ஆரோக்கிய மேரியின் தலைக்குள்ள கறவை மாட்டு நினைப்புத்தான் வந்து வந்து போகுது. அந்த நினைப்புக்குப் பின்னால் கறவை மாடென்றால் ஒரு நாளைக்கு 9 லிற்றர் பால் கறக்கும் என்ற வசனமும் திரும்பித் திரும்பி வந்துகொண்டிருந்தது ஒரு பால்குடிக் கன்று மாதிரி. 

பால் ஊட்ட வசதியா விற்கப்படுகிற உள்ளுடுப்பையே போட்டிருந்தாள். அதன் இரு பக்கத் தோள்பட்டையிலும் வெடுக்கென்று கழற்றக்கூடிய பொத்தான்கள் இருக்கின்றன 

அது பிறந்த எட்டு மணிநேரத்துக்குள் 17,18 தடவைகளாவது திறந்தும் மூடியும், திறந்து மூடி, திறந்து மூடுதலே வேலையாக இருக்கிறாள். இப்படி இன்னும் ஒருசில நாட்கள்கூடத் தொடர்ந்து இருக்க முடியாது என ஆராக்கிய மேரிப் பிள்ளைக்கு உள்ளுணர்வு அருட்டுகிறது. 

அவளின் உடல் சோர்ந்து, கடும் புயலடித்த துறைமுகம் போல ஓய்ந்து கிடக்கிறது. 

அடிவயிற்றுக்குள்ளே சுரங்கம் தோண்டுறதுக்காக ‘ராட்ச நவீன யந்திரங்கள் தடித்த டன்லொப் டயர்களுடனும் பெரிய கிண்டிகளுடனும் காதடைக்கும் சத்தத்துடன் உள்ளே போய்க் கிண்டித்தள்ளி, என் இடுப் பெலும்பு, குடல், மூத்திரப்பை, பலோப்பியன் குழாய், நரம்புக் கூட்டங்கள் எல்லாவற்றையும் இடம்மாற்றிக் குழப்பி என்னைக் குளறு படியாக்கிவிடுமோ? கால் அகட்டிக் கிடக்கு. 

எகிப்து பிரமிடு போல எல்லா அகழ்வாராய்ச்சிக்கும் கால் அகட்டி மிக அகலமாக அகட்டி காலாகாலத்துக்கும் கிடக்கிறேன். ரோசம்மா டீச்சர் காலை ஒடுக்கிவை, ஒடுக்கி ஒண்டாவை. எண்டு பெட்டையள்ற வாங்கு களை இலக்கு வைச்சுக் கத்திக்கொண்டே இருப்பா. அவளேதான் இலங்கையின் சராசரி அகலம் கிழக்கு மேற்காக 225 கிலோ மீற்றர்கள் என்று இரண்டாம் வகுப்புல சொல்லித் தந்தவா. அது நடந்தது 1985 ஆம் ஆண்டு முதல் தவணையில். 

பசுமரத்தாணி அப்படியே பதிஞ்சு. இப்ப ஒடுக்கின எல்லாத்துக்கும் சேர்த்துக் கிழக்கு மேற்கா 225 கி.மீ அகட்டி வச்சிருக்கு. 

இன்னமும் பெயரில்லை அதுக்கு. அழத் தொடங்குகிறது. என்ன செய்ய என்று தெரியவில்லை. பத்துப் பன்னிரண்டு நிமிசத்துக்கு முன்னந்தான் பால் கொடுத்த ஞாபகம். கைகால்கள் வலியாய் இருக்கின்றன. எதுவும் குறைந்த பாடில்லை. சிவப்புப் பொத்தானை அழுத்துகிறேன். தாதி சாரா ஸ்பீச்லி வருகிறாள். என் கால்மாட்டிலிருந்த அட்டையைப் பார்த்து ஒரு மணி நேரமாகிறது பால் கொடுத்து குழந்தைக்குப் பசி, உன்னால் எழுந்து உட்கார முடியுமா என்று கேட்டபடி எனக்கு உதவ வந்தாள். கட்டிலை உயரம் குறைப்பித்துக் கைகளையும் தோளையும் பிடித்துக் கதிரையில் மெதுவாக என்னை அமர்த்துகிறாள். பிறகு குழந்தையைத் தருகிறாள். 

