனின் தொடக்கநிலைப் பாடல்களை நாட்டார் யாப்பு மரபைத் தழுவியவையாகவும் (வெகுசனப் பண்பாடு), பிற்காலக் கவிதைகளைச் செவ்வியல் தன்மையினவாகவும் அடையாளங் காண்பர். தம்முடைய கணிசமான பாடல்களில் நாட்டார் அழகியலைக் கையாண்ட பாரதிக்கு இணையாக எத்துணை அளவிற்கு பாரதிதாசன் தம்முடைய பாடல்களில் நாட்டார் அழகியலைக் கையாண்டிருக்கிறார் என்பதைத் தனி ஆய்வில்தான் மதிப்பிட முடியும். மேலும், அவ்வழகியலின் இயல்பைக் 'குஜிலி' அச்சுவடிவப் பாடல்களை அடியொற்றிக் குறுக்குவது பொருந்துமா என்பதையும் மேற்கொண்டு விவாதிக்க வேண்டும்.
...................................
சான்றாதாரங்கள்
ஞானி, 2007 : தமிழ்க் கவிதை ஞானி கட்டுரைகள் 3,சென்னை: காவ்யா
தமிழண்ணல், 1971: புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்
தன...செயன்,ஆ.போரதியார் கவிதைகளில் நாட்டார் அழகியல்",காக்கைச் சிறகினிலே மாத வெளியீடு: சென்னை திருஞானமூர்த்தி, 1998: பாரதிதாசன் படைப்புகளில் அரசியல்,
மேலைச்சிவபுரி : தனலட்சுமி வெளியீடு
பாரதிதாசன்,1980: பாரதிதாசன் கவிதைகள், இராமசேந்திரபுரம்: செந்தமிழ் நிலையம்
பாரதிதாசன்,2002: பாரதிதாசன் கவிதைகள்,சென்னை: மணிவாசகர் பதிப்பகம்
வரதராசன்,மு. 2007: தமிழ் இலக்கிய வரலாறு,புது தில்லி: சாகித்திய அகாதெமி
வேங்டாசலபதி ஆ. இரா.2004: முசேந்தி இலக்கியம், நாகர்கோவில்:
வேலுப்பிள்ளை,ஆ.2010: தமிழ்இலக்கியத்தில் காலமும் கருத்தும், சென்னை: குமரன் புத்தக இல்லம்
Dhananjayan,A.2001:” Tamil Symbol for Cultural Identity as reflected in the Poems of Bharathidasan”,in G. Karunanidhi, R. Balachandran(Editors),Literature and Society - Twentieth Century Tamilnadu, Tirunelveli: Manonmaniam Sundaranar University
- ஆ.தனஞ்செயன், மேனாள் தலைவர், நாட்டார் வழக்காற்றியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளையம் கோட்டை.