இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வகுப்புவாதம் திட்டமிட்டுத் தூண்டப்பட்டு வளர்க்கப்பட்டது. 1932ம் ஆண்டு வகுப்புவாரிப் பரிசாக மதச்சிறுபான்மையினருக்கு தனி வாக்குரிமை வழங்கப்பட்டது. இது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் பெரும்பான்மை மக்களிடமிருந்து சிறுபான்மையைப் பிரிப்பதற்குச் செய்த சதியாகும்.
இரண்டாம் உலகப்போர் நடந்தபோது 1940 பிப்ரவரியில் பிரிட்டிஷ் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் கலந்து கொண்டு "இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஊக்கப்படுத்தும் ஆசை வேண்டாமென்றும், இந்து முஸ்லீம் பிளவு பிரிட்டிஷ் ஆட்சிக்கு அரணாக இருக்குமென்றும் "கூறினார். இதை இந்தியாவில் அதிகாரப் போட்டியிலிருந்த அன்றைய தலைவர்கள் நன்கு புரிந்து கொண்டு இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாதை என்ற முடிவுக்கு வந்தனர்.
ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும் மக்களிடம் பொதுவான சமூக, அரசியல், பொருளாதார அக்கறை இருக்கும். இதை மோசமான அரசியலைக் கொண்டவர்கள் இந்த நம்பிக்கையைத் திசைதிருப்புகிறார்கள். மாநிலப் பிரிவினை கோருகிறார்கள். மக்களை அவர்களது உறுதியான வர்க்க ஒற்றுமையை மறக்கச் செய்து அவர்களுக்குள்ளேயே மோதவிடுவது இதன் திட்டமாகும். பொது எதிரிக்கு எதிராகப் போராடாமல் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு சாவது பொது எதிரிக்கு லாபமாகவும் பாதுகாப்பாகவும் ஆகிவிடுகிறது. இதுதான் வகுப்புவாதத்தின் அடிப்படையான அர்த்தம் என்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் பிபன் சந்திரா.
வகுப்புவாதத்தின் வளர்ச்சி தீவிரவாதமாகி உச்சக்கட்டத்தில் பயங்கரவாதமாகிறது. 1969ல் இந்தூரிலும், 1989ல் பகல்பூரிலும், 1992-93ல் மும்பையிலும், 2002 குஜராத்திலும் நடந்த வகுப்புக் கலவரங்களில் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மும்பை, குஜராத் கலவரங்கள் கொடூரமனவை. வர்க்க ஒற்றுமை ஏற்பட வகுப்பு ஒற்றுமை தேவை. வர்க்க ஒற்றுமை வராமல் உழைப்பாளி மக்களின் சமூக, அரசியல், பொருளாதாரத்தில் மாற்றமோ வளர்ச்சியோ சாத்தியமில்லை.
சீதை பற்றிய ஆய்வு
ராமாயணம் பற்றி ஏராளமான ஆய்வுகள் இதுவரை வந்துள்ளன. இப்போது சீதையைப் பற்றி ஆய்வுகள் தொடங்கியுள்ளனர். இந்தியப் பெண்கள் அடிமைகளாய், வாயில்லாப் பூச்சிகளாய் இருப்பதற்குக் காரணம் ராமாயணச் சீதைதான் காரணம் என்கிறார்கள். சீதையைப் போல் வாழ்வதுதான் சீரிய வாழ்க்கை என்று பெண்களுக்குப் போதிக்கப்பட்டதால்தான் நாட்டில் பெண்ணடிமைத்தனம் நியாயப்படுத்தப்பட்டது.
ராமன் காட்டுக்குப் போனால் இவள் ஏன் அவனுடன் போய் வதைபட வேண்டும்? ராவணனால் இலங்கைக்குத் தூக்கிச் செல்லப்பட்டு ஏன் சித்ரவதைப்பட வேண்டும்? கடைசியில் சீதை மீது சந்தேகப்பட்டு அவளை அக்கினிப் பிரவேசம் செய்யும்படி கட்டளையிட்ட ராமனை எப்படி அவதாரபுருசன் என்பது? காட்டில் தனிமையில் இரட்டைக் குழந்தைகளான வைகுசர்களைப் பெற்றதெல்லாம் எத்தனை கொடுமையானது? இத்தகைய பொறுமை எல்லாம் பெண்ணுக்கு அவசியம் தானா என்று கேள்விகள் கேட்கப்படுகிறது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற சனாதனத்தைத் தகர்க்க வேண்டும் என்கிறார்கள் பெண்ணியல் வாத ஆய்வாளர்கள். இது நல்லதுதான்.
அன்னை தெரசாவும் ஜோதிபாசுவும்
அன்னை தெரசா கல்கத்தாவில் தங்கி எளிய மக்களுக்குத் தனது ஆயுள் முழுவதும் சேவை செய்தவர். அவரது சேவையை மதித்து முதல்வராக இருந்த ஜோதிபாசு ஏராளமான உதவிகளைச் செய்தார். ஜோதிபாசு கடவுளையே நம்பாதவர். தெரசாவுக்கு கடவுள்தான் எல்லாம். ஆனால் அன்னை தெரசா எனது அன்பு நிறைந்த ஒரே அருமை நண்பர் ஜோதிதான்" என்று கூறினார்.
தெரசா 123 நாடுகளில் 600 மிஷனரிகளைத் துவக்கியிருந்தாலும் கல்கத்தாதான் எனது வீடு என்று கூறினார். அவர் நோயில் படுத்திருந்த போது ஜோதிபாசு நேரில் வந்து நலம் விசாரித்து சிகிட்சைக்கு ஏற்பாடு செய்ததோடு தினசரி தொலைபேசியில் அவரை நலம் விசாரித்து வந்தார். இதை அன்னை தெரசாவே பெருமைபடக் கூறினார்.
தனது சேவை மையத்தை உருவாக்க ஜோதிபாசுவைச் சந்தித்து அரசு நிலம் வழங்க வேண்டுமென்று கேட்டார். உடனே தங்கரா பகுதியில் பதினொரு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அன்னை மறைந்த போது அவரது இறுதிச் சடங்குகளை ஜோதிபாசுவே முன்னின்று செய்தார். இறுதியில் தெரசாவை ஆச்சாரியா ஜகதீஷ் சந்திர போஸ் ரோட்டிலுள்ள அன்னை இல்லத்தில் புதைக்க சகோதரிகள் அனுமதி கேட்டனர். ஜோதிபாசு அங்கேயே அடக்கம் செய்ய அனுமதித்து இறுதி நிகழ்சசியில் அவரும் கலந்து கொண்டார். மறைந்த தோழர் ஜோதிபாசு ஒரு மகத்தான மனிதராய், தலைவராய்த் திகழ்ந்தார்.