முதலில் இடது தோள்பட்டையைக் கழற்றி இடக் காம்பைப் கொடுக்கிறேன். காம்பு என்று ஒரு பேருக்குச் சொல்லலாமே தவிர, அது பிஙி பென்சிலுக்குப் பின்னால உள்ள அழிரப்பரைக் காட்டிலும் சிறிதாக இருந்தது. சில நிமிடங்களில் அது திரும்பக் கத்துகிறது. பால் வந்த மாதிரித் தெரிய வில்லை. இப்ப வலத்தோள் பட்டையைக் கழற்றி வலக்காம்பு. ஆரோக்கிய மேரியும் களைச்சு அரைத் தூக்கத்தில் இருக்கிறாள். 

அறைக்கதவு திறப்படுகிறது. சாரா ஸ்பீச்லியோடு குழந்தைக்குப் பொறுப்பான வைத்தியர் ஜென்கின்ஸ் வருகிறார். ஒரு நாளைக்கு மூன்று தரம் சடார் படாரென்று வருவார். அந்த ஆள் வரும்போதெல்லாம் இப்படித் திறந்த நிலைதான். இருக்கிற களைப்பில் அவரப் பார்த்து, பிள்ளையப் பார்த்து, எது திறந்து மூடிக்கிடக்கென்ற இன்வெஸ்டிகேசன் செய்யிற நிலைமையில் ஆரோக்கிய மேரி இல்லை. அவதியாய் அநிச்சயாய் அவளின் கைகள் துணியால் மார்பை மூடுகின்றன. 

அவர் குழந்தையை வாங்கிப் பரிசோதிக்கிறார். அதன் உடல் நிறை மிகக் குறைவதாகவும் பாலூட்டலில் சிரத்தையெடுத்து அடிக்கடி பால் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுரை தருகிறார். சாராவிடம் அதற்கான உதவிகளைச் செய்யச் சொல்லிக் கதவைச் சாத்திவிட்டுப் போகிறார். 

இன்னமும் பால் வரவில்லை. நிறமற்ற திரவம்தான் வருகிறது என்று ஆரோக்கிய மேரி தயங்கிக்கொண்டு சாராவிடம் சொன்னாள். அப்படித்தான் மூன்று நாட்களுக்கு வரும். அதுதான் நல்லம் குழந்தைக்கு. கட்டாயம் குடுக்க வேணும் என்று சொல்லிப்போட்டு சாரா ஒரு கறுப்பு மாத்திரையைத் தந்து குடிக்கச் சொன்னாள். அதோட இன்னும் ஏழெட்டு மணி நேரத்தில பொங்கல் பானையிலிருந்து வழிவதைப் போல, பால் பொங்கிவழியும் என்பது போல விரல்களையும் கைகளையும் விரித்துச் சொன்னாள். 

இதப் பற்றி ஆரோக்கிய மேரிக்குத் தெரிஞ்ச நியூஸ், பிள்ளை பிறந்த உடனயே பாலும் வரும் என்ற நியூஸ்தான். சித்திமார், அம்மா, பெரியக்கா எல்லாருக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கேக்க ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறாள். பிள்ளையை வலது பக்கமோ இடது பக்கமோ அணைச்சு வச்சுப் பால் குடுத்துக்கொண்டிருப்பினம். இந்த அவஸ்தைக் கோதாரி பற்றி ஒருத்தரும் ஒரு மூச்சு விடேல்லையே. 

அடுத்த ஏழு மணிநேரத்திலேயே பால், பொங்கல் பானையிலிருந்து வழிந்ததோ இல்லையோ, இரண்டு மாரும் அஞ்சு கொத்து ஆக்கிற பொங்கல் பானையள் மாதிரி கெட்டியாகிப் பெருத்து நோவென்ற நோவெடுத்தது. கொங்கிறீற்றுக் கல்லை நெஞ்சுக் கூட்டில ஏத்தின பாரம். 

என்ரை அந்தோணியாரே எனக்காக இரங்கும். எத்தினை மெழுகுதிரி உம்மட சன்னதியில கொழுத்திச் சரிச்சிருப்பன். செவ்வாய்க்குச் செவ்வாய் ஒரு நாளாகிலும் உம்மள மறந்திருப்பனா என்று கனக்க முணுமுணுத்தும் நோக்காடு இறங்கேல்லை. 

போதாத குறைக்கு உள்ளுக்க எரிமலைக் குழம்பே கிடந்து கொப்பளிக்கிறாப் போல உஷ்ணமும் எரிவும் திகிப்பும் தாங்க முடியவில்லை. சிவப்புப் பொத்தானை அமத்துகிறேன். சாரா வருகிறாள். 

அவளுக்கு என்ரை அஞ்சு கொத்துப் பானை சைசைப் பார்த்த மாத்திரத்திலே விசயம் விளங்கிட்டுது. போய் அதே அளவு பெரிசா ஒரு கனத்த முட்டைக் கோஸைக் கொண்டுவந்தாள். அதன் இலைகளைப் பாளம் பாளமாக விண்டு, ஒவ்வொரு மார்லேயும் வைத்துத் துவாலையால் குறுக்குக் கட்டிவிட்டாள். 

பிறகு அடிவயிற்றுத் தையலையும் சரி பார்த்தாள். வீங்கிக் கிடந்த கால்களைத் தூக்கி இரத்தத்தில் ஊறின பேறுகால நாப்கினைக் கழற்றினாள். கால்களிடையே வழிந்ததையும் காய்ந்ததையும் துடைத்து விட்டாள். வேற நாப்கினைக் கட்டினாள். இன்னும் கொஞ்சத்தில நெஞ்சுப்பாரம் உஷ்ணம் எல்லாம் குறைஞ்சிரும் என்று என் முகத்தைப் பார்த்துச் சொன்னாள். தலையாட்டினபடியே என்ர கண் கலங்கிற்று. அழுகை வந்தது.... சாரா என்னை அணைத்துக் கொண்டு, தனக்கும் நாலு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றாள். அவள் கண்களும் குளமாகிக் கிடந்தன. 

எல்லாம் இன்னும் இரண்டு கிழமையில் சரியாயிரும். நாளையில் இருந்து மெது மெதுவா இரண்டு அடி வச்சு நடக்கவேணும். உடம்புச் சத்து எல்லாத்தையும் பிள்ளை உறிஞ்சீரும். நல்லாச் சாப்பிடு என்று சொல்லிவிட்டு சாரா போனாள். அவள் சொன்ன ‘இரண்டு கிழமையில சரியாயிரும்’ கதையில் ஆரோக்கிய மேரிக்கு நம்பிக்கையில்லை. 

இப்பிடி எத்தினை பொய்யளப் பாத்துக் கேட்டிட்டாள். ஒருக்கா இந்தியாக்காரன் வந்தாச் சரியெண்டாங்கள். பிறகு அவங்கள் போனால் சரி எண்டாங்கள். பிறகு சந்திரிகா பிரெஞ்சில படிச்சவ கிழிப்பா எண்டாங்கள். கூட்டணி, குரங்கணி எண்டாங்கள். ஊரிலை இண்டுவரைக்கும் பதவியில இருக்கிற எந்த நாய் வாயைத் திறந்தாலும் புழுப் புழுவாத்தான் கொட்டுது. இல்லாட்டிக்கு ஏன் என்ர சனம் இப்பிடிக் கொத்தும் குலையுமாச் சிதறிச் சாகுதுகள்? 

நம்பிக்கையைப் பற்றி என்னட்ட எந்த மூதேசியும் கதைக்கேலா. 

குடிக்க அப்பிள் ஜூஸ¨ம் வகை வகையான சன்விச்சுகளும் தள்ளுவண்டியில் வந்துகொண்டிருக்கும் சத்தம் ஆஸ்பத்திரி விறாந்தையில் கேட்டது. குழந்தை விரைவில் எழும்பிவிடும் அறிகுறிகள் தென்பட்டன. கடகடவென்று என்ன வகை சன்விச்சுகள் சாப்பிட்டேன் என்று தெரியாமல் சாப்பிட் டேன். நல்லாய்ச் ச=£ப்பிட்ட மாதிரித்தான் இருந்தது. 

மார்க்கடுப்பும் காய்ச்சலும் உடல் உளைவும் என்னைப் போட்டு வாட்டின. மிகக் களைப்பாய் உணர்ந்தேன். நித்திரை போதாமல் கண்கள் எரிந்தன. கண்களை மூடி ஆற வேண்டும் போலிருந்தது. ஒரே அசதி. குழந்தை அழத் தொடங்கியது. நானும் அழுதேன். கட்டிலில் இருந்து மெதுவாய் நகர்ந்தெழுந்து அதைத் தூக்கிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடிக் கதிரையில் அமர்ந்தேன். எங்கள் இருவருக்குமான துணையாய் அழுகை மட்டும் வந்தது. நாங்கள் சேர்ந்து சத்தம் போட்டு ஓவென்று அழுதோம். 

சாப்பாட்டுத் தட்டெடுக்க வந்த தாதி, ஓடிப்போய் சாராவைக் கூட்டி வந்தாள். அவள் பிள்ளையை எடுத்துக்கொண்டாள். சாப்பாட்டுத் தாதி என்னைச் சாந்தப்படுத்தி முதுகைத் தடவிவிட்டாள். நான் கதிரையில் செத்த மரம் போல இருக்க துவாலையைக் கழற்றி மார்பில் ஒட்டிக்கிடந்த முட்டைக் கோஸ் இலைகளை அவதானமாய் எடுக்கிறாள். அவை நெருப்புச் சுவாலையில் வாட்டியவை போலத் தொய்ந்து காய்ந்து கிடந்தன. காம்புகள் இரண்டும் அனலாய்த் தகித்தன. 

இப்போ அழும் குழந்தையின் வாய்க்குள் இடக்காம்பை அவளே நுழைத்துவிடுகிறாள். குழந்தை அவதியாய் உறிஞ்சத் தொடங்க, ரத்தம் காம்பிலிருந்து பீறிட்டது. நோவில் உயிர்போவது என்றால் என்ன என்று அறிந்தேன். திரும்பத் திரும்ப அறிந்தேன். அப்படியே விறைத்துக் கிடக்க முடியாத என் உடலில், உயிர் இன்னும் இருப்பதற்கு அடையாளமாக நோவே முதன்மைச் சாட்சியாகியது. அந்நோவின் அவஸ்தைச் சுவடுகள் வழியே உயிர் இன்னும் தரித்திருப் பதை, ஊசலாடியபடி இருப்பதை உணர்கிறேன். அதன் வழியே  

சூடான மின்னழுத்தியால் முதுகு அழுத்தப்பட்டவனின் வலியை, 

குரல்வளை மிதிக்கப்பட்டவனின் வலியை, 

பறவைக் காவடி ஆடியாடிச் செத்தவர் களின் வலியை.... 

குடல், பிதுங்கின, கண் தோண்டப்பட்ட சதைத் துணுக்குகள், சிதறிய வன்புணரப் பட்டவள்களின் அலறல்கள், இரத்தக் கறை வழிந்த பாழ் வீட்டுச் சுவர்கள், கொல்லாதே என்று கும்பிடுகிற கைகள், கெஞ்சுகிற கண்கள், மரணக் கதறல்கள், கொத்தாய்ப் பிடுங்கின மயிர்கள், பெருங்குண்டுமாரி... பெருங்குண்டுமாரி, ரத்தச் சகதிக்குள் என் கால்கள் சளுக்சளுக் கென்று ஆழப் புதைகின்றன. ஆரோக்கிய மேரி கிடந்து வீறிட்டுக் கத்துகிறாள். 

ஐயோ.... உசிர் ஐயா 

கொல்லாதேங்கோ 

எல்லாம் முழு முழு உசிர் 

உசிர் ஐயாமாரே..... உசிர் 

- ஆழியாள்

Pin